“ஆடுவோமே

பள்ளு பாடுவோமே

ஆனந்த சுதந்திரம்

அடைந்து விட்டோமென்று ...!!

இது

எனது

பாட்டனின் குதூகலம் ...!!

அந்த சுதந்திரம் அடைந்து

முப்பதே ஆண்டுகளுக்குள்

எனது தந்தை

முணு முணுத்தார்...!!!!

“இந்தியக் கொல்லையில்

முல்லை தான் இல்லை ....!!

கள்ளியும் காளானுமாவது

களைபரப்பா

திருந்திருக்கக் கூடாதா ..!! என்று

ஆரம்பக் கவலை

அனலாக மாற

பத்தே ஆண்டுகளில்

பதைபதைத்து சாகிறார்...!

“வெள்ளைக்காரனை

வெளியேற்றி விட்டு

கொள்ளையடிக்கும் உரிமையை

உள்ளூர்காரனிடம்

ஒப்படைக்கத்தானா – இந்த சுதந்திரம் ?

என்றபடி ....!!

அவரது சிதைக்கு எரியூட்டிய

அடுத்த நாள் முதல்

எனது சகோதரன்

இப்படிப் புலம்புகிறான் .....!!

“இரவில் வாங்கினோம்

விடியவே இல்லையே....!!!”

தெளிவுக்கு வந்தானே தவிர

அவன்

தெருவுக்கு வரவில்லை ...!!

இருளின் அடர்த்தி

இன்னும் கூட

விடியல் என்பது

வினாக்குறியாக

இந்தியச் சுதந்திரம்

இன்றளவும் மயக்கத்தில் ...!!

சாதிக் கொடுமை

தீரவில்லை ..!!

சமதர்மம்

வந்து சேரவில்லை ...!!

எண்பது கோடி மக்கள்

இன்றளவும்

வறுமைக் கோட்டுக்குக் கீழே தான்

வதைபட்டுக் கிடக்கிறார்கள் ...!!!

ஆனாலும்

அமெரிக்க அதிபர்

அங்கிருந்தபடியே

பாராட்டுகிறார் ...!!

“இந்தியா இனி

உலகிற்கே வழிகாட்டும் ..!!” என்று

எதற்கு ..?

ஊழலுக்கா..?

லஞ்சத்துக்கா ..?

கௌரவக் கொலைகளுக்கா ...??

மதவெறியால் மானுடம்

கொத்துக் கொத்தாகக்

குழிதோண்டிப் புதைக்கப்படுகிறதே

அந்த கொடுமைக்கா ?

எதற்கு இந்தியா இனி

வழிகாட்டப் போகிறது ..?

மேட்டை மேடாக்க

மேலும் குழிபறிக்கும்

ராட்சத யந்திரமாய்

அரசாங்கம்

கேட்டால் உயிர்பறிக்கும்

சாட்டைச் சொடுக்கோடு

அதிகாரம் ...!!

இரண்டுக்கும் இடையே

நீ ... நான் ?

சுரண்டலுக்கும் அறியாமைக்கும்

எதிரான போரை

சுயமரியாதையுள்ள எவனும்

தானே தான் முன்னெடுக்க வேண்டும் ...!!

தனித்தனியாக அல்ல ..!!

அலையலையாக...!!

புற்றின் ஈசலாய்

புறப்பட வேண்டும்

புலியின் வெறியோடும்

புயலின் வேகத்தோடும்....!!!