“அய்யய்யோ! அடிக்கிறானே! படுபாவி உதைக்கிறானே! அருமையாக வளர்ந்தேனே! பல்லுக் கருவாயனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பரிதவிக்கிறேனே! குடித்த போதும் அடிக்கிறான்! குடிக்காத போதும் அடிக்கிறானே! ஒரு தவறும் செய்யவில்லையே! வேளா வேளை வடித்துக் கொட்டுகிறேனே! கால் பிடித்துத் தூங்க வைக்கிறேனே! பிணத்தைக் குளிப்பாட்டுவது போலக் குளிப்பாட்டியும் விடுகிறேனே! ஒரு நல் துணி கூட எனக்குக் கிடையாதே! நல்ல சாப்பாடுகூட கிடையாதே! குதிரைப் பந்தயத்துக்கும் மூணு சீட்டுக்கும் என் அப்பா போட்ட நகைகளை யெல்லாம் கழற்றிக் கொடுத்து விட்டேனே! மஞ்சள் கயிறு தவிர கழுத்தில் ஒன்று கூட இல்லையே! இவ்வளவும் போதாமல் அடியும் வாங்க வேண்டுமென்றால், அய்யப்பா! ஆய்யோ அப்பா! என்னால் முடியவில்லையே! என் அம்மா இதற்குத்தானா என்னைப் பெற்றெடுத்தாள்? கிணற்றிலே விழுந்து சாகலாமென்றால் அதிலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லையே!”- இப்படியெல்லாம் கதறிக் கதறி அழுகிறாள், ஒருத்தி!

kuthoosi gurusamy 268ஒரு நாளல்ல! பல நாளல்ல அய்ந்து வருஷமாக அழுகிறாள்! சதா அடி! சதா அழுகை! ஒரு நாள் கூட கணவனும் மனைவியும் ஒன்றுபட்டு இருந்தது கிடையாது.

இவளிடத்தில் சென்று, “அம்மணீ! ஏன் அழுகின்றீர்கள்? ஒத்த ஒருவனும் ஒத்த ஒருத்தியும் கூடி இன்பம் நுகர்தலே இல்லறமாகும், இதுவே திருமணத்தின் குறிக்கோள், பூசல் வேண்டா!” - என்று யாரேனும் இல்லற தர்மோபதேசம் செய்தால் பயன்படுமா?

இந்த நேரத்தில் எதிர் வீட்டுக்காரி வருகிறாள், அடிபட்டு மனம் முறிபட்டுக் கிடக்கும் அம்மணியை நோக்குகிறாள்! மை தீட்டிய கண்களிலிருந்து அவளையறியாமலே இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் விழுகின்றன! நாடக மேடைகளில் காண்கின்ற வாஸ்லின் (ஏமாற்று) கண்ணீரல்ல, உண்மையான கண்ணீர்!

“அக்காள்! நான் உன்னைவிட வயதில் சிறியவள் தான், ஆனாலும் என் வார்த்தையைத் தட்டாதே! 5 வருஷமாக நானும் எதிர் வீட்டிலிருந்தபடியே இந்தக் கோலாகலத்தைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்! உன்னைப் போன்ற பொறுமைசாலியை நான் கண்டதேயில்லை, கற்பனை புராணக் கதைகளிலுங் கூடப் படித்ததில்லை, இவ்வளவு கொடூரமானவனைக் கட்டிக்கொண்டு நித்திய வேதனைப்படுவதிலிருந்து மீள்வதற்கு உனக்கு வழியில்லையா? கோட்டையைப் போன்ற சிறைகளைக் கூடத்தாண்டிக் குதித்துக் கைதிகள் தப்பி விடுகிறார்களாமே? நீயும் மனிதப் பிறவிதானே? யோசித்துப் பார்? தினசரி ஒப்பாரி சொல்லி ஓலமிட்டுக் கொண்டிருந்தால் போதுமா? சட்டபூர்வமாக அவனைவிட்டு விலகிவிட முடியாதா? பெண்களுக்கும் கூட இப்போது “விவாகரத்து” உரிமை இருக்கிறதாமே? ஒருக்கால் அதற்கு வசதியில்லை யென்றால், அவனிடம் துணிச்சலாகக் கூறிவிட்டு எங்கேயாவது ஓடிப்போய்விடு! உலகம் பெரிது, நீயும் சோம்பேறியல்ல, எங்காவது கூலிவேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம்!”-

இந்த மாதிரிச் சொல்கிறாள், எதிர் வீட்டுப் பெண், “நான் பதவியில் இருந்த காலத்திலிருந்தே டில்லியுடன் சதா போராடிக் கொண்டிருந்தேன், முடியவில்லை, நிலைமை வர வர மோசமாகி விட்டது, மத்திய சர்க்காரின் போக்கினால்தான் சென்னை ராஜ்யம் இந்தக் கேடான நிலைக்கு வந்திருக்கிறது, மத்திய சர்க்கார் சென்னை விஷயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை........”

இந்த விதமான நீண்ட ஒப்பாரி, 15 நிமிஷ ஒப்பாரி வைத்திருக்கிறார், ஓமந்தூர் ரெட்டியார்! நிதிநிலையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கோபால் ரெட்டி இதைப் போலவே பல தடவை ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார்! “அய்யய்யோ! பணத்தையெல்லாம் மந்திய சர்க்கார் வாங்கிக் கொள்கிறார்களே! நாங்கள் புதுச்சேரிக்குத்தான், ஓட வேண்டும்!” -என்று மாரடித்துக் கூட அழுதிருக்கிறார்!

டில்லி சர்க்கார் கணவனுக்குப் பல மனைவிகள்! அவர்களில் சென்னை மனைவிதான் ஓயாமல் அடிபடுகிறாள்! இன்று நேற்றல்ல! தாலிகட்டிய நாள் முதல்! அதாவது 5 ஆண்டுகளாகவே! கணவன் விறகுக் கட்டையால் மண்டையிலடிக்கிறான்! நெஞ்சில் எட்டி மிதிக்கிறான்! பல் உதிரும்படி அறைகிறான்! கூந்தலைப் பிடித்து இழுத்து சுவர் மீது மோதுகிறான்! ஆனால் இந்த மானங்கெட்ட மனைவி சொந்தச் செலவில் விமானமேறி அடிக்கடி கணவன் வீடு போகிறாள், போகும்போதேல்லாம் பலர் அறிய முகத்தில் எச்சிலைக் காரித் துப்புகிறான்!

இவ்வளவும் செய்தும் குடிகாரக் கணவனைச் சென்ட்ரல் ஸ்டேஷனில் மாலை போட்டு, ஆலார்த்தி எடுத்து வரவேற்கிறாள், மூளை கெட்ட மனைவி! மாமனார் வீட்டுக்கு வந்தாலும் இரண்டு மோது மோதிவிட்டுத்தான் போகிறான்! பிறகு ஒப்பாரி வைத்து அழுகின்றாள், தானும் மனிதப் பிறவி யென்பதை மறந்த மூடமனைவி!

கருப்புச் சேலையும் கருப்பு ரவிக்கையும் அணிந்துள்ள எதிர் வீட்டுக் காரி கேட்கிறாள், “அக்கா! அவனை ஒழித்துத் தலை முழுகக்கூடாதா?” -என்று!

அப்படிச் சொல்லாதே, தங்கச்சி! மகாபாபம்! கட்டிய புருஷனைக் கைவிடக் கூடாது! எங்களுக்குள்ளே நீ பிளவை உண்டாக்காதே! சாஸ்திரம் பார்த்து, கோத்திரம் பார்த்து, சோதிடம் பார்த்து, நல்ல வேளை பார்த்து, நல்ல சகுனம் பார்த்து, வேதப் பிராமணாளை வைத்து, ஆறு மணி நேரம் மந்திரஞ்சொல்லி, நடத்திக் கொண்ட தெய்வத் திருமணமல்லவா?”- என்று பதில் சொல்கிறாள், அடிபட்டுச் சாகப் போகின்ற மனைவி!

- குத்தூசி குருசாமி (21-03-1952)

நன்றி: வாலாசா வல்லவன்