குடும்ப இஸ்திரிகளின் கதை எல்லாமே ஒரு வகையில் குத்துவிளக்கு கதைகள்தான் என்றாலும், சில குத்துவிளக்குகள் குத்தவும் செய்கின்றன என்பதால் ஆண்களின் நலனை முன்னிட்டு எழுதப்படும் கட்டுரை ஆகும். புரிந்து பயன் பெறுக.

இது ஒரு ஒற்றை நோக்கம்: தன்னால் இயலாத இனப்பெருக்கத்தை தனதாக்கிக்கொள்வது. எல்லா உயிரினங்களிலும் பெண் தான் யாருக்கு இனப்பெருக்கம் செய்யணும்னு முடிவெடுக்குது. ஆனா நம்முடைய patriarchy ல பெண் நிலத்தைப் போல வாரிசை விளைவிக்கும் ஒரு பொருள். அதை சுதந்தரமாய் விட்டால் தகுதியானது தான் தப்பும். அதனால அவங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாங்டிங்.

feminism 450

இருக்குற நிலத்தை ஆளுக்கு கொஞ்சமா பங்குபோட்டுக்கலாம்ங்குறது முடிவு. ஆனா, நிலத்தை போல பெண் ஜடம் இல்லியே, புத்தி யோசிக்குமே, என்ன செய்யலாம்? அதை - அதாவது தன்னைத் தானே பங்கு வைப்பதை, அவங்களே போட்டி போட்டுக்கிட்டு செஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்? அதுக்கு தான் சாதி பைரவர்களுக்கு பயிற்சி கொடுப்பது போல, மூளையை மழுங்கடிக்கும் பயிற்சி பிறந்ததில் இருந்தே கொடுக்கப்படுகிறது. அந்த பயிற்சிகளில் ஒன்று தான் நல்ல குடும்ப இஸ்திரியாய் திகழ்வது எப்படி என்கிற அறுநூத்தி இருபதாவது ஆய கலை.

நல்ல குடும்ப இஸ்திரியாய் இருப்பதே தன் தலையாய கடமை என்று முதலில் நாம் நம்ப வேண்டும். ஏன் நம்ப வேண்டும்? - அப்படியெல்லாம் கேள்வி கேட்டா வாயிலேயே போடு. குடும்பம் ஒரு புனிதமான நிறுவனம். அதுல இருக்கிற ஆண்கள் முதலாளிகள். பெரிய முதலாளி, நடு முதலாளி, சின்ன முதலாளி, குட்டி முதலாளி, ஆறு மாச கருவாக இருக்கும் உள்ளிருப்பு முதலாளி வரை டிசைன் டிசைனாக இருக்கும். தொழிலாளிகளும் டிசைனுக்கு தக்க பார்டர் வைத்து பளபளப்பாய் இருப்பார்கள். இந்த அமைப்புக்கு ஒரு தூணாக செயல்படும் பெரிய தொழிலாளி தான் நம்ம குடும்ப இஸ்திரி. அவளை சில நேரங்களில் பெரிய முதலாளி கூட கண்ட்ரோல் பண்ண முடியாது. அந்த நேரங்களில் அவளை இருக்குமிடத்தில் பெருமையுடன் இருக்க வைக்க சமூகம் தனது நூறு மூக்கணாங்கயிறுகளை கொண்டு இழுத்து நிறுத்தும்.

புனிதம் மட்டுமல்ல, தீட்டும் இஸ்திரிகளுடையது தான். அது கற்பும் விபச்சாரமும் போல. ஒன்னு இல்லன்னா இன்னொன்னு இல்லே. உனக்கு ரெஸ்டு கொடுக்குறோம் பேர்வழின்னு எல்லாம் யாரும் ஓரமா உக்கார வைக்கல. ஓரமா உக்காந்தாலும் வேல செஞ்சி தான் அகனும். அப்புறம் ஏன் காட்ல இருந்தப்ப தனியா உக்கார வச்சாங்க? மோப்பம் புடிச்சி வர விலங்கு அந்த ஒத்த பொம்பளையத் தூக்கிட்டு போயிரும். குரூப்பு எஸ்கேப். அதை எப்படி ஏத்துக்க செய்யுறது? சடங்கு வச்சா எல்லாரும் போணும்ல? அப்ப தீட்டாக்கிருவம். ஓவர். கற்பும் விபச்சாரமும் எப்படி ஒன்றில்லாமல் மற்றொன்று அமையாதோ, புனிதமும் தீட்டும் ஒன்றில்லாமல் மற்றொன்று அமையாது.

இந்த குடும்பத்துக்கு ஏன் ஒரு இஸ்திரி தேவைப்படுகிறது? இல்லன்னா குடும்பம் சுருங்கிப்போகும். ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும். கருப்பை தான் உற்பத்திக்கு தேவை. அதை தனியாய் கைக்கொள்ள முடிந்தால் எப்போதோ பெண் இனம் காணாமல் போயிருக்கும். அதை வைத்து மெயின்டெயின் பண்ண அந்த உடல் இருந்துதான் ஆக வேண்டும்.. அதை எப்படி பயன்படுத்தலாம்? வெட்டியா தானே இருக்கிறது? நிறுவனத்துக்கும் முதலாளிகளுக்கும் வேலை செய்யலாமே? உடல் இருக்கும்வரை செய்ய வேண்டும். தினமும் செய்ய வேண்டிய உணவை சமைக்கும் வேலை ஓசியில் வந்தமர்ந்து இப்படித்தான்.இது ஒரு வெகுமதியுடன் கூடிய ஒரு அடிமை முறை.

வீட்டிலும் வெளியிலும் ஓசியில் செய்ய வேண்டிய வேலைகளை குடும்ப இஸ்திரிகள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாய் செய்வதை பார்த்திருப்போம். உதாரணத்துக்கு ஒரு சிறிய குடும்ப விழாவில் காய்கறி வெட்டுவது முதல் சமைப்பது வரை சொந்தக்கார குடும்பங்களின் இஸ்திரிகள் எல்லாரும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வார்கள். அங்கே ஒரு இஸ்திரி ஓரமாய் உக்காந்து புக்கு படிச்சிட்டு இருந்தாலும் அதை அடித்து இழுத்து வர ஒரு அல்லக்கை இஸ்திரி ரெடியாய் இருக்கும். அது ஒரு இன்பமான பொழுதுபோக்கு. நாங்கல்லாம் வெங்காயம் உரிக்கிறோம்.. உனக்கு என்ன படிப்பு இந்த நேரத்துல? இப்படியாக உள்ளேயே ஒரு தலைமை அடிமையும் அதுக்கு ஒரு சைடு அடிமையும் உருவாகிறார்கள். முதலாளிக்கு நல்லது இல்லையா? அதுக்கு அப்பப்போ சிறு பரிசு போன்ற பிஸ்கட்டுகளும் கிடைக்கும்.

இதுல முக்கியமான இடம் என்னன்னா, அந்த இஸ்திரி, தன முதலாளியை தானே தேர்ந்தெடுக்க முடியாது. அந்த நிறுவனம் தன் எம்பிளாயியை ஒரு பதவி உயர்வுடன் இன்னொரு நிறுவனத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணும். பதவிக்கு அதிகாரங்களும் அதிகம், பொறுப்புகளும் அதிகம். அடுத்த முதலாளியை அல்லது தொழிலாளியை உருவாக்கும் மீடியேட்டர், மற்றும் தலைமை அடிமை. ஆனால், இந்த நிறுவனத்தை காக்க பாடுபட வேண்டும். முதலாளியை உருவாக்குதல் நல்ல காரியம், தொழிலாளியும் பாதகமில்லை. நிறுவனம் வளர தொழிலாளி வேண்டுமல்லவா?

நிறுவனம் செயல்பட சிறிய அமைப்பாய் இருத்தல் நலம். ஆனால் ஒரு தனித்த சுள்ளியை உடைப்பது எளிதல்லவா? மொத்தமாய் கட்டியது தான் நம்ம சமூகம். கட்டியது எது? மதம் என்னும் கண்ணுக்கு தெரியாத கயிறு. அதில் முதலாளி, தொழிலாளி, அல்லக்கை, அடிமை எல்லாம் அடக்கம். ஆனால் அங்கும் கண்ணுக்கு தெரியாத சிந்தனையை உணர்வால் பின்னி அழகாய்க் கட்டி வைப்பது இஸ்திரிகளின் வேலை தான். உதாரணத்துக்கு, சடங்குகள் எல்லாமே இஸ்திரிகளை மையமாக வைத்து கூட்டாய் சேர்ந்து கும்மி அடிப்பதாய் இருக்கும். அதிலும் அவள் வளமான குட்டி போட்ட பாலூட்டியாய் இருத்தல் நலம். ஆணை மையமாய் வைத்து செயல்படுவது கொள்ளி வைத்தல், கருமாதி தவிர வேறு இருப்பதாய் தெரியவில்லை. அது கூட இந்த உடலுக்கு நான் தான் ஓனர் என்பதைப் பறைசாற்றுவதாய் இருக்கிறது. இருந்தாலும் செத்தாலும் முதலாளிகள் மாறுவதில்லை. மத சடங்குகள், கட்டுப்பாடுகள் முக்காலே மூணுவீசம் பெண்ணின் இனப்பெருக்க உரிமையை மையப்படுத்தியே இருக்கின்றன. ஆணுக்கு கற்பு தேவை இல்லை. முதலாளிகள் விசுவாசத்துடன் இருக்க தேவை இல்லை. கடவுள் யாருக்கும் பக்தியாய் இருக்க தேவை இல்லை.

இஸ்திரிகள் மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். சாதா பெண் செஞ்சா அப்ரூவல் கிடைக்காது. அப்ரூவல் வாங்க ஒரே வழி இஸ்திரியாய் மாறுவதே.

சரி, இஸ்திரிப்பெட்டி ரொம்ப சூடாகிட்டா என்ன செய்யுறது.? இணை துணை ஈகுவாலிட்டின்னு ஏதாவது ஒன்னு இருக்குற மாதிரியே நடிக்கணும். இஸ்திரியோட வோல்டேஜ் கண்ட்ரோல்ல தான் இருக்கு. அதனால ஏற்கனவே இருக்குற கில்ட்டி பீலிங்கை உசுப்பேத்தி, நீ சொன்ன ஒரு ஐட்டமுமே இல்லேயேடா அப்படின்னு கேக்குறத மைண்டோடவே நிறுத்திறனும்.. வெளிய வந்தாதான் பிரச்சினை. அவள் யோசிப்பதோ தனக்கு தானே பேசிக்கொள்வதோ அவுட் ஆப் சிலபஸ்.

முதலாளிகள் தரப்பில், இதுபற்றி விவாதங்கள் கிளம்பும்போது - அமைப்பு ஒரு காலத்தில் அப்படி இருந்தது, ஆனால் நானும் என்னுடைய நிறுவனமும் அப்படி இல்லை என்பதை நிறுவவே முயல்வார்கள். ஏனென்றால் அமைப்புரீதியிலான சலுகைகளை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. பாலின, சாதி மற்றும் இன அடிப்படையிலான அமைப்புரீதியான சலுகைகள் பிறப்பிலேயே கிடைத்துவிடுவதால் ஒடுக்கப்பட்டவர்கள் சமமாய் அதை உரிமை கோரும்போது அதை கிடைக்காமல் தட்டிவிடச்செய்வதை லாவகமாய் செய்ய முடிகிறது. அதை நிரூபிக்குமளவு சாட்சியங்கள் இருப்பதும் இல்லை. இஸ்திரிகளாக்கப்பட்டவர்கள் தங்களை தாங்களே ஒடுக்கிக்கொள்வதைச் சுய விருப்பத்துடன் முடிவு செய்ய வைப்பதே இதன் நடைமுறையாய் இருக்கிறது.அங்கே தான் “வளர்ப்பு” வேலை செய்கிறது. இஸ்திரிகள் முதலாளியை முதலாளியாகவும் தொழிலாளியை தொழிலாளியாகவும் வளர்க்கக் கடமைப்பட்டவர்கள்.

கல்வி வாய்ப்பினால் இப்போது இஸ்திரிப்பெட்டிகளுக்கு கிடைக்கும் உள்ளீடு அதிகமாகிவிட்டது. பொருளாதாரச் சார்புநிலை குறைவதால் சொந்த முடிவுகளுக்கும் செல்லவே விரும்புகிறார்கள். அதனால் இஸ்திரிகளின் சூடு தாங்காமல் தான் பெரிய நிறுவனம் தன்னைத் தானே தகவமைத்துக்கொண்டு சிறிய நிறுவனமாக செயல்படுகிறது. ஓவராய் சூட்டை குறைத்தால் இஸ்திரி பேட்டி நிறுவனத்துக்குப் பயன்படாது. தானே முடிவெடுக்கும் இஸ்திரிப்பெட்டி இருந்தென்ன லாபம்? இருக்கும் இஸ்திரிப்பெட்டியும் சூடு கூடிக்கொண்டே செல்வதைத் தான் காண முடிகிறது. தன்னுடைய மரபு தப்பிப்பிழைக்க திரும்பவும் இஸ்திரியை ஈர்த்துதான் ஆகவேண்டும் என்கிற நிலை திரும்பிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அவர்கள் தருவதாய் நம்பவைத்துக்கொண்டிருந்ததை இருப்பதாய் கருதிக்கொண்டு இஸ்திரிப்பெட்டிகள் செயல்பட தொடங்கிவிட்டன. இஸ்திரிகள் நிறுவனத்தில் நடத்தும் மாற்றங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.