இன்று உலகெங்குமுள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாக, தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். ஒரு காலத்தில் பொங்கலுக்கு மதச் சாயம், புராணச் சாயம் பூசி அதை இந்து மதப் பண்டிகையாக்கப் பார்த்தனர். தீபாவளி, சரஸ்வதி பூசை போன்ற புராணக் கதைகளைக் கொண்டாடுவதை நிறுத்தி விட்டு தமிழர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடுமாறு தந்தை பெரியார் கேட்டுக் கொண்டார்.

periyar ambedkhar 350“மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில் பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டு கொண்டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று.” - விடுதலை 19.01.1969

ஆரியர்கள் நமது பண்பாட்டை அழித்து அவர்களின் பண்பாட்டைப் புகுத்தி அதன் பெயராலேயே நம்மை அடிமைப்படுத்தினர். அதனால்தான் தந்தை பெரியார் வெறுமனே மொழிப் போராட்டம் மட்டுமே நடத்தாமல் பண்பாடு மற்றும் இனப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறும்போதுதான் ஆரிய அடிமை விலங்கு உடையும் என்றார்.

சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்கவழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்றுவிடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடமாட்டா.” - தந்தை பெரியார் (‘விடுதலை ‘ – 27.01.1950) ஆரிய/ பார்ப்பன இந்துமதப் பண்டிகைகளைக் கொண்டாடாதே, தமிழர்களுக்கு விழா என்றால் அது பொங்கல்தான், அதுதான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட விழா, அதுதான் ‘தீட்டு’ என்கிற ஆரிய கருத்தாக்கத்தை ஏற்காத விழா, அதுதான் தமிழர்களின் புத்தாண்டு விழா என்று தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் சென்று பரப்புரை செய்தவர் பெரியார். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று பொங்கல் என்பது தமிழர் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல்  என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகை யின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும் என பொங்கலை தமிழர் திருநாளாக உறுதி செய்கிறார் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் கேட்ட பொங்கல் பரிசு :

1949 பொங்கல் திருநாளன்று பெரியார் விடுத்த வாழ்த்துச் செய்தியில் “ஆகவே இந்த ஆண்டு - பொங்கல் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும் குறளைக் கொடுக்கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டதேயாகும். அதுபோல்தான் பொங்கல் விழாவும் பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும் பேதம் உண்டு.

அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமிகளுடன் அவைபோல் பொங்கலையும் கருதிக் கொடுத்து வந்தார்கள். அப்படியே பாரதம், கீதை, இரா மாயண புராணம், மனுதர்மம் போல் குறளையும் ஒன்றாக கருதிக் கொடுத்து வந்தார்கள். இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும், குறளும் அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று.

ஆனால் நான் கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்து விட்டுவிட்டு அந்த இடத்தில் அதற்கு பதிலாகப் பொங்கலை யும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகியவைகளான வேத சாஸ்திர புராண இதிகாசங்களை - கீதை, இராமாயணம், பாரதம் ஆகியவைகளை அடியோடு நீக்கிவிட்டு, மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச்செய்து விட்டு அதற்குப் பதிலாக அவை இருந்த இடத்தில் குறளை - குறள் ஒன்றையே கொடுக்கிறேன். ஆதலால் தமிழர்களுக்கு இப்பொங்கலாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக் கொடுக்கிறேன்.

இதை எப்படிக் கொடுக்கிறேன் என்றால், தமிழ் மக்களுக்கு எனது காணிக்கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு, அன்புக்கு, நம்பிக்கைக்கு தட்சிணையாகக் கொடுக்கிறேன்.”  என்றார். அத்தோடு இதற்கு பதில் பரிசாக தமிழ் மக்கள் தீபாவளி போன்ற ஆரிய பண்டிகைகளை விடுத்து பொங்கலை மட்டுமே கொண்டுவோம் என்றும், பாரதம், இராமாயணம், கீதை, புராணம் முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலியவைகளை ஒழித்து, விலக்கி, குறளை ஏற்று படித்து உணர்ந்து அதன்படி நடப்பது என்றும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொங்கலை மட்டுமல்ல திருக்குறளையும் மக்களிடம் கொண்டு சென்றது தந்தை பெரியார்தான் !

பொங்கலே தமிழரின் புத்தாண்டு என தமிழறிஞர்கள் பலரும் கூடி முடிவு செய்தனர். அதிலும் பெரியாரின் பங்கு உண்டு.

1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கூடி எடுத்த மூன்று முக்கிய முடிவுகள்.

1)    திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது.

(2)   அதையே தமிழர் ஆண்டு எனக் கொள்வது

(3)   திருவள்ளுவர் காலம் கி.மு.31

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள் வழக்கில் உள்ளவை என்றும் முடிவு செய்யப் பட்டது.

அதன்பின் திருச்சியில் 1937 டிசம்பர் 26 இல் தமிழர் மாநாடு, அதன் தலைமை நாவலர் சோமசுந்தர பாரதியார்.

அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கா.சு.பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்டோர் கூடினர்.

தமிழ்க் கடல் மறைமலை அடி களார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.

நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியதுதான் தாமதம் - மாநாடே களை கட்டியது!

தமிழ்த் தென்றல் திரு.வி.க., எழுந்து “என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் என்னோடு இருந்து பாடுபட்டவர். நானும் அவரும் இந்தச் சுயமரியாதை இயக்கத்தை - நான் தாயாக இருந்தேன்; அவர் தந்தையாக இருந்து வளர்த்தார். இன்று அதே சுயமரியாதை இயக்கத்தினுடைய தலைவர் என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் அந்தப் பொங்கலை ஏற்றுக் கொண்டமைக்கு இந்தத் தமிழகமே பாராட்டுதலை செய்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

பார்ப்பனர் பிடியில் சங்கராந்தியாக,இந்திர விழாவாக இருந்த பொங்கல் பண்டிகையை ஒட்டு மொத்த தமிழருக்குமான தமிழர் திருநாளாக, தமிழர் புத்தாண்டாக மாற்றியது தந்தை பெரியாரும், சுய மரியாதை இயக்கமுந்தான்.

பொங்குக பொங்கல்!

பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!