கலைகளுக்கு மரணமில்லை! எனவே
கலைஞர் என்றும் சாவதில்லை
இருக்கின்றார்– இருப்பார்
இளங்கோவும் வள்ளுவன் போல்!
காவியம் உள்ளவரை கம்பனுக்குக் சாவுண்டா...?
கவிமன்னன் பாரதியின்
நினைவுக்கு மரணமுண்டா...?
பட்டுக் கோட்டைகுரல்
பகலிரவாய் ஒலிக்கிறதே.
கலைகளுக்கு மரணமில்லை – எனவே
கலைஞர் இனி சாவதில்லை.
எழுதிக் குவித்ததெல்லாம்
எவரெஸ்டாய் நிற்கிறது.
எழுத்தெல்லாம் பனிமலையாய்
ஒளிவீசிச் சிரிக்கிறது.
எழுகத் திரியில் பனி உருகி
எப்போதும் பெருக்கெடுக்கும்
பெருக்கெடுக்கும் நீரெல்லாம்
அவனெழுத்தாய் நடந்திருக்கும்.!
கண்ணீரை விழுங்குங்கள்
கலைஞருக்கு மரணமில்லை
பேசித்தீர்த்தவையும்
பேனாவில் கசிந்தவையும்
மலை போல் குவிந்திருக்க
மரணமென்ப தவர்க்கேது?
எமனுக்கும் அவருக்கும் இரண்டாண்டாய் போராட்டம்
பாசக்கயிர் நைந்து
பல நாட்கள் திண்டாட்டம்...!
தோற்று நின்ற எமன் கேட்டான்...
“தோள்வற்றித் துவள்கிறதே
துவண்டகை கழன்றிடுமோ
ஏன் வாட்டி வதைக்கின்றாய்
என் பணியை முடிக்கவிடு
காலத்தின் கட்டளையால்
கையேந்தி நிற்கின்றேன்
கருணைப் பெருநிதியே
கையற்றுக் கெஞ்சுகிறேன்.

நீ நினைத்தால் அல்லாது
பணிமுடிக்க முடியாது !
பணிமுடிக்க வில்லையென்றால்
விதியென்னை விட்டிடுமா?
கருணாநிதியே
கலைமா மணியே
திருக்குவளை தொட்டு
செங்கோட்டை மட்டும்
உனைவென்றார் உண்டா !
ஒரு தோல்வி உனக்குண்டா!
ஜானகி
ராமச்சந்திரன்
ஜெயலலிதா என்று
உன்னிடத்தில் அமர்ந்தவர்கள்
ஒரு சிலர் உண்டு..
அவர்களும் கூட
உன்னை வென்றவர்கள் அல்ல
உனது தொண்டர்கள்.!
ஓய்வறியா உழைப்புக்கு
ஓரளவு ஓய்வளிக்க
மொத்தத் தமிழகமும்
முடிவெடுத்த காரணத்தால்
அவர்களுக்குப் பொறுப்பு
உனக்கந்த விடுப்பு.
கட்டாய ஓய்வுகளும்
காவியம் செய்யவும் – குறள்
ஓவியம் செதுக்கவும்
தமிழன்னை செய்த
தந்திரமன்றோ. !
தலைசாயும் கணம் வரை – தமிழ்
அன்னைக்கும் மண்ணுக்கும்
தலைமகன் நீயன்றோ ?- உன்னை
இன்னும் கசக்க
இதயமில்லா காரணத்தால் தான்
அன்னை
உன்னை
அவள்மடியில் அமர்த்திக் கொண்டாள்.
“ தொண்ணுற்றைந்து
ஆண்டுகளுக்குப் பின்னும்
என்பிள்ளை உழைக்கவோ
என் மனம் துடிக்கவோ” என்று
அன்னை தமிழன்னை
அவள்மடியில் கிடத்திக் கொண்டாள்.
அழவேண்டாம் தமிழினமே
அவனுக்கு மரணமில்லை. !
கல்லக்குடி தொட்டு
கல்லறை உரிமை வரை
இருந்தும் மறைந்துமவன்
ஈட்டிய வெற்றியெல்லாம்
புரட்சிக்கு வழிகாட்டி
பொன்னுலகின் திசைகாட்டி.