ரிவோல்ட்பக்கங்களிலிருந்து....(9)

 பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகளை தேசிய பார்ப்பனர்கள் எதிர்த்து நின்றதாக பார்ப்பனர்கள் கூறுவது உண்மை தானா? வரலாற்றுப் பக்கங்கள் அப்படி கூறவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ள சத்தியமூர்த்தி என்ற பார்ப்பனர் - பச்சை வர்ணாஸ்ரம வெறியராக செயல்படுவதற்கு காங்கிரசைப் பயன்படுத்தியிருக்கிறார். ‘குடிஅரசு’, ‘ரிவோல்ட்’ ஏடுகள் சத்திய மூர்த்தியின் வர்ணாஸ்ரம வெறியை படம் பிடித்துக் காட்டுகின்றன. பெரும் தொழி லதிபர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சாதகமான கேள்விகளை மாகாண சட்டமன்றங்களில் கேட்பது சத்திய மூர்த்தியின் வழக்கம். இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். 6.2.1929 ‘ரிவோல்ட்’ ஏட்டில் ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. மாகாண சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி ஒரு கேள்வி கேட்டுள்ளார். ராமசாமி நாய்க்கர் வேலூரில் காங்கிரஸ் கட்சியின் பெயரில் சீர்திருத்த மாநாடு நடத்துவதற்கு அனுமதி தந்தது ஏன்? ஏன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை? என்பதே இந்த ‘தேசபக்தர்’ எழுப்பிய கேள்வி. பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பதைவிட சமுதாய சீர்திருத்த எதிர்ப்புக்கே இவர்கள் முன்னுரிமை தந்ததை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

 •              திருச்சியிலிருந்து கத்தோலிக்க கிறிஸ் தவர்களுக்காக மாத இதழ் ஒன்று வெளி வந்தது. அதன் பெயர் ‘கிங்ஸ் ரேலி’ (முiபேள சுயடடல). சுயமரியாதை இயக்கத்தைத் தொடர்ந்து கடுமையாக எதிர்த்தது இந்தப் பத்திரிகை. சாதி அமைப்பை ஒரு சமூக அமைப்பு என்று நியாயப்படுத்தியது இந்த இதழ். சுயமரியாதை இயக்கத்தால் மதத் துக்கு ஆபத்து வந்துவிட்டதாக எழுதிய அந்த ஏட்டுக்கு ‘ரிவோல்ட்’ இவ்வாறு பதிலளித்தது. “சுயமரியாதை இயக்கம் வைணவத்தை எதிர்த்தபோது சைவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்தனர். சைவத்தை எதிர்த்த போது சைவர்கள் எதிர்த்தனர். இந்து பழமைவாதத்தை எதிர்த்தபோது இசுலாமி யர்கள் ஆதரித்தனர். முல்லாக்களை எதிர்த்த போது இஸ்லாமியர் எதிர்த்தனர். புரட்டஸ் டன்டுகளை எதிர்த்தபோது கத்தோலிக் கர்கள் ஆதரித்தனர். கத்தோலிக்கர்களை எதிர்க்கும்போது ‘கிங்ஸ் ரேலி’ இப்போது எதிர்க்கிறது.”

 •              சர். ஏ. ராமசாமி முதலியார் பார்ப்பனரல்லா தாரில் புகழ் பெற்ற அறிஞர்; ஆங்கில மேதை. அவரது பார்ப்பனரல்லாதார் உரிமைக்கு ஆதரவான தீண்டாமை, வர்ணாஸ்ரம எதிர்ப்பு உரைகளை ‘ரிவோல்ட்’ விரிவாக வெளியிட்டது. அதேநேரத்தில் அவர் தலித் தனித்தொகுதி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த போது, ‘ரிவோல்ட்’ உடனே “அது பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தின் கருத்து அல்ல; தனித் தொகுதி முறை அவசியம் தேவை என்பதே ரிவோல்ட்டின் கருத்து” என்று மறுப்பு தெரிவிக்க தயங்கவில்லை.

(இரா)

(தொடரும்)

 பார்ப்பனர் எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணமாம்’!

 பார்ப்பனர்கள், உயர்சாதியினர், சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது படுத்துக் கொண்டே உருண்டு பிரார்த்தித்தால் தோல் வியாதிகள் நீங்கும் என்ற மூடநம்பிக்கை, கருநாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுப்ரமணியா கிராமத்திலுள்ள குக்கி சுப்பிரமணிய கோயிலில் இன்றும் சடங்காக பின்பற்றப்பட்டுவருகிறது.  உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய இந்த ஆபத்தான ‘அங்கப் பிரதட்சணத்தை’ நம்பிக்கையோடு செய்து வருவோர், பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்தான். கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி சில தொலைக்காட்சிகள் இந்த மூடப் பிரார்த்தனையை நேரடியாக ஒளிபரப்பின. அதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த உ.பி. முதல்வர் மாயாவதி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் இந்த சடங்குக்கு தடைபோட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

400 ஆண்டுகளாக நடக்கும் இந்த ‘இழிவு’க்கு முதன்முறையாக இப்போது எதிர்ப்பு உருவாகியுள்ளது. அம்மாநில சமூக சீர்திருத்தவாதி ஜி.கே. கோவிந்தராவ், கிராமியக் கலைஞர் காலேகவுடா நசவாரா ஆகியோர் தடுத்து நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அமைப்புகள் பார்ப்பன, உயர்சாதி மேலாண்மையை நிலை நிறுத்தும் இந்த மூடச் சடங்குக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. இந்த பிரார்த்தனையை தலித் அல்லாதவர்களும் செய்வதாக கோயில் நிர்வாகம் நியாயப்படுத்தி வருகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் 51(ஏ) (எச்) பிரிவு குடி மக்களிடையே விஞ்ஞான மனப்பான்மையையும், மனித நேயத்தையும், பகுத்தறிவையும் வளர்க்க வேண்டும் என்று கூறினாலும், சட்டத்துக்கு எதிரான மூட நம்பிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெரியார் இயக்கங்களைத் தவிர, வேறு எந்த அமைப்பும் பகுத்தறிவு கருத்துகளை பரப்புவதே இல்லை.