பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல் உயர்த்துபவர்கள் உண்டு. அப்படி குரல் கொடுப்பவர்கள் NEET தேர்வை ஆதரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்  என்பதுதான் முரண்பாடு. நீட் தேர்வை ஆதரிப்பவர்கள்  பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு எதிரானவர்கள். எப்படி? கட்டுரையைப் படியுங்கள்.

நீட் (NEET) என்று சொல்லப்படும் NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST என்பது தமிழர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் மற்றொரு வட இந்திய வஞ்சகம். இன்னும் சொல்லப்போனால், இந்தத் தேர்வுமுறை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்.

KT July Wrap 5001984இல் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அளவில், எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்கு  நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட்டபோதே உடனடியாக, திராவிடர் கழகம் போராட்டங்களில் இறங்கியது. அந்த நுழைவுத் தேர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் ஆதரித்தது. என்றாலும் இருபத்தொரு ஆண்டுகள் கடும் எதிர்ப்புகளுக்கிடையேயும் நடைமுறையில் இருந்த நுழைவுத்தேர்வு 2005ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்டது. ஆனால் சில சமூகநீதி விரோத சக்திகள் வழக்கு மன்றத்தில் அதற்குத் தடை வாங்கினர். 2006ஆம் ஆண்டில் அனந்த கிருஷ்ணன் தலைைமயில் குழு அமைத்து அவர்களின் பரிந்துரையின்படி சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டதாலும், நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்கள் மருத்துவராவதை எந்தெந்த வகையில் தடை செய்கிறது என்பதையும் தமிழ்நாடு அரசு, உயர்நீதி மன்றத்தில் தெளிவாக எடுத்துச் சொன்னதால் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு அனுமதி வழங்கியது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி நுழைவுத் தேர்விலிருந்து விடுதலை பெற்ற மகிழ்ச்சியை நீட்டிக்க விரும்பவில்லை இந்திய அரசு. ஓடிக்கொண்டிருக்கும் சக்கரத்திற்குள் கம்பியை ‘நீட்’டி வண்டியைக் கவிழ்த்துவிட்டது.

2016ஆம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு கொடுத்துவிட்டு சென்ற 2017ஆம் ஆண்டு முதல், எம்.பி.பி.எஸ். கனவிலிருக்கும் மாணவர்களின் கண்களில் ‘நீட்’டுக் கத்தியை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது.

சென்ற ஆண்டு தன் கனவு, கருவிலேயே சிதைக்கப்பட்ட அதிர்ச்சியில் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் அருமை மகள் அனிதா. இந்த ஆண்டு, பிரதீபா, சுப என இரண்டு அருமைச் செல்வங்கள் ‘நீட்’டுக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்கள்.

நீட் என்று உச்சரிக்கப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு (NEAT) தெளிவாகவும் சரியாகவும் என்று பொருள்! ஆனால் இந்திய அரசு நடத்தும் நீட்(NEET) எல்லாவகையான முறைகேடு தில்லுமுல்லுகளையும் செய்கிறது.

2017ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட நீட் தேர்வில், கேள்வித்தாள்களில் தில்லுமுல்லு செய்தனர். இந்தி, குஜராத்தி மொழிகளில் எளிமையான கேள்விகளைக் கேட்டனர். மற்ற மாநில மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது.

2018ஆம் ஆண்டில் ‘நீட் தேர்வை ரத்து செய்’ என்று சொல்லும் மக்களை ‘நீட் தேர்வு மையத்தை தமிழ்நாட்டிலேயே அமை’ என்று சொல்ல வைத்துவிட்டார்கள் தமிழ் மக்கள் விரோத இந்திய அரசினர்.

தேர்வுக்கு ஒன்றரை நாள் மட்டுமே இருக்கும்போது தேர்வு மையங்களை தொலைதூர மாநிலங்களில் ஒதுக்கீடு செய்து அறிவித்தனர். பழிவாங்குதல் என்றால் என்ன என்று இந்திய அரசு செய்து காட்டியது. தமிழ்நாட்டு மக்கள் பழி வாங்கப்பட்டனர்.  இரண்டு மாணவர்களின் தந்தைகள் பலிவாங்கப்பட்டனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு  மாணவி கூறும்போது, “எர்ணாகுளம் அல் அமீன் கல்வி நிறுவனத்தில் எனக்கு சென்டர் போட்டிருக்கிறார்கள். நீட் தேர்வு விண்ணப்பம் தொடங்கிய நான்காவது நாள் நான் விண்ணப்பித்துவிட்டேன். எனக்கு எர்ணாகுளத்தில் சென்டர் போட்டிருக்கிறார்கள். நான் விண்ணப்பித்த சில நாள்களுக்குப் பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு திருநெல்வேலி சென்டரில் தேர்வு மையம் கிடைத்திருக்கிறது. ஒரே குழப்பமாக உள்ளது” என்றார்.

இந்தநிலையில் ‘நீட்’ தேர்வு தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடி நடந்து இருப்பது தெரியவந்தது. 49 கேள்விகளில் 68 வார்த்தை பிழைகள் இடம் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

180 கேள்விகள். தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. பிழையான  பதிலளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். இவர்கள் பிழையான கேள்வித்தாளை தயாரித்தார்களே இவர்களுக்கு பணித் தகுதி குறைக்கப்படுமா?

ஒரு வினாத்தாளைக் கூட பிழையில்லாமல் தயாரிக்கத் தகுதியில்லாதவன் தகுதித்தேர்வு நடத்துகிறான். +2 வில் தகுதியான மதிப்பெண்கள் எடுத்த நம் மாணவக் கண்மணிகள் தற்கொலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இந்தியர்களின் முட்டாள்தனத்துக்கெல்லாம் இந்துத்துவவாதிகள் அறிவியல் முலாம் பூசுவார்கள். அண்மையில் ‘ராமாயண காலத்திலேயே, இப்போது உள்ள அனைத்து தொழில்நுட்பங்களும் இருந்ததாகவும், சீதையே சோதனைக் குழாய்மூலம் பிறந்தவர்தான்’ எனவும் உத்தரப்பிரதேச துணை முதல்வர் பேசியுள்ளார். புஷ்பக விமானம் இந்துக்களின் கண்டுபிடிப்பு என்று மார்தட்டிக் கொள்வார்கள். உலகின் முதல் அறுவைச் சிகிச்சை மருத்துவர் சுஸ்ருதர் என்று பெருமை பீத்திக் கொள்வார்கள்.

நாம் கேட்கிறோம், சீதையை டெஸ்ட் டியூபில் பிறப்பித்த மருத்துவர் யார்? அவர் எந்தக் கல்லூரியில், எந்த ஆண்டு NEET தேர்வில் தகுதிபெற்று டாக்டரானார்? அதே கேள்வி அறுவைச் சிகிச்சையின் தந்தை சுஸ்ருதரைப் பார்த்தும் எழுகிறது.

மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும் பெற்றோர்களுக்கு நெஞ்சுவலியையும் உண்டாக்குவதோடு கடனாளியாக ஆக்குவதுதான் நீட் தேர்வு செய்திருக்கும் சாதனை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஒட்டுமொத்த ஊரையே நோயாளியாக்கிக் கொல்கிறது என்று சொல்லி போராடிய மக்கள் ஊருக்கு ஒருவரைக் கொல்லும் நீட் தேர்வு என்னும் நச்சுப்பாம்பைக் கொல்ல இன்னும் ஆயுதம் எடுக்காமல் இருப்பது அநியாயம்.

நீட் தேர்வு கூடாது என்று, தி.க., திமுக, பாமக, விசிக, த.வா.க.போன்ற சமூக நீதியில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பரப்புரை செய்து போராட்டம் நடத்தினாலும் மாணவர்களின், பெற்றோர்களின் தூக்கம் கலையவில்லை. அறிவுக்கண் திறக்கவில்லை.அதனால்தான் இந்திய அரசு தமிழர்களை இளிச்ச வாயர்களாக நினைக்கிறது. மாநிலக் கல்வி உரிமையை நிலைநாட்ட நீட் தேர்வை முற்றிலும் எதிர்த்த ஜெயலலிதாவின் வழியில் நடப்பதாகச் சொல்லும் தமிழ்நாடு அரசோ, நீட் பயிற்சி மையங்களை ஊருக்கு ஊர் உருவாக்கி மாநில சுயாட்சி என்பதை மறந்து, மானங்கெட்ட சுயநல ஆட்சி என்று ஆகிவிட்டது.

மாடு பிடித்து கலாச்சாரத்தைக் காப்பாற்றிய மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பு பிடிக்கவில்லை போலிருக்கிறது. NEETக்கு எதிராக வாயே திறக்க மாட்டேன்கிறார்கள். நம் மக்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு போலிருக்கு!

எல்.கே.ஜி.க்கு என்ட்ரன்ஸ் வைத்தவனையும் கியூவில் நின்றவனையும் செருப்பால் அடித்திருந்தால் வந்திருக்காது NEET.

இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கே போகாமல் நீட் பயிற்சி மையத்திலேயே இருந்த கல்பனா குமாரி என்ற பீகார் பார்ப்பன மாணவி நீட் தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம்! இதுதான் பித்தலாட்டத் தகுதித் தேர்வின் லட்சணம்! ‘‘உட்கார முடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒளித்து வைத்திருப்பான், கைப்பற்று’’ என்று வைரமுத்து எழுதியது நினைவுக்கு வருகிறது.

பள்ளிப் படிப்பில் +2 வில் அதிக மதிப்பெண் எடுக்காவிட்டாலும், நல்ல பயிற்சி மய்யத்தில் அதிகப் பணம் கட்டி சேர்ந்து  நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டால் டாக்டர் ஆகிவிடலாம் என்று நினைக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு கேள்வி! ஒருவேளை நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்துபோனால், மருத்துவப் படிப்பு கிடைக்காது என்ற நிலையில் +2 வில் 800 முதல் 900 மதிப்பெண்களே எடுத்திருக்கும் நிலையில் பி.இ. அல்லது B.Sc  வேளாண்மை போன்ற படிப்புகளுக்கும் இடம் கிடைக்காதே? அல்லது மீண்டும் அதிகப் பணம் கட்டிதானே டாக்டர் படிப்பு படிக்க வேண்டும்? அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்பைப் படிக்க வேண்டும்? எத்தனை பணச் செலவு? குடும்பம் மொத்தமும் மருத்துவ சீட் கிடைக்கும் வரை மன அழுத்தத்தில் இருக்க வேண்டும். இடம் கிடைக்காவிட்டால் இறுக்கம் இரு மடங்காகும். கடன் கழுத்தை நெறிக்கும். நீட் பயிற்சி மையங்கள் என்னும் கொள்ளைக்காரர்கள் பெருகிப் பணம் பிடுங்குவார்கள் என்பதைத் தவிர வேறு என்ன பயன்?

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் மொத்தம் 2850. இதில் 15 % அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போய் விடும் மீதி 2425  இடங்கள். இந்த 15% இடங்களைப் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சாராதவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1500 இடங்கள். நாற்பது ஐம்பது லட்சங்கள் கொடுத்து சேர்ந்து, மேலும் ஆண்டுதோறும் பதினைந்து லட்சங்கள் பணம் கட்டி படிப்பவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை என்பதால் அதை விட்டுவிடுவோம்.

தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் எழுதிய தேர்வில் சுமார் 2425 பேர் மட்டுமே அரசுக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க முடியும். ஆனால் இதற்காக நீட் பயிற்சி மையங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு? மன வேதனை எவ்வளவு? இவ்வளவும் செய்து வட இந்தியர்கள் செய்யும் தில்லு முல்லுகளால் ஏற்படும் பாதிப்புகள் எவ்வளவு?

முன்பே சொன்னதுபோல் எல்கேஜியிலேயே என்ட்ரன்ஸ் என்பதைப் பெருமையாகச் சொல்லும் மனநிலைக்கு மக்களைப் பழக்கி விட்டதால் இவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தினாலும் நீட்டை எதிர்க்க மக்கள் முழு அளவில் முன்வரவில்லை.

தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீடு 15% விழுக்காடு என்பதை  சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். கூடாரத்துக்குள் மூக்கை நீட்டிய ஒட்டகம் முழுதாக உள்ளே நுழைந்து கூடாரத்துக்கு சொந்தக்காரர்களை வெளியே அனுப்பிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏற்கனேவே மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு 25% என்று இருந்ததை உச்சநீதிமன்றம் 50% என்று உத்தரவிட்டு இரண்டில் ஒரு பங்கு இடங்களை தேசியத்திடம் இழந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல சூப்பர் ஸ்பெஷாலிடி படிப்புகள் எனப்படும் சிறப்பு உயர் படிப்புகளில் மாநில ஒதுக்கீடு என்பதை முற்றிலும் ஒழித்து 100% அகில இந்திய ஒதுக்கீடு என்று ஆக்கி விட்டது. இதேபோல் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களையும் இழக்கும் வாய்ப்பு அதிகம். குதிரை போன பின் லாயத்தைப் பூட்டி பயனில்லை மக்களே!

மேலும் ‘பெர்சண்டைல்’ என்ற முறை மிகவும் நகைச்சுவையான ‘தகுதி’ உடையது. அதாவது தேர்வு எழுதிய அனைவரையும் வரிசைப்படி நிறுத்தினால் நிற்பவர்களில் சரிபாதியான இடத்தில் நிற்பவர் வரை தகுதியானவர்களே! அதாவது முதலிடத்தில் நிற்பவர் 97% மதிப்பெண்  என்றால், சரிபாதியான இடத்தில் நிற்பவர் 16% எடுத்திருந்தாலும் அவரும் எம்.பி.பி.எஸ். படிக்கத் தகுதியானவரே. 2018ஆம் ஆண்டு நடந்த தேர்வில் 691 மதிப்பெண் எடுத்தவரும் 119 மதிப்பெண் எடுத்தவரும் டாக்டர் படிப்பு படிக்கலாம். (இந்த 691-119 மதிப்பெண் (50 வது பெர்சன்டைல்) எடுத்தவர்களை திறந்த போட்டியினர் என்று குறிப்பிடாமல் பிறர் (others) என்று குறிப்பிட்டிருப்பது ஒரு கூடுதல் மோசடி) பிறகு என்ன மயிருக்கு இந்தத் தகுதித் தேர்வு என்று கேட்கத் தோன்றுகிறதா இல்லையா?

மேலும் ஒரு மோசடி என்னவென்றால் 2018ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து 107288 பேர் எழுதுவதாக CBSE தன் இணைய தளத்தில் குறிப்பிட்டிருந்தது. தேர்வு முடிவு வந்தபோது தேர்வெழுத பதிவு செய்தவர்கள் 120000 பேர் எனவும், தேர்வெழுதியவர்கள் 114602 பேர் என்றும் அதில் தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் 45336 பேர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்வுக்குப் பதிவு செய்ய குறிப்பிட்ட நாள்தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு, அந்த நாளுக்குள் பதிவு செய்தவர்களைத்தான் தேர்வுக்கு அனுமதி பெற்றவர்களாகப் பட்டியலிடுவார்கள் அப்படியிருக்க, தேர்வுக்கு முன் பட்டியலில் உள்ளவர்களைக் காட்டிலும் தேர்வு முடிவுகள் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை எப்படி கூடுதலாக இருக்க முடியும்? மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இதுபற்றிய கேள்விகளுக்குப் பொறுப்பில் உள்ளவர்கள் கள்ள மவுனம் காக்கிறார்கள். மாணவர்களும் பெற்றோர்களும் எவனாவது போராடி வாங்கித்தந்தால் அனுபவிக்கலாம் என்றிருக்கிறார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே வட இந்தியர்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டின்மீது தலைவிரித்தாடியது. அவர்கள் எடுப்பதே முடிவு. அவர்கள் சொல்வதே சட்டம் என்றானது. அதனால்தான் தந்தை பெரியார்  ‘‘தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களாக வடநாட்டாரும் ஆரியபுத்திரர்களும் இருப்பதை ஒழிக்க வேண்டும்.’’ என்று ‘குடிஅரசு’ 30.10.1938 இதழில் எழுதினார்.

தமிழன் தன்னை இந்தியன் என்று நினைத்து ஏமாந்தது போதும். உணர்விருந்தால் உரிமையைப் பெறலாம். வீதியில் இறங்கிப் போராடினால்தான் வீட்டுக்குள் நிம்மதியாக  உறங்கலாம்.