அமெரிக்காவில் உள்ள கருப்பர் இன மாணவர்களுக்கு அளிக்கப்படும் பட்டமளிப்பு விழாவைப் போல, இந்தியாவில் தலித் மாணவர்களுக்கும் ஒரு பட்டமளிப்பு விழா நடத்துவதன் மூலம், அவர்களிடையே விழிப்புணர்வையும், எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் உருவாக்க முடியும். ‘துடி' மாணவர் அமைப்பு, இம்முயற்சியை முதல் முறையாக முன்னெடுக்கிறது.

இன்று உன் சமூகத்திற்குப் பட்டமளிப்பு விழா. இதுவரை எதிர்பாராத உணர்வுகளோடு நீ உடுத்திக் கொண்ட வேலைப்பாடுகள் மிகுந்த அழகிய நீலநிற அங்கியோடு, அந்தப் பெருமிதப் பாதையில் மேடை நோக்கி முன்னேறுகிறாய். வாழ்த்துகள். உன்னையும் உன் சமூகத்தையும் உன் போராட்டத்தின் வெற்றி ஆட்கொள்கிறது. நிமிர்ந்து நோக்கிய உன் தெளிந்த பார்வை, மகிழ்ச்சிக் கண்ணீரிலும் மிளிர்கின்றன. இதோ இந்த நாளுக்காகத்தான் உன் தாயும் தந்தையும், உன் சமூகம் காத்துக் கிடந்தனர். இந்த நாள் ஒரு இனிமையான பாடலைப் போல உன்னை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அனைவரது பார்வையும் அச்சிறப்புமிகு பாதையில் உன்பின்னே அணிவகுக்கின்றன. நீ எதிர்பார்த்திராதவர்கள் எல்லாம் உன்னைக் கட்டிப் பிடித்தும், முத்தமிட்டும், கைகுலுக்கியும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். உன் தோழனோ, உன் தோழியோ உன்னை நெருக்கமாக வாழ்த்தும் போது, உன் பெற்றோர் கண்டும் காணாதவரைப் போல பார்த்து மகிழ்கின்றனர். இதுதான்! இதுதான் 40 கோடிக்கும் மேற்பட்ட தலித் சமூகத்தின் விடுதலையாயிருக்கிறது. ஆம்! இன்று உன் சமூகம் நிமிர்கிறது.

ஒவ்வொரு மே மாதமும் அமெரிக்க கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறும். கலிபோர்னியாவிலுள்ள கிளார்மன்ட் கல்லூரியில் கருப்பர் பட்டமளிப்பு விழா நடைபெற்ற போது, நானும் என் மனைவியும் இதில் பங்குபெற எங்கள் பிள்ளைகள் காரணமாக இருந்தார்கள். அவர்கள் கருப்போ, வெள்ளையோ, இடையிலிருக்கும் எந்த நிறமோ அதைக் கொண்டாடுபவர்கள். அந்தச் சிறிய அரங்கு திடீரென ஆரவாரத்தில் வெடித்தது. ஆப்பிரிக்க கலைஞர்கள் அந்தப் புகழ் மிக்க கண்டத்தின் பழம்பெரும் ஆப்பிரிக்கப் பறையொலியால் அமர்ந்திருந்த ஒவ்வொருவரின் நரம்பையும் துடிக்க வைத்தார்கள். இது, என் இதயத்துடிப்பையே மாற்றித் துடிக்க வைக்கும் பறையொலியோ என ஒரு நிமிடம் குழப்பமே வந்தது.

கறுப்பினச் சமூகத்தின் வேர்களை நினைவூட்டி, தாய்மண்ணான ஆப்பிரிக்க மண்ணின் மரபுமணம் கமழ ஒலித்தன ஆப்பிரிக்கப் பறை. ஆப்பிரிக்கப் பறை, நம்மை நம் பழங்கால இசையோடு நம் இதயத்தைத் துடிக்க வைக்கிறது. அந்த அரங்கில், ஆசிரியர்களும் நிர்வாகிகளும் நிறைந்திருக்கின்றனர். அனைவரும் கருப்பர்கள். அவர்களைத் தொடர்ந்து பட்டமேற்கும் மாணவர்கள் அனைவரும் கருப்பர்கள். இந்தியக் கல்லூரிகளில் நிகழ்த்தப்படும் பட்டமளிப்பு விழாக்கள் போல் அல்லாமல் பார்வையாளர்கள் எழுந்து நிற்க, அந்த அவையில் மகிழ்ச்சியோடு எதிர்காலக் கனவுகளை மனதில் தேக்கி அமைதியாய் மேடை நோக்கி நகர்கின்றனர் மாணவர்கள்.

வடுக்களின் வடிவங்களாகக் கருப்பர்கள். யாரெல்லாம் ஆப்பிரிக்க மண்ணின் மரபினரோ, அவர்களையெல்லாம் மனிதக் கலப்படத்திற்குப் பேர்போன அமெரிக்காவில் கருப்பர் என்றே அடையாளம் காண்கின்றனர். தாய்வழி கருப்பரோ, தந்தை வழி கருப்பரோ அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வரவில்லை (உலக இனம் தோன்றியது ஆப்பிரிக்காவில்தானே!) எனினும், அவர் கருப்பரே என்பது அறிவியலாக இருக்கலாம். ஆனால், நிறக்கோட்பாட்டை நிறுவுவது அறிவியலாக இருக்க முடியாது. ஏனெனில், நிறவேறுபாடு வெறுப்பை உமிழ்வதில் ஆரவாரம் செய்கிறது.

மனித நிறக்கலவையின் கூடான அமெரிக்காவில், கருப்பர் தம்மைக் கருப்பர் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றனர். தம் பெற்றோரில் ஒருவர் வெள்ளையராகவோ, பிலிப்பைன்ஸ்காரராகவோ அல்லது சீனராக இருந்தால்கூட, கருப்பர்கள் தம்மை கருப்பராகக் காட்டிக் கொள்வதற்குத் தயங்குவதில்லை. வர்ணாசிரமத்தை உடைத்தெறிந்த தம் பெற்றோரில், ஒருவர் பார்ப்பனராகவோ அல்லது சாதி இந்துவாகவோ இருந்தாலும் அக்குழந்தை தன்னை தலித் என (அடையாளம் காட்ட) அறிவிக்கத் தயங்காத நாளே இந்தியாவுக்குத் தேவை. மாறாக, தன்னைப் பார்ப்பனியத்திற்கு மாற்றிக் கொள்வது, மனிதத் தன்மை இழந்து அடக்குமுறையின் ஆளுகைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டு இழிவாக வாழ முயலுவது, ஒரு போதும் விடுதலைக்கு வழிவகுக்காது.

Black people அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கருப்பர்களின் நாட்டுப் பண்ணைப் பாடுகின்றனர். ஆம்! அமெரிக்க நாட்டுப் பண் இருந்தாலும், கருப்பர்கள் தமக்கென ஒரு நாட்டுப் பண் பாடுகின்றனர். பின்னர் இறைவணக்கத்தையும் வரவேற்பையும் முதல்வர் நிகழ்த்துகிறார். அனைவரும் கருப்பர்களே. ஆப்பிரிக்கப் பறை இசையின் வலிமையைக்கூட்டக் கூட்ட, நடனத்தின் வேகம் கூடிக்கொண்டே செல்கிறது. அரேபிய இஸ்லாமியக் கலைஞர்களையும் மிஞ்சி சுழன்று சுழன்று ஆடும் ஆட்டம், விழாவினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

ஒரு பேராசிரியர், விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் சட்டக் கல்லூரியிலிருந்து வந்த பெண்மணியை அறிமுகப்படுத்தி அமர்கிறார். அவர் தொன்றுதொட்டு இருட்டடிப்புக்கு உள்ளாகும் கருப்பு இளைஞர்களின் உயர் கல்வி பற்றியும், அடக்குமுறைகளுக்கு இடையே வெற்றி நோக்கிய பயணத்தையும் விளக்கிக்கூறி, மாணவர்களின் எதிர்காலம் அழகுடன் மிளிர வாழ்த்தி உரையாற்றினார். அனைவரும் கருப்பர்கள்.

இப்போது அரங்கின் கவனம் முழுவதும் பட்டமேற்கும் மாணவர்கள் மீது திரும்புகிறது. பட்டமளிப்புச் சான்றிதழ் அளிக்கும்போது கட்டித் தழுவி அளிக்கின்றனர். அமெரிக்க மரபில் தூய அன்பை வெளிப்படுத்தும் மனநிறைவோடு ஆரத்தழுவி வாழ்த்துவது, அருகில் அழைத்து ஆயிரம் முறை கைகுலுக்கினாலும் அதற்கு ஈடாகாது. பட்டம் வாங்கும் அனைவருக்கும் ‘கென்ட்டே' (Kente) ஆடை அணிவிக்கப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆப்பிரிக்காவின் கானா பகுதியிலிருந்து தயாரிக்கப்படும் இந்த ‘கென்ட்டே' ஆடைகள் ஆப்பிரிக்க மண்ணை நினைவுபடுத்தும் மானமிகு சின்னமாக விளங்குகின்றது. ஆப்பிரிக்காவின் மனம்பரப்பும் பளபளக்கும் தங்கநிறம், மஞ்சள், நீலம், சிவப்பு, பச்சை மற்றும் கருப்பு போன்ற வண்ணங்களிலும் உள்ளன. ஒவ்வொரு நிறம் ஒவ்வொரு பொருளைத் தாங்கியிருக்கிறது. அமெரிக்காவில் கருப்பர்களின் இன உணர்வாகவும், அடக்கப்பட்ட வடுக்களின் வலியை எடுத்தியம்பும் அடையாளமாகவும் இவை உள்ளன.

பட்டமளிப்பு விழாவில் மனதைத் தொடுகின்ற நிகழ்ச்சியாக அமைவது மாணவர்கள் பேசுகின்ற நேரமாகும். ஒவ்வொருவரும் மேடையின் முன்பு வந்து வீரமுடன் தெளிவாகப் பேசுகின்றனர். உணர்வுவயப்பட்ட அப்பேச்சுகளில் ஓர் ஒற்றுமை வெளிப்படுகிறது. துவண்ட நாட்கள், மகிழ்ந்த நாட்கள், தோல்விகள், வெற்றிகள், கனவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தங்கள் இதயத்திலிருந்து பேசுகின்றனர். ஆசிரியர்களுக்கும், மாணவர் நல முதன்மையருக்கும், நண்பர்களுக்கும் குறிப்பாக தம் குடும்பத்தினருக்கும் கடவுளுக்கும் நன்றி கூறுகின்றனர். சிலர் தங்கள் வெற்றிக்குப் பின்னணியிலிருந்து ஊக்குவித்தவர்கள் குறிப்பாக தந்தைக்கும், தன்னுடன் பிறந்தோருக்கும் நன்றி கூறுகின்றனர். இவ்விழாவில் பெரும்பாலானோர் தம் அன்பு அன்னையை இந்த நாளைக் காண தனது வாழ்நாளைச் செலவழித்திருந்த தாயை நினைவு கூர்கின்றனர்.

இது, அலுத்துப்போன அறுவடையல்ல. நெடுங்காலக் காத்திருப்பின் நேரடிப்பயன். இந்த நிகழ்ச்சியால் நெஞ்சம் நிறைகிறது. தழுதழுத்த குரல்கள், மகிழ்ச்சியில் கலங்கும் கண்கள் என ஒவ்வொருவரின் வெளிப்பாடும் அரங்கத்தில் கூடியிருந்த அனைவரின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அனைத்து கருப்பர்களுக்கும் பொதுவாய் பெருகுகிறது. ஒவ்வொரு கருப்பரும் மற்றொரு கருப்பரின் வாழ்விலும் மகிழ்ச்சியிலும் வளர்ச்சியிலும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். கிளார்மன்ட் கல்லூரியில் நடைபெற்ற கருப்பரின் பட்டமளிப்பு விழா, பெரும்பறை இசை, மன்றாட்டு, நடனம் இவைகளோடு மட்டும் முடியாமல் சிறந்த உணவோடும் முடிந்தது.

Dayanandhan with black student இப்போதெல்லாம் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கருப்பர் பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்நிகழ்ச்சியைத் தொடங்கும்போது ஊக்கமளித்தும் உதவிசெய்தும் இதனைப் பரப்புவதில் பல நிறுவனங்கள் முனைப்புக் காட்டின. அமெரிக்க ஆப்பிரிக்க மய்யம், சிறுபான்மையினர் நலமய்யம், கருப்பர் மாணவர் நல மய்யம் போன்ற அமைப்புகள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உதவுகின்றன.

இக்கருப்பர் பட்டமளிப்பு விழா பிரிவினையை ஏற்படுத்தும் என்றும், குறிப்பிட்ட இனக்குழுவுக்கு மட்டும் கொண்டாடுவது தவறு என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், அமெரிக்காவில் வெள்ளையரானாலும், கருப்பரானாலும், பிற இனக்குழுவினர் ஆனாலும் மற்றவர்களின் சாதனையில் மகிழ்கின்றனர். குறிப்பாக, எவரெல்லாம் அடிமைத்தனத்திற்கு எதிராக தங்கள் மனதில் கனன்று கொண்டிருக்கின்றனரோ அவர்களெல்லாம் அடிமைத் தனத்தைத் தகர்ப்பதிலேயே தம் நம்பிக்கையையும், விடா முயற்சியையும் கொண்டுள்ளனர். ஒரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கூறினார்: ‘‘உங்களுக்கென உயரிய பண்பாட்டு வரலாறு இருக்கிறது. நீங்கள் இந்த விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள். மகிழ்ச்சியின் தழுவலில் இருக்கும் இந்த நிகழ்வு, உங்கள் வாழ்வில் ஒரு நீக்கமுடியாதப் பகுதியாக அமையட்டும்.''

இந்நிகழ்ச்சியின் இறுதியில், என் துணைவியார் என்னிடம் நாம் ஏன் நம் நாட்டில் தலித் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடக்கூடாது என வினவினார். இதுவே கீழே தரப்பட்டுள்ள திட்டத்திற்கும் தொடக்கமாகும். கருப்பர் பட்டமளிப்பு விழா போல, நீங்கள் தலித் பட்டமளிப்பு விழாவிற்குத் தயாரா? பின்வரும் திட்டங்கள் இவ்விழாவின் சிறப்புப் பயனையும் அடிப்படைகளை அமைக்கும் முறைகளையும், மேலும் அவற்றில் சில மாற்றங்களையும் கொண்டு இம்மண்ணுக்கு உரிய மரபோடு அணுகுவதாய் அது இருத்தல் வேண்டும்.

கல்வியிலும் தொழில் நுட்பத்திலும் பட்டப்படிப்புகளிலும், வெற்றி பெற்ற சாதனை நிகழ்த்தியவருக்காக நாம் இப்பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடலாம். இக்கொண்டாட்டம் நம் சமூகம், பெற்றோர், குடும்பம் மற்றும் நண்பர்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதாக அமைய வேண்டும். துயரத்தைத் தோளில் சுமந்து அரும்பாடுபட்டுப் படிக்க வைத்த நம் பெற்றோர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், நமது சாதனைகளையும் அடையாளங்களையும் வெளிப்படுத்தும் சூழலையும் இப்பட்டமளிப்பு விழா உருவாக்கும். எதிர்காலத்தை நம் தலித் மாணவர்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் நிகழ்வுகளைத் திட்டமிடும் களமாகவும் இது அமைய வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகாலமாக மறுக்கப்பட்ட கல்வியின் மேன்மையையும், அடக்குமுறைக்கு எதிரான வெற்றிச் சிறப்பினை மாணவர்கள் உடலாலும் உணர்வாலும் உணரும் நேரம் இது. இந்த நேரத்தில், தாம் இழந்தவற்றை மீட்டு அடையும் நினைவாக தடைகளைக் கடந்தால்தான் நாம் நம் மக்களும் ஒரு நிலையான வாழ்வைப் பெறடியும் என்பதை உணர்த்த முடியும். அடிமைச் சங்கிலிகளான அடக்குமுறையும் வெறுப்புணர்வும் இனி, நம்மைக் கட்டுப்படுத்த முடியாது என்று சமூகத்திற்கு உணர்த்துகின்ற நேரமாக இதை மாற்றலாம். பெரும்பாலான பட்டமளிப்பு விழாக்களில், குடும்பத்தினர் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிக்க வாய்ப்பளிக்கப்படுவதில்லை. தலித் மாணவர்களின் பெற்றோரால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு விழாவின் முழுமையான மகிழ்ச்சியைப் புரிந்து கொள்ள மொழி ஒரு தடையாக இருக்கிறது. எனவே, தலித் மாணவர்களின் பட்டமளிப்பு விழாவை தலித் பார்வையில் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த விழாவினைக் கொண்டாடுவதன் மூலம் கிடைக்கும் உறவுகளோடு பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தலித் சிந்தனையாளர்களோடு இணைந்து, தங்கள் கல்வியின் மூலம் சமூகத்திற்குத் தேவையான உதவிகளை உருவாக்கி வளர்க்க வேண்டும். அடிமைத்தனத்தைத் தகர்க்கும் அதிகாரத்தைப் பெற்று, ஆதிக்க சமூகத்திற்கு எதிராக சமத்துவமான சமுதாயத்தைப் படைக்கத் தயாராகி விட்டோம் என்று உலகிற்கு அறிவிக்கும் விழாவாக இது அமைய வேண்டும்.

இவ்விழாவினை திசை மாற்றும் அரசியல் தலையீடுகளோ, இனக்குழுக்களின் இடையீடோ, சுயநலவாத சக்திகள் இதில் இணைந்து ஆதாயம் தேடுவதோ கூடாது. இளம்பட்டம் வாங்குவோர் இயல்பாவே அதிகமாக இருப்பர். தேவையெனில், இளம் ஆய்வாளர்களையும் (எம்.பில்.), (பி.எட்.) அழைத்தால் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வர். பட்டமளிப்பு மாணவர்களோடு பெற்றோர், குடும்பத்தினர், தலித் ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வேறு மாநில மாணவர்களையும் அழைக்கலாம். உலகறிந்த எழுத்தாளர்களை அழைக்கலாம். அறிவுஜீவிகள், தலைவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களையும் குறிப்பாக ஆரம்பப் பள்ளி மாணவர்களையும் அழைப்பதால் கல்வியின் மதிப்பையும், தங்கள் பட்டமளிப்பு விழாவினைக் கனவுகாணவும் இது உதவும்.

இவ்விழாவில், பெண்களுக்கான இடம் சிறப்புக்குரியதாகவும், ஒருங்கிணைப்புக் குழுவில் இன்றியமையாத படி பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். தலித் மக்கள் மீது உள்ளார்ந்த அன்பு கொண்டு, அம்மக்களுக்காகவே உழைக்கும் தலித் அல்லாதவர்களையும் அழைக்கலாம். பட்டமளிப்பு விழாவிற்குப் பயன்படுத்தக்கூடிய ஆடையை நாம் அணியலாம். மாணவர்களுக்கான ஆடையோ, சின்னமோ, பரிசோ சிறப்புத் தயாரிப்பாக இருக்க வேண்டும். கலைநயமிக்க ஆடை நிறம், தலித் விடுதலையை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். உலகம் தழுவும் நிறமான நீலத்தைப் பயன்படுத்தலாம்.

எழுச்சியுடன் கூடிய பறை இசை நடனம் இன்றியமையாததாகும். சிறப்புப் பாடலோ, கவிதையோ இந்நிகழ்ச்சியில் இயற்றி இசையமைத்துப் பாடவேண்டும். பட்டமளிப்புப் பரிசை ஆசிரியர்களோ, நிர்வாகிகளோ அளித்து மாணவர்களைக் கவுரவிக்க வேண்டும். தலித் சிறப்பியல்புகளை எடுத்தியம்புவதாக இது இருத்தல் வேண்டும். மாநில மற்றும் தேசிய அளவிலான தலித் தலைவர்களின் புத்தகங்களில் இருந்தும் முக்கிய படிப்பினைகளை எடுத்துக் கொள்ளலாம். பட்டமேற்கும் மாணவர்களின் முகவரிகளும் சிறப்பு அழைப்பாளரின் உரை போன்றவை அடங்கிய புத்தகத்தையும் வெளியிடலாம். அந்தச் சொற்பொழிவுகளை சில இதழ்களிலும் இணையத்தளத்திலும் வெளியிடலாம். பறைஇசையும் நடனம் நிகழ்ச்சியின் இன்றியமையாத பங்காக வேண்டும். தெளிவாக திட்டமிட்ட நிகழ்ச்சிகள், தலித் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களையும் கலைஞர்களையும் கொண்டே அமைக்கப்பட வேண்டும்.

Black people இவ்விழாவினை நாம் சிறப்பாகக் கொண்டாடுவதன் மூலம் பல வகையில் வலிமை பெறுவோம். இந்நிகழ்ச்சியினை எதிர்த்துவரும் வினாக்களைக்கண்டு அஞ்ச வேண்டாம். இது, மக்களை சாதிவாரியாகப் பிரிக்கும் நிகழ்ச்சி என விமர்சனங்கள் சொல்லப்படலாம். இதற்கு மிகவும் எளிமையான பதில்: தலித் மக்கள் சாதியற்றவர்கள். சாதி ஒழிப்பில் முதலில் நிற்பவர்கள். இந்தக் கேள்வியை எழுப்புகிறவர்கள்தான், இரண்டாயிரம் ஆண்டுகாலமாக நமக்கு கல்விக் கதவை மூடி நம்மைத் தனிமைப் படுத்தினார்கள். இவர்கள், ஒரு தலித் உயர் கல்வியை அடைய எளிதில் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, உள்நோக்கம் கொண்ட இந்த விமர்சனத்தை நாம் அலட்சியப்படுத்துவோம். இந்த விழாவால் மனித நேயம்தான் வெற்றியடையப் போகிறது. நாம் இந்த நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்தும் இம்மண்ணின் மாந்தர்களை அழைக்க வேண்டும். அதுவே நம் எண்ணத்தை நாடு முழுக்க பரப்புவதற்கு வழிவகுத்துக் கொடுக்கும்.

இக்கட்டுரையாளர், சென்னை கிறித்துவக் கல்லூரியைச் சார்ந்த ஓய்வு பெற்ற கவுரவ ஆய்வாளர்

பெருமைக்குரிய தலித் பட்டமளிப்பு விழாவைத் ‘துடி' இயக்கம் முன்னெடுத்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. இப்பட்டமளிப்பு விழாவில், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வியில் தேர்ச்சிப் பெற்ற தலித் மாணவர்கள் பங்கெடுக்கலாம். இதில் கலந்து கொள்ள உறுதி செய்யப்பட்ட மாணவி, மாணவர்களுக்கு 3 நாட்கள் தலித் விழிப்பு நிலைப்பட்டறையில் வகுப்பெடுக்கப்படும். பிறகு இவ்விழாவில், தலித் சான்றோர்கள், பல்கலைக் கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் பட்டம் வழங்கப்படும். தலித் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விரும்பும் தலித் சான்றோர்கள், புரவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் தன்னார்வள்ள மாணவர்களைத் ‘துடி' இயக்கம் ஆர்வமுடன் அழைக்கிறது. பங்கெடுப்போர் தங்கள் பெயர்களை உறுதி செய்தால், தலித் பட்டமளிப்பு விழாவில் இக்குழுவினர் அங்கம் வகிக்கும் ‘தலித் கல்விக் கழகம்' உருவாக்கப்படும்.

தொடர்புக்கு : பாரதி பிரபு,
பொதுச் செயலாளர் ‘துடி'
34, கண்ணபிரான் தெரு,
பழைய பல்லாவரம்,
சென்னை 600 043


Pin It