பெரியார் அறைகூவலை ஏற்று, சாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் சட்த்துக்கு தீ வைத்து சிறையேகிய, பல்லாயிரம் போராளிகள் காட்டிய வழியில், பெரியார் திராவிடர் கழகம் சாதி, தீண்டாமை ஒழிப்புப் போரைத் தொடரும் என்று - கழகப் பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன், சென்னையில் நவம்.26 அன்று சாதி ஒழிப்பு, சட்ட எரிப்பு நாள் கூட்டத்தில் பேசுகையில் சூளுரைத்தார். அவரது உரை:
 
தன்னை தமிழன் என்று உணர வைத்தவர் பெரியார். தமிழனை உலகிற்கு உணர்த்தியவர் nலுப்பிள்ளை பிரபாகரன். இந்த இரண்டு பேருக்கும் நவம்பர் 26 ஆம் நாள் வரலாற்றுக் குறிப்பு நாள். தமிழ் ஈழ மக்களின் உரிமை பிரபாகரனின் உயிர் மூச்சு கொள்கை. பெரியாரின் உயிர் மூச்சு இந்த சாதி ஒழிப்பு.

நவம்பர் 26 ஆம் நாளை பெரியார் திராவிடர் கழகம் இலட்சிய நாளாக ஏற்றுக்கொண்டுள்ளது. சாதி ஒழிப்பே எங்களுடைய மூலக் கொள்கை. பெரியார் சொன்னாரே ‘பறையன்’ பட்டம் போகாமல் ‘சூத்திரன்’ பட்டம் போகாது என்று, அதை எங்கள் நெஞ்சில் தாங்கிக் கொண்டிருக் கிறோம். அந்த வகையில் இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் பொதுக் கூட்டமாக நடத்தி வருகிறோம். பிரபாகரனுக்கு வாழ்த்துச் சொல்வதோடு, சாதி ஒழிப்பு வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூர்ந்து களம் அமைக்கிறோம். தமிழ் ஈழத்தேசியத் தலைவர் பிரபாகரன் கனவான தமிழ் ஈழத்துக்கும் நாங்கள் களத்தில் நிற்போம். அதே போல பெரியாருடைய சாதி ஒழிப்பு இலட்சியங்களுக்காக களம் காண்போம். சாதி தீண்டாமை எந்தெந்த வடிவத்தில் எங்கெங்கே இருக்கின்றதோ, அங்கே பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை. அதை நடைமுறைப் படுத்துகின்ற அடுத்தக்கட்ட போராட்டங்களை அறிவிக்கின்ற நாளாகத்தான் நவம்பர் 26-அய் நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
 
சாதி எங்கே இருக்கின்றது என்று கேட்பார்கள். சாதி கோயில் கருவறையிலே இருக்கின்றது. அதைத் தான் பெரியார் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால் சென்னை தியாகராயர் நகரிலே நடந்த பொதுக் கூட்டத்தில் மக்களைப் பார்த்து, “உங்களை யெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகிறேனே” என்று கூறினார். சாகின்ற தருவாயிலே கூட இந்த மக்களின் மேல் இருக்கின்ற இழிவை ஒழிக்க வேண்டும் என்பதை உணர்த்திவிட்டுப்போனார். அந்த சுயமரியாதை உணர்வைத்தான் நம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.
 
சுயமரியாதை என்பது, “எந்த வகையான உரிமைகள் மறுக்கப்படுகின்றபோதும் எழுந்து நின்று போராடுவது”. உலகத்திலேயே யாருமே ஒரு இயக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்ததில்லை. பெரியார்தான் சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார். அந்த சுயமரியாதை தேனீர் கடைகளிலே, முடிதிருத்தும் நிலையங் களிலே, கோயில் கருவறையிலே பாதிக்கப்படு கின்றது. இந்திய அரசியல் சட்டம் சாதி என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்ற வேதனையிலேதான் பெரியார் இந்த அரசியல் சட்டத்தையே எரிக்க துணிந்தார்.
 
சட்டத்தை உருவாக்கியவர்கள் சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்பதை குறிப் பிடவில்லை. தேசியக் கொடியை எரித்தால், தேசியத் தலைவர்களின் படங்களை எரித்தால் என்ன தண்டனை என்பது சட்டத்திலே குறிப்பிடவில்லை. பெரியார் அரசியல் சட்டத்தைக் கொளுத்து வேன் என்று அறி வித்தப் பின்னால் தான் அவசர அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி விவாதித்து அரசியல் சட்டத்தை கொளுத் தினால் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை என சட்ட திருத்தம் கொண்டு வந்தனர். பெரியார் தேசியக் கொடியை என் கோவணத் துணி என அறிவித்தப் பின்னால்தான், தேசியக் கொடியை அவமதித்தால் தண்டனை என அறிவித்தனர். அப்படிப்பட்ட அரசியல் சட்டத்திலேதான் நாம் ‘சூத்திரர்கள்’ என்பதை நியாயப்படுத்துகின்றனர். பெரியார் தான் சாகிறபோது விட்டுச் சென்ற போராட்டம் தான் கோயில் கருவறை போராட்டம். அங்கே தான் சாதி தீண்டாமை இருக்கின்றது.
 
இன்றைக்கு எங்கே சாதி இருக்கின்றது என்று கேட்கும் தோழர்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்து கின்றேன். இன்றைக்கு சபாநாயகராக இருக்கும் மீனாக்குமாரி அவர்களின் தந்தை ஜெகஜீவன்ராம், இந்த நாட்டின் இராணுவ அமைச்சராக இருந்தவர். இன்னும் 10 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இந்த நாட்டின் பிரதமராகக்கூட வந்திருக்க முடியும். அப்பேர்ப்பட்ட மூத்த அமைச்சர் அவர். இங்கே அருந்ததி சாதியைப் போல உத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஜெகன்ஜீவன்ராம் அப்போது சம்பூரானந்த் என்பவருடைய சிலையை திறக்கப் போனார். இப்போது போல சிலையை திறப்பதென்றால் ஒரு பொத்தானை அழுத்தினால் சிலையின் திரைசீலை விலகும். இப்படித்தான் திறந்து வைத்தார். ஆனால் சம்பூரானந்த் ஒரு பார்ப்பனர் என்ற காரணத்தினால் ஜெகஜீவன்ராம் இராணுவ அமைச்சராக இருந்தாலும் சிலை தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, பார்ப்பனர்கள் கங்கை நீரை கொண்டு வந்து சிலையைக் கழுவினர். இதுதான் இந்தியா. இதுதான் இந்துமதம்.
 
மேல்சாதி என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதவர்கள், தனக்கு கீழே உள்ள கீழ்சாதிக்காரர்கள் குடித்த தம்ளரில், மேல் சாதிக்காரர்கள் குடித்துவிடக் கூடாது என்பதற்காக இரட்டைக் குவளை வைத்திருக்கின்றனர். ஆனால், அத்தனை பேரும் கோயிலுக்குப் போனால் நீ வெளி யிலே நில் என பார்ப்பான் ஒதுக்கி வைத்திருக் கின்றான். அங்கே, மேல்சாதி என்று கூறிக் கொண் டிருக்கிற பார்ப்பனரல்லாதவனுக்கும், தீண்டாமை, சாதிக் கொடுமை இருக்கின்றது என்பதை உணர்ந்தார்களா?
 
இந்துமதத்திலே ஒவ்வொரு சாதியும் எங்கெங்கே இருக்கவேண்டும் என்று வரையறுத்து வைத்திருக் கின்றான். பார்ப்பான் கோயில் கருவறையுள்ளே இருக்கின்றான். நாம் எந்தச் சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், மிகப் பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்கள் கோயிலின் கருவறைக்கு வெளியேதான் நிற்க வேண்டும். பஞ்சமர்கள் கோயிலுக்கு உள்ளே கூட செல்லக்கூடாது என்பதற்காகத்தான் கோயில்களில் கோபுரங்கள் உயரஉயரமாக உயர்த்திக் கட்டியிருக்கிறார்கள். எட்டி நின்றுதான் அவர்கள் தரிசனம் செய்ய வேண்டும். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று அவன் பழமொழியாகவே வைத்திருக்கிறான். அந்த கருவறை இப்போது படாதபாடு படுகின்றது. இப்போது கருவறையில் என்ன நடந்துக் கொண் டிருக்கிறது என்பது நம்முடைய செல்போன்களில் எல்லாம் வருகின்றது. உலகம் முழுதும் பரவியிருக் கின்றது, தேவநாதன் என்ற பார்ப்பனனால்!
 
மக்கள் எல்லாம் சொல்கிறார்கள் எங்கள் மனம் புண்பட்டுவிட்டது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. “அவனன்றி ஓர் அணுவும் அசை யாது” என்று சொன்னீர்கள் அல்லவா? அப்படி யானால் தேவநாதனா அசைந்தான்? இல்லை, ‘சிவ பெருமான்’ முன்னாலேயே எல்லாம் அசைந்திருக் கிறது. பகவான் பார்த்துக் கொண்டுதானே இருந்தான். பhர்த்துக் கொண்டிருந்த ஆண்டவனே ஒன்றும் செய்யவில்லை. அவன் நெற்றிக் கண்ணை திறந்திருக்க லாம். திறக்கவில்லையே. திறந்தால் எங்கே, தேவநாதன் “விளையாட்டை” நிறுத்தி விடுவானோ என நெற்றிக் கண்ணை திறக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்திருக்கிறான். (சிரிப்பு, கைத்தட்டல்) “ஆட்டுவித்தால் யாரொருவன் ஆடாதாரே கண்ணா” என்று பக்தர்கள் தானே சொன்னார்கள். ஆகவே பகவான் ஆட்டுவித்தான். தேவநாதன் ஆடியிருக்கின்றான்; அவ்வளவுதான்!
 
கவுண்டர் போனால், நாடார் போனால், நாங்கள் எல்லாம் போனால் தீட்டாயிடும் என்று சொல்லு கிறீர்கள். எங்களை எல்லாம் விட்டு விடுங்கள். குன்றக்குடி அடிகளார், மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் போவதற்குக்கூட அனுமதி இல்லை. இந்து மதத்தில் சங்கராச்சாரியார் முதற்கொண்டு பெண்களை கோயிலுக்கு வரக்கூடாது என்றார்கள். ஆனால், பங்காரு அடிகளார் பெண்களை எல்லாம் கோயிலுக்கு வாருங்கள் என்றார். கூட்டம் எல்லாம் அங்கே கூடிவிட்டது. இப்பேர்ப்பட்ட பங்காரு அடிகளார்கூட தேவநாதன் எல்லாம் போகக்கூடிய கருவறைக்குள்ளே போக முடியாதே. இன்னும் சொல்லப் போனால் நம் அறநிலையத்துறை அமைச்சர்கூட செல்ல முடியாதே.
 
ஆனால், தேவநாதன் பெரும் புரட்சியே செய்திருக்கின்றான். எட்டுப் பெண்கள் என்று சொல்லுகின்றனர். எட்டுப் பெண்களும் எட்டு சாதியாகத்தானே இருந்திருக்க வேண்டும்? இவர்கள் எப்படி கருவறைக்குள்ளே போனார்கள்? சிவபெருமான் எப்படி அனுமதித்தான்? இவர்களுக்கெல்லாம் லோககுரு சங்கராச்சாரியார் தான் வழிகாட்டி. சங்கராச்சாரியாரை பின்பற்றித்தானே தேவநாதன் செயல்பட்டுள்ளார். இந்துமுன்னணி தோழர்களே, பக்தர்களே! எந்த நாத்திகனாவது இப்பேர்ப்பட்ட காரியங்களை செய்தனர் என்று உலகத்திலேயே யாரையாவது சொல்ல முடியுமா? கருப்புச் சட்டைக்காரன் பெரியாரின் உண்மைத் தொண்டன். இப்பணியைச் செய்தான் என்று யாராவது சொல்ல முடியுமா? (கைதட்டல்) இப்பேர்ப்பட்ட நிலையிலே நாமெல்லாம் கோயிலுக்குள்ளே சென்றால் தீட்டாகும் என்கிறான். அரசியல் சட்டம் அதை பாதுகாக்கிறது. ஆகவேதான் பெரியார் சட்டத்தை எரிக்கத் துணிந்தார்.
 
1957-லே தமிழ்நாட்டில் 10000 பேர் சட்டத்தை எரித்ததை நினைத்துப் பாருங்கள். இன்று எல்லா வசதிகளும், தகவல் தொடர்புகளும் இருக்கின்றன.
 
1957-ல் என்ன வசதிகள் இருந்திருக்க முடியும்? பெரியார் சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு வாருங்கள் என 20 நாட்கள் இடைவெளியிலே தஞ்சாவூரிலே மாநாடு போட்டு அறிவிக்கின்றார். அந்த 20 நாளிலே சட்டமன்றம் கூடி விவாதித்து 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை என அறிவித்து பயமுறுத்திய நிலையிலேகூட 10000 பேர் சட்டத்தை எரித்தார்கள். ஒவ்வொரு கிராமம் கிராமமாக பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சட்டத்தை எரித்த தோழர்களை எல்லாம் ஓர் இடத்திற்கு கொண்டு வந்து அமர வைத்து, “இங்கேயே இருங்கள் மேலதிகாரிகளை அழைத்து வருகிறேன்” என்று சென்றவர்கள் திரும்ப வரவே இல்லை. ஏனென்றால் இவர்களை அழைத்துச் செல்ல வாகனமோ, தகவல் சொல்ல சாதனமோ இல்லாத நிலையிலே அங்கங்கே விட்டு விட்டுச் சென்று விட்டனர். இப்படி போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் கணக்கில் வராமல் போனார்கள். 4000 பேருக்கு மட்டும் நீதிமன்றம் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என தண்டனை வழங்கியது. அப்படி தண்டனை பெற்று சிறைக்குப் போன பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி உட்பட 5 தோழர்கள் சிறையிலேயே மாண்டனர்.
 
கடந்த 15 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியும் போராட்டம் நடத்தி சிறைக்குச் செல்லவில்லை. நாம் தாம் தொடர்ந்து பல்வேறு நிலைகளிலே சிறைக்குச் சென்று கொண்டு இருக்கின்றோம். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள சிறைகள் பெரியார் திராவிடர் கழகத்திற்கு சொந்தமாகிவிட்டது. எங்களுக்கு மாற்று வீடே சிறைதான். அதுவும் சென்னை தோழர்களுக்கு சென்ட்ரலில் இருந்தாலும், புழலில் இருந்தாலும் நாங்கள் சிறைக்கு வருவோம் என்று சென்று கொண்டிருக்கின்றனர்.
 
1957 இல் நடந்த சாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் வெள்ளைச்சாமியும், ராமசாமியும் சிறையில் சரியான உணவு, மருத்துவ வசதிகள் இல்லாத நிலையிலே சிறையிலேயே மாண்டு போனார்கள். அவர்களில் ஒருவரை பட்டுக்கோட்டை இராமசாமியை சிறையிலேயே புதைத்து விட்டனர். உடலைக்கூட கொடுக்கவில்லை. அன்றைக்கு இருந்தது காங்கிரஸ் ஆட்சி! பக்தவச்சலம் தான் உள்துறை அமைச்சர். ‘பொன்மொழிகள்’ புத்தகத்திற்கு விதித்த தடையால் பெரியாரும் சிறையில் இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தை வழி நடத்தியது மணியம்மையார் அவர்கள். அவர்கள் காவல்துறை அமைச்சர் பக்தவத்சலம் வீட்டு முன்னால் ஆயிரக்கணக்கான தோழர்களுடன் சென்று மறியல் செய்து எங்கள் தோழர்களின் உடலையாவது கொடுங்கள் என்று போராட்டம் நடத்தினர். புதைக்கப்பட்ட மாவீரன் இராமசாமி உடலைத் தோண்டி எடுத்து ஊர்வலமாக திருச்சி தெருவிலே 10000-க்கும் மேற்பட்ட மக்களோடு கொண்டுவந்து அடக்கம் செய்தனர்.
 
அதேபோல 15 வயது நிரம்பிய திருச்சி வாளாடியைச் சார்ந்த பெரியசாமி என்பவரை தூத்துக்குடியில் சிறுவர் சிறையிலே வைத்திருந்தனர். அப்போது கவர்னர் விஷ்ணு ராம்மேதி சிறையை பார்வையிட வருகிறார். 15 வயதே நிரம்பிய பெரியசாமியைப் பற்றி கவர்னரிடம் சொல்லுகிறார்கள். அப்போது கவர்னர் அவர்கள் பெரியசாமிப் பார்த்து, ‘நான் வேண்டுமென்றால் என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யட்டுமா’ என்று கேட்கிறார். அப்போது அவன் மறுக்கிறான். தம்மை விடுதலை செய்தால் போதும் என்ற எண்ணத்தில் உழலுவோர் தான் நாட்டில் அதிகம். ஆனால் 6 மாதம் தண்டிக்கப்பட்ட அந்த சிறுவனைப் பார்த்து கேட்கிற போது மறுக்கிறான். அப்படி சொல்லியதால் விடுதலை செய்யப்படவில்லை. எப்பேர்ப்பட்ட கொள்கை உறுதிப் பாருங்கள். அந்தக் கொள்கை உறுதியோடு சிறைக்குள்ளே சென்ற 15 வயதே நிரம்பிய பெரியசாமி பிணமாகத்தான் வெளியே வந்தான், இந்த சாதியை ஒழிப்பதற்காக.
 
ஆனால், அந்த சாதி இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை ஒழிப்பதற்காகத்தான் பெரியார் திராவிடர் கழகம் தன் உயிர் மூச்சாக எடுத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறது.
 
அரசாங்கம் சுதந்திர நாளன்று மட்டும் சமபந்தி விருந்து நடத்துகிறது. அன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறநிலையத் துறை அமைச்சர் ஒரு பக்கத்திலேயும், தலித் மற்றும் ஒவ்வொரு சாதிக்காரராக அமர வைத்து எல்லோரும் கோயிலில் உட்கார்ந்து சாப்பிட்டால் சாதி ஒழிந்துவிட்டதாம். இப்படித்தான் இவர்கள் சமபந்தி விருந்து என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஓட்டலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது. 40 ரூபாய், 50 ரூபாய் என பணம் கொடுத்து சாப்பிடுகிறார்களே, எல்லா சாதியை சார்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து தானே சாப்பிடுகின்றனர்? தினந்தோறும் ஓட்டலில் சமபந்தி விருந்துதான் நடக்கிறது. அங்கே யாராவது சாதியைக் கேட்கிறோமா? எந்த சாதியாக இருந்தாலும் நாம் உட்கார இடத்தைத் தானே தேடுகிறோம்? பேருந்தில் செல்லுகின்றபோது பக்கத்தில் இருப்பவர் என்ன சாதி என்று தெரியுமா?
 
கிராமத்திலே அருந்ததிய தோழர்களுக்கெல்லாம் முடித்திருத்தங்களிலே முடிவெட்ட மாட்டார்கள். நாவிதர் ஒன்றும் உயர்ந்த சாதியைச் சார்ந்தவர் அல்ல. ஆனால், மற் றசாதிக்காரர்களுக்கு பயந்து கொண்டு, அவர்கள் வர மாட்டார்களே என்று, இவர்கள் முடிவெட்டுவதில்லை. அதே கிராமத்தில் இருக்கக்கூடிய எந்த சாதிக்காரர்களானாலும் இதே திருப்பதிக்குச் சென்றால் வரிசையாக அமர வைத்து மொட்டையடிப்பானே அவர்கள் என்ன சாதி என்று தெரியுமா? தோழர்களே இராஜபக்சேகூட தந்திரமாக திருப்பதிக்கு வந்து சென்றுள்ளாரே! இந்துக்கள் உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாளராக இருந்தால் நீங்கள் யாரும் திருப்பதிக்கு போகக் கூடாது. கொலைகாரன் இராஜபக்சேவையும் ஏற்றுக் கொண்ட அந்த திருப்பதிக்கு நீங்கள் போகலாமா? அதேபோல் அய்யப்பன் கோயிலுக்கு போகிறானே, அங்கே எல்லோரும் இருமுடி கட்டிக் கொண்டு படிக்கட்டுகளிலே நிற்கின்றார்களே அவர்களுக்கு முன்னால் நிற்பவர்கள் அல்லது பின்னால் நிற்பவர்கள் என்ன சாதி என்று தெரியுமா?
 
அவ்வளவு ஏன்? நம்முடைய தாய்க்கு தந்தைக்கு உடன் பிறந்தவர்களுக்கு அடிபட்டு ரத்தம் தேவை என்றால் இந்த குரூப் வேண்டும் என்று கேட்கின்றீர்களே தவிர இன்ன சாதி இரத்தம் தேவை என்றா கேட்கின்றீர்கள்? அந்த ரத்தமும் நான் செட்டியார் ரத்தம், தேவர் உடம்பிலே ஏற மாட்டேன். நான் அருந்ததியர் ரத்தம், செட்டியார் உடம்பிலே ஏற மாட்டேன் என்றா மறுக்கிறது? அந்த ரத்தம் உயிரைக் காப்பாற்றுகிறதே, அங்கே சாதி பார்க்கவில்லையே.
 
ஆனால், சட்டத்திலே சாதியை பாதுகாக்கிறானே? அந்த சாதியை ஒழிப்பதற்காகத்தான் இந்த நாளிலே பெரியார் தொண்டர்கள் 18 பேர் களத்திலே மடிந்தார்கள். இந்த நாளிலே அதை நாம் நினைக்கிறோம் என்று சொன்னால் அவர்களின் தியாகம் ஒப்பற்றது.
 
எனது போராட்டத்தை விலை பேச மாட்டேன்
 
பெரம்பலூர் பக்கத்திலுள்ள கிராமத்தில் ஒரு தோழர் கூலித் தொழிலாளி, இந்த சாதி ஒழிப்புப் போராட்டத்தில் இரண்டு வருட தண்டனைப் பெற்று சிறைக்குச் சென்று வெளியே வருகிறார். அவர் சிறையில் இருக்கும்போது அவர் மனைவிகூட வந்து பார்க்கவில்லை. அந்தளவுக்கு ஏழ்மை. தண்டனை முடிந்து அவர் வெளியே வந்து கிராமத்திற்குச் சென்று பார்க்கிறார். அங்கே அவர் குடும்பம் இல்லை. எங்கே சென்றனர் என்று விசாரிக்கிறார். அவர்கள் எங்கோ வெளியூருக்கு பிழைக்கச் சென்றுவிட்டனர் என்று சொல்லுகின்றார்கள். தேடிப் பார்க்கிறார் கிடைக்கவில்லை. அந்த தோழருக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது.
 
சமீபத்தில் ‘குமுதம் ரிப்போர்ட்டரில்’ கூட ஒரு செய்தி வந்தது. திருச்சியிலே சட்டஎரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தோழர், மாநகராட்சி கழிப்பிடத்திலே அந்தக் கழிப்பிடத்தைக் கழுவி தன் மனைவியோடு இருக்க இடம் இல்லாமல், அந்த கழிப்பிடத்திலேயே ஒரு அறையை எடுத்து, அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்றும் கறுப்புச் சட்டைப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அவரிடத்திலே நிருபர் கேட்கிறார், ‘உங்களுக்கு யாரும் ஆதரவு தரவில்லையா? நீங்கள் வீரமணியைப் பார்த்து உதவிக் கேட்கவில்லையா’ என்று? அப்போது அவர் சொல்கிறார், “நான் இந்த சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அர்ப்பணிப்போடு வந்தவன். இதை நான் விலை பேச விரும்பவில்லை. இதைக் காட்டி எந்தச் சலுகையும் பெற விரும்பவில்லை. நான் உழைத்து வாழ்ந்துக் கொள்கிறேன்” என்று, கழிப்பிடம் சுத்தம் செய்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ஆனால் வீரமணி திராவிடர் கழகப் பொறுப்புக்கு வந்த பின்பாவது, இந்த சாதி ஒழிப்பு வீரர்களைப் பற்றி நினைத்தாரா என்றால் இல்லையே. அவருடைய தொண்டர்கள் எல்லாம் இப்பொழுது ஒரு பாடலை பாட ஆரம்பித்து விட்டனர். “வீராதி வீரனே வீரமணி மைந்தனே” என்று. மகன்களைப் பற்றித்தான் இவர்களுக்கு கவலையே தவிர, சாதி ஒழிப்பு வீரர்களைப் பற்றி என்ன கவலை?
 
- சென்னை கூட்டத்தில் கோவை இராமகிருட்டிணன் உரை
 
ஆனால், பெரியார் திராவிடர் கழகம் சாதி ஒழிப்பு வீரர்களையும், தமிழ் ஈழப் போராளிகளையும், மறக்காமல், அந்தப் பணிக்காகவே இருந்து கொண்டு தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
 
இப்போது யாரை ஆதரிக்கலாம்? கலைஞருக்கு ஒரு கேள்வி
 
விடுதலைப் புலிகள் - ரணில் விக்ரம சிங்கேயை தேர்தலில் ஆதரித்திருக்க வேண்டும் என்றும், அப்படி ஆதரிக்காமல், தேர்தலில் புறக்கணித்ததால் தான் ராஜபக்சே பதவிக்கு வந்து இவ்வளவு அழிவையும் செய்து விட்டார் என்றும் - கலைஞர் பேசுகிறார்; எழுதுகிறார்.

சரி; இலங்கை தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல், பிரபாகரன் தவறு செய்து விட்டார் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது, ராஜபக்சேயும், ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யாரை ஆதரித்தால், தமிழர்களுக்கு நல்லது என்று கலைஞர் கூறலாமே! கூறுவாரா?

- சென்னை கூட்டத்தில் கோவை இராமகிருட்டிணன்