periiyarr 450"பாடலில் பழமுறை பலநடை என்பதோர்

காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச்

சுப்ரமணிய பாரதி தோன்றி யென்

பாட்டுக்கு புதுமுறை புதுநடை காட்டினார்"

என்று பாரதிக்கு புகழாரம் சூடிய சுப்புரத்தினம்; தான் எப்படி பாரதிதாசன் ஆனதுபற்றி குயிலில் எழுதுகிறார். வ.வே.சு. ஐயர், பாரதியாருடன் புதுவையில் சில காலம் தங்கியிருந்தபோது பாவேந்தருக்கு ஐயருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஐயரின் இறப்பிற்குக்கூட பாவேந்தர் இரங்கற்பா எழுதினார் என்பர். ஐயருடன் இவ்வளவு நெருக்கமாக இருந்த பாவேந்தர் சேரன்மாதேவி ஆசிரமத்தில் தொடர்ந்து நடந்துவந்த அக்கிரமங்களும் சாதிய வன்முறைகளும் பாவேந்தர் நெஞ்சில் சாதி மத எதிர்ப்புத்தீயை உண்டாக்கிற்று.

இதற்கிடையில் தந்தை பெரியார் எஸ்.இராமநாதன் அவர்களின் கட்டுரைகளான மூடப்பழக்கவழக்கங்களை எதிர்ப்பது, புராண இதிகாசங்களை விமர்சிப்பது போன்றவைகள் குடியரசில் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவைகள் வெகுவாகப் பாவேந்தரை பாதித்தது மட்டுமன்றி 1928ஆம் ஆண்டு தந்தை பெரியார் புதுவைக்கு சென்றிருந்தபொழுது பாவேந்தரைச் சந்தித்துப் பேசினார். அந்த ஆண்டுமுதல் தீபாவளி கொண்டாடுவதையே விட்டுவிட்டார் பாவேந்தர். அதோடு நில்லாமல் 1929இல் புதுவையில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பாவேந்தரும் கலந்துகொண்டு தந்தை பெரியாருக்கு மாநாட்டுப்பந்தலில் ஒரு வரவேற்புப் பத்திரத்தையும் வசித்துக்காட்டினார் பாவேந்தர். அதே ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு எனும் நூலை எழுதி அது சுயமரியாதை நூலாக வெளிவந்தது.

பாவேந்தர் புதுவை முரசில் எழுதிய கவிதைகள் அனைத்தும் திரட்டப்பட்டு முதல் தொகுதியாக தொகுக்கப்பட்டு 1938இல் தமிழரின் புத்தாண்டு பரிசாக தந்தை பெரியாரின் சிறப்புரையுடன்(குடியரசில்) வெளிவந்தது.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான கவிதைகள் அனைத்தும் மதவாதத்தை சாடும் அளவில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலைப்பற்றி தந்தை பெரியார் பேசுகையில் பெண்ணடிமை மூடநம்பிக்கைகளை அகற்றுதல் சாதியியல் எதிர்ப்பு விதவைக்கொடுமை சாதிபேதம் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவைகளை கண்டித்தும் எதிர்த்தும் முக்கியமாக பாமரர்களுக்கும் புரியும்படியாக எழுதப்பட்ட புத்தகம் இது என்று பாராட்டினார். தந்தை பெரியாரின் சுயமரியாதை சிந்தனைகள் பாவேந்தரிடம் தீவிரமடைந்த காலமிது என்பதை நாம் இங்கே புரிந்துகொள்ளவேண்டும்.

கம்யூனல் ஜி.ஒ, சமூகநீதி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், இடஒதுக்கீடு, வகுப்புரிமை மற்றும் ரிசர்வேஷன் என்றழைக்கப்படும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ போராட்டங்களே திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான போராட்டங்கள் என இன்றுவரை அழைக்கப்படுகின்றன என்றால் மிகையாகாது. இந்த மாபெரும் போராட்ட வரலாற்றில் அயோத்திதாசர் தொடங்கி ரெட்டைமலை சீனிவாசன், பிட்டி தியாகராயர், டாக்டர்.டி.எம்.நாயர், முத்தைய்யா முதலியார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் மு. கருணாநிதி வரை என்றாலும் இதில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் மற்றும் பெருந்தலைவர் காமராசர் ஆகியோருக்கும் இந்த போராட்டங்களில் பங்குண்டு என்பதை மறுக்கமுடியாது என்க.

எல்லாம் சரி ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வர்ணபேதம் எப்படி சாத்தியம் என்கிற கேள்வி நம்முள் இயல்பாகவே இந்த இடத்தில் எழவேண்டுமல்லவா? 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததினால் இவ்வளவு பெரிய பரந்து விரிந்த ஆனால் சிதைந்து கிடந்த தேசத்தை ஆள்வதில் சிக்கல் எழுந்தது. அதோடின்றி இருக்கிற ஒருசில அரசு பணிகளையும் அவர்களுக்கே கொடுக்க நேர்ந்தது. இது அன்றைய எழுதப்படிக்கத்தெரியாத நம்முடைய பாட்டன் பூட்டன்மார்களுக்கு தெரியவில்லை மாறாக அன்றைய நிலையிலேயே வேதம் கற்றிருந்த பார்ப்பனர் தங்களுக்கும் கணிதம் தெரியும் எனவே குமாஸ்தா பணிகளை எங்களுக்கே தாருங்கள் என்றார்கள். வெள்ளையர்களின் அன்றைய தேவையை இது ஒருவகையில் பூர்த்திசெய்வதாக இருந்தபடியால், பார்ப்பனர்களுக்கு தொடக்கத்தில் சிலபல அடிப்படை கணக்கர் பணிகள் அரசு பணிகளாக கொடுக்கப்பட்டன. பிறகு மெல்ல மெல்ல எல்லாப்பணிகளும் தங்கள் பிராமண சமூகத்திற்கே தரவேண்டுமெறு பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன் பயனாக பணிகளையும் பதவி உயர்வுகளையும் பெற்றனர். ஆங்கிலேயர்களுக்கு தொடக்கத்தில் இந்த நாட்டின் அமைப்பு முறை பற்றிய புரிதல் இல்லாத காரணத்தால்; 1853இல் நெல்லூர் மாவட்ட வருவாய்த் துறையில் ஒரே சாதியை சேர்ந்த சுமார் 50 பேர்கள் கொண்ட பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இது மெல்ல மெல்ல உயர்ந்து 1894 முதல் 1904 வரையிலான காலகட்டங்களில் அனைத்து அரசுப்பணிகளிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

இது பிராமணரல்லாதோருக்கும் பார்ப்பனர்களுக்கும் மனக்கசப்பையும் விரோத மனப்பான்மையும் உருவாக காரணமாக இருந்ததோடு, போராட்டங்களாக வெடித்தன. இந்த நிலை நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும்வரை பல வடிவங்களில் தொடர்ந்தது எனினும்; வெள்ளையர்கள்; பெருவாரியான சாதிய அமைப்புமுறைகள் இருப்பதையும் இவர்களின் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக்கொள்ள எதுவாக எப்பொழுதும் ஒருவித கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். அதற்கு அரசு உயர் பதவிகளில் எல்லாம் பார்ப்பனர்களே எல்லா இடங்களையும் நிரப்பிக்கொண்டனர் என்பதும் ஒரு காரணமாயிற்று.

உண்மையில் சொல்லப்போனால் வெள்ளைக்காரர்கள் வரும்வரை நமக்கு அதாவது சூத்திரர்களுக்கு கல்வி உடை நாகரீகம் எல்லாம் எட்டாக்கனியாகவே இருந்துவந்தது. வெள்ளையர்கள் வந்தபின்புதான் அனைவருக்கும் சமமான கல்வி அடிப்படை அதிகாரங்களின் வேலைவாய்ப்பில் உரிமைகள் என கிடைக்கப்பெற்றது. அதனால்தான் தந்தை பெரியார் சுதந்திர இந்தியாவை வெறுத்தார். நீங்கள் (வெள்ளைக்காரர்கள்) போய்விட்டால் நாங்கள் மீண்டும் இங்கே உயர் சாதி இந்துக்களுக்கு அடிமைகளாகிவிடுவோம் எங்கள் சுதந்திரம் மீண்டும் மறுக்கப்படும் என்று சுதந்திர தினத்தை கருப்பு நாளாக கொண்டாட முடிவு செய்ததோடன்றி அதை நடத்தியும் காட்டினார் தந்தை பெரியார் என்பதை பிறகு விரிவாக பார்ப்போம்.

1835இல் மெக்காலே அறிமுகப்படுத்திய கல்விமுறையைத்தான் சில சில மாற்றங்கள் செய்து இன்றைக்கும் நடைமுறையில் பயன்படுத்திவருகிறோம்; மெக்காலே எனும் கல்விப்புரட்சியாளன் வரும்வரை நமக்குக் கல்வியே கிடையாது. இராமாயணமும், மகாபாரதமும், வேதங்களும், சாஸ்திரங்களும்தான் இந்தியாவில் பாடங்கள். அதுவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கும். பார்ப்பனர் அல்லாத மற்ற ஜாதியினர் அனைவருக்கும் அதுவும் இல்லை. எழுத்தறிவு பெற்றிடக் கூட நமக்கு உரிமை இல்லை. எனவேதான் நமது முன்னோர்கள் கைநாட்டுகளாக இருந்தார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வரும்வரை நமக்கு; இன்னும் சொல்லப்போனால் பாண்டிய, சேர, சோழ, தெலுங்கு, கன்னட, மராட்டிய மற்றும் வடநாடுகளின் அரசுகளிலும் கல்வியே கிடையாது. இதை அனைத்தையும் நொறுக்கித்தள்ளியவர் 1835இல் தாமஸ் பேபிங்டன் மெக்காலே. பின்னாளில் வகுப்புரிமை, இடஒதுக்கீடு என்றெல்லாம் நாம் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளுக்கும் மிகவும் அடிப்படையாக அமைந்தது அந்தக் கல்வி முறைதான் என்பதை நன்றியுடன் நாம் நினைத்துப்பார்க்கத்தான் வேண்டியுள்ளது.

“வார்தா” எனும் குலக்கல்வித் திட்டத்திற்கு முன்னோடியே மிஸ்டர் காந்திதான் சனாதானியான அவரால் மெக்காலேயின் கல்விக்கொள்கையை ஒப்புக்கொள்ள இயளவில்லை; 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் மிஸ்டர் காந்தியின் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. ‘ஹரிஜன்’ இதழில் நாட்டின் கல்வி குறித்து விரிவான ஒரு கட்டுரையை காந்தி எழுதினார். அதில் கல்விமுறையின் 10 பலவீனங்களைப் பட்டியலிட்டிருந்தார்.

  1. நமது மரபுக்கும் பண்பாட்டுக்கும் முரண்பட்டதாக இந்த மெக்காலே குமாஸ்தா கல்வி உள்ளது.
  2. இந்தக் கல்வி, குழந்தையை நேரடியான சமுதாயச் சூழ்நிலையிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் பிரித்துவிடுகிறது
  3. கற்றவர்களைத் தனி இனமாக, பிரிவாக இன்றைய கல்வி உருவாக்கிவிட்டது
  4. அரசு மற்றும் தனியார்க்கு பணியாளர்களாக மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சி மட்டுமே இன்றைய கல்வி.
  5. மாணவர்களின் மனதில் சமுதாய உணர்வு இன்றி சுயநல தனிமனித உணர்வு புகுந்துவிட்டது.
  6. ஒரு நூற்றாண்டாகத் தொடரும் இந்த அந்நியர் கல்வியில் தொடக்கப் பள்ளி என்பது எந்த முன்னேற்றமுமின்றி வதங்கிவிட்டது
  7. கல்வித் திட்டத்தின் பெரும்பகுதி வாழ்க்கைக்குப் பயன்படாததாக வீணானதாக உள்ளது.
  8. பொதுமக்கள் கல்வி முன்னேற்றம் பற்றி இன்றைய கல்வி எண்ணிப்பார்ப்பதே கிடையாது.
  9. இயந்திர முறையில் ஒரே மாதிரி கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் - அவரவர் தேவை உணராமல் வழங்குகிறார்கள்.
  10. கல்விமுறையும் தேர்வுகளும் கல்வியை மாணவர்களின் உள்ளத்தில் பயத்தை உருவாக்கிப் பெரிய சுமையாகவே மாற்றிவிடுகிறது

இதற்கு மாற்றாக காந்தியக் கல்வி ஆறு முக்கிய அம்சங்களைக் கொண்டது. அதன் முதல் அம்சம், ஏழாண்டு ஆதாரக் கல்வியைக் கட்டணமின்றி அரசே தரத்தோடு வழங்க வேண்டும் என்பது. இரண்டாவது அம்சம், ஆதாரக் கல்வி முழுக்க முழுக்கத் தாய்மொழியில் அதாவது ஒரே மொழியில் “இந்தியில்” மட்டுமே நடைபெற வேண்டும். மூன்றாவது அம்சம், கைத்தொழில் மூலமோ, ஆக்கப்பணி மூலமோ கல்வி கற்றுத்தரப்படும். நான்காவது அம்சம், பள்ளியின் சட்ட திட்டங்களிலிருந்து தாங்கள் கற்க வேண்டிய தொழில் உட்பட மாணவர்களே தீர்மானித்து சுயகட்டுப்பாட்டுடன் ஒரு சமூகமாக பள்ளியை வழிநடத்துவார்கள். தங்களது சூழலோடு பொருந்துகிற கல்வி என்பது ஐந்தாவது அம்சம். ஆறாவது அம்சம், குடிமைப் பயிற்சி. நாட்டின் உயர்ந்த லட்சியங்களாக காந்தி கருதிய மதச்சார்பின்மை, வாய்மை, நேர்மை, பொது வாழ்வியல், சமுதாயப் பங்கேற்பு, அகிம்சை வழியில் உரிமைகளைப் பெறும் வழிகளை அறிதல் என அவரது கல்வி விரிவடைகிறது என்பது போல் தெரிந்தாலும் உற்று படித்தால் அதன் ஆபத்து புரியும் என்பது நம் போன்றோர் கருத்து.

இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் அம்மாநாட்டில் குழு அமைக்கப்பட்டு அதற்கு “வார்தா கல்வித் திட்டம்” என்று பெயர் கொடுக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஏட்டுப் படிப்போடு உடலுழைப்பும் தேவை என்றும் மதம் தொடர்பான கல்வி இடம்பெறாது என்றும் சொல்லப்பட்டது. இந்திய பண்பாட்டை மாணவர்களுக்கு பாடமாக வைப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்ததால், இதை முசுலிம் லீக்கும் தந்தை பெரியாரும் கடுமையாக எதிர்த்தார்கள்.

காந்தியின் பெருமுயற்சியால் வார்தாவிலும் செகாவோனிலும் சர்வோதய மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன என்றாலும், விரைவில் அவை தோல்வியே கண்டன. மதபோதனை இல்லாத கல்வி என்பதால், இஸ்லாமிய மதரஸா கல்வியாளர்களும், சாதி பார்க்காத கல்வி என்பதால் இந்துத்துவவாதிகளும் காந்தியக் கல்வியை எதிர்த்தார்கள். ஆரம்பத்தில், காந்தியின் கொள்கைப் பிடிப்போடு செயல்படுவதுபோல ஈடுபாடு காட்டிய மெக்காலேவாதிகள் சர்வோதயப் பள்ளித் திட்டத்தைப் பகிரங்கமாகவே எதிர்த்தார்கள்.

1948-இல் அமைக்கப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு இந்தியக் கல்வியை - ஆக்ஸ்போர்டு கல்விக்கு நிகராக ஆக்க என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கவே அமைக்கப்பட்டது. காந்தியின் ராட்டையும் கலப்பையும் நம் கல்விக்கூடங்களுக்குள் நுழைந்துவிடாமல் தடுப்பதில், அவரது வழிவந்ததாகக் கூறிக்கொள்ளும் இந்திய ஆட்சியாளர்களே அதிக உக்கிரத்தோடு செயல்பட்டுள்ளார்கள் என்பதே வரலாறு. விதிவிலக்காக கோத்தாரி கல்விக் குழு நமது வகுப்பறைகளுக்குள் தறி வாத்தியார் ஒருவரை அனுப்பிவைத்தது. மற்றபடி, எல்லாக் கல்விக் குழுக்களுமே மெக்காலேவாதிகளால் அமைக்கப்பட்டவையே. மேலும் மத ஒருங்கிணைப்பில் செய்த அதே போலதொரு மாபெரும் பிழையைத்தான் மொழி சார்ந்த ஒருங்கிணைப்பிலும் செய்துள்ளார் காந்தி.

தன்னுடைய கற்பனை சக்திக்கு முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர, நிலவியல் ரீதியாக நிலவும் யாதார்த்தமான கருத்தியலை காந்தி உணர்ந்திருக்கவில்லை. இந்திய சுயாட்சிக்காக நாட்டையே ஒருங்கிணைந்த தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்காக “இந்தி” என்ற மொழியை பொதுமொழியாக அறிவித்தார். அவர் அன்று செய்த இந்த தவறுதான், தமிழகத்தில் இன்றளவும் “இந்தி” மொழி திணிப்பு நடத்தப்பட்டு வருவதற்கும், அதை தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பதற்கும் தொடக்கப்புள்ளி ஆகும். குறிப்பாக டெல்லி இந்திமயம் ஆக்கப்பட்டதற்கும் காரண கர்த்தா மிஸ்டர் காந்தியே.

இவை அனைத்தும் காந்தியின் தவறுகள் மட்டுமல்ல அவரது அரசியல் தோல்விகளும் கூட. ஒவ்வொரு அரசியல்வாதியும் காந்தியின் கொள்கைகளையும், அவரது தவறுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் சுதந்திர இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தினை நோக்கி மக்களை இணைத்து நடைபோட வேண்டும் என்பதே இந்த வரலாற்று ஆய்வுத்தொடரின் முக்கிய நோக்கம் ஆகும். ஒரு மாமனிதரின், நாட்டின் புனிதரின், மகாத்மாவின் இரு பக்கங்களையும் தெரிந்துகொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே?

இதை எதிர்த்து 09.01.1938 மற்றும் 06.02.1938இல் குடிஅரசில் தந்தை பெரியார் இப்படி எழுதுகிறார்;

அதாவது, காந்தியார் விரும்பும் வார்தா கல்வித்திட்டம் அமுலுக்கு வந்து அவனவன் ஜாதித்தொழிலே அவனவனுக்கு கற்பிக்கப்படவேண்டும் என்கின்ற முறை ஆரம்பித்துவிட்டால் பதினென்குடி மக்கள் கதி அதோகதிதான் என்பதை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே இந்த நிலையில் இருக்கும் இந்தியர்களில் முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இந்த பிறவியில் தீண்டாமையோ, இழிவோ ஒழிவது என்பது காந்தி ராஜ்யத்திலோ, காங்கிரஸ் ராஜ்யத்திலோ சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடிய காரியமல்ல என்பதே நமதபிப்பிராயம்.

பழைய காலத்து அரசர்களோ ஆரிய ஆதிக்கத்திற்கே அடிமையாய் இருந்ததால் ஆரியர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாது என்கிற ஆரியக் கொள்கையை அப்படியே காப்பாற்றிக் கொடுத்தவர்கள். அதனால் கல்வி பயிலுவதற்கு ஆரியர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாய்ப்பேயில்லை. கடவுள்களே அரசாண்ட காலம் என்னும் ராமன் கிருஷ்ணன் காலத்திலும், அதன்பிறகு அரசாண்ட சேர, சோழ, பாண்டியர்கள் காலம் வரை பார்ப்பனர் தவிர மற்றவர்களுக்குக் கல்வியில்லை.

என்கிறார் தந்தை பெரியார்.

23.10.1938 குடிஅரசு இதழில் எழுதிய கட்டுரையில் இப்படி கேட்கிறார் தந்தை பெரியார்;

அதாவது, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உங்களுக்கு ஏற்பட்ட நன்மையும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் ஏற்பட்ட நன்மையும் அடியோடு ஒழிந்து போகும்போல் இருக்கிறது. புதிய அரசியல் உங்கள் சமூகத்துக்கு எமனாய்த் தோன்றி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் கல்வி ஒழிந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். வார்தா கல்வித் திட்டப்படி இனி உங்கள் ஜாதித் தொழில்கள் என்பவை புதிப்பிக்கப்படப் போகின்றன. அப்படியானால் உங்கள் தொழில் என்ன? என்கிறார். வேதத்தை உச்சரித்தால் நாக்கையறுக்க வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும், மனதில் இருத்தினால் நெஞ்சை பிளக்க வேண்டும் என்பன போன்ற கொடிய தண்டனைகள் விதிக்கப்பட்டன!

வெள்ளைக்காரர்கள் ஆட்சி வந்த பிறகுதான் படிக்கக் கூடாதென்ற சமூகங்கள் படிக்க முன் வந்தது; இப்படிப் படிக்க முன் வந்ததன் பயனாக தாழ்த்தப் பட்டவர்களாக இதுவரை இருந்தவர்களும் பிற்போக்காகவும், கொடுமைப் பட்டவர்களாகவும், இருந்து வருகிறவர்களும் படிக்க முன் வந்து உத்தியோகத்துக்கு போட்டிபோட ஆரம்பித்துவிட்டார்கள். இதைப்பார்த்த காங்கரஸ்காரர்கள் இதன் தலையில் கைவைக்க யுக்தி செய்து தந்திரமாக வார்தா கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து திணிக்கப் பார்க்கிறார்கள்.”

1939இல் இராஜாஜி இந்தத் திட்டத்தை அமல்படுத்திய போது கடுமையாக எதிர்த்தார் தந்தை பெரியார். இராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து, அப்போதைக்கு இத்திட்டம் கைவிடப்பட்டது; மீண்டும் 1952இல் தமிழ்நாட்டு முதலமைச்சராக இராஜாஜி பதவியேற்றார். பதவியேற்றவுடன் கிராமப்புறங்களில் இருந்து 6000 தொடக்கப்பள்ளிகளை இழுத்துமூடினார். மீதியுள்ள பள்ளிகளில் பாதி நேரம் கல்வியும், மீதி நேரம் அவரவர் தமது ஜாதியின் குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 13ஆம் நாள் ஜூன் 1953இல் திராவிடர்கழகம் நிர்வாகக்குழுவை கூட்டி, குலக்கல்வி எதிர்ப்புக்காக ஜூலை14 முதல் சட்டசபை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது; 20 தேதி முதல் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் மறியல் நடத்துவதென முடிவுசெய்யப்பட்டது.

சட்டசபை மறியல் தொடங்கிய நாளில் இருந்த அரசு போராளிகளைக் கடுமையாக ஒடுக்கியது. தி.க.வின் முக்கியத் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். சென்னையில் மட்டும் தி.க. தோழர்கள் 1700 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி, கல்லக்குடி ஆகிய ஊர்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 தோழர்கள் வீரமரணம் அடைந்தனர். காவல்துறை தாக்குதலால் 50 தோழர்கள் படுகாயமுற்று மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டனர். 10 தோழர்கள் கை, கால்களை இழந்தனர்; சென்னை நீங்கலாக தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் நடந்த மறியலில் 2450 திராவிடர் கழகத் தோழர்கள் சிறைப்படுத்தப்பட்டனர்; 27ஆம் நாள் மே 1953இல் புத்தர் விழாவைக் கொண்டாடி அதன் இறுதியாக கணபதி உருவ பொம்மையை உடைத்து மண்ணோடு மண்ணாக்கி விடுங்கள்; நானும் திருச்சியில் உடைப்பேன் என முன்னமே அறிவித்திருந்தார் தந்தை பெரியார். திட்டமிட்டபடி விநாயகர் பொம்மை உடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கிருஷ்ணன் பொம்மை உடைப்புப் போராட்டத்தையும் அறிவிக்கப்போவதாக அறிவித்தார் பெரியார் பிறகு அது கைவிடப்பட்டது.

1953 டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் மதுரையிலும் ஈரோட்டிலும் நடைபெற்ற குலக்கல்வி எதிர்ப்பைத் தொடர்ந்து 1954 ஜனவரி 24இல் ஈரோட்டில் குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் குலக்கல்வி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. மார்ச் 30இல் உடல்நலம் சரியில்லை என்று கூறி இராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து; அதே ஆண்டு ஏப்ரல் 14இல் காமராசர் பொறுப்பேற்றார். ஏப்ரல் 18ஆம் நாள் குலக்கல்வித்திட்டத்தை நீக்குவதாக அறிவிப்பு வெளியானது. தந்தை பெரியார் என்ற ஒரு தன்னலம் கருதாத மாமனிதர் இல்லாமல் போயிருந்தால்...... இந்நேரம் என்ன ஆகியிருக்கும்? அதுவும் இன்றய காவி பயங்கரவாத ஆர் எஸ் எஸ் ஆட்சியில் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் !

ஆய்வு தொடரும்