தமிழர் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று சிங்களம் அறிவித்தவுடன், அதை உடனே மே 18 ஆம் தேதி மறுத்து, அவர் நலமுடன் உள்ளதாக அறிவித்தவர், விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட செல்வராசா பத்மநாபன். இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் உளவுப் பரிவுத் தலைவர் அறிவழகன், பிரபாகரன் நலமுடன் உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாபா செல்வராசா பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து உலகத் தமிழர்களிடையே பெரும் கொதிப்பை உருவாக்கியது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வ இணையதளமாகக் கருதப்படும் ‘தமிழ் நெட்’ இணைய தளம் இதை மறுத்துள்ளது.

தங்களுடைய வாசகர்கள் பலரும் இந்தத் தகவல்கள் குறித்து விசாரித்ததாகவும், சுதந்திரமாக உறுதிப்படுத்த முடியாத எந்தத் தகவலையும் வெளியிடுவதில்லை என்றும், பிரபாகரனைப் பற்றி வெளியாகும் தகவல்கள் தொடர்பாக எந்த ஒரு பொறுப்பைபையும் தமிழ் நெட் ஏற்காது என்றும் கூறியுள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக பல்வேறு விதமான செய்திகளை வெளியிட்ட சிங்கள அரசும், ராணுவமும் அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கத் தவறிவிட்டன என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

தாங்கள் விடுத்த தகவலை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க எந்த முயற்சியையும் சிங்கள அரசு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. பிரபாகரன் தொடர்பான தகவல்களை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசிற்கும் உள்ளது. ஏனென்றால், 1980களில் பிரபாகரன் சென்னையில் கைது செய்யப்பட்டபோது அவருடைய உடலியல் கூறுகள் தொடர்பான விவரங்கள் காவல்துறையினரால் சோதிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சிங்கள அரசு பிரபாகரன் இறந்ததாக கூறியவுடன் தன்னிடம் உள்ள ஆதாரங்களைக் கொண்டு அதனை ஐயத்திற்கிடமின்றி இந்திய அரசு நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட கோரிக்கை எதையும் வைக்காமல், பிரபாகரன் இறந்து விட்டதை சிங்கள அரசிடம் கேட்டு உறுதி செய்தது மட்டுமின்றி, அவருடைய மரணச் சான்றிதழை அந்நாட்டு அரசிடம் கேட்டிருப்பதும் ஏன் என்று புரியவில்லை என்றும், இப்பிரச்சினையில் இந்தியாவின் மௌனம் அதன் வசதியாக இருக்கக் கூடும் என்றும் ‘தமிழ் நெட்’ கூறுகிறது.

இவைகள் மட்டுமின்றி, உலகத் தமிழர்களை பாதிக்கக்கூடிய இப்படிப்பட்ட செய்தி குறித்து சரியான விவரங்களை எந்த ஒரு சுயேச்சையான பன்னாட்டு அமைப்பும் முயன்று பெற்று வெளியிட முன்வராததும் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகிறது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

மே 18 ஆம் தேதி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சேனல் 4 என்ற லண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்பு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து பிரபாகரன் இறந்து விட்டார் என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல் ஆகும்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மிக அண்மையில்தான் அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாபன் சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.

கொடுந்துயரில் ஈழத் தமிழ் இனம் சிக்கி வதைப்படும் நேரத்தில் செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத் தமிழ் மக்களும், தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும் உள்ள தன்மான உணர்வு கொண்ட தமிழர்களும், இதை நம்ப வேண்டாம். தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அனைத்து உலகப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் அறிவழகன் தனது அறிக்கையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தலைவர் பிரபாகரன் வென்றெடுக்கக் களம் அமைத்த லட்சியங்களை வெல்லவும், ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கவும் உறுதி கொண்டு நம் கடமைகளைத் தொடர்வோம் - என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.