உலகமயப் பொருளியல் கோலோச்சுகிற இக்காலகட்டத்தில், முதலாளிய சனநாயகம் வெறும் வாக்களிக்கிற சடங்காக குறுகிப் போய் மாற்று அரசியலுக்கான சனநாயக அரசியல் வெளி சுருக்கப் பட்டுள்ளது. நாட்டிற்கு ஏற்றாற் போல் வெள்ளை நிறவெறி, ஜியோனிய யூதவெறி, ஆரிய மேலாண்மை ஆகியவற்றோடு இணைந்து உலகமயம் செயல்படுவதால் இச்சிக்கல் தீவிரமடைந்துள்ளது.

            அதிகாரம் மய்யப்படுதல், தேர்தல் அரசியல் கட்சி வேறுபாடின்றி குற்றமயமாதல், தேர்தல்கள் ஊழல் மயமாதல் ஆகியவை இன்றைய காலகட்டத்தின் பொதுப் பண்புகளாக விளங்குகின்றன.

            முதலாளியமானது தொழில் மூலதன ஆதிக்கம், நிதி மூலதன ஆதிக்கம் என்ற நிலைகளைக் கடந்து நிதி மூலதன பேயாட்சியின் ஒரு அழுகிய நிலையைப் பெற்றெடுத்துள்ளது. ஒட்டுண்ணி முதலாளியம் அல்லது கூட்டாளி முதலாளியம் என்ற நிலையே அது. முதலாளிகள், அரசியலாளர்கள், அரசு நிர்வாகம், நீதித்துறை அனைத்தும் இணைந்த ஒரு அழுகல் கூட்டணி இந்த முதலாளியக் கட்டத்தின் தனித்தன்மையாகும். இந்த ஒட்டுண்ணி முதலாளியம் உலகு தழுவியதாக பரவி வருகிறது. இன ஆதிக்கத்தோடு இணைந்து வருகிறது. முதலாளிகளும் அரசியல் தலைவர்களும் பிரித்தறிய முடியாதபடி பிண்ணிப் பிணைந்து விட்டனர். இதன் விளைவாக உரிமைக் கோரும் மக்களைப் பொறுத்தவரை சனநாயக - சட்டவழி செயல்பாட்டுவெளி குறுக்கப்படுகிறது.

            இந்த நிலை எவ்வாறு உருவானது? இதனை எப்படி எதிர்கொள்வது என்பவை மக்கள் இயக்கங்கள் முன் உள்ள வினாக்களாகும்.

            தொடக்ககால முதலாளியம், போட்டி முதலாளியமாக இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி, மேலாண்மைத் திறன் ஆகியவற்றின் வழி முதலாளிகள் தங்கள் இலாபத்தைப் பெருக்கிக் கொள்வது என்பது போட்டி விதியாக செயல்பட்டது. உழைப்புச் சுரண்டல் அனைத்து முதலாளிகளுக்குமான பொது விதியாக இருந்த போதே மேற்கண்ட போட்டிவிதி செயல்பட்டது. இதன் போக்கில் முற்றுரிமை முதலாளியம் உருவெடுத்தது. மாமேதை லெனின் ஏகாதிபத்தியம் முதலாளியத்தின் உச்சகட்டம் என்ற புகழ்பெற்ற தனது நூலில் இதனைத் தெளிவாக விளக்குகிறார். நிதி மூலதனம், தொழில் உற்பத்தி மூலதனத்தை விட மேல்நிலை பெற்றதை இந்த உச்சகட்டம் குறிப்பதாக அவர் தெளிவு படுத்தினார்.

            உலகமயம்(எடூணிஞச்டூடித்ச்tடிணிண) என்பது இந்த நிதி மூலதனத்தின் முற்றுரிமை கட்டத்தை (குறிக்கிறது. “இருபதாம் நூற்றாண்டின் நிதி மூலதன காலகட்டத்திலிருந்து இந்த முற்றுரிமை நிதி மூலதன காலகட்டம் என்பது பண்புவகையில் வேறானது. வங்கி மூலதனத்தின் மேலாதிக்கம் இதன் தனித்தன்மையாகும்” என ஜான் பெலாமி பாஸ்டர் குறிப்பிடுகிறார் (The Great financial crisis – John Bellamy Foster and Fred Magodff, 2009, p. 84).

            உற்பத்தி துறையின் மீது இந்த நிதி மூலதனம் மேலாதிக்கம் செய்கிறது. இந்த மேலாதிக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாத தொழில்துறை முதலாளிகளும், சிறிய நடுத்தர வங்கிகளும் களத்தை விட்டு வெளி யேறுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறிய மீன்களை பெரிய மீன்கள் வேகமாக விழுங்கி வருகின்றன. தொழில்துறையிலும் வங்கித் துறையிலும், பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை இணைத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்வதும் வேகம் பெற்றுள்ளன.

            இந்திய பங்குச் சந்தையில் 2010 சனவரி முதல் சூன் வரை நடைபெற்ற பங்குவணிகத்தில் ‘இணைத்தல் - கையகப்படுத்தலில்’மட்டும் சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை வங்கியை ஐ.சி.ஐ.சி.ஐ. விழுங்கியது. இப்போது சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைசியா வங்கி ஆகியவற்றுக்கு ரிலையன்சும் மகிந்திராவும் குறி வைத்துள்ளன. இவற்றின் விளைவாக தொழிற்துறை சந்தையின் விரிவாக்க வேகம் குறைந்து வருகிறது.

            இன்னொரு புறம், உலக மயக்கட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம் உலகு தழுவியதாக இருந்த போதிலும், சிலர் நினைப்பது போல் நாட்டு அரசுகளின் வலு குறைந்து விட வில்லை. நாட்டு அரசுகள் பொருளற்றதாக மாறி உலகு தழுவிய ‘மீஅரசு’ (Superstate) உருவாகி விட்டதாக நினைப்பது தவறு. அரசுகள் மக்கள் நலத்திட்டங்களை ஒன்றொன்றாகக் கைவிட்டு வெளிப் படையான அடக்குமுறைக் கருவி யாக அம்பலப்பட்டு வருவது தான் உண்மை நிலை யாகும்.

            சந்தை விரிவாக்க வேகம் குறைவதற்கும் அரசின் மேற்கண்ட நிலைமைக்கும் நெருக்கமான உறவு உண்டு.

            சந்தை விரிவாக்கம் மந்த மடைவதால் முற்றுரிமை நிதி மூலதனம் தனது விரிவாக்கத்திற்கு வேறுவழிகளைத் தேடுகிறது. பங்குச் சந்தை சூதாட்டம், வங்கி மூலதனம், ஊக வணிகம், மனை வணிகம், காப்பீட்டுத் தொழில் ஆகிய துறைகளில் இந்த நிதி மூலதனம் பாய்கிறது. தொழில் உற்பத்தி தாங்கள் விரும்பும் வேகத்தில் விரிவடையாத நிலையில், படைக் கருவி உற்பத்தியில் உற்பத்தித்துறை மூலதனத்தை முற்றுரிமை முதலாளி கள் இறக்கி விடுகிறார்கள்.

            பங்குச்சந்தை சூதாட்டம், ஊக வணிகம், மனை வணிகம் ஆகியவற்றில் முதலாளிய சந்தை விதிகளின்படி போட்டிகள் நடை பெறுவதில்லை. ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினர் துணையோடு குறுக்குவழிகள் கையாளப்படுகின் றன. படைவகை உற்பத்தியும், ஆட்சியாளர்களின் துணையோடு தான் விரிவடைய முடியும்.

            இவ்வாறான கட்டத்தில் தான் ஒட்டுண்ணி முதலாளியம் அல்லது கூட்டாளி முதலாளியம் முதன்மை பெறுகிறது. முதலாளிகளும் அரசி யலாளர்களும் அரசு நிர்வாகத் தினரும், நீதித்துறை யினரும் ஒரே அணியில் கைகோத்து நிற்கிறார்கள். அது மட்டுமின்றி வெவ்வேறு அடை யாளத்தோடு, இதுவரை இருந்த இவர்கள் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து விடுகின்றனர்.

            தனிமுதலாளிகள் ஆட்சி யாளர்களுக்கோ, அதிகாரி களுக்கோ கையூட்டு கொடுத்து காரியம் சாதித்துக் கொள்வது என்பது பழைய நிலை. ஆனால், இப்போது இவர்கள் பிரித்தறிய முடியாதபடி பிணைந் திருப்பது தான் பண்பு வகையிலும் புதிய நிலையாகும். முதலாளிய சூதாடிகள் கட்சிப் பொறுப்பு களிலும், கட்சிப் பிரமுகர்கள் முதலாளிகளாகவும் இருக்கின்றனர். முதலாளிகளுக்கிடையே நடக்கும் போட்டா போட்டிகளின் செயல் களமாக பங்குச்சந்தை மட்டுமில்லை நாடாளுமன்றமும் நீதித்துறையும், அச்செயல்களத்தில் உள்வாங்கப் பட்டுவிட்டது.

            மன்மோகன் சிங் ஆட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரிய போது, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, டாட்டா ஆகியோரின் தொழில் போட்டிக் களத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றம் செயல் பட்டதை நாடு கண்டது.

            “பொருளாதார அடி யாட்கள்” அரசியல் கட்சிகளிலும் ஆட்சி நிர்வாகத்திலும் நிரம்பி யிருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங் இந்த பொருளாதார ஆடியாட்கள் பட்டாளத்தில் முதன்மையானவராக இருக்கிறார். வெளிநாட்டு நிறுவன மான பாஸ்கோவிற்கு அரசுத் துறையிலிருந்த குத்ரே முக் இரும்புத் தாது சுரங்கத்தையும், 3000 ஏக்கர் வனத்துறை நிலத்தையும் நேரடியாக நின்று வாங்கிக் கொடுத்தவர் மன்மோகன் சிங். மாவோயிஸ்டுகள் தலைமையில் இன்று போராடி வரும் சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா மாநில பழங்குடியினர் வேட்டையாடப் படுவதற்கு மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் ஒட்டுண்ணி கூட்டணி முக்கியக் காரணம் என்பதை ஏற்கெனவே விளக்கியிருக்கிறோம் (காண்க: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், மே 2010).

            அரசுத் தலையீடு இல்லாமல் சந்தையே அனைத்தையும் தீர் மானித்துக் கொள்ள வேண்டும் என்ற தாராளமயம் கோலோச்சுகிற இந்த காலத்தில் தான் இந்திய அரசின் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பேரரசர் போல் பவனி வருகிறார். இவரது தலைமையில் திட்டக்குழு உயரதிகார மையமாக வலுப்பெற்றி ருக்கிறது.

            இரண்டாவது முறை மன் மோகன் சிங் தலைமையில் காங்கிரசு கூட்டணி தில்லியில் அமைச்சரவை நிறுவும் போது, தனது குடும்பத் தினருக்கும் தனது குடும்பத்தினரின் பினாமிக்கும் முக்கிய துறைகளில் அமைச்சர் பதவி பெற்றுக் கொள்வதில் கருணாநிதி ஆடிய ஆட்டத்தை எல்லோரும் அறிவர். ஆனால், இந்த ஆட்டத்தின் இயங்கு சக்தியாக திரைமறைவில் செயல் பட்டது இந்த ஒட்டுண்ணி முதலாளிய உறவு தான் என்பது பலருக்குத் தெரியவில்லை.

            ஆ.ராசாவை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக கொண்டு வருவதில் நீரா ராடியா என்ற சிங்கப்பூர் வாழ் பெண்மணி முக்கியப் பங்காற்றியது இப்போது அம்பலப்பட்டுள்ளது. வைஷ்ணவி, நியோ கான்ஸ் போன்ற பொது உறவு நிறுவனங்களின் அதிபர் இந்த நீரா ராடியா. பொது உறவு என்ற நல்ல பெயரில் நடப்பது கேவலமான தரகு வேலை தான். கட்சித் தலைவர்கள், உயர்மட்ட அரசு அதிகாரிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், படைத்தளபதிகள் ஆகியோரின் பலம் - பலவீனங்களை கணக்கில் கொண்டு அவர்களை வளைத்துப் போடுவது தான் இந்த பொது உறவு நிறுவனங்களின் பணி.

            ஆ.ராசா, ராசாத்தி - கனிமொழி குடும்பத்தின் பெயரிலி (பினாமி) என்பது சோனியா காந்தி - மன்மோகன் சிங் குழுவுக்கு தெரியுமாதலால், அவருக்கு தொலைத் தொடர்புத்துறை தருவ தற்கு மன்மோகன் சிங் தயக்கம் காட்டினார். பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் தயாநிதி மாறனுக்கும், டாட்டா - அம்பானி ஆகியோர் ஆ.ராசா வுக்கும் பரிந்துரைத்தனர். ஒரு கட்டத்தில் இது இழுபறியாக மாறியது. சுனில் மிட்டலுக்கும் டாட்டா, அம்பானிக்கும் இடையே சமரசம் பேசி மூவரையும் சம்மதிக்க வைத்து ஆ.ராசாவுக்கு அப்பதவியை வாங்கித் தருவதில் நீரா ராடியா மையப் பங்காற்றினார். இவர்க ளுக்குள் ‘பங்கு பரிமாற்றத்திற்கு’ பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் கண்டார். இதன் பயனாக இராசாத்தி குடும்பத்திற்கு தரமணியில் பல மாடிக் கட்டிடத்தை டாட்டா பரிசாக வழங்கி தன்னுடைய மனை வணிகத்தில் பங்கு தாரராக சேர்த்துக் கொண்டாராம்.

            ஆளும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி முக்கிய எதிர்க் கட்சிகளும் இவ்வாறான ஒட்டுண்ணி முதலாளியக் கூட்டணியில் இடம் பெறுகிறார்கள். சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், அமர்சிங், பாரதிய சனதாவின் அருண் ஜெட்லி, கிருஷ்ணகுமார், சி.பி.எம். கட்சியின் நிலோத்பல் பாசு, மேற்கு வங்க அமைச்சர் நிருபம் சென் போன்ற பலரும் பல்வேறு முதலாளிகளின் கூட்டாளிகள் ஆவர்.

            வேதாந்தா - ஸ்டெர்லைட் ஆலையின் முதலாளி அனில் அகர்வால், காங்கிரசு, பா.ச.க., கட்சிகளுக்கு மொத்தம் 25 இலட்சம் டாலர் அதாவது 125 கோடி ரூபாய் தேர்தல் நிதி வழங்கியிருக்கிறார்.

            கட்சிகள் மட்டுமின்றி முதன்மை ஊடகத்துறையினரும் இவ்வாறான கூட்டாளி வலைப் பின்னலில் இடம் பெறுகிறார்கள். எடுத்துக் காட்டாக, ஆ.ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறை பெற்றுத் தருவதில் நீரா ராடியாவுக்கு என்.டி.டி.வி.யின் பர்கா தத்தும், சி.என்.என். - ஐ.பி.என். தொலைக் காட்சியின் வீர் சிங்வியும் நெருக்கமாக துணை செய்தனர். ‘இந்து’ என்.ராமுக்கும் கருணாநிதி குடும்பத் திற்கும் பல்வேறு முதலாளிய நிறுவனங் களுக்கும் இருக்கும் வலைப் பின்னல் தொடர்பு அனை வரும் அறிந்த ஒன்று தான்.

            உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான எஸ்.எச். கபாடியா வின் மகள், ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பங்குதாரராக இருந் ததும், பெட்ரோலியப் பொருட்கள் துறையின் இயக்குநர் வி.கே.சிபல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பங்கு தாரராக இருந்ததும் ப.சிதம்பரமும், நளினி சிதம்பரமும் ஸ்டெர் லைட்டில் பங்குதாரராக இருப்பதும் வெளியில் தெரிந்துள்ள மிகச் சில உண்மைகள்.

            அரசுத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் பணியில் இருக்கும் போதே, அயல்பணி என்ற வகையில் உலக வங்கி தொடர்புடைய நிறுவனங்களில் பணி செய்வதும் பணி ஓய்வுக்குப் பிறகு அயல்நாட்டு, வடநாட்டு பெரு நிறுவனங்களில் உயர் பதவி பெறுவதும் அன்றாடம் வெளிவரும் செய்தி. எடுத்துக் காட்டாக, பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரிகள் பணியிலிருக்கும் போதே தனியார் தொலைத் தொடர்புத் துறைக்கு வேலை பார்ப்பதும் ஒரு கட்டத்தில் அது அம்பலமாகும் நிலைமை வரும் போது பி.எஸ்.என்.எஸ். நிறு வனத்தை விட்டு தனியார் நிறுவனங்களில் நேரில் சேர்ந்து விடுவதும், மறுபுறம், தனியார் நிறுவனங்களிலிருந்து பி.எஸ். என்.எல். உயர்பதவியில் ஆட்கள் நுழைக்கப் படுவதும் அண்மையில் அம்பலமான செய்தி (காண்க: The Hindu, 19.07.2010).. இதனை சுழல் கதவு என்று அழைக்கிறார்கள்.

            இந்தச் சுழல் கதவு வழியாக பல்கலைக் கழகங்கள், உயராய்வு மையங்கள் ஆகியவை பெரு முதலாளிகளின் ஆட்களால் நிரப்பப் படுகின்றன. வேளாண் உயராய்வு நிறுவனங்களில் மான்சான்டோ ஆட்கள் இருப்பதை பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

            பல்லாயிரம் கோடி ஆயுத பேரங்களில் சாமியார்கள், சர்வதேசக் குற்றவாளிகள், அரசியல்வாதிகள் என்ற நிழல் உலகமே செயல் படுவதை நாம் பார்க்கிறோம்.

            இவ்வாறு கிடைக்கும் பல் லாயிரம் கோடியில் சில கோடிகளை வாரியிறைத்து, வாக்குகளுக்கு காசு கொடுத்து இச்சூதாட்டத்தில் வலு வுள்ள கட்சிகள் வெற்றி பெறு கின்றன.

            நிதி மூலதனப் பேயாட்சி யிலும் படைப் பொருளியலிலும் இந்த ஒட்டுண்ணி முதலாளியம் நீக்கமற நிறைந்து செயல்படுகிறது.

            பெருமுதலாளிகள், அரசிய லாளர்கள், அதிகார வர்க்கம், நீதிபதிகள், முதன்மை ஊடகங்கள், ஆய்வு மையங்கள் ஆகிய அனைத்தும் இணைந்த இந்த ஒட்டுண்ணி நிலை, தமிழ்த் தேசிய இயக்கங்கள் உள்ளிட்ட மக்கள் இயக்கங்களுக்கு ஒரு அறைகூவலாக அமைகிறது.

            முதலாளிய சனநாயக - சட்ட வெளி இவ்வகை மாற்று இயக்கங் களுக்கு குறுக்கப்பட்டு விட்டன. தமிழ்த் தேசியர்களும் பிற மக்கள் இயக்கத்தினரும் தங்கள் கோரிக்கை களை அடைவதற்கு போர்க் குணமுள்ள எழுச்சி மிக்க போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் அரசியல் கட்சிகளோ, முதன்மை ஊடகங்களோ இவர்களின் கோரிக் கையை எடுத்துச் செல்ல பயன்படப் போவதில்லை.

            ஆயினும், போர்க் குணமுள்ள மக்கள் போராட்டங்கள் ஆட்சியாளர்களாலும் அரசியல் கட்சிகளாலும், முதன்மை ஊடகத் தினராலும், “பயங்கர வாதம்”, “தீவிரவாதம்”, “பிரிவினை வாதம்”, “வளர்ச்சிக்கு எதிரான பிற்போக்குத் தனம்” என்பதாக முத்திரை குத்தப் படுகின்றன. பல்கலைக்கழகங்களும், ஆய்வு நிறுவனங்களும் இளம் படிப்பாளிகளை ஆதிக்கக் கருத்திற்கு இசைவாக வார்த்து அனுப்பு கின்றன. நேரடி அடக்குமுறைகள் ஏவப் படுவதற்கு முன்னால் இவ் வாறான கருத்து நிலை மேலாண்மை பெரும்பகுதி மக்களிடம் நிறுவப் படுகிறது. எனவே, தமிழ்த் தேசியர்கள் மற்றும் பிற மக்கள் இயக்கத்தினர் கூர்மையான கருத் தியல் தெளிவை விழிப்புணர்வுள்ள மக்கள் பகுதியிடம் ஆழமாக விதைக்க வேண்டியுள்ளது.

            இவ்வாறு கருத்தியல் தெளி வின் கீழ் திரட்டப்பட்ட மக்கள் தான் போர்க்குணமுள்ள மாற்று அரசியல் போராட்டங்களில் நீடித்து நிலைக்க முடியும். குழப்பமான கருத்துகள், அறைகுறை அணுகுமுறைகள் மாற்று அரசியலுக்கு மக்களைத் திரட்ட உதவாது. அவை மே லோட்டமான ‘கட்சிப் போராட்டங் களை’ நடத்துவதற்கு மட்டுமே பயன்படும்.

            அதே நேரம், கருத்தியல் களத்திலும் போராட்டக் களத்திலும், மக்களின் எதிரிகள் முன்னைவிட வலுவிழந்த நிலையிலேயே இருக்கிறார்கள். தங்களது உலகமய - ஆரிய - இந்திய மேலாண்மைக் கருத்துகளை விழிப்புடன் உள்ள இளையோரிடம் நிலைநிறுத்த முடியாமல் தத்தளிக்கிறார்கள். போராட்டக் களத்திலும், மக்களை ஒடுக்கிவிட முடியாமல் மேலும் மேலும் அடக்குமுறைகளை ஏவி, சர்வாதிகாரங்களை மட்டுமே சார்ந்திருக்கிறார்கள். போராடும் மக்களிடம் அவர்களது முற்போக்கு - சனநாயக முகமூடி கிழிந்து தொங்குகிறது.

            ஒட்டு மொத்தத்தில், இன்றைய நிலை என்பது மக்கள் இயக்கங்களுக்கு புதிய வாய்ப்புகளையும், அதே நேரம் புதிய சவால்களையும் ஒருங்கே வழங்கியிருக்கிற காலமாகும். கருத்தியல் தெளிவோடும், போர்க்குணமுள்ள மக்கள் திரள் போராட்ட வழியிலும் உறுதியாகப் போராடினால் தான் முன்னேற முடியும்.

            தமிழ்த்தேசியர்கள், வரலாறு வழங்கியிருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி அறைகூவல்களை திறனோடு சந்தித்தால் விடுதலை கண்ணுக்கு எட்டிய தொலைவில் தான். 

(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It