கேள்வி : கட்டுக்கோப்பாகவும், நேர்மையாகவும் இயங்கக்கூடிய திராவிடர் கழகத்தின் தியாகத்தைப் புரிந்து கொள்ளாமல் பொறுப்பற்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது எதனைக் காட்டுகிறது?

வீரமணி பதில் : சாய்ந்த தராசு பிடித்தவர்கள் முடிவை முன்னால் செய்து கொண்டு வாதங்களை புறந்தள்ளியதன் விளைவு! ‘டிவிஷன் பெஞ்ச்’ அதனை சரி செய்துள்ளதே! - ‘உண்மை’ இதழில் வீரமணி பதில்.

சட்டத்தின்படி சரியான தீர்ப்பை வழங்கினால் வீரமணி பார்வையில் அது சாய்ந்த தராசு போலும்! ‘பெரியார் நூல்களை வெளியிடும் உரிமையை வீரமணி மட்டும் கோர முடியாது’ என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு அப்படியே நீடிக்கிறது. தீர்ப்பு, அமுலாக்கம்தான் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், வீரமணியும், விடுதலையும், வேறு ஏதோ புதிய தீர்ப்பு வாங்கிவிட்டதைப்போல எழுதுகிறார்கள். அவர்கள் தொண்டர்களை அவ்வளவு முட்டாள்களாக கருதி விட்டார்கள் போலும். இவர்கள் அகராதியில் இதுதான் நேர்மைக்கான அர்த்தமோ? இந்த உத்தமபுத்திரர்களின் நேர்மைக்கு ஒரு சான்று கூறுகிறோம்!

‘குடிஅரசு’ வழக்கில் உயர்நீதி மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சமர்ப்பித்த மனுவில் 31 நூலகம் ஆய்வு மய்யங்களிலிருந்து ‘குடிஅரசு’ இதழ்கள் திரட்டப்பட்டன என்று குறிப்பிட்டு, அந்த நூலக ஆய்வக பெயர் பட்டியலையே குறிப்பிட்டிருந்தார். வீரமணி தாக்கல் செய்த பதில் மனுவில் ‘குடிஅரசு’ வேறு எங்குமிருந்தும் திரட்டப்படவில்லை என்றும், திருச்சியில் தங்களது நிறுவனம் தொகுத்ததைத்தான் பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுகிறது என்றும், ‘குடிஅரசு’ இதழ்கள், தங்களிடம் மட்டுமே இருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது, அவர்கள் வெளியிட்ட ‘குடிஅரசு’ முதல் தொகுப்பில் கழகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்த அதே பட்டியலை, அதே வரிசையில் வெளியிட்டுக் கொண்டு, இந்த நிறுவனங்களிடமிருந்து தேடி திரட்டி வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஒரே ஒரு மாற்றம் தான்; பேராசிரியர் சாலமன் பாப்பையா பெயரை எடுத்துவிட்டு (அவர் ‘குடிஅரசு’களை நமக்கு தந்து உதவியவர்) அதற்குப் பதிலாக பெரியார் திடலிலுள்ள நூலகத்தின் பெயரை சேர்த்திருக்கிறார்கள். அவ்வளவு தான்! நேர்மையாளர்களின் யோக்கியதை, இதுதான்!