ஜோதிடம் என்பது உண்மைதானா? அதை நாம் முழுக்க முழுக்க நம்பலாமா? இது எல்லோர் மனதிலும் இருக்கும் ஓர் அடிப்படையான கேள்விதான். ஆனால், ஜோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கூடுதலான சந்தேகமாக இருக்கும், இது ஜோதிடத்தை நம்பாதவர்களுக்கு சாதகமாக இருக்கும். இன்னும் சொல்லவேண்டுமானால் நகைச்சுவையாக இருக்கும் என்றும் சொல்லலாம்!

“டேய் மணி நேரமே சரி இல்ல டா தொட்ட காரியம் ஒண்ணும் நடக்க மாட்டனுது...”

“ஜோசியரப் போய் பாருங்க அண்ணே..!”

“அவர்ட்ட போனா பரிகாரம் அது இதுன்னு பணத்த வாங்கிட்டு ஏதோ ஒண்ண சொல்லி குடுத்து அனுப்பிடுறாரு...”

“அண்ணே! எனக்கு தெரிஞ்ச ஒரு ஜோதிடர் இருக்காரு...”

“சொல்லறது நடக்குமா டா ..!”

“அண்ணே, அவர் சொன்னா சொன்னபடி அப்படியே நடக்கும், நல்லதோ கெட்டதோ எதையும் மறைக்காம முஞ்சில அடிச்ச மாதிரி சொல்லுவாரு...”

“டேய் மணி எவ்வளவு காசு ஆனாலும் பரவாயில்லை அவர போய் பார்க்கணும் ஏற்பாடு பண்ணு டா ...”

... ...

இப்படியாக, இவர்கள் விவாதிக்கும் போது ஜோதிடம் என்பது பொய் என்பதனை எடுதுரைக்கின்றனர் நம்பிக்கை இல்லாதவர்கள்...

“ஜோதிடம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. உழைக்காமலே மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கச் சிலர் செய்யும் ஒரு தொழில் என்பது சிலரது கருத்து. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஜோதிடம் என்பது வேதகாலம் தொட்டு காலம் காலமாக இருந்து வரும் ஒரு ஆருட முறை. அதைப் பார்த்து அதன்படி நடப்பதில் தவறொன்றுமில்லை” என்பது சிலரது கருத்து.

சரி, ஜோதிடம் என்றால் என்ன? அது உண்மைதானா? அது மனித வாழ்வுக்கு உண்மையிலேயே அவசியம்தானா? அதனால், நன்மைகள் ஏதேனும் கிடைக்கின்றதா? இல்லை தீமைகள் மட்டுமே கிடைக்கின்றதா என்பதனை நம் சிந்தனைக்குக் கொண்டு செல்வோம்.

பொதுவாக நா(ந)ம் மக்கள் அதிகம் பார்க்கும் ஜோதிடங்கள்

1) கைரேகை ஜோதிடம்

2) கிளி ஜோதிடம்

3) எண்கணித ஜோதிடம்

4) பிரசன்ன ஜோதிடம்

5) முகக்குறி பார்த்தும் பலன் சொல்லுதல்

6) மூச்சு ஜோதிடம்

7) பிரமிடு ஜோதிடம்

8) கோடங்கி ஜோதிடம்

இவ்வாறு ஜோதிடமானது மக்கள் மத்தியில் அதிக அளவு பரவிக் காணப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

மேலே குறிப்பிட்ட ஜோதிட முறைகளால் நமக்கும், பிறருக்கும் எவ்வகையான பயன்கள் பலன்கள் கிடைக்கும் என்பதனைச் சிந்திக்க வேண்டும். காரணம் சிந்திக்கும் தன்மை தான் பகுத்தறிவு, அப்படிச் சிந்தித்தால் தான் அந்த ஜோதிடத்தில் பலன் இருக்கிறதா இல்லையா என்பதனை நம்மால் உணரமுடியும்! நம்முடைய பகுத்தறியும் தன்மையினை கொண்டு பகுத்தாய்வோம்!

நான் பார்த்த ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் ஒரு ஜோதிடரின் செயலைக் குறிப்பிட்டுக் காட்டி இருந்தார்கள்..!

(நீண்ட நாட்களுக்கு முன் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது ...)

இவ்வாறு ...

“மந்திரிக்கும் சாமியார் ஒருவர் விவசாயத்தில் புதுசு புதுசான முறைகளையும், விவசாயத்தில் இலாபத்தினையும் விளைச்சலையும் அதிகரிக்க” அறிவுரை கூறுகிறாராம்.!

என்ற செய்தி கேட்டு மக்கள் கூட்டம் அந்தச் சாமியாரிடம் அலை மோதியதாம்.! திடீரென அப்போது அந்த மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தபோது, அவருக்குத் தேவையான தகவல்களை தினந்தோன்றும் விவசாயம் சம்மந்தப்பட்ட கால் சென்டரில் (Call center) -ல் இருந்து பெற்று - மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தது தெரிய வந்ததாம்.

மக்கள் அந்த ஜோதிடர் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டு இருந்தார்களோ அந்த நம்பிக்கை அனைத்தும் பூஜியமானது அவரின் உண்மைத்தன்மை தெரிந்ததால்... ஜோதிடம் என்பது எல்லாம் மூடநம்பிக்கை என எடுத்துக் காட்டியது இந்த விளம்பரம்.

“Astronomy” என்ற வானவியலையும், ”Astrology” என்ற ஜோதிடத்தையும், பால் வேறு தண்ணீர் வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாத நிலையில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை இருப்பது வெட்கக்கேடான ஒன்றாகும்.

அதுபோல,

(இது, உண்மை சம்பவம் பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது)

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த என்னுடைய தோழி கலையரசி அவர்களின் வீட்டுக்கு அப்பாவின் நண்பரும் ஜோதிடருமான ஒருவர் வந்திருக்கிறார். (அந்தக் காலகட்டத்தில் என்னுடைய தோழி கலையரசி 12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடித்து தேர்வு முடிவுகளுக்குக் காத்திருந்தார்). அந்த ஜோதிடர் கலையரசியின் அப்பாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, அவர் சொல்கிறார், நான் வரும் வழியில் ஒரு பெண்ணின் மதிப்பெண்ணைக் கணித்து சொல்லிவிட்டு வர தாமதம் ஆகிவிட்டது என்று, கலையரசியின் அப்பா என்னுடைய மகளும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுக்காக (Result) காத்திருக்கிறார் என்றதும் ஜோதிடர் சொல்லிருக்கிறார், உங்கள் மகளின் ஜாதகத்தைக் கொடுங்கள், நான் பார்த்துச் சொல்கிறேன் என்று. சரி என்று கலையரசியின் அப்பாவும் ஜாதகத்தைக் கொடுக்க, ஜோதிடரும் கணித்துச் சொன்னாராம்.

கவலைப்படாதீர்கள் உங்கள் மகள் தேர்வில் அனைத்து பாடத்திலும் தேர்ச்சி (Pass) பெறுவார்; ஆனால், குறைந்த மதிப்பெண் தான் கிடைக்கும் என்கிறார், கலையரசியின் அப்பா வருத்தத்துடன் ஜோதிடரிடம் நீங்கள் இதற்கு முன்பு பார்த்த பெண்ணுக்கு எவ்வளவு மதிப்பெண் வரும் என்றார். ஜோதிடர் சொல்கிறார் அவர் மாநில அளவில் மதிப்பெண் (State Result) எடுப்பார் என்கிறார். ஆனால், கலையரசி கவலை கொள்ளாமல் இயல்பாக இருந்தார். சில நாட்கள் போயின. Result-ஐ பார்க்கிறார். ஆனால், தன்னுடைய தேர்வு முடிவை பெற்றோருக்குச் சொல்லாமல் மவுனம் காக்கிறார் கலையரசி....

கலையரசியின் பெற்றோர் கலையரசிக்கு ஆறுதல் சொன்னார்கள். கலையரசி அப்பாவிடம் சொல்கிறார், அப்பா ஜோதிடர் அன்று ஒரு பெண் மாநில அளவில் மதிப்பெண் எடுப்பார் என்று சொன்னார்கள் அல்லவா அந்த பெண்ணின் மதிப்பெண் எவ்வளவு என்று தெரியுமா என்கிறார்... சரி ம்மா நான் விசாரிக்கிறேன் என்று அக்கம் பக்கம் விசாரித்து அவர் குறைவான மதிப்பெண் எடுத்து இருக்காங்க ம்மா, உன்னுடைய மதிப்பெண் எவ்வளவு என்று கேட்க, அப்பா, நான் நம்முடைய மாவட்டத்தின் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளேன் என்றார்.

இந்தத் தகவல் குறிப்பிட ஜோதிடருக்குத் தெரிந்தது. அவர் என்ன பதில் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறீர்கள்... “வாழ்த்துகள்” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தார். இப்போது புரிகிறதா,

இதேபோல்.

என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற ஓர் சம்பவம். நானும் என்னுடன் கல்லூரியில் படித்த மாணவனும் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்று இருந்தோம். கடற்கரையை எல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு கலங்கரை விளக்கைப் பார்க்கலாம் என்று நினைத்து மலையின் மேல் ஏறினோம். மலையின் மேல் ஏறும் வழியில் ஒரு குறிசொல்லும் பெண் ஒருவர் இருந்தார். நான் அவரை ஏறும்போதே பார்த்துவிட்டேன். ஆனால், நான் பார்க்காதது போல தொடர்ந்து ஏறிக்கொண்டு இருந்தேன். அப்போது அந்தப் பெண் என்னுடன் வந்த கல்லூரி மாணவனையும் என்னையும் நோக்கி, “வாங்க பா 10 ரூபா தா, குறிபாத்து சொல்லுறேன்”னு சொன்னார். நான் சொன்னேன், “எனக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லை, நீ வேணுன்னா பாத்துக்க” என்றேன். அவனும் போய்ப் பார்த்தான்.

தம்பி உனக்கு 18 வயசு வரை ஓர் கண்டம் இருந்தது, அது இப்போ இல்ல. ஆனா 21 வயசு வரை பெண்களால் உனக்கு பிரச்சனை வரலாம்... அப்படின்னு சொன்னார். அந்த குறி சொல்லும் பெண்ணிடம் அவனும் எல்லாத்துக்கும் தலையை ஆட்டினான். நான் அந்தப் பெண்ணிடம் சொன்னேன், சரி அவன் இந்த Semester - இல் எவ்வளவு மதிப்பெண் எடுப்பான் என்று கேட்டேன். அந்த பெண் சொன்னார் எல்லாத்திலும் Pass பண்ணுவான் நல்ல Mark எடுப்பான் என்றார். அடுத்த நொடி என்னைப் பார்த்து உன்னிடம் நிறைய பெண்கள் பேசுவார்கள், பழகுவார்கள் வா பா உனக்கும் குறிபாக்குறேன்’னு சொல்லுச்சி. இல்லை பரவா இல்லைனு நா கிளம்பிவிட்டேன், சமீபத்தில் Result-ம் வந்தது. ஆனா,அந்த மாணவன் 4 பாடத்தில் தோல்வி! இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது மூட நம்பிக்கை மோசமானது. வாழ்க்கையை மிகவும் பாதிக்கும் இந்த ஜோதிடம் மூட நம்பிக்கையே..!

ஜோதிடருக்கு ஒரு சந்தேகம்

நான் பேருந்துக்காக ஊரில் காத்து இருந்தேன். அப்போது இரண்டு கிளி ஜோதிடர்கள் வாகனத்தில் வந்தார்கள். அவர்கள் என்னிடத்தில் வந்து எங்கள் ஊருக்கு அடுத்த ஊர் பெயரை சொல்லி அந்த ஊருக்கு எப்படி போகணும்னு கேட்க.

நா கொஞ்சம் கூட யோசிக்காம நீங்கள் என்னுடைய எதிர்காலத்தையே சொல்லுறீங்க. பக்கத்துல இருக்க ஊருக்கு எப்படி போகணும்னு உங்களுக்குத் தெரியாதான்னு கேட்க... அவங்க பதில் சொல்லாம ஓடிட்டாங்க. கேள்விகள் எழுமானால் ஜோதிடம் என்பது பொய் என்பது புரியவரும் !

இந்தக் கேள்விகளை நம் சொந்த புத்திக்குக் கொண்டு செல்வோம்...

  1. இந்தியாவைத் தவிர வேறு எந்த சோஷ்யலிச நாட்டிலாவது ஜோதிடம் உண்டா!
  2. குரங்குக்கும் கைரேகை உள்ளதே! ஜோதிடம் உண்டா?

மடியட்டும் மூடநம்பிக்கை..! மலரட்டும் பகுத்தறிவு..!