நண்பர்கள் இருவர் டீக்கடைக்குப் போகிறார்கள். பையில் போதிய பைசா இல்லை. “ஒன் பை டூ போடுங்க...” - ஒரு டீயை இருவரும் பகிர்ந்து அருந்து கிறார்கள். இந்த ஒன் பை டூ பகிர்தல் பண்பாடு பலரும் அனுபவிப்பதுதான். இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. சாமானிய இந்தியக் குடிமகனின் பொருளியல் நிலவரத்தை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடு இது.

இந்நிலையில், இப்போது பல நாட்களாகப் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கும் ஒரு செய்தி கறுப்புப் பணம் பற்றியது. ‘பணம்’ தெரியும். அதென்ன கறுப்புப் பணம்? - என்கிற எளிய மக்களின் அறியாமை நிலைமை கூட கறுப்புப் பணக்காரர்களுக்கு ஒருவிதத்தில் உளவியல் ரீதியான வசதிதான்.

பெருத்த முதலாளிமார்கள், வர்த்தகச் சூதாடிகள், பல மாண்புமிகு மந்திரி மார்கள், பல அரசியல் தலைவர்கள், உச்சிநிலை அதிகாரிகள் என்று ஒரு பெரும் இந்தியப் பண முதலைக் கூட்டம் ஸ்விஸ், ஜெர்மனி முதலிய பல நாடுகளின் வங்கிகளில் திருட்டுத் தனமாக ரகசியக் கணக்குகளில் போட்டு வைத்துள்ள கறுப்புப் பணம் 64 லட்சம் கோடி!

இந்த 64 லட்சம் கோடிக்கு எத்தனை ஸைபர்கள் என்று கேட்டால் அது சிங்கிள் டீ-க்கும் சிரமப்படுகிற சாதாரணர்களின் அறிவுக்கு எட்டுகிற விஷய மல்ல. படித்த நடுத்தரரே தடுமாறுகிற சங்கதி. ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியைவிடக் கூடுதலான ஸைபர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்!

‘வெளிநாட்டு வங்கிகளில் போட்டுள்ள பணம் நாட்டில் கொள்ளையடிக்கப் பட்ட பணம். இன்னும் சொல்லப்போனால் நாட்டில் திருடப்பட்ட பணம். இது பயங்கரக் குற்றச் செயலாகும். இதற்கு அரசுத் தரப்பில் கூறப்படும் பல்வேறு காரணங்கள் குறித்து எங்களுக்கு அக்கறையில்லை’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி கள் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். நாட்டின் வளத்தைச் சூறையாடியதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது எப்படிச் சரியாகும்? ரகசிய வங்கிக் கணக்குகள் வைத்திருப் பவர்களைக் கண்டறிய மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது? அதில் என்ன சிரமம்? என்றும் உச்சநீதிமன்றம் கேள்விகள் தொடுத்துள்ளது. இடதுசாரிக்கட்சிகளும், பல எதிர்க்கட்சிகளும் இந்தக் கறுப்புப் பணக் குவியலைக் கைப்பற்றவேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளன.

ஆனால், நமது மகா பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டிலைக்கூட வெளியிட முடியாது என்கிறார்கள். அப்படி வெளி யிட்டால் மற்றவர்களோடு சேர்ந்து இவர்களின் யோக்கியதையும் தேசபக்தி லட்சணமும் நாட்டு மக்கள் முன் அப்பட்டமாக அம்பலமாகிவிடும் என்கிற அச்சம்தான். அரசே ஆட்டம் கண்டுவிடலாம்.

ஒரு வேளை கறுப்புப் பணத்திற்கு வருமான வரி போட்டு அதைச் சட்டப் பூர்வ வெள்ளைப் பணம் ஆக்க முயன்றால் அது மகா கொடுமையாகும்! வங்கியில் கொள்ளையடித்தவனுக்கு வருமான வரி போட்டு கொள்ளையடித்த பணத்தைச் சட்டப்பூர்வமாக்கினால் எப்படியோ அப்படியாகும்!

கறுப்புப் பணக் குவியலை மொத்தமாகக் கைப்பற்றி நம் நாட்டுக்குக் கொண்டு வந்தால் துயரப்படும் கோடானுகோடி மக்களுக்கு உதவுகிற பல நல்ல திட்டங் களை நிறைவேற்றலாம். ஏராளமான தொழிற்சாலைகளை உருவாக்கி பல லட்சக் கணக்கில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கலாம். கொடிய வறுமை யினால் ஏழை விவசாயிகள் தற்கொலை நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்கலாம்.

இந்த நல்ல காரியத்தை மத்தியில் ஆளும் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு செய்யும் என்ற நம்பிக்கை எவருக்கும் இல்லை தான். இதற்கெல்லாம் ஒரு தீர்வு மக்கள் கிளர்ந்தெழுவதுதான்.

இந்த ‘நல்லவர்களை’ மக்கள் மயக்கமின்றி மெய்யான அடையாளம் கண்டால் அதுவே நாட்டுக்கு ஒரு நல்ல திருப்பமாக இருக்கும்.

Pin It