அப்போதெல்லாம்

ஏரிப்பாசனம்தான்;

ஊருக்கு ஒருத்தர்

ரெண்டுபேருதான்

ஆயில் என்ஜின் பம்புசெட்

வச்சிருப்பாங்க!

அந்த வருச அடைமழைல

ஆறு,ஏரி,குளம்,குட்டைனு

ஒண்ணுவிடாம நெரம்பிருச்சி

எங்க பார்த்தாலும்

வெள்ளக்காடுதான்!

சின்ன கால்வாயும்

பெரிய கால்வாயும்

தூர்வாரி வெச்சிருந்தாங்க

ஒடநகரத்து ஏரிவரைக்கும்

சலசலன்னு தண்ணி

ஆறாட்டம் ஓடுது!

ஆங்காங்கே கழனியிலே

நாத்தங்கால் தெளியவச்சிருந்தாங்க;

சிலபேர் நாத்துவிடவும்

செய்ஞ்சிட்டாங்க!

தூக்கணாங்குருவிகளும்

கொக்குகளும்

ஊர் திரும்பியிருந்தன;

ஆங்காங்கே தென்னைகள்

ஊஞ்சலாடியது!

கடைமடைத்தண்ணீர்

ஆற்றுவெள்ளமாய்

பாய்ந்தோடியது;

அங்கே அணைகள் கட்ட

கைகள் நீளவில்லை!

தண்டேரியாமூட்டு சேட்டும்

மூக்கிவீட்டு ஐயாரெட்டும்

துண்டை கோவணமாக்கி

நாத்து பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்

முனிக்கண்ணு கழனியில;

தாலுக்கத்த எடுத்துக்கொடுத்து

கொண்டிருந்தான் முனுசாமி

பேரன் வெடக்காலன்!

மலையாமூட்டு காக்காணியில

தெம்மாங்குச் சத்தத்தோடு

நடவுச்சத்தம்;

பூவாயிக்கெழவி பாட்டுச்சத்தம்

ஒடநகரத்து ஏரிக்கரைத்

தாண்டியும் எதிரொலித்தது!

அல்லியாத்தான் காட்டுவாக்கேணில

மருந்தடிக்கிற சத்தம்

ஊருக்குள்ளாற வரைக்கும்

கேட்டது; பால்டாயில் வாசனை

காற்றில் அலையடித்து வந்தது!

கட்டையனும் வேலய்யனும்

வரப்பு மேட்டில்

நண்டு பிடித்துக்கொண்டிருந்தார்கள்;

அவ்வப்போது தண்ணி

பாம்புகளோடும் மல்லுக்கட்டிக்

கொண்டிருந்தார்கள்!

அதோ தூரத்தில்

பாஞ்சாலைப் பாட்டி

பசுமாட்டிற்கு புல்லறுத்துக்

கொண்டிருந்தாள்; போனவாரம்தான்

காராம்பசு கெடேரிக்கண்ணு

போட்டிருந்தது!

புல்லாக்குட்டையில மாடுமேய்க்குற

பசங்க நீச்சலடித்துக்

கொண்டிருந்தார்கள்;

கரையின் புங்கமர நிழலில்

அசைபோட்டுக் கொண்டிருந்தன

கால்நடைகள்!

பச்சைவயல்கள் பாய்விரித்திருந்தது

தென்றல்காற்று காதுமடலை

முத்தமிட்டுச் சென்றது;

நெற்கதிர்வாசம் மண்மணக்கச்

செய்தது!

இதோ  மஞ்சள்பூசிய நெற்கதிர்

குலைசாய்ந்திருந்தது;

மேற்கால பூங்கொல்லை

மேட்டிலிருந்து

கெழக்காலே வெள்ளவேரி

வரைக்கும்!

களத்துமேட்டில் சாணம்தெளித்து

இடம்பிடித்தார்கள்

டொங்கமூட்டு பாட்டியும்

கலுகுட்டு கெழவியும்;

வெள்ளாயமூட்டு டிராக்டர்தான்

கட்டடித்துக்கொண்டிருந்தது!

பதரையெல்லாம் சலித்துக்

கொண்டிருந்தார்கள் குடுகுடுப்பைக்

கிழவிகள்!

மலைமலையாய் வைக்கோல்

போர்கள் வீட்டுக்குப்

பின்னால்;

இதுவரை வீடுசேரவில்லை

களத்துமேட்டு பொன்னிநெல்!

வாங்கிய கடனுக்கு

கரையேறிக்கொண்டிருந்தது

தரகன் காசியின் அரிசி ஆலைக்கு!

மிச்சமீதியாய் இன்னும்

அந்த காடுகரைகள்

வானம்பார்த்த பூமியாய்

ஏங்கித் தவிக்கிறது!

உழவு மறந்த பிள்ளைகள்

இனி ஊரைக்கடந்து

கைகட்டி வாய்ப்பொத்தி

நிற்கிறோம்;

வயக்காட்டில் முளைத்த

அடுக்குமாடி மென்பொருள்

மையத்தில்!

சோறுவிளைந்த பூமியில்

கற்கள் முளைத்திருக்கிறது

அங்கிங்கெனாதபடி;

இங்கே நெற்களுக்கு

விலையில்லை!

மனைக் கற்களுக்கே விலை!