கொடுமைகள் முற்றும் தொலையுமா இங்கு?
கொஞ்சம்நீ எண்ணடா தோழா! - இந்த
அடிமைத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற வரைநம்
அல்லல்கள் தீருமா தோழா!
வாக்குப் பொறுக்கும் திராவிடக் கட்சிகள்
வஞ்சகம் கொஞ்சமோ தோழா! - நாளும்
தூக்கிச் சுமக்கிறார் காங்கிரசுக் கழுதையை
சொரணையே இல்லையே தோழா!
தேசிய இனங்களைச் சிதைப்பவ ரோடா
தேர்தலில் கூட்டணி தோழா! - விலை
பேசியே பெற்ற அன்னையை விற்றும்
பிழைப்பது பிழைப்போ தோழா!
அம்மவோ... எத்தனை உயிர்க்கொலை அங்கே!
அழுகுரல் தொடருதே தோழா! - சே... சே...
பம்மாத்து அரசியல் பண்ணிப் பிழைப்பதா?
பச்சை நரித்தனம் தோழா!
ஏங்கி ஏங்கியே ஈழத்திற் கழுகிறோம்
இங்கென்ன நிலையடா தோழா! - நாளும்
வீங்கிப் பெருக்கும் மார்வாரி குசராத்தி
வேட்டைக்குத் தீர்வென்ன தோழா!
துடிக்கிற சோதரன் கண்ணீர் துடைக்கவும்
சொந்தக்கை வேண்டுமென் தோழா! - முற்றி
வெடிக்கிற தேசிய விடுதலைப் புரட்சிஓர்
விடியலைக் காட்டுமென் தோழா!

Pin It

தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை மத்திய அரசு புறக்கணித்து, சிங்கள ராணுவத்தின் தமிழின அழித்தொழிப்புக்கு ராணுவ உதவிகளையும் செய்து வருகிறது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பின்னால் இருப்பது காங்கிர தலைவர் சோனியா காந்திதான் என்ற உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தின் ஒருமித்த கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்த இந்திய அரசு, பிரபாகரன் பிடிபடுவார் என்று இலங்கை அரசு அறிவித்து வருவதைத் தொடர்ந்து, பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவதற்காக இப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா உத்தரவுப்படி இலங்கை செல்வதாக செய்திகள் கூறுகின்றன.

முல்லைத் தீவுப் பகுதியில் கடந்த சில நாட்களில் 300க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்துள்ளது. இலங்கையிலுள்ள அய்.நா. சபையின் ஒருங்கிணைப்பு அதிகாரி நீல்புனே, இதைத் தெரிவித்த நிலையிலும், இந்தியா, இதைக் கண்டிக்கவில்லை.

Pin It

ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகத்தின் மீது முப்படைகளையும் ஏவி, ராணுவத் தாக்குதல் நடத்துவதை இந்தியப் பார்ப்பன ஆட்சியானாலும், பார்ப்பன ஊடகமானாலும் கண்டிக்க முன்வரவில்லை.

நார்வே தலையீட்டில் உருவான சமரச உடன்பாட்டில் தமிழர்களின் பிரதேசத்தை சிறீலங்கா அங்கீகரித்தது. தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அங்கீகரித்து, அந்த இயக்கத்துடன் போர் நிறுத்த உடன்பாடும் செய்து கொண்டது. போர் நிறுத்த உடன்பாடு உருவாகி, மீண்டும் அமைதி திரும்பும் சூழல் உருவான நிலையில் விடுதலைப் புலிகள் தமது மக்களுக்காக ஒரு தலைநகரையும், நிர்வாகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி, மக்கள் நலத் திட்டங்களை அமுலாக்கி வந்தனர். சிறந்த நிர்வாக அமைப்பையும் வழங்கினர். அமைதியான இந்த சூழ்நிலையை மீண்டும் குலைத்து, போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறிவேன் என்று சிங்களர்களிடம் வாக்குறுதி தந்து, பதவிக்கு வந்த ராஜபக்சே தான் மீண்டும் தேன்கூட்டைக் கலைத்துப் போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தொடங்கினார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக நிராகரித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள விரும்பினால், இருதரப்பினரும் முன் கூட்டியே ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் விதிகளையே தூக்கி எறிந்தார் ராஜபக்சே.

ராஜபக்சேயின் இந்த பச்சை இனவெறியை இந்தியா கண்டிக்கவில்லை. பார்ப்பன ஊடகங்கள் கண்டிக்க தயாராக இல்லை. மாறாக - ராஜபக்சேயைத் தூண்டிவிட்டன. போர் நிறுத்தத்தைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு தூபம் போட்டன.

ராஜபக்சேயின் ராணுவ வெறியாட்டம் எல்லை மீறியது; கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட 'செஞ்சோலை' முகாம் மீதே குண்டு வீசி, 63 குழந்தைகளை பிணமாக்கியது ராஜபக்சே ராணுவம். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளரும், சமரசப் பேச்சு வார்த்தைகளில் பல சுற்றுகளில் பங்கேற்றுப் பேசியவருமான தமிழ்ச்செல்வனை குறி வைத்து குண்டு வீசி பிணமாக்கினார்கள். மீண்டும் ராணுவத்தின் துப்பாக்கிகள், தோட்டாக்களை கக்கின. போர் மேகம் சூழ்ந்தது.

சுனாமி சீற்றத்துக்கு உள்ளாகி உடைமைகளையும், உயிரையும் இழந்த பல்லாயிரம் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேச நாடுகள் வழங்க முன் வந்த மறுவாழ்வு நிதி உதவியைக்கூட கிடைக்கவிடாமல் ராஜபக்சே ஆட்சி தடுத்து நிறுத்தியது. வடக்கு-கிழக்கு மாநிலங்களை தனித்தனியே பிரித்துதான் வைப்போம்; ஒன்றாக இணைக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தின் மூலம் உத்தரவைப் பெற்றது. மிக முக்கிய தேசியப் பிரச்சினையில் நீதிமன்றத்தின் தீர்ப்புகளைப் புறக்கணிக்கும் அதிகாரம் அந்நாட்டின் அதிபருக்கு உண்டு என்றாலும், இந்த முக்கியப் பிரச்சினையில் அதைப் பயன்படுத்த ராஜபக்சே தயாராக இல்லை.

தமிழர்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலையினால் உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல் நடக்கும் நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா அறிவிக்கப்பட்டது. அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றிருந்த சிறீலங்கா - இதன் காரணமாகவே குழுவிலிருந்து நீக்கப்பட்டது.

தமிழ் ஈழ மக்களின் தலைநகரான கிளிநொச்சிக்குள் ராணுவம் நுழைந்தது. அப்போதும் விடுதலைப்புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்தவில்லை. அங்கே வாழ்ந்த 3 லட்சம் தமிழர்களும் தங்களின் பாதுகாப்புக் கவசமான விடுதலைப்புலிகளோடு முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்தார்கள். அப்போதும் ராணுவம் விடவில்லை. முல்லைத் தீவை நோக்கியும் படையுடன் நுழைந்திருக்கிறது. இப்போது மக்களை பாதுகாப்புக் கேடயமாக புலிகள் பயன்படுத்துகிறார்கள் என்று ராஜபக்சேயும் பார்ப்பன 'இந்து' ஏடும் பார்ப்பன இந்திய அரசும் ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

மக்களின் கேடயமே விடுதலைப்புலிகள் தான். தங்கள் இன்னுயிரை இழந்து, தற்கொலைப் படையாகி, இந்த வீரர்கள் 30 ஆண்டுகாலமாக போராடிக் கொண்டிருப்பதே இந்த மக்களின் விடுதலைக்குத்தான். தமிழ் ஈழ மக்கள் அனைவருக்கும் இது புரியும். சர்வதேசத்துக்கும் தெரியும். துரோகக் கும்பலின் உண்மையான முகமும், ஈழத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழ் மக்கள் கருணாவையும், டக்ளசையும் புரிந்தே வைத்துள்ளனர்.

மக்களைக் கேடயமாக்கி, விடுதலைப்புலிகள் போரிடுகிறார்கள் என்று ராஜபக்சே, ஏதோ, தமிழர்கள் மீது பாசம் பொங்கி வழிபவர் போல் பேசுகிறார். 'இந்து' பார்ப்பானோ ராஜபக்சேயின் மனிதாபிமானத்தை வானளவப் புகழ்கிறான்.

இந்திய ராணுவத்தினரே தமிழர்களின் இனப்படுகொலைக்காக சிங்கள ராணுவத்துடன் களத்தில் நிற்கும் அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் மீது குண்டு வீசிய விமான ஓட்டியாக இந்திய விமானப் படையைச் சார்ந்த ஒருவனும் பாகிஸ்தான் விமானப் படையைச் சார்ந்த ஒருவனும் புலிகளிடம் பிடிபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

பார்ப்பனர் கூட்டம் மகிழ்ச்சிக் கூத்தாடுகிறது.
இந்திய பார்ப்பனிய ஆட்சியே!

தமிழினப் படுகொலைகளை கண்டு மகிழ்ச்சிக் கூத்தாடி, ராஜபக்சேயுடன் கட்டிப் புரளும் 'இந்து', 'தினமலர்' திமிர் பிடித்தக் கூட்டமே!

ஈழத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் குலைத்த ராஜபக்சேயை நீ கண்டித்தாயா? அமைதியான தீர்வை நோக்கித் திரும்பியபோது - அதைக் குலைத்து மீண்டும் ராணுவ மோதலை உருவாக்கிய சிங்கள அரசைக் கண்டித்தாயா?

செஞ்சோலைக் கொடுமையையோ, சுனாமி நிவாரண உதவிகளைத் தடுத்ததையோ, கண்டித்தாயா?

இந்தியப் பார்ப்பன அரசே! பார்ப்பன 'ராமே!' துரோகக் காங்கிரசே!

தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகள் உனக்கு அவ்வளவு அலட்சியமா? இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் உங்களின் பார்ப்பன இறுமாப்புத் தொடரப் போகிறது? பதில் கிடைக்கும் காலம் விரைந்து வரும்! மறந்து விடாதீர்!

Pin It

ஒரு மாத சிறைவாசத்துக்குப் பின் கோவை சிறையிலிருந்து விடுதலையான கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ. மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோருக்கு கோவையில் எழுச்சியான வரவேற்பு வழங்கப்பட்டது. கோவையிலிருந்து மேட்டூர் வரை 40 வாகனங்கள் புடை சூழ தோழர்கள், கழகத் தலைவருக்கு வரவேற்பு தந்தனர். சிறை நிரப்பும் போராட்டத்துக்கு தயாராகுமாறு கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்தார்.

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக வழக்கு புனையப்பட்டு சிறையிலடைக்கப் பட்ட கழகத் தலைவர், இயக்குநர் சீமான், மணியரசன் ஆகியோர் 32 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு பிணை யில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஈரோடு ஜே.எம்.1 மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் போடப்பட்ட பிணை மனுக்கள் 3 முறை தள்ளுபடி செய்யப் பட்டது. இறுதியில் உயர்நீதிமன்றத்தில் பிணை மனுதாக்கல் செய்யப்பட்டு, நிபந்தனையற்ற பிணை வழங்கியது. அந்த உத்தரவின் அடிப்படையில் சனவரி 20 ஆம் தேதி மாலை கழகத் தலைவர் உட்பட 3 பேரும் சிறையி லிருந்து வெளியே வரும்போது கோவை சிறைவாயிலில் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் எழுச்சியான வரவேற்பு வழங்கப் பட்டது.

சிறை வாயிலில் மதியம் 3 மணி முதலே தோழர்கள் வரத் துவங்கினர். கோவை மாநகரம், திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தோழர்கள் சிறையிலிருந்து வரும் தலைவர்களை காண ஆர்வத்துடன் வந்திருந்தனர். மாலை 5 மணிக்கே சுமார் 500க்கும், மேற்பட்ட தோழர்கள் குவிந்திருந்தனர்.

திருமலையம் பாளையம் பகுதி கழகத் தோழர்கள் 'ஜமாப்' வாத்தியங்களுடன் வந்து சிறப்பான எழுச்சி பறை முழக்கம் செய்தனர்.

சிறையிலிருந்து வெளியே தலைவர்கள் வரும்போது ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கழகத் தோழர்களும் , பல்வேறு அமைப்பினரும், பொது மக்களும் எழுப்பிய முழக்கத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது. தலைவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்ல சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. ஆயினும் காவல்துறை அனுமதி மறுத்ததனால் காந்திபுரம் பெரியார் சிலை வரை வாகனத்தில் சென்று அங்கு அய்யா சிலைக்கும், அம்பேத்கர் படத்திற்கும், மார்க்ஸ் படத்திற்கும் மாலை அணிவித்தனர்.

அதன் பின் காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு குழுமியிருந்த தோழர்கள் மத்தியில் தலைவர்கள் உரை நிகழ்த் தினார்கள். அதன் பின் இயக்குனர் சீமான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். இரவு கோவையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெ. மணியரசன் ஆகியோர் தங்கினர். அடுத்த நாள் காலை தோழர்கள் கோவை நோக்கி திரண்டனர்.

21-ம் தேதி காலை கழகத்தலைவரை வரவேற்க 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் சேலம் மாவட்ட கழகத்தினர் கோவை வந்தனர். கோவை கழக அலுவலகத்திலிருந்து காலை 10.30 மணிக்கு வாகனப் பேரணி மேட்டூர் நோக்கி புறப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி த.தே.பொ.க. பொதுச் செயலாளர் மணியரசன் ஆகியோருக்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு வழங்கப் பட்டது. புதுவைத் தோழர்கள் லோகு அய்யப்பன் தலைமையில் தனிப் பேருந்தில் வரவேற்க வந்திருந்தனர்.

விஜயமங்கலத்தில் தோழர் அர்ச்சுனன், விசு, துரை, கழகத் தோழர்கள் ஆடை போர்த்தி வரவேற்றனர். அங்கே கழகக் கொடியை ஏற்றி, தலைவர் கொளத்தூர் மணியும், பெ. மணியரசனும் உரையாற்றினர். பெருந்துறையில் சாதி ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. கூட்டியக்கத்தின் அமைப்பாளர் இரத்தினசாமி மற்றும் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் திரண்டிருந் தனர். ஈரோடு வந்து சேர்ந்த போது அங்கு பெருமளவில் உணர்வாளர்கள் வரவேற்கக் காத்திருந்தனர்.

பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, தோழர்களிடையே கொளத்தூர் மணி, மணியரசன் இருவரும் உரையாற்றினர். பெ.மணியரசன் ஈரோட்டிலிருந்து தஞ்சைக்கு விடை பெற்றார். ரயில் நிலையத்தில் அவரை வழியனுப்பி விட்டு, தோழர்கள் ஈரோடு பெரியார் நினைவகம் சென்று பார்வையிட்டனர். பிற்பகல் 3 மணியளவில் ஒலி முழக்கங்களுடன் வாகனப் பேரணி புறப்பட்டது.

பவானி - அந்தியூர் சந்திப்பில் கழகத் தோழர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் வரவேற்றனர்.

கழகத் தோழர்களுக்கு 'சேலமே குரல் கொடு' அமைப்பின் நிறுவனர் பீயூஸ் மாறன் சிற்றுண்டி வழங்கினார். 5.30 மணியளவில் மேட்டூரின் எல்லையான காவேரி கிராசை வந்தடைந்த போது மேட்டூர் நகர விடுதலை சிறுத்தைகளின் சார்பில் வைரமணி தலைமையில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு தரப்பட்டது. 6 மணி யளவில் செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலிருந்து தாரை தப்பட்டை மேளவாத்தியம் முழங்க வரவேற்று, கழகத் தலைவர் அழைத்துச் செல்லப்பட்டார். வாகனங் களைவிட்டு இறங்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர். மேட்டூரில் கழகத் தலைவரின் வீடுவரை சென்று வழியனுப்பி வைத்து, தோழர்கள் திரும்பினர்.

மேட்டூரில் கொளத்தூர் மணி அவரது இல்லத்தில் கைது செய்யப் பட்டபோது இதேபோல் திரண்டு வழியனுப்பிய தோழர்கள் விடுதலைக் குப் பிறகும் வீடு வரை வந்து வழி யனுப்பினர்.

தோழர்கள் அனைவரும் பெரியார் படிப்பகம் திரும்பினர். இல்லத்திலிருந்து 30 நிமிடத்தில் படிப்பகம் திரும்பிய கொளத்தூர் மணி தோழர் களிடையே உரையாற்றினார். அப் போது ஈழப் பிரச்சினையில் இனி அரசியல் கட்சிகளை நம்பிப் பயனில்லை. தேர்தலில் போட்டியிடாத இயக்கங்கள், சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக பிரச்சாரங்கள், போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். முதற்கட்டமாக கழகத் தோழர்கள் அனைவரும் 15 நாட்கள் சிறை செல்ல தயாராக தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள் என்ற அறை கூவல் விடுத்தனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்களிடையே பேரெழுச்சி உருவாக்கியிருப்பதை உணர முடிந்தது.

செய்தி : மேட்டூர் சக்திவேலு,
கோவை சாஜித்

Pin It

முல்லைத் தீவில் ராணுவத்தின் ஷெல் வீச்சுக்கு நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிர்ப் பலியாகியுள்ளனர். இதை அய்.நாவின் அதிகாரியே கண்டித்துள்ள செய்தி வெளி வந்த அதே நாளில் (ஜன.27) 'இந்து' ஏடு வெளியிட்ட வாசகர்களுக்கு கடிதங்களைக் கீழே தருகிறோம்:

எல்.வி. முகுந்தன், சென்னை என்ற பெயரில் வெளிவந்த கடிதம்:

"இலங்கையின் 20 ஆண்டுகால சிவில் யுத்தம், முடிவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கடந்தகால இலங்கை அதிபர்கள் சந்தித்த தோல்வியை ராஜபக்சே வெற்றியாக்கி சாதித்துக் காட்டிவிட்டார். விடுதலைப்புலிகள் தோல்வியின் எல்லைக்கு வந்து நிற்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு ஈழத் தமிழர்கள் அகதிகளாக வருவதே - அவர்கள் புலிகளையோ, பிரபாகரனையோ ஆதரிக்கவில்லை என்பதை காட்டுகிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதில் - இந்தியா, பெரிய நாடாக இருந்தாலும், இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்."

கடலூரிலிருந்து ரம்யா ரவீந்திரன் என்ற பெயரில் வெளி வந்துள்ள வாசகர் கடிதம்:

"ராஜபக்சே வெற்றிக் கனியை சுவைக்கப் போகிறார். முல்லைத் தீவும் வீழப் போகிறது. அங்கே தான் பிரபாகரன் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியா, இலங்கை அரசுக்கு கட்டாயம் உதவ வேண்டும். தமிழ்நாட்டில், சில அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இலங்கை அரசை பகைத்துக் கொள்ளக் கூடாது."


எஸ். இராமச்சந்திரன், சென்னை என்ற பெயரில் வெளியிடப்பட்ட கடிதம்:

பிரபாகரன் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஒரு லட்சம் தமிழர்களை விடுவிக்குமாறு, இப்போதாவது, தமிழ்நாட்டிலுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு வேண்டுகோள் வைக்க வேண்டும்."

- இப்படி கடிதங்களை பார்ப்பனக் கொழுப்புடன் வெளியிடுகிறது 'இந்து'.

இதே தேதியில் 'இந்து எழுதிய தலையங்கம் - பிரபாகரன் தோல்வி அடைந்துவிட்டதாக மகிழ்ச்சி கூத்தாடுகிறது. 2006 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் 15000 சதுர மைல் இருந்தது. இப்போது அது 350 சதுர கிலோ மீட்டராக சுருங்கிவிட்டதாக சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து வெற்றி முழக்கமிடுகிறது அந்த ஏடு.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த இதே ஏட்டில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் 15000 சதுர கிலோ மீட்டர் பகுதி இருந்ததை எப்போதாவது ஒப்புக் கொண்டு எழுதியது உண்டா? இவ்வளவு பெரிய பகுதியை மக்கள் ஆதரவின்றி கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா? தமிழர்கள் தங்களுக்கான பகுதியை தங்களிடம் வைத்திருப்பது எப்படி கட்டுப்பாடு ஆகும் என்று 'இந்து' பார்ப்பானை கேட்கிறோம்! அவ்வளவு பெரிய தமிழர் பகுதியை, சிங்கள ராணுவம் பிடித்து வைத்திருப்பது என்பதே 'ஆக்கிரமிப்பு' அல்லவா? இந்து ராமின் மனுதர்மக் கண்ணோட்டத்தில் இவை எல்லாம் நீதியாகிறதா?

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களையெல்லாம் கோமாளி என்று திமிருடன் பேசிய ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு 'இந்து' தலையங்கம் பாராட்டு மழைகளை பொழிகிறது. "25 ஆண்டுகால போரில் 95 சதவீதம் முடிந்துவிட்டது" என்று பொன்சேகா கூறியிருப்பது மிகைப்படுத்தப்பட்ட அறிவிப்பு அல்ல; மிகச் சரியாகவே பேசுகிறார் என்று பூரிக்கிறது.

சிங்கள ராணுவம் வெற்றி மேல் வெற்றி குவிக்கிறது என்று பூரிக்கும் 'இந்து' ஏட்டின் தலையங்கம் - ராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க கல்மடு நீர்த் தேக்கத்தை விடுதலைப் புலிகள் தகர்த்ததைக் கண்டிக்கிறது.

ராணுவம் முல்லைத் தீவில் முன்னேறுவதைத் தடுக்க முயன்ற நடவடிக்கையை முல்லைத் தீவிலிருந்து மக்கள் வெளியே வர முடியாமல் தடுக்கவே புலிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக பழி போடுகிறது!

அட, மான - ஈனமற்ற - பார்ப்பனப் பதர்களே! 'போரில்லாப் பகுதி' என்று ராணுவத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிக்கு வந்த அப்பாவித் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசி, பல நூறு மக்களை பிணமாக்கியுள்ளதே. இதை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றனவே. இந்து பார்ப்பானின் காமாலைக் கண்களுக்கு ராணுவத்தினர் இந்த அட்டூழியங்கள் தெரியாதோ! மக்களைக் காக்கவே - மக்கள் விடுதலைக்குப் போராடும் இயக்கத்தை மக்களுக்கு எதிராக சித்தரிப்பது எவ்வளவு கேவலம்? விடுதலைப் புலிகள் பிரபாகரனின் கதை முடிவுக்கு வந்துவிட்டதாக எக்காளச் சிரிப்பு சிரிக்கிறான் 'இந்து' பார்ப்பான். விடுதலைப்புலிகளையும் பிரபாகரனையும் இப்படி எல்லாம் பாப்பாரக் கூட்டம் எழுதுவதற்கு இந்த நாட்டில் உரிமை உண்டு. ஆனால், இதற்கு பதில் கூறி, தமிழின உணர்வோடு விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் ஆதரித்துப் பேசினால் மட்டும் கலைஞர் ஆட்சியில் அடக்குமுறை பாயும்; சிறைக் கதவுகள் திறக்கப்படும்.

இது ஜனநாயக நாடு தானா?
தமிழன் ஆட்சி நடந்தாலும் இங்கே பார்ப்பன நாயகம் தானா?
வெட்கம்! வெட்கம்! வெட்கம்!

Pin It