கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மூலமாக சமூகநீதியை நிலைநாட்டிய சமூகநீதி வேரூன்றிய மண்ணிலிருந்து சமூகநீதியை எவ்விதத்திலேனும் சமூகநீதியை சீர்குலைத்து மீண்டும் வர்ணாசிரம பேதத்தை நிலைநாட்டிட ஆட்சியதிகாரத்தின் துணைகொண்டு செய்ல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள கூட்டம் நீட் நுழைவுத்தேர்வை நுழைத்து சாமான்ய மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் உயர்கல்விக்கனவை தகர்த்துவிட்டு, அடுத்ததாக கல்வித்துறை நியமனங்களைக் குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள்.

சட்டமும் மனுநூலும்

அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த துணைவேந்தர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்திராத, இங்குள்ள சமூகநீதிக் கொள்கைக்கு எதிரான கருத்துடைய பார்ப்பனிய ஆதரவாளரான சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்திய அளவில் நீதித்துறையின் ஒருசாரர் மனுநூலை முன்னிறுத்தி தீர்ப்பு எழுதுவதும் கருத்துக்கள் வெளியிடுவது போன்ற வழக்கங்களை அநாசாயமாக மேற்கொள்ளுகிறபோது மனுநூலையே முற்றுமூச்சாக நீதியென நம்புகிறவர்களை கொண்டுவந்து நியமித்துவிட்டமையின் விளைவுகளை எப்படி எதிர்கொள்வது?

மனுநூலில் உள்ளவற்றை சட்டக்கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் பேச மாட்டார்கள், மனுநூலே அனைத்து சட்டங்களுக்கும் முன்மாதிரி சட்டம் என கற்பிக்கப்படாது என்பதையும் எவ்விதத்தில் நம்பிக் கொண்டிருக்க முடியும்?

மனுநூல் தானே ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் தனித்தனி நீதி என சொல்லியிருக்கிறது. கொலையை மேல்வருணத்தான் செய்தால் புறங்கை ரோமங்களை மழித்தால் போதுமெனவும் கீழ்வருணத்தான் செய்தால் சிரச்சேதம் செய்துவிட வேண்டுமென்ற சமத்துவமான நீதிக்கு எதிரான அடுக்கடுக்கான முரண்பாடுகளைக் கொண்டுள்ளவற்றை நூலாகக் கொண்டுள்ள மனுநூல் சட்டத்துறையில் முழுமையாக ஊடுருவினால் நீதியின் போக்கு என்னவாகும் என்ற எதிர்கால ஆபத்தை உணர்ந்து அதனை அறவே நீக்க அடுத்தகட்ட நடவடிக்கை தேவைதானே!

நுண்கலையும் வேதமும்

தமிழ்நாடு கலை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்திற்கு காலியாக இருந்த பதவிக்கு கேரளத்தைச் சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தை கொண்டவருமான பிரமிளா குருமூர்த்தி துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.கிராமிய இசைகள் புறந்தள்ளப்படுவதாக அவ்வப்போது நுண்கலைத்துறை மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் சூழலில் இப்போதைய துணைவேந்தரால் இங்கேயுள்ள நிலை மேலும் தீவிரமடையும் சூழலே உருவாகும்.

இசைகளும் நுண்கலைகளும் வேத காலத்தில் தோன்றியவை என முலாம் பூசப்படலாம்.

தமிழகத்தில் இயங்குகின்ற நுண்பல்கலைக்கழகம் வேதகால இசை, கன்னட சங்கீத போன்றவற்றின் ஆய்வுகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்ற ஆபத்து இதில் உள்ளது. முன்னமே தமிழகலைகளுக்கும்,கிராமிய பண்பாட்டு இசைகளுக்கும்குறைந்த அளவே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற சூழலில் அந்த பல்கலைக்கழகம் அதனை ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கத்திற்கு எதிராக இயங்கக்கூடிய சித்தாந்தம் கொண்டவர்களை நியமித்து இப்போதைய சூழலுக்கு மேலும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொறியியலும் புராணங்களும்

இரண்டாண்டுகளாக துணைவேந்தரே இல்லாமல் மந்தமான சூழலில் இயங்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் தேர்வுக்காக தமிழுணர்வல்லாத நீதிபதி வி. எஸ். சிர்புர் தலைமையில் தேடுதல் குழுவை அமைத்தபோதே சிக்கல் எழும் என நினைத்த எண்ணத்தை சற்றும் சிதறடிக்காமல் துணைவேந்தர் நியமிக்கப்பட்டு சிக்கலை உருவாக்கிவிட்டார்கள்.

170பேர் விண்ணப்பம் செய்ததில் கடைசியாக எட்டு நபர்களை தேடுதல் குழு நேர்காணல் செய்து அதிலே மூன்று நபர்களை தேர்வுசெய்து ஆளுநருக்கு அனுப்பிவிட, அதிலே கவனமாகத் தமிழ்நாட்டை சேர்ந்திராதவரும், பெங்களூரு இந்திய அறிவியல் துறையின் மெட்டீரியல் எனர்ஜி துறை கவுரவப் பேராசிரியராக பணிபுரிந்த சூரப்பா அவர்களை நியமித்தது. சர்வதேச அறிவியல் மாநாட்டில் புட்பக விமானமே தற்போதைய விமானத்தின் முன்மாதிரி என பேசிய பேராசிரியர்கள் உள்ள நாட்டில் இதுபோன்ற நிலைகளை மேன்மேலும் தீவிரப்படுத்தி பிற்போக்குவாத கருத்துக்களை உயர்கல்வி நிறுவனங்களில் பரவிடச் செய்யும் உள்நோக்கத்துடன் அடுத்தடுத்த நியமனங்களை செய்கிறார்கள்.

நாட்டில் உள்ள 16 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றில்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படாத சூழல் நிலவுகிறது. திட்டமிட்டு சட்டம், கலை, பொறியியல் என முப்பெரும் துறைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைப் புறக்கணித்து அயல் மாநிலத்தவரை நியமித்திருப்பது உயர்கல்வியின் போக்குகளை மாற்றிவிடும் பேராபத்துடன் அனேக வேண்டிய, கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.

தமிழகத்தில் பல்துறைகளிலும் எண்ணற்ற முனைவர்களும்,பேராசிரியர்களும் நிறைந்திருக்க அயல் மாநிலத்திலிருந்து ஒவ்வொரு துறைக்கும் துணைவேந்தர்களைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது? உயர்கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற போக்குகள் தொடருமானால்,அது சமூகநீதி கொள்கையிலான உயர்கல்வியின் நோக்கத்தை சீர்குலைத்துவிடும் என்பதை உணர்ந்து, நியமனங்களில் மாநில முன்னுரிமை நிலைநாட்டி சமூகநீதியை நிலைநாட்டுவதே சாலச்சிறந்த நடவடிக்கையாகும்.