‘திராவிடர் விடுதலைக் கழகம்’ என்ற பெயரில் கொளத்தூர் மணியைத்தலைவராகக் கொண்டும் விடுதலை இராசேந்திரனைப் பொதுச்செயலாளராகக் கொண்டும் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

புதிய அமைப்புக்கான அறிவிப்பு 12.08.2012 அன்று ஈரோடு செல்லாயி அம்மாள் திருமண மண்டபத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தின் இறுதியில் அறிவிக்கப் பட்டது. பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்த தோழர்கள் - கொள்கையை முன்னெடுப்பதிலும் - இயக்கச் செயல்பாடுகள் குறித்தும் - எழுந்த கருத்துவேறுபாட்டின் காரணமாக – தனியே பிரிந்து வந்து இந்தப் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து தனி பேருந்துகள், வாகனங்களில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட பெரியார் தொண்டர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

பெரியார் திராவிடர் கழகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெரும்பான்மையினர் இதில் பங்கேற்று புதிய அமைப்பு உருவாக்கியுள்ளனர் என்று கொளத்தூர் மணி தெரிவித்தார்.

டிசம்பர் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் இரண்டு நாள் மாநில மாநாடு மற்றும் “மனுசாஸ்த்திர எரிப்பு போராட்ட விளக்க மாநாடு” நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், 1929 இல் செங்கல்பட்டில் பெரியார் கூட்டிய இரண்டுநாள் மாநாட்டில் - சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் - தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நாளான பிப்பிரவரி 28 இல் தமிழ்நாடு முழுவதும் - சமுதாயத்தை பிறப்பின் அடிப்படையில் கூறுபடுத்தும் - மனுசாஸ்த்திரத்தைத் தடைசெய்யக்கோரி - மனு சாஸ்த்திர எரிப்புப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தோழர்களுக்குக் கொள்கைப்பயிற்சி வகுப்புகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் செய்தியாளர்களிடம் கூறிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, புதிய அமைப்பு, பெரியாரின் அடிப்படை இலட்சியங்களான சாதி ஒழிந்த சமுதாயம் அமைக்க - பெரியார் வலியுறுத்திய கொள்கைகளுக்கு முன்னுரிமை தந்தும், தமிழர் இன ஒடுக்குமுறைகளுக்கும், பெண் விடுதலைக்கும், பகுத்தறிவுக் கொள்கைகளுக்கும்முனைப்பான இயக்கங்களை நடத்தும் என்றும் மேலும் கூறினார்.