(ஆக.20 இல் சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் முன் வைத்த உலகத் தமிழர் பிரகடனம்)

1.                    ஈழத் தமிழ் மக்களின் மரபு வழித் தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய முறையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவை திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக் கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றே அவர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்.

2.                    தங்கள் தாயகத்திலும் உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்கள் ஊர்களிலும், வீடுகளிலும், மீண்டும் குடியேறவும் அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணுகிறோம்.

3.                    தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களையும் சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டுமென அய்.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4.                    இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும் அவர்களை ஏவி விட்ட சிங்கள அரசியல்வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5.                    உலகிலுள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையும், தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்து கொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும், அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலை நிறுத்திக் கொள்ள அவர்களுக்குத் தோள் கொடுத்துத் துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6.                    அளப்பரிய தியாகங்களைச் செய்து ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதி வரை போராடிய போராளிகளும் வீறு கொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாகப் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும், அந்த மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்டைத்துக் கொண்டு, எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

உலகத் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு ஈழத தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் வேளையில் உலகெங்கிலும் உள்ள சனநாயக சக்திகள், சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் நம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருமாறும், உலகத் தமிழர்கள் அனைவரும் அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களையும், அரசுகளையும் ஈழத் தமிழர் சிக்கலுக்கு ஆதரவாகத் திருப்புவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அனைவரையும் வேண்டிக் கொள்வதற்காக தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி இப்பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம்.

தமிழர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மகத்தான ஒரு கடமையை மேற் கொள்வதற்காகவே நாம் கூடி உலகறிய செய்துள்ள இப்பிரகடனம், ஈழத் தமிழர்களுக்கு வாழ்வளிக்கப் போகும் பிரகடனம் மட்டுமல்ல, உலகத் தமிழர் அனைவருக்கும் விடிவைக் கொண்டு வருவதற்கான வழிகாட்டும் பிரகடனமுமாகும் என்பதை உணர்ந்து தமிழர்கள் கட்சி, சாதி, மத வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒற்றுமையுடன் செயல்பட முன் வருமாறு அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.