dalit victim hut

பஞ்சமர்களுக்கும் தொழுநோயாளிகளுக்கும் அனுமதி இல்லை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், 1890இல், சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒற்றை வாடை அரங்கில், ஆரியமாலா என்கிற நாடகம் நடந்தது.

அதை ‘இந்து வினோத சபா’ என்கிற அமைப்பு நடத்தியது அவ்வமைப்பு நாடகத்தை விளம்பரப்படுத்த ஒரு துண்டு அறிக்கை வெளியிட்டது. அதில் நாடகத்திற்கு பஞ்சமர்கள் (தலித்கள்) மற்றும் தொழுநோயாளிகளுக்கு அனுமதி இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

ஒரு தொழுநோயாளியைப் போன்ற தொற்று நோயாளியாக தலித் மக்களைக் கருதி, பொது நிகழ்வுக்கு வரக்கூடாது; ஊருக்குள் செருப்பணிந்து நடக்கக் கூடாது; மிதிவண்டி ஓட்டிச் செல்லக்கூடாது; தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளைமுறை; கோயில்களில் நுழைந்து வழிபட அனுமதி இல்லை; பொதுக்குழாயில் தண்ணீர் எடுக்க முடியாது; செத்த பிணங்களை ஊர் வழியே எடுத்துச் செல்ல முடியாது; பொதுச் சொத்துகளை அனுபவிக்கும் உரிமை கிடையாது; ஆடம்பரமான முறையில் திருமணங்களோ, தங்களது குலசாமி திருவிழாக்களோ நடத்த முடியாது; அரசியல் கட்சியிலோ, ஆட்சி நிர்வாகத்திலோ பங்கேற்க முடியாது என்ற நிலையே பல காலம் நீடித்து வந்தது.

நீதிக்கட்சி ஆட்சி

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1920இல் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபின் பார்ப்பனரல்லாதாரின் நிலைமை மாறியது. பண்டிதர் அயோத்திதாசரின் கருத்தாக்கங்களும், தாத்தா இரட்டை மலை சீனிவாசனின் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் வலுப்பெற்ற சூழலில், பெருந்தலைவர் எம்.சி.ராஜா போன்றோரின் முனைப்பால், ‘பொதுப் போக்குவரத்து மற்றும் கல்விக் கூடங்களில் பஞ்சமர்களை அனுமதிக்க வேண்டும், பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவனும் இல்லை உயர்ந்தவனும் இல்லை’ என்று நீதிக்கட்சி ஆட்சி உத்தரவிட்டது.

அரசியல் அமைப்புச் சட்டமும் சாதியக் குடியரசும்

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தின் விளைவாக, இந்தியாவிற்கு என்று அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் அடிப்படையான கருத்தாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை இடம்பெற்றன.

சுதந்திரமான, சமுதாய நலம் நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசுச் சட்டமாக நம் அரசியல் அமைப்பு உருவானாலும், அதில் ஒரு நபருக்கு ஒரு ஓட்டு என்பதைத் தவிர வேறெதிலும் சமத்துவத்தைக் கொண்டு வரமுடியவில்லை. சற்றும் சமத்துவமற்ற சகோதரத்துவமற்ற வாழ்வியலே இன்றும் தொடர்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் சரத்து- 15.2இல் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் - இவற்றில் எதன் அடிப்படையிலும் எந்தவொரு குடிமகனும் எந்த இயலாமை, பொறுப்பு, கட்டுப்பாடு அல்லது பாகுபாடான நிபந்தனைகளுக்கு உட்பட மாட்டார் என்று சட்டம் சொல்கிறது, இச்சட்டத்தை மேற்கோள்காட்டி இந்தியா ஒரு குடியரசு நாடு என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டாலும் அதன் உண்மையான முகம் சாதியின் குடியரசாகவே இன்றும் தொடர்வதை இந்திய கிராமங்களைப் பார்த்தாலே நாம் அறிந்து கொள்ள முடியும்.

காந்தியின் சுயராஜ்யக் கனவு

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கனவு திட்டமான கிராமசுயராஜ்யம் என்பது ஒரு நல்ல திட்டம் தான். ஆனால் சாதியால் கட்டுண்டு வேற்றுமையை அடிப்படையாகக் கொண்ட சாதியம் ஆதிக்கத்தில் திளைக்கும் கிராமம், சமத்துவமற்ற சாதி ராஜ்யமாக இருக்குமே தவிர, சுயராஜ்யமாக இருக்க வாய்ப்பில்லை.

இந்தியச் சாதி அமைப்பு என்பது ஒரு கான்கிரீட் தரை போன்றது. அதை கோடாரி கொண்டு தகர்க்காமல் இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அம்பேத்கர் சொன்னது ஆராயப்படாமலே காந்தியின் கிராம சுயராஜ்யக் கனவை நனவாக்கவும், கிராமங்களை முழு அதிகாரம் மிக்கவையாக மாற்றவும், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இந்திய அரசால் உருவாக்கப்பட்டன.

ஊராட்சிகளின் கட்டமைப்பு

1990களில், பஞ்சாயத்து நிர்வாகச் சட்டங்கள் ஊராட்சிகளுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கி திருத்தப்பட்டன. அண்மைத் தரவுகளின் படி ஏறத்தாழ 6 இலட்சம் கிராமங்கள் கொண்ட இந்திய ஒன்றியம், 2.50 இலட்சம் பஞ்சாயத்துகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகளாக அதிகார அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன.

1000 வாக்குகளுக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஒன்று அல்லது பல கிராமங்கள் கொண்ட ஊராட்சி முதல் நிலை. 15 முதல் 20 ஊராட்சிகள் அடங்கிய ஒன்றியம் நடு நிலை. பல ஒன்றியங்கள் இணைந்த மாவட்டம் மூன்றாம் நிலை என்று உருவாக்கப்பட்டுள்ளன.

ஊராட்சிகள் வலிமையான தற்சார்பு நிர்வாக அலகுகளாக இயங்க, வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய உறுப்பினர், மாவட்ட மன்ற உறுப்பினர் ஆகியோரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட மன்றத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

உள்ளாட்சிப் பதவிகளைத் தீர்மானிப்பது எது?

இப்படி, தலைவர், உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் முறைகளில் முக்கிய ஆதிக்க காரணியாக விளங்குவது சாதி, பணம், மது மற்றும் பங்காளிகள். இந்த நான்கு காரணிகளுமே ஊராட்சி, உள்ளாட்சி பதவிகளில் வெற்றியாளரைத் தேர்வு செய்கின்றன. இதை இன்னும் சற்று விரிவாக பார்ப்போம்.

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு பணம் படைத்தவா்கள் மட்டுமே தோ்தல் களத்தில் நிற்கும் நிலையே இதுவரை உள்ளது. ஒருவர் நேர்மையாக சமூகப்பணி செய்யவேண்டும் என்கிற ஆவலில் போட்டியிட்டாலும் போட்டியிடுபவர் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வரை செலவு செய்ய வேண்டும்.

இதுவே பணத்தைக் கொண்டு மட்டும் வெற்றியை அடைய நினைப்பவர்கள் ரூ.20 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை செலவு செய்வார்கள். பல இடங்களில் பதவிகள் ஒட்டுமொத்தமாக ஏலத்தில் விடப்பட்டன. இந்தப் பதவி ஏலத்திற்கு ரூ.25 இலட்சம், ரூ.50 இலட்சம் செலவு செய்யப் பலா் தயாராக இருக்கின்றனர்.

இப்படி பணத்தைக் கொண்டு பதவியை கைப்பற்றுபவர்களுக்கு பொதுவாழ்வு என்னவென்றே தெரியாது. அவா்களின் நோக்கம் ஒன்றுதான். உள்ளாட்சிகளில் பல்வேறு நிதிக் கட்டுமானங்களை தம்முள் கொண்டுள்ளன.

பொறுப்புகளுக்கு வந்துவிட்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஒரே நோக்கம்தான், பெரும் பணம் செலவு செய்து பதவியைப் பிடிப்பதற்கு போட்டா போட்டி நடத்தத் தூண்டுகின்றன.

ஊராட்சி நிதி படுத்தும் பாடு

ஊராட்சி நிதி எது எதற்கெல்லாம் வருகிறதென்றால் மரம் வளர்த்தல், சிறு பாலம் அமைத்தல், நிழற்குடை அமைத்தல். வீடு கட்டும் திட்ட ஒப்புதல், தெரு விளக்குகள், பிளீச்சிங் பவுடா், கொசு மருந்து அடித்தல் போன்ற வேலைகளில் பணப்பரிவர்த்தனையில் வெளிப்படையாகவே தவறுகள் நடக்கின்றன.

ஊராட்சித் தலைவர், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதிக்கணக்குகளை பராமரிக்கும் கடமை உடையவர். கிராம சபைக் கூட்டங்கள் கூட்டுவது, அரசின் திட்டங்களையும், தம் ஊராட்சித் தேவைகளையும் நிறைவேற்ற பல மட்ட அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து செயல்படுவது, செலவினக் கணக்குகளை உரிய நேரத்தில் ஒப்படைப்பது என நிர்வாக வேலைகளோடு, ஊராட்சியில் பொதுமக்களின் அன்றாடச் சிக்கல்களை எதிர்கொள்வது தீர்வு காண்பது, என்று ஒரு முழு நேர வேலையாகவே ஊராட்சித் தலைவரின் பதவி உள்ளது.

ஊராட்சிகளுக்கு பணம் பல வழிகளின் வந்தாலும் அதைக் கொள்ளையடிப்பது ஊராட்சி தலைவர், ஒப்பந்ததாரர, அரசு ஊழியர் என்கிற முக்கூட்டணியாளர்களே.

ஒருசில நேர்மையான ஊராட்சி, ஒன்றிய தலைவர்கள் உள்ளாட்சி நிதியை மக்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று முயன்றாலும் அதற்கான முட்டுக்கட்டை அரசு அதிகாரிகளிடம் இருந்தே பலவகையில் ஏற்படும்

ஊராட்சியில் செய்யப்படும் ஒவ்வொரு வேலைக்கும் 20% வரை எல்லா மட்டத்திலும் அதிகாரிகளைக் கவனிக்க வேண்டியுள்ளதாகவும் பல ஊராட்சித் தலைவர்கள் புலம்புகின்றனர்.

ஒருவேளை முக்கூட்டணியில் சேராத தலைவர்கள் தங்கள் கையிருப்பையோ கடனையோ வாங்கி அவசர வேலைகளைச் செய்துமுடித்தால், மாவட்ட ஆட்சியர் பணத்தை விடுவிக்காமல் காலம் தாழ்த்துவதால் ஏற்படும் வட்டி நட்டத்தையும் அவர்கள் சந்திக்க வேண்டி உள்ளது. இது ஆட்சியாளரின் நிர்வாகத்தின் கேடு மட்டுமல்ல.

ஒரு தலைவர் இப்படிச் சொன்னார்.. இது பெருமைக்குப் பீ தின்னும் பொழப்பு நிலபுலங்கள், படிப்பு, பரிச்சயங்கள், சிக்கல்களைச் சமாளிக்கும் அனுபவம் இருந்தும், பதவி கொடுக்கும் மரியாதை, நன்மதிப்பு, அதிகாரம் போன்றவற்றிற்காக பதவிக்கு வந்த ஒரு தலைவர் உதிர்த்த சொற்கள்தான் இவை.

பதவிக்கு ஆசைப்பட்டு சொத்துகளை விற்று ஓட்டாண்டி ஆனவர்களும் உண்டு. பதவியை ஏற்றுக்கொண்டு மக்களுக்காக தொடர் போராட்டங்களை முன் எடுப்பவர்களும் உண்டு.

உள்ளாட்சி அமைப்புகளில் தலித் மக்களின் பிரதிநிதித்துவம்

இதில் கிராமம் என்பது தலித்துகளற்ற சாதி இந்துக்களின் சாம்ராஜ்யம் ஆகவே இருக்க வேண்டும் என்று சோழர்கால 'குடவோலை' முறை தொடங்கி இன்றைய உள்ளாட்சி முறை வரை தொடர்கிறது

உள்ளாட்சி அமைப்புகளில் தலித் மக்களின் பிரதிநிதித்துவம் அரசு ஏற்படுத்தினாலும் அது சாதி இந்துக்களின் கட்டுக்குள்ளே தான் என்று பெரும்பாலான தலித் தலைவர்களின் செயல்பாடுகள் ஒடுங்கி இருக்கின்றன.

சாதி இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊர்கள் தலித் ரிசர்வ் தொகுதியாக மாற்றப்படும் போது தலித் வேட்பாளர்களை புறக்கணிக்கும் போக்கும் இருக்கிறது.

அதேபோல ஒரு தலித் ஊராட்சி தலைவர் சாதி இந்துக்களின் அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கும் போக்கு இன்றும் நடக்கிறது. சமீபத்தில் ஒரு பெண் ஊராட்சித் தலைவரை சாதியைக் காரணம் காட்டி தரையில் அமர வைத்த அவலமும் அரங்கேறியது அதற்கு அரசு ஊழியர்களும் துணையாக இருந்தார்கள். இப்படி உள்ளாட்சிகளில் பதவியைக் காட்டிலும் சாதியம் அதிகார மட்டத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

இப்படி சாதிகளால் கட்டுண்ட கிராம சுயராஜ்யம் இந்தியாவை பின்னோக்கி நகர்த்திச் செல்லுமே தவிர எவ்வித சமூக மாற்றத்தையும் உருவாக்காது. இந்தியாவில் சமூக விடுதலையும் சாத்தியம் ஆகாது.

சாதியைக் கட்டமைத்த பார்ப்பனர்களின் சிந்தனையான பார்ப்பனியம் ஒழியும் வரை சமூக மாற்றம் ஏற்படாது என பெரியார் சொல்லியிருந்ததை இந்த கிராம சுயராஜ்ஜியம் நம் கண்முன் உணர்த்துகிறது

சாதி அமைப்பை அசைக்காத வெற்று ஏற்பாடாகவே இருக்கும் உள்ளாட்சி முறை

‘உனக்கு நான் மேல், எனக்கு மேல் ஒரு கூட்டம்’ என இருப்பதை உருவாக்கிய பார்ப்பனியம்தான் இந்திய சாதியத்தின் மையப்புள்ளி. அதை கட்டிக்காக்கும் பணியை இந்திய கிராமங்கள் இரண்டாயிரம் வருடமாக கடைபிடித்து வருகிறது.

இந்த ஒரு நூற்றாண்டில் நாம் பிற்போக்கு தனத்திலிருந்து ஓரளவுக்கு சமூகநீதி, சமூகமாற்றம் என முன்னேறியிருந்தாலும் நாம் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் நீண்டு இருக்கிறது. அதுவரை கிராமங்கள் என்பது சமத்துவமற்ற சாதிகளால் கட்டுண்ட ராஜ்யமாகவே நீடிக்கும். ஊராட்சி என்பதும் எவ்வித சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தாத வெற்று ஏற்பாடாகவே நீடிக்கும்.

- குயிலி