கழகத் தலைவர் கொளத்தூர் மணியை மீண்டும் தமிழக அரசு கைது செய்துள்ளது. பிப்.26 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடந்த கழகக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து உரையாற்றினார். ராஜீவ் மரணத்தையே முன்னிறுத்தி ஈழத் தமிழர்களின் தேசிய சுயநிர்ணயப் போராட்டத்தையே புறக்கணிக்கும் காங்கிரசின் போக்கையும் மக்களிடம் எடுத்துக் காட்டினார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக திண்டுக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மார்ச் 2 ஆம் தேதி காலை 7 மணியளவில் மேட்டூர் குமரன் நகரிலுள்ள அவரது இல்லத்தில் கைது செய்தனர்.

நள்ளிரவே ஏராளமான காவல்துறையினர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வீட்டைச் சுற்றி குவிக்கப்பட்டனர். செய்தியறிந்த தோழர்கள் ஏராளமாக கழகத் தலைவர் இல்லத்தை நோக்கி திரண்டனர். கைது செய்யப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய கழகத் தலைவர் ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு இழைக்கும் துரோகங்களை தனது பாரமாகவே கருதி கலைஞர் தோளில் சுமந்து கொள்ள விரும்புகிறார் என்று குறிப்பிட்டார்.

கழகத் தலைவர், திண்டுக்கல் நீதிமன்றம் கொண்டு வரப்படும் செய்தியறிந்த தோழர்கள், வழக்கறிஞர்கள், தமிழர்கள் ஏராளமாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் காலை முதல் காத்திருந்தனர். வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் காத்திருந்தனர். பெரும் கூட்டம் திரண்டிருப்பதை அறிந்த காவல்துறை நீதிமன்றம் கொண்டு செல்வதை பல மணி நேரம் தாமதப்படுத்தியது.

திண்டுக்கல் செல்லும் வழியிலுள்ள எரியோடு காவல் நிலையத்துக்கு கொண்டு போய் காலை 11 மணி முதல் 1.30 மணி வரை வைத்திருந்து விட்டு 3 மணியளவில் திண்டுக்கல் நீதிபதி ராதாகிருஷ்ணன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று நேர் நிறுத்தினர். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153(ஏ), 505(1)(பி) மற்றும் 13 (1)(பி) - சட்ட விரோதமாகக் கூடுவதைத் தடுக்கும் சட்டம் 1967 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கழகத் தலைவர் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு போகப்பட்டார்.

கடந்த 2008 டிசம்பர் 14 ஆம் தேதி ஈரோடு பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக இதே பிரிவுகளின் கீழ் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் வைக்கப்பட்டு 2009 ஜனவரி 19 ஆம் தேதி பிணையில் மூவரும் விடுதலையானார்கள்.

தொடர்ந்து புதுவையில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களிடையே பேசியதற்காக புதுவை காவல் துறை இயக்குனர் சீமானை கைது செய்து புதுவை சிறையில் அடைத்தது. புதுவையைத் தொடர்ந்து நெல்லையில் வழக்கறிஞர்களிடையே சீமான் பேசியதற்காக நெல்லை காவல்துறை மற்றொரு வழக்கைத் தொடர்ந்தது. இயக்குனர் சீமான் இப்போது ஒரு வருடம் வெளியில் வர முடியாத தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சீமானைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் கலைஞர் ஆட்சி கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் காங்கிரசுக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் நடத்திட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சீமான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ள நிலையில் அவர்கள் பிரச்சாரத்தை முடக்கிடும் நோக்கத்தோடு அரசு இந்த கைது நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. கழகத் தலைவர் கைது செய்யப்பட்டவுடனேயே ஒட்டன்சத்திரம் வழக்கறிஞர் ஜெயராஜ், திண்டுக்கல் நீதிமன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்தார்.

காங்கிரசின் துரோகத்துக்கு பச்சைக் கொடி காட்டி, தன்னையும் தமிழினத் துரோகப் பட்டியலில் தி.மு.க. ஆட்சி இணைத்துக் கொண்டிருப்பது தமிழின உணர்வாளர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

Pin It