(ஒரு வயோதிக மூதாட்டி வேகாத வெயிலில் சந்தையில் கீரை விற்கின்றாள். அந்தி வரை விற்ற போதும் போணியாக சோகத்தில் அவள் கண்ணீர்மல்கப் புலம்பி விசும்புவதை அவள் சாயலில் இங்கு கவிதையாக….)

மணியூருச் சந்தையில
மண்ணுருகும் வெயிலில
அணியணியாக் கட்டுக்கட்டி
அகத்திக்கீர விற்கவந்தா

அங்கம்மா இவபேரு
அகவையோ அறுவத்தாறு
செங்கீர விற்காட்டி
தீராது இவபாடு

சும்மாடு கூட்டிவச்சு
கீரைச்சுமையத்தான் தூக்கிவந்து
”அம்மாடி”ன்னு இடுப்புப்புடிக்க
அலுங்காம எறக்கிவச்சா

சந்தைக்கட வரிசையில
தக்கதொரு எடம்புடிச்சு
கந்தல் துணிவிரிச்சு
கணக்காகக் கடைபோட்டா

ஒருகட்டுச் செங்கீரையே
ஒழுங்கா விற்குமுன்ன
வரிகேட்டு வந்துநின்னான்
வாட்டமான தண்டல்காரன்

மூட்டைக்கு அம்பதுன்னு
மொறைப்படி அவங்கேட்க
கேட்ட காசெடுத்து
கைநடுங்க கொடுத்துவச்சா

கீரைக்கட்டு எல்லாத்துக்கும்
கேட்டவெல கெடச்சுப்புட்டா
காரச்சேவு வாங்கலாமின்னு
கண்முழிச்சே கனாக்கண்டா

புடிகீர அத்தனையும்
பொழுதுக்குள் வித்துப்புட்டா
மடிப்பிச்சை எடுக்கிறதா
மாரியம்மன வேண்டிக்கிட்டா
கொண்டுவந்த கீரைத்தான்
கசங்காம கலையாம
செண்டுபோல பிரிச்செடுத்து
சூசகமாக் கூறுவச்சா

முத்தாத மெளக்கீர
முதிராத சிறுகீர
சத்தான செங்கீர
சாமிகளா! வாங்கன்னு

ஆவி துடிக்கமட்டும்
அடித்தொண்ட கிழியமட்டும்
கூவி வித்தபோதும்
கீரைவாங்க ஆருமில்ல

சீமாட்டி அவகடையில
செத்தமீனுக்கே மதிப்பிருக்க;
மூதாட்டி எங்கடையில
முருங்ககீரைக்கு வெலையில்லையே ..?
சிந்தாத வெப்பத்தைச்
சூரியனும் சிந்திவர
முந்தானை சீலயெடுத்து
முக்காடு போட்டுக்கிட்டு

தண்டுஞ் சுருங்காதிருக்க
தழையெல்லாம் வாடாதிருக்க
கண்ணீரத் தண்ணீர்போல
கீரைமேல தெளிச்சுவச்சா

கற்கண்டு வியாவாரிக்கும்
கருப்பட்டி வியாவாரிக்கும்
விற்காட்டி அவுகளுக்குப்
பெருநட்டம் ஏதுமில்ல

இந்தச் சந்தையில
எஞ்சின சரக்கெல்லாம்
அடுத்த சந்தைவரைக்கும்
அவிஞ்சு விடப்போறதில்ல
ஆனா ……
எம்பொழப்பு அப்படியா?

சாரப்பாம்பு வாயில்புகுந்த
தவளைகதி எப்படியோ
கீரவிக்கும் கெழுட்டுச்சிறுக்கி
எம்பொழப்பும் அப்படியே

அந்திக்குள் விற்கலேனா
அகத்திக்கீர அழுகிப்போகும்
பொழுதுக்குள் விற்காட்டி
பொன்னாங்கண்ணி பொசுங்கிப்போகும்

பஞ்சப்பாட்டையே ; கிழவி
பாடிப்பாடி அழுகையில
மஞ்சப்புடவ கட்டினவ
மயில்போல கிட்டவந்தா

கன்னியிவ அங்காளி
கர்ணனுக்குப் பங்காளி
கஞ்சப்பையன் வயித்தில்
கருத்தரித்த சீமாட்டி

பட்டுப் பூச்சிபோல
பையவந்த சிறுக்கிமக
தொட்டுதூக்கி கீரவெல என்ன?
கெழவின்னு அவகேட்டா

பத்துக்கு ரெண்டுகட்டுன்னு
பதறாம வெலச்சொல்ல
எட்டுக்கு ரெண்டுகட்டுன்னா
எடுத்துகிறேன்னு இவசொன்னா

அசலுக்கே ஆகாதபடி
அடிவயித்தில் அடிக்கிறயே
முசக்குட்டிய நாய்வாலில்
முடுஞ்சுவைக்கப் பாக்குறியே
புலம்பிய கெழவிபாட்டப்
புரியாத சிறுக்கிமக
வெலகிப் போகையில
வா! தாயி வா !ன்னு

கொடுக்கிற காசையே
கும்பிட்டு வாங்கிக்கிற
”எடுத்துக்க தாயி! எடுத்து”கன்னு
ஏங்கியபடி கெழவி சொன்னா

கருகுக்கும் வெயிலில
கடைசிவரைக்கும் வித்ததுல
சுருக்குப் பைவிரிச்சு
சொரண்டிப் பாத்ததுல

அம்பதுரூவாய்கே இன்னும்
அஞ்சுபணம் சேராதிருக்க
சம்பாதித்த காசயெல்லாம்
சுங்கவரிக்கே சரியாப்பேச்சே

கேழ்வெறகு வாங்கவும்
காசுபணம் கூடல்லையே
வால்மிளகு வாங்கதற்கு
வராகஞ் சேரலையே

வித்த கீரைகட்டெல்லாம்
வரிக்குமட்டுமே போனியாச்சு
விற்காத கீரையெல்லாம்
வெள்ளாட்டுக்குத் தீனியாச்சு

கருவாடாப் போனமீனு
கடல்நீந்த விதியிருக்கா
கருமாரித்தாயே நானினி
கஞ்சிகுடிக்க வழியிருக்கா..?