மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தொலைபேசியில் பேசிய உரையாடல்கள் வருமான வரித் துறையால் பதிவு செய்யப்பட்டு, பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நாமும் இது பற்றி சிந்தித்தோம். தந்தை பெரியார் ‘தமிழர் தலைவர்’ வீரமணியிடம் தொலைபேசியில் பேசியிருந்தால்.... 

பெரியார் : ஹலோ, யாரது வீரமணியா?

வீரமணி : ஆமாம்; நான் தான். தமிழர் தலைவர் மானமிகு அய்யா வீரமணி  பேசுகிறேன். நீங்கள் யார் பேசுவது? 

பெரியார் : என் குரல் உனக்கு புரியவில்லையா? நான் தான் ஈ.வெ.ரா. பேசுகிறேன். என்னை நினைவிருக்கிறதா?

வீரமணி : அய்யோ, அய்யாவா! எப்படி அய்யா இருக்கிறீர்கள்; கடுமையான அரசியல் வேலைகளில் மூழ்கியிருப்பதால், உடனே உங்கள் குரல் நினைவுக்கு வரவில்லை. மன்னித்து விடுங்கள். இப்போதுதான், உங்கள் பிரச்னைக்காகத்தான், விமானத்தில் டெல்லிக்குப் போய் விட்டு திரும்பினேன். 

பெரியார் : என்னது? என்னுடைய பிரச்னைக்காகவா? அதுவும், டெல்லியிலா? அப்படி என்ன தலைபோகிற அவசர பிரச்னையப்பா?

வீரமணி : அய்யா, நீங்கள் ‘குடிஅரசு’ என்று ஒரு வாரப் பத்திரிகை நடத்தினீர்கள் அலலவா? அதில் நீங்கள் பேசியதை, எழுதியதை எல்லாம், இங்கே பெரியார் தி.க. என்று ஒரு ‘துரோகிகள்’ அமைப்பு தொகுத்து நூலாக வெளியிட்டு விட்டார்கள். அவையெல்லாம் வெளியே யாரிடமும் போய்விடக் கூடாது என்று பத்திரமாக, ரகசியமாக இத்தனை ஆண்டுகாலம் பொத்தி பொத்தி பாதுகாத்தேன்.  இந்தப் “பாவி”கள் எப்படியோ எவர் எவரிடமிருந்தோ தேடிப் பிடித்து, வெளியே கொண்டு வந்து விட்டார்கள்! எவ்வளவு பெரிய துரோகம் பார்த்தீர்களா? இவர்களை எப்படி சும்மா விடுவது? சென்னை யிலே வழக்குப் போட்டேன்; நீதி கிடைக்கவில்லை. அதற்காக விட்டு விடலாமா? டெல்லியிலே உச்சநீதி மன்றத்துக்கும் போனேன். ‘பாவி’கள்; அங்கேயும் தள்ளுபடி செய்து துரோகிகளுக்கு ஆதரவாக உத்தரவிட்டு விட்டார்கள் அய்யா! 

பெரியார் : என்னுடைய கருத்துகளை வெளியிட்டு பரப்புவது எப்படியப்பா, துரோகமாகும்? என்னுடைய கொள்கைகளைப் பரவ வேண்டும் என்பதற்குத்தானே, அறக்கட்டளை சொத்துகள் எல்லாம் விட்டுவிட்டு வந்தேன்?

வீரமணி : நீங்கள் விட்டுவிட்டுப் போன அறக்கட்டளையையும், சொத்துகளையும் பாதுகாக்க வேண்டாமா, அய்யா? அது தானே முக்கியம். இப்போது உங்கள் நூலுக்கு உரிமை கொண்டாடுகிறவர்கள் நாளைக்கு, உங்கள் சொத்துகளுக்கும் உரிமை கொண்டாடினால், என்னாவது? தமிழர் சமுதாயமே அழிந்து பாழாகிப் போய்விடாதா? இனத்துக்கு வந்துள்ள இந்த ஆபத்தைப் பற்றி எவருமே கவலைப்படுவதே இல்லையே! நான் ஒருவன்தானே இந்த வயதிலும், ஓடி ஓடி உழைக்க வேண்டியிருக்கிறது! 

பெரியார் : என்னப்பா, நீ பேசுகிறாய்? நான் அறக்கட்டளைகளையும், சொத்துகளையும் விட்டுச் சென்றதே, எனது அறிவுச் சொத்துகளை மக்களிடம் கொண்டு போவதற்குத்தானே! இது உனக்குத் தெரியதா? எனக்குப் பிறகு, எனது வாரிசுகள், எனது நூல்களும், கருத்துகளும் தான் என்று வெளிப்படையாக கூறிவிட்டுத்தானே, மரணத்தை எதிர்க் கொண்டேன்!

வீரமணி : அதெல்லாம் எனக்குத் தெரியாதா, அய்யா! நன்றாகவே தெரி யும். நீங்கள் கூறிய அறிவுச் சொத்து, வாரிசு பற்றியெல்லாம் ஆழமாக, பல நாள் உறக்கமில்லாமலே சிந்தித்தப் பிறகுதான், ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தேன். அறிவுச் சொத்து என்பதும், ஒரு சொத்து தானே! வாரிசு என்பதும் மிக மிக முக்கியமல்லவா? எனவேதான், வாரிசு, அறிவுச் சொத்து, இரண்டை யுமே நானே எனது பொறுப்பில் எனது குடும்பத்துக்குள் பத்திரப்படுத்திக் கொண்டு விட்டேன். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராய வேண்டு மல்லவா? அதுதானே முக்கியம்! 

பெரியார் : எனது கருத்துகளைப் பரவாமல் தடுப்பதும், உனது மகனை இயக்கத்தின் வாரிசாக்குவதும் தான் நான் சொன்ன பகுத்தறிவா? சரி; வழக்குக்கு எவ்வளவு பணம் செலவு செய்தாய்?

வீரமணி : ஒன்றும் அதிகமில்லை, வெறும் ரூபாய் 5 லட்சம் தான் அய்யா. நீங்கள் தந்த பணம் தானே, எல்லாவற்றுக்கும் சரியாக கணக்கு இருக்கு அய்யா! ஆடிட்டர் வைத்து சரி பார்க்கிறோம், தெரியுமா? 

பெரியார் : அய்யோ, இது என்ன கொடுமை! நான் விட்டுச் சென்ற சொத்தையும் பணத்தையும் எனது கருத்துகள் பரவாமல் இருப்பதற்கு பயன்படுத்துகிறாயா? இதைச் சொல்வதற்கு உனக்கு வெட்கமாக இல்லை?

வீரமணி : பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால், மான அவமானம் எல்லாம் பார்க்கக் கூடாது என்று நீங்கள் தானே அய்யா, கூறினீர்கள்? அதை அப்படியே பின்பற்றுவதற்கு நீங்கள் பாராட்ட வேண்டாமா? 

பெரியார் : அது கொள்கையைப் பரப்புகிற பொது வாழ்க்கைக்கு. கொள்ளையடிக்கிற வாழ்க்கைக்கு அல்ல! அது சரி; கொள்கையைப் பரப்பு வதற்காக பல ஊர்களில் என் மீது பற்றுக் கொண்ட ஏழை எளிய தொண்டர்கள் என்னிடம் வழங்கிய கட்டிடங்கள், கடைகள், மனைகளையெல்லாம் வேக வேகமாக விற்றுக் கொண்டிருக்கிறாயாமே!

வீரமணி : ஆமாம் அய்யா! அதற்காக, ஒரு தனிக் குழுவே போட்டு விட்டேன். அவர்கள் பம்பரமாக சுழன்று, வேகம் வேகமாக விற்பனை செய்து வருகிறார்கள். தாங்கள் விட்டுச் சென்ற சொத்துகளையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகிறேன். அது தானே இனமானக் கடமை! 

பெரியார் : நான் விட்டுச் சென்ற அறிவுச் சொத்துகளை உன்னிடம் பாதுகாத்துக் கொள்வாய்; பொருள் சொத்துகளை மட்டும் விற்று பணமாக்கிக் கொள்வாய்; அப்படித் தானே! பார்ப்பானே உன்னிடம் தோற்றுப் போவான் போலிருக்கே! சரி; வேறு ஒரு சேதியும் கேள்விப்பட்டேன். என்னுடைய சமுதாயக் கொள்கைகளைப் பரப்புவதை விட்டுவிட்டு, எப்போதும், ஆளும் கட்சி அரசியல்வாதிகளுடன் ஒட்டிக் கொண்டு, அவர்களின் பிரச்சார பீரங்கியாக மாறி விட்டாயாமே!

வீரமணி : அப்படியெல்லாம் சொல்ல முடியாது அய்யா! எப்போதாவது எங்கேயாவது வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் கொள்கைகளை யும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்! டெல்லியில் எல்லாம்கூட, உங்கள் பெயரில் மாளிகை எழுப்பி யிருக்கிறேன், அய்யா? 

பெரியார் : மாளிகை எழுப்பி என்ன செய்கிறாய்? கொள்கைகளை பரப்புகிறாயா? அல்லது அங்கேயும் வாடகை தானா?

வீரமணி : விடுவேனா? அங்கேயும் வாடகைதான் அய்யா. டெல்லி எல்லாம் இப்போது உங்கள் காலத்தில் இருந்ததுபோல் இல்லை. நீங்கள் டெல்லி வடநாட்டான் என்று எதிர்த்ததைப்போல் இப்போது எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. டெல்லியில் ஆட்சி செய்கிறவர்கள் எல்லாம், இப்போது எனக்கு நண்பர்கள்! கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேகூட காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஓடி ஓடி பிரச்சாரம் செய்து வெற்றி பெற உழைத்திருக்கிறேன் அய்யா! உங்கள் கொள்கைகளுக்கு எப்படி எல்லாம் பெருமை சேர்த்து வருகிறேன்; பார்த்தீர்களா? 

பெரியார் : இது எனக்குப் பெருமையா? சிறுமையா? இனத்தையே அழித்து நாசப்படுத்திய கூட்டத்துக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ததைப் பெருமையாக என்னிடமே பேசுகிறாயே!

வீரமணி : என்னைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்களே! கலைஞர், காங்கிரசை ஆதரிக்கும் போது நான் என்னய்யா செய்வது? அவர் ஆதரிப் பவர்களைத் தானே நானும் ஆதரிக்க வேண்டி யிருக்கிறது! எவரையாவது அவர் எதிர்க்க விரும்புகிறார் என்றால், அதைப் புரிந்து கொண்டு அவரை முந்திக் கொண்டு, நான் எதிர்த்து அறிக்கைவிட வேண்டியிருக்கிறதே! கலைஞருக்காக இதைச் செய்ய பல பேர் தயாராக இருக்கிறார்கள். அந்தப் போட்டியிலே நான் முதலிடத்தைப் பெறு வதற்கு, ஒவ்வொரு நாளும் எவ்வளவு பாடுபடுகிறேன் தெரியுமா?  என்ன செய்வது அய்யா! நீங்கள் விட்டுச் சென்ற இனமான சமுதாயக் கடமை செய்ய வேண்டாமா? இப்படி என்னையே அழித்துக் கொண்டு உழைக்கிறேன். ஆனால், இந்தத் துரோகிகள்தான் எனது முதுகில் குத்துகிறார்கள்! 

பெரியார் : யாரைத் துரோகி என்கிறாய்? நீ வெளியிட மறுத்த என்னுடைய நூல்களை வெளி யிட்டவர்களையா? நீ பேச மறுக்கும் எனது கொள்கைகளை பரப்புகிறவர்களையா? உன்னைப் போல் அரசியலே கதி என்று கிடக்காதவர் களையா? எந்தச் சொத்து வசதியும் இல்லாமல், கொள்கை களைப் பரப்பிட எதிர் நீச்சல் போடுகிறவர்களையா? என்னுடைய சிலையை உடைத்த போது, வெகுண் டெழுந்து, பார்ப்பனர்களுக்கு பதிலடி தந்தவர் களையா? அதற்காக அடக்குமுறை சட்டத்துக்கு உள்ளாகி, சிறைக்குப் போகிறவர்களையா? நீ மறந்து போன சாதி - தீண்டாமை ஒழிப்புக் கொள்கைக்காக களமிறங்கி போராடுகிறவர்களையா? இதோ கேள்; நான் அவர்களிடம் சொத்துகளை விட்டுச் செல்லவில்லை. ஆனால் அவர்களோ என்னுடைய கொள்கை களை எடுத்துக் கொண்டார்கள். நான் உன்னிடம் கொள்கைகளையும், சொத்துகளையும் விட்டுச் சென்றேன். நீயோ, சொத்துகளை மட்டும் எடுத்துக் கொண்டாய். இப்போது என்னுடைய சொத்து மட்டும் உன்னிடம். கொள்கைகள் அவர்களிடம். யார் துரோகி என்பதை வரலாறு முடிவு செய்யும். சரிதானா வீரமணி; மன்னிக்கவும் தமிழர் தலைவரே!

 (தொலைபேசியை பெரியார் துண்டிக்கிறார். வீரமணி உடனே ‘விடுதலை’க்கு அவசரமாக அறிக்கை தயார் செய்கிறார். “பெரியார் தொலைபேசியில் பேசியது என்னிடம் தான். துரோகிகளிடம் பேசவில்லை. எனவே பெரியாரின் ஒரே வாரிசு நான் தான் என்பது மீண்டும் உறுதியாகிவிட்டது”.)     

- கோடங்குடி மாரிமுத்து