இது நவம்பர் மாதம் என்பதால் இந்தியக் குழந்தைகள் குதூகலத்துடன் இருப்பார்கள் காரணம் இந்த மாதத்தில் தான் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாள், குழந்தைகள் நாள் என்பதால், அவர்களுக்கு ஆடல், பாடல் விளையாட்டு என பல நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை மகிழ்விப்பார்கள். எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் விளையாட்டில்தான் தொடங்கி, விளையாட்டிலேயேதான் முடிகிறது. மனிதன் விளையாடும் கடைசி விளையாட்டு மரண விளையாட்டு என்பார் கவியரசர் கண்ணதாசன். சமீபத்தில் கூட மத்திய மனித வளத்துறை அமைச்சகம் கிராமத்தில் உள்ள பிள்ளைகள் கூட நம் நாட்டிற்காக விளையாடுவதோடு மட்டுமல்லாமல் பரிசுகளையும் அள்ளி வருகிறார்கள். எனவே இனிமேல்,பள்ளிகளில் பாடத்திட்டத்தை பாதியாகக் குறைத்து மாணவர்களின் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அவர்களும் மாணவர்களின் புத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று கூறியிருப்பதும் கல்வியோடு விளையாட்டை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை என்றே தோன்றுகிறது. இப்படி ஒரு நாட்டின் அரசு புரிந்து கொண்டதை தமிழன் எப்போதோ புரிந்து கொண்டதால்தான், நம்முன்னோர்கள் குழந்தைப் பருவத்திலேயே தம் குழந்தைகளோடு விளையாட்டை ஆரம்பித்து விடுகிறார்கள்.

தமிழர்களின் விளையாட்டை பார்க்கும்போது குழந்தைகள் விளையாட்டு, சிறுவர்கள் விளையாட்டு, இளைஞர்கள் விளையாட்டு, ஆடவர் விளையட்டு, மகளிர் விளையாட்டு, வீர விளையாட்டு என்று வகைப்படுத்தியதில் இருந்தே அதன் தொன்மையை அறிய முடிகிறது. ஒவ்வொரு பருவத்தினருக்கும் விளையாட்டு இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. தமிழர்களில் கிட்டத்தட்ட எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளோடு விளையாடும் முதல் விளையாட்டு என்றால் அது பருப்பு கடைதல் என்னும் விளையாட்டாகத்தான் இருக்கும். குழந்தைகள் தங்கள் அம்மாக்கள் பேசுவதை உள்வாங்கி தன் மழலை மொழியில் பேச ஆரம்பிக்கும் ஒரு வயது அல்லது இரண்டு வயதாக இருக்கும்போதே இந்த விளையாட்டை பெரும்பாலும் எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுகின்றனர். ஒரு சில கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களில் தாத்தா, பாட்டிகளும் தங்கள் பேரக்குழந்தைகளோடு இதை விளையாடுகின்றனர். இந்த ஒன்று, இரண்டு வயதில் குழந்தைக்கு அப்படி என்னதான் புரிந்து விடப்போகிறது அல்லது குழந்தைதான் இந்த விளையாட்டிலிருந்து அப்படி என்ன கற்றுக்கொள்ளப்போகிறது என்று நினைக்கலாம். இந்த விளையாட்டு விளையாடும் முறைகளும் அது நமக்குச் சொல்லிக்கொடுக்கும் வாழ்வியல் பண்புகளையும் தெரிந்துகொண்டால், தமிழர்கள் எப்படி பண்பட்ட விளையாட்டை குழந்தையோடு விளையாடுகிறார்கள் என்பது புரியும்.

பருப்பு கடைதல் அல்லது பருப்பு கடைஞ்சி விளையாடுவது எப்படி என்று பார்ப்போம். தரையில் தவழ்ந்து செல்கிற குழந்தையோ அல்லது தத்தித் தத்தி நடக்கும் குழந்தையைப் பிடித்து உட்கார வைத்து விட்டு, அதன் கையை பிடித்து அதன் விரல்களை விரித்து அதன் ஒவ்வோரு விரலாகப் பிடித்து இது சோறு, இது பருப்பு, இது ரசம், இது மோரு, இது கூட்டு, இது பொறியல் என்று ஒவ்வொரு விரலுக்கும் ஒரு உணவின் பெயரைச்சொல்லுவாள் தாய். பின்பு குழந்தையின் உள்ளங்கையை விரித்துப் பிடித்துக்கொண்டு, தாய் தன் முழங்கையால் பருப்பு கடைவது போலச் செய்துகொண்டு

“பருப்பு கடை பருப்பு கடை

பருப்பு கடைஞ்சி

அப்பாவுக்குக் கொஞ்சம்

அம்மாவுக்குக் கொஞ்சம்

அத்தைக்குக் கொஞ்சம்

மாமாவுக்குக் கொஞ்சம்

பாட்டிக்குக் கொஞ்சம்

தாத்தாவுக்குக் கொஞ்சம்

பாப்பாவுக்குக் கொஞ்சம்”

என்று பாடி கொண்டே அவர்களுக்கெல்லாம் உணவு எடுத்து கொடுத்துவிட்டு குழந்தைக்கும் உணவு ஊட்டுவது போல தாய் நடிப்பாள்.

பின்பு குழந்தையின் கையை நீட்டிப் பிடிச்சி கைமேல் தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் காலால் நடந்து வருவது போல செய்து நண்டு வருது நரி வருது என்று பாடிக்கொண்டே கழுத்து வரை விரல்களை நடத்திக் கூசுமாறு செய்வாள். அப்பொழுது அழுகின்ற குழந்தையும் கூச்சத்தால் சிரிக்கும். அப்படி ஒருவேளை கூச்சம் வராவிட்டால் கைகளில் கழுத்துப் பகுதியில் கிச்சு கிச்சு மூட்டிச் சிரிக்க வைப்பாள்.

குழந்தைக்கு உணவு ஊட்டிப் பழகும்போதே நல்ல உணர்வுகளையும்,பழக்கவழக்கங்களையும் ஊட்டி வளர்ப்பதற்கு ஒரு விளையாட்டைப் பயன்படுத்தியவர்கள் தமிழராகத்தான் இருக்கமுடியும்.

பொதுவாகவே ஒருவருக்கு விளையாட்டின் மூலமாகத்தான் பொறுமை, நேர்மை, ஒழுக்கம், கீழ்ப்படிதல், விட்டுக்கொடுத்தல் என அனைத்து நற்குணங்களையும் போதிக்க முடியும் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். ஆனால் தமிழனின் பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும், வெற்றி தோல்விகளைச் சமமாக நினைக்கவும், கூடி விளையாடவும், கூடி வாழவும் தேவையான பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும் என்ற அழுத்தமான படிப்பினையையும் நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த பருப்பு கடைஞ்சி விளையாடும் விளையாட்டு நமக்குச் சொல்லிக்கொடுக்கும் வாழ்வியல் பண்பு என்ன?

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

 என்று வள்ளுவன் கூறிய பகுத்துண்டு வாழவேண்டும் என்ற வாழ்வியல் நெறியை ஒருவன் இதைவிட எளிமையாக குழந்தைகளுக்கு உணர்த்த முடியாது. பசியோடு உள்ள மற்றவர்களுக்கெல்லாம் உணவளித்த பின்பே நாம் சாப்பிடவேண்டும் என்ற உயர்ந்த பண்பும் இருக்கின்ற உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற உயரிய எண்ணங்களையும் அந்த மழலையின் பிஞ்சு மனதில் பசுமரத்தாணியாக பதியமிடும் விளையாட்டுதான் இந்த விளையாட்டு. அது மட்டுமல்ல எல்லாக் குழந்தையும் பிறக்கும் போது தனது பிஞ்சு விரல்களை மூடிகொண்டேதான் பிறக்கின்றன இந்த விளையாட்டின் மூலம் அந்த பிஞ்சு விரல்களைத் திறந்து விடும் உடற்பயிற்சியாகவும் இந்த விளையாட்டு விளங்குகிறது. குழந்தைகளின் மீது விரல்களால் நடப்பது போன்று செய்வதன்மூலம் அவர்களின் தொடு உணர்வு எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவும், அப்படி தோடு உணர்வு சரி இல்லை எனில் இந்த விளையாட்டில் கிச்சு கிச்சு மூட்டுவதன் மூலம் அந்த தொடு உணர்வைத் தூண்டவும் இந்த விளையாட்டு உதவுகிறது. மேலும் இது குழந்தை பேசப் பழகும் பருவத்தில் விளையாடுவதால் தாய் தன் பாட்டில் சொல்லும் பல வகையான உணவின் பெயர்களையும் அதை பகிர்ந்தளிக்கும் போது சொல்லப்படும் உறவுகளின் பெயர்களையும் குழந்தைகள் தெரிந்துகொள்கின்றன.

மனிதனின் முதல் பொழுதுபோக்கே விளையாட்டுதான். உடலுக்கும், மனதிற்கும், மகிழ்ச்சிதருவதும் விளையாட்டுதான். விளையாட்டுதான் மனிதனை சமூகப்படுத்தும் செயல். விளையாட்டுதான் மனிதனின் உடலையும் மனதையும் பாதுகாக்கும் மகத்தான மருந்தில்லா மருத்துவம்.

ஆகவே, உணவுகளையும், உறவுகளையும், உணர்வுகளையும் ஊட்டும் பருப்பு கடைதல் என்னும் விளையாட்டை நம் குழந்தைகளோடு விளையாடுவோம் அது அவர்கள் எதிர்காலத்தில் அவர்களுடைய குழந்தைகளோடு விளையாட வழிவகுக்கும்.

- இன்னும் விளையாடலாம்