kuthoosi gurusamy 300‘தகுதி’யும் ‘திறமை’யும் பார்த்துத்தான் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்கிறார்கள், அக்கிரகார வாசிகள்! அவர்கள் விருப்பப்படியே சட்டத்தை நுழைத்தார்கள், ஆறு பேரில் நான்கு பேர் ஆரியர்களாயிருந்து சட்டம் வகுத்தோர், முன் ஏற்பாட்டின்படியே வழக்குத் தொடர்ந்து தீர்ப்பையும் பெற்றுவிட்டனர், பூணூல் மார்பினர்!

ஆகவே ‘தகுதியும்’ திறமையும், இனிமேல் அவரவர் ‘மார்க்’ (mark) படித்தான் அளக்கப்படும் என்பது நிச்சயம்!

ஒரு மனிதன் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதைக்காணும் மற்றொருவன் தண்ணீரில் குதித்து அவளைக் காப்பாற்ற முயல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். தண்ணீரில் தத்தளிக்கின்றவன் உடனே கேட்கவேண்டும்!

“நீச்சுப் போட்டியில் நீ எத்தனை மார்க் வாங்கியிருக்கிறாய்? 100க்கு 70 வாங்கியிருந்தால் என்னைக் காப்பாற்று! 100-க்கு 20-30 வாங்கி யிருந்தால் என்னைத் தொடாதே!” என்று கூறிவிடவேண்டும்!

மந்திரியார் ஒரு புதிய பாலத்தைப் பார்வையிடப் போவார், பாலத்தைப் பார்த்தவுடனே எஞ்சினியரைப் பார்த்துக் கேட்பார், “என்ன சார்! ஒரு வண்டி கூடத் தாராளமாகப் போக முடியாதபடி இந்தப் பாலத்தைக் குறுகலாகக் கட்டியிருக்கிறீர்களே! இதற்குத்தானா ஏழு லட்சம் செலவழித்திருக்கிறீர்கள்?”

“கனம் மந்திரியவர்களே! தாங்கள் எஞ்சினியரிங் கல்லூரியில் படித்ததுண்டா? பீ. ஈ. (B.E.) பாஸ் பண்ணியிருக்கிறீர்களா? அப்படியானால் எத்தனை மார்க் வாங்கினீர்கள்?” என்று எஞ்சினியர் மந்திரியைக் கேட்பார். உடனே மந்திரி நேராக எஞ்சினியரிங் காலேஜை நோக்கிப் புறப்பட்டு விடுவார்!

“இதென்னடா தம்பீ, பீ. ஏ. பாஸ் பண்ணிவிட்டு பத்து வரிக் கடிதத்தில் 10-12 தப்புப் போட்டு எழுதியிருக்கிறாயே! இதென்ன தமிழ்தானா?

நீயே படித்துப்பார்! கடைசி வாக்கியம் முடிவு பெறாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறதே! அதைப் பார்த்தால் பாவமாயிருக்கிறதே!” என்பார் தந்தை தனையனை நோக்கி.

“அப்பா! அப்படிச் சொல்லாதீர்கள்! தமிழில் நான் 79 பர்செண்ட் வாங்கியிருக்கிறேன்! கிருஷ்ணமாச்சாரி நோட்ஸ் முழுதும் என் மண்டைக்குள் இப்போதுகூட இருக்கிறது! அது சரி உங்களுக்குத் தமிழில் எத்தனை மார்க்?” என்று கேட்பான்!

“மை டார்லிங், சரோஜா! இதென்ன இப்படி சமைத்திருக்கிறாய்? சோறு பயிண்டர் சட்டியிலுள்ள பசை மாதிரி! ரசம் வாய் கொப்பளிக்கும் உப்புத் தண்ணீர் மாதிரி! அவியலைப் பார்த்தால் ஆச்சாரியார் மூக்குக் கண்ணாடி நிறத்திலிருக்கிறது! அப்பளம் ப்ளாட்டிங் பேப்பர் மாதிரி! ஒன்றைக் கூட வாயில் வைக்க முடியவில்லையே!” -என்று கேட்பான், கணவன்.

“நாதா! என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? டொமஸ்டிக் சயன்ஸில் (வீட்டுசாஸ்திரம்) நான் பிரசிடென்சி ஃபஸ்ட்(கசைளவ) ஆச்சே! சமையல் பிராக்டிகலில் 100க்கு 100 டார்க் வாங்கியிருக்கிறேனே!” என்று அருமை மனைவி பதில் கூறுவாள்! சென்னையில் ஓடுகின்ற சர்க்கார் பஸ்ஸிலும், கம்பெனிக்குச் சொந்தமான் ட்ராம் வண்டியிலும் ஏறுவதுண்டே, அது ஒரு பெரிய சர்க்கஸ்! இப்போதே சர்க்கஸ் என்றால் இனிமேல் குற்திப் பந்தயமாய்த்தானிருக்கும். பெண்களும் குழந்தைகளும் ஏறுவார்கள்; மற்றவர்கள் அவர்களுக்கு ஆளுக்கொரு குத்துவிட்டு, தங்கள் “தகுதி” யையும் “திறமை”யையும் காட்டி வெற்றி பெறுவார்கள்!

இது மட்டுமா? தர்ப்பையினால் திரிக்கப்பட்ட கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு அது அறுகின்ற வரையில் “பிராமணர்த்த போஜனம்” செய்து பழக்கப்பட்டவர்கள், இனிமேல் தங்கள் ‘தகுதி’யையும் ‘திறமை’ யையும் காட்டி ஆளுக்கு ஒரு நாளைக்கு 24 அவுன்ஸ் அரிசி கேட்பார்கள்! கொடுக்கத்தானே வேண்டும்?

இனி, எதற்கும் ‘மார்க்’ தான் முக்கியம்! மணம் செய்து கொள்ள வேண்டுமென்றாலும் ‘மார்க்’ தான் முக்கியம்! மந்திரியாயிருந்தாலும் ‘மார்க்’ தான் முக்கியம்!

ஆகவே நோட்ஸ் படியுங்கள்! உருப்போடுங்கள்! வாந்தியெடுங்கள்! ‘மார்க்’ வாங்குங்கள்! ஏராளமாக வாங்குங்கள்!

வாங்கினால்தான் நீங்கள் சிவாஜி ஆகலாம்! நெப்போலியன் ஆகலாம்! பர்னாட்ஷா ஆகலாம்! ஈன்ஸ்டின் ஆகலாம்! ஸ்டாலின் ஆகலாம்! மார்க் குறைந்தால் கிளார்க் வேலைதான்! மார்க் மிகுந்தால் மந்திரி வேலையுண்டு!

எனவே மார்க் வாழ்க! அதிலிருந்து இன்று தோன்றியிருக்கும் புதிய ‘மார்கிசம்’ வாழ்க!

- குத்தூசி குருசாமி (3-8-50)

நன்றி: வாலாசா வல்லவன்