kamarajar 450 copyகாமராசரைப் பற்றி எழுதியாக வேண்டிய அதிகமாகப் பேச வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். அரசுப் பள்ளிகளை மூடிக் கொண்டிருக்கிறார்கள், ‘தேவையான எண்ணிக்கையில் குழந்தைகள் சேரவில்லை’ எனக் கூறி. ஆனால் பள்ளிக்கே பிள்ளைகள் வராத காலத்தில் அவர்களைப் பெற்றோரே அனுப்ப மறுத்த காலத்தில் அல்லவா இராஜாஜியால் மூடப்பட்ட பள்ளிகளைத் திறந்ததுடன் நாடெங்கும் குக்கிராமத்திலெல்லாம் பள்ளிகள் கட்டினார் காமராசர்?  அய்ந்து மைல் தூரத்திற்குள் ஒரு பள்ளிக்கூடம் இருக்க வேண்டும் என்பது அவரது அளவுகோல்.

ஒரு குழந்தை பள்ளிக்கூடம் செல்வதற்கு அய்ந்து கிலோ மீட்டருக்கு மேல் நடக்கக் கூடாது என்று அவர் நினைத்தார். அய்ந்து குழந்தைகளுக்கு ஒரு பள்ளி நடத்த முடியுமா என்பது இவர்களின் கேள்வி. ஒரு பள்ளியில் வெறும் அய்ந்தோ பத்தோ மாணவர்கள் இருப்பது வேதனைக்குரியதுதான். ஆனால் அதனை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளிகளை மூடுவதற்கான காரணியாக அதனைக் கொள்வது உண்மையில் உள்நோக்கமுடையது. 

காமராசர் காலத்தை பலரும் பல்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடுகின்றனர். அவர் சொத்து சேர்க்கவில்லை என்பதற்காக… நம்ப முடியாத அளவுக்கு எளிமையாக வாழ்ந்தார் என்பதற்காக…

நீர் நிலைகளை உரிய முறையில் கட்டமைப்புக்குள் கொண்டு வந்தார் என்பதற்காக… ஆனால் பெரியாரியலாளராக நாம் காமராசரை முதன்மையாகக் கொண்டாடுவது அவர்தம் கல்விப் பணிகளுக்காகத்தான்.

கல்வியைச் சாதாரண மனிதனுக்குக் கொண்டு சேர்த்ததில் அவர் ஆற்றிய பணிகளைப் பார்த்துதான் அவரை இறுதி வரையில் ஆதரிக்கும் முடிவை பெரியார் எடுக்கிறார்.  அல்லாமல் அவரைப் பாராட்டும் பிற காரியங்களுக்காக ஒருபோதும் தனது எதிரியாக அவர் நினைத்த காங்கிரசில் இருந்த காமராசரை அவர் ஆதரித்திருக்க மாட்டார்.  இதனை அவருடைய வார்த்தைகளிலேயே பார்ப்போம்

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கல்வித் துறையில் செய்ய முடியாத புரட்சியை எளிதில் காமராசர் செய்து முடித்து விட்டார்.  எல்லாரும் பத்தாவது வரை படித்து விட்டால் இன்னும் 10, 15 வருடத்தில் சாதி ஒழிந்து விடும் என்பது அவர் கருத்து.  பத்தாவது படித்த பையன் மலக்கூடை எடுப்பானா?  பத்தாவது வரை படித்த பெண் கையில் களைக் கொத்தை எடுப்பாளா?   உழைக்காத சாதியே இருக்காது.  உழைக்கிற ஒரு சாதி உழைக்காமல் சொகுசாகச் சாப்பிட இன்னொரு சாதி இருக்கவே இருக்காது.  ஒழிந்தே போகும் என்பது நம்பி வேலை செய்கிறார்.

- பெரியார் - விடுதலை 27.04.61

ஆக தனது இலட்சியமான சாதி ஒழிப்பிற்கு மாபெரும் பங்களிப்பை அதற்குரிய  உணர்வோடு காமராசர் செய்கிறார் என்கின்ற ஆழமானப் புரிதலில்தான் பெரியார் காமராசரை முழுமையாக ஆதரிக்கிறார். அவரை ஆதரிக்கும் தனது நிலைப்பாட்டை பெரியார் எப்படி குறிப்பிடுகிறார் என்று பாருங்கள்

எங்கள் கொள்கையை நிறைவேற்றிக் கொள்ள காமராசரை ஆதரிப்பதும் பல திட்டங்களில் ஒன்றேயாகும்.

- விடுதலை 23.4.61

காமராசர் ஆட்சிப் பொறுப்பேற்ற அந்த காலகட்டத்தில் 15 சதவீதம் பேர்தான் கற்றவர்கள். அதில் 90 விழுக்காட்டிற்கும் மேலாகப் பார்ப்பனர்களே இருந்தார்கள்.  மீதி 10 விழுக்காட்டில் பெரும்பகுதி பார்ப்பனரல்லாத பிற முற்படுத்தப்பட்டோரே இருந்திருப்பர்.  இந்த நாட்டின் 90 விழுக்காடு மக்கள் குறைந்தது ஒரு சதவீதம் கூட படித்திராத நிலை.  காமராசர் காலத்தில் இந்த கற்றோர் சதவீதம் 35 ஆக உயர்ந்தது என்பது மட்டும் முக்கியமில்லை. அந்த உயர்ந்த விழுக்காட்டின் பெரும்பகுதியை இந்த நாட்டின் சூத்திர. பஞ்சம பட்டம் சுமந்து நின்ற நம் மக்கள் நிரப்பினார்கள் என்பதுதான் முக்கியம்.

இன்று இந்த நாட்டில் கல்வி கற்றோர் சதவீதம் 90அய்த் தாண்டி விட்டது.  இன்று நாங்கள் மலம் சுமக்க மாட்டோம்… சாவு வீட்டுக்குப் பறையடிக்க மாட்டோம்… ஏவல் வேலை செய்ய மாட்டோம் என்கின்ற சுயமரியாதைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன.  படித்த பெண் தன் சொந்த சாதிக்குள் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற நியதியை ஏற்க மறுக்கிறாள். அடிமைத்தனத்தை ஒரு வாழ்க்கை அமைப்பாகவும் முறையாகவும் அதுவே தர்மமென்றும் ஏமாற்றித் தனது ஆதிக்கக் கோட்டையைக் காப்பாற்றி வந்த சமுதாயத்திற்கு இவையெல்லாம் பற்றியெரிகின்ற விசயமாக இருக்கிறது. உண்மையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று கூப்பாடு போடுகிறவர்களின் உள் மனதின் பிரச்சினை இதுதான்.  அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் மிகவும் மோசமான ஊழல் மலிந்த சாதி ஆணவம் நிரம்பிய மாநிலம் என்பதாகத் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தை அவர்கள் கட்டவிழ்த்து விட்டது கூட இந்த பொதுவான கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்கின்ற புலம்பல் பிரச்சாரத்தின் அரசியல் வடிவம்தான். 

கல்விதான் இந்தக் கலகக் குரல்களை உருவாக்குகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டுதான் அவர்கள் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். இதனால் தமிழகம் போல் கல்வியை சாதாரண மனிதனின் வீட்டுக்குக் கொண்டு சேர்த்திராத மாநிலங்களுக்கு எந்த பாதிப்புமில்லை. சரியாகச் சொல்லப் போனால் இந்த முயற்சிகளெல்லாம் தமிழகத்தைக் குறி வைத்தே செய்யப் படுகின்றன. இந்த மாதிரியான ஒவ்வொரு முய்ற்சிக்குப் பின்னும் அவர்கள் மாநில ஆட்சியாளர்களின் தவறுகளை முன்னிறுத்தி தூய்மைவாதத்தைக் கட்டமைக்கிறார்கள். இந்த கட்டமைப்புக்குள் அறிவுஜீவிகள் மிக எளிதாக வசப்பட்டு விடுகிறார்கள். அதன்பின் இது போன்ற மாற்றங்களைக் கொண்டு வருவதில் அவர்களுக்குத் தார்மீக பலம் கிடைத்து விடுகிறது. உண்மையில் இந்தத் தூய்மைவாதம் என்கின்ற கம்பளத்தின் மீதே அவர்கள் தங்கள் வெற்றி பவனியைத் திட்டமிடுகிறார்கள்.

ஒரு நெருக்கடி காலத்தில் கல்வி உரிமை மாநிலங்கள் பட்டியலிலிருந்து களவாடப்பட்டது. நெருக்கடி காலம் முடிந்தது.  திருட்டு கொடுத்தவர்கள் யாரும் தங்கள் பொருளைத் திரும்ப கேட்கவில்லை. 2015இல் குடும்பத் தொழில் குழந்தை உழைப்பு சட்டத்தின் கீழ் வராது என்பதைச் சத்தமில்லாமல் சட்டத்துக்குள் சொருகினார்கள். இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கான எதிர்ப்பே காமராசரை அரியணை ஏற்றியது. அந்தக் குலக் கல்வித் திட்டத்தின் சாராம்சமான நஞ்சு இந்தச் சட்டத் திருத்தம். திராவிடர் கழகம் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது.  இன்றளவும் பலருக்கு இது தெரியாத விசயமாகவே இருக்கிறது. இந்தச் சட்டத்தின் விளைவை இந்த நாடு இப்போது உணராமலிருக்கிறது. கல்வியிலே இன்னும் இவர்கள் நினைக்கிற மாற்றங்களையெல்லாம் இவர்கள் நிகழ்த்தி விட்டால் அந்தப் பாம்பு கொத்தத் துவங்கும்.  அதுவரை இந்தச் சட்டத்திருத்தம் என்ன செய்யும் என்பது நமக்கு தெரியாது.

2016இல் புதிய/தேசிய கல்விக் கொள்கை என்றார்கள்.  தமிழகத்தின் கல்வியாளர்களில் ஒருவரான பிரின்சு கஜேந்திர பாபுதான் அதில் எவ்வளவு சதி இருக்கிறது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். திராவிடர்கழகம் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கண்டனம் தெரிவித்தது. அதன்பின் திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், பெரிய கல்வி நிறுவனங்களும் அதில் வர இருக்கும் பாதிப்புகளை உணர்ந்து எதிரணியில் திரளத் துவங்கியதும் அதனை சத்தமில்லாமல் ஓரத்தில் வைத்து விட்டார்கள். ஆனால் அதிகாரப்பூர்வமாகப் பின்வாங்கவில்லை.  அதனை மறந்து பிற வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள் எல்லோரும். மத்திய அரசு இந்த எதிர்ப்பு பணியில் ஈடுபட்ட கல்வி வளாகங்களை தனது கண்காணிப்புக்குள் நிறுத்தி வருகிறது.  அங்கு நடந்து கொண்டிருக்கும் சமுதாய நடவடிக்கைகள் கட்டுப் படுத்தப் படுகின்றன.  எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தேசத் துரோகிகளாக்கப் படுகிறார்கள். இதற்கிடையில் மத்திய அரசு எந்த நேர்மையுமில்லாமல் அந்தக் கொள்கையின் ஒவ்வொரு திட்டங்களையும் பாராளுமன்ற விவாதத்திற்கே கொண்டு போகத் தேவையில்லாத அளவில் அரசாணைகள் மூலமாக நிறைவேற்றத் தொடங்கி விட்டது.  நீட் தேர்வும், போதிய மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூடி அருகாமைப் பள்ளிகளில் இணைப்பது உள்ளிட்ட திட்டங்கள் எல்லாம் அந்தப் புதிய கல்விக் கொள்கையின் திட்டங்கள்தாம். 

நீட் தேவைதான் என்று மக்களை பேச வைக்க மாநில கல்வித் துறையின் ஊழல்களைக் காரணம் காட்டுவார்கள்.  பள்ளிகளை மூடுவதற்கு அரசு ஆசிரியர்கள் வேலை பார்ப்பதில்லை என்பார்கள். அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் இவர்கள் நோக்கம் அதனைச் சரி செய்வதல்ல. இந்த நாட்டில் எல்லோரும் படிக்க வேண்டும் என்கின்ற குறிக்கோள் அவர்களுக்கு எதிரானது.  கல்வி சிலருக்கானதாகதான் இருக்க வேண்டும். சொன்ன வேலையை செய்வதற்கு ஆட்களிருக்க வேண்டும். அவர்கள் படித்தவர்களாக இருக்க முடியாது.

இவற்றையும் தாண்டி கல்வி அறிவின் அடையாளமாக மட்டுமல்லாமல் சமுதாயப் பகட்டாகவும் இருக்கின்ற சூழலில் அதன் ஒவ்வொரு அம்சத்தையும் சந்தைப் படுத்துவது அரசியல்வாதிகளுக்கு அவர்களின் நேரடி தனிமனித நலன்களோடு தொடர்புள்ளதாகப் போய் விடுகிறது. மத்திய அரசாங்கத்திலிருப்பவாகள் அதிலும் பிஜேபிகாரர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்று பிரச்சாரம் செய்யவும் அதனை நம்பவும் ஆட்களிருக்கிறார்கள்.

ஆனால் தேர்வு நடத்துவதற்கும் கேள்வித்தாள் எழுதுவதற்கும் தேர்வு மய்யங்களை வாடகைக்கு எடுப்பதற்கும் தனியார்களுக்கு டெண்டர் பறப்பது நேர்மையான நிர்வாகத்தின் வடிவமாக காட்டப்படுவதும் அது மக்களால் ஏற்கப்படுவதும் நமது தலைமுறைக்கு நிகழ்ந்திருக்கும் சோகம்.  உண்மையில் நமது மக்களுக்கு தங்கள் கண்ணுக்குத் தெரியாதவர்களால் கொள்ளையடிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளவே செய்கிறார்கள்.  அவர்கள் பக்கத்து வீட்டுக்காரன் பணக்காரனாவதே அவர்களின் உடனடிப் பிரச்சினையாகத் தொடர்கிறது.

ஆக எளிய மக்களின் உண்மைத் தலைவர் பெரியாரின் மொழியில் பச்சைத் தமிழர் காமராசரின் கல்விப் பணி அவர் உருவாக்கிய கல்வித் திட்டங்கள் கல்வி அமைப்புகள் இன்று மிகப் பெரிய அச்சுறுத்தல்களுக்காளாகி நிற்கின்றன.  அறிஞர் அண்ணா கூறினார். 

எனது ஆட்சி போய் வேறொரு ஆட்சி வரலாம்.  அப்போது அவர்கள் நான் உருவாக்கியச் சட்டங்களை மாற்ற நினைப்பார்கள்.  ஆனால் அப்படி மாற்ற நினைக்கும் போது மக்கள் கோபத்தை நினைத்து பயந்து அந்த எண்ணத்தைக் கைவிடுவார்கள். எனவே நான் உருவாக்கிய மாற்றங்கள் தொடரும். அதுவரை அண்ணாதுரை ஆட்சி தொடரும். 

இந்த வார்த்தைகளை நாம் இப்போது காமராசருக்கு பொருத்திப் பார்க்க வேண்டும்.  காமராசர் துதி பாடுவதல்ல, அண்ணாவின் வார்த்தைகளில் சொன்னால் காமராசரின் ஆட்சியை நாம் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும். எனில் கல்வியை முதலில் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்.  கல்வியைப் பிறக்கும் குழந்தைகளின் அடிப்படை உரிமையாகப் பார்க்க வேண்டும்.  கல்வி கட்டணமில்லாமல் மட்டுமே வழங்கப் பட வேண்டும். ஏனெனில் நீங்கள் எந்த அமைப்பை அதில் வாழ்வதற்கான திறமைகளை இம்மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு மறுக்கிறீர்களோ அந்தக் குழந்தைகளை சட்டப்படி கட்டுப் படுத்தும் தார்மீக உரிமையை நீங்கள் இழந்து விடுவீர்கள். 

கல்விக் கூடங்களில் கடவுள் வாழ்த்துப் பாடலை நிறுத்தி விட்டு காமராசர் பாடல் பாடுங்கள் என்று நம் தலைவர் பெரியார் சொன்னார். இன்றைய நமது கல்வி உரிமை முழக்கமே நாம் பாடும் உண்மையான காமராசர் வாழ்த்து. வாழ்க காமராசர்.