அரசியலில் இப்போது எல்லா சின்னத்தையும் பின்னுக்கு தள்ளி விட்டு - ஒரு சின்னம் மட்டும் வலிமையாகி விட்டது. அதுதான் செருப்பு. ‘பதாகை’ என்ற செந்தமிழ்ச் சொல்லும் அதற்கு உண்டு.

இராமாயண ‘ராமனி’ன் செருப்பு அவன் வனவாசம் இருந்த 14 ஆண்டு காலம் முழுதும் ‘பாரததேசத்தை’ “நல்லாட்சி” செய்ததாகவும், அந்த ‘செருப்பை’ பாரத குடிமக்கள் அரசனாக ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சிக் கூத்தாடியதாகவும், இராமாயணம் தமிழர்களின் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறது.

1971 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்த காலத்தில், சேலத்தில் பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் அதே ‘ராமன்’ செருப்படிப்பட்டான் என்பது வேறு சேதி! கடந்த வாரம் - உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில், தமது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது, சீக்கிய பத்திரிகையாளர் ஒருவர், திடீரென கோபமடைந்து, தனது செருப்பை கழற்றி ப.சிதம்பரம் மீது வீசினார். செருப்பு என்று போட்டால் அது மரியாதைக் குறைவாகிவிடும் என்பதால், பத்திரிகைகள் அதற்கு பதிலாக ‘ஷு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, அதன் மூலமாவது ப. சிதம்பரத்துக்கு சற்று மரியாதை கூட்டலாம் என்று முயற்சித்தன.

இந்த நிலையில், இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள அத்வானி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை விமான நிலையம் வந்தபோது, அவரை பார்க்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மற்றும் பா.ஜ.க.வினர், செருப்பு அணிந்து போவதற்கு, காவல்துறை தடை விதித்துள்ளதாம். பாதுகாப்புக் கருதி, இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைளை காவல்துறை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அத்வானி - அப்படியெல்லாம் செருப்புக்கு அஞ்சுகிறவர் அல்ல; ‘ராமன்’ கோயில் கட்டும் யாத்திரையில், ‘ராமன் செருப்பு’ என்று ஒரு ‘செருப்பை’ தூக்கிக் கொண்டு ஊர்வலம் நடத்திய அனுபவங்களுக்கு அவர் சொந்தக்காரர். ஆனாலும், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் யாருக்கு தெரியும் என்பதால் காவல்துறை இப்படி அதிரடி தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கக் கூடும். தமிழக காவல் துறையின் ‘பெருமை’களை சொல்லவா வேண்டும்; அதுதான் உச்சநீதிமன்றம் வரை போய் நிற்கிறதே!

செருப்புக்கு பதிலாக - இனி சட்டைகளையோ வேட்டி அல்லது பேண்டுகளையோ கழற்றி, தங்களின் “அன்பான எதிரிகள்” மீது- இனி எவரும் வீசி விடக் கூடாது என்று நாம் கவலைப்படுகிறோம். இனிமேல் தலைவர்களை வரவேற்க வருகிறவர்கள் செருப்பு மட்டுமல்ல, வேட்டி-சட்டை-பேண்ட் அணியாமல் வரவேண்டும் என்ற அறிவிப்புகளை நமது ‘சிறப்பு மிக்க’ காவல்துறை வெளியிட நேர்ந்தால், இந்திய ஜனநாயகத்தின் நிலை இன்னும் கேவலமாகிவிடுமே என்ற கவலைதான் நம்மை வாட்டுகிறது.

இப்போதெல்லாம் எதிர்ப்பு ஆயுதங்கள் எங்கே - எந்த வடிவத்தில் - பதுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை சார் என்கிறார்கள், காவல் துறை அதிகாரிகள். உண்மைதான்! வெடிகுண்டு போன்ற ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளார்களா என்பதை சோதனையிட கருவிகள் வந்து விட்டன. இனிமேல், செருப்பை எங்கேயாவது மறைத்து வைத்திருக்கிறார்களா என்பதை கண்டறியக் கூடிய சோதனைக் கருவிகளும், வர வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

ஆனாலும், ஒலிபெருக்கி முன் மேடையில் ஒருவர் ஏறி ஒரே ஒரு கடுமையான வார்த்தையைக் கூறி விட்டாலே பிணையில்லாமல் ஓராண்டு சிறை என்கிற அளவுக்கு ஜனநாயகம் கலைஞர் ஆட்சியில் “முதிர்ச்சி” பெற்று நிற்கிறது. அதற்கு முன் இந்த ‘செருப்பு’ எல்லாம் எம் மாத்திரம் என்று கேட்கிறார், ஒரு தோழர். இதையே மேடையில் ஒலி பெருக்கியில் உளறி தொலைத்து, சிறைக்குப் போய் விடாதீர்கள் அய்யா!

Pin It