பிரிட்டிஷ்கார தேஜஸ்! சீனாக்கார தேஜஸ்! துருக்கிக்கார தேஜஸ்! முதலியார் தேஜஸ்! நாடார் தேஜஸ்! முஸ்லிம் தேஜஸ்! கிறிஸ்துவ தேஜஸ்! நாஸ்திக தேஜஸ்!-

kuthoosi gurusamy 268இம்மாதிரி தேஜஸ் எதைப் பற்றியாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

 “இவர்தான் கோட்ஸே! மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற மகான்! அவர் முகத்திர் பிராமண தேஜஸ் ஜ்வலிச்சீண்டிருக்கே பார்த்தேளா?”

“இவர் தான் சிரஞ்சீவி பாங்கியில் 7 லட்சத்தைக் கையாடிய அனுமந்தாச்சாரியார்! இவர் முகத்திலே பிராமண தேஜஸ் எப்படியிருக்கு,

‘பிரம்ம தேஜஸ் என்றால் என்ன? மெடிகல் காலேஜில் படித்தவர்களையும், படிக்கிறவர்களையும் கேட்கிறேன். புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துச் சொல்ல முடியுமா? வேறு யார் சொன்னாலும் சரி! யாராலும் முடியாதென்றால் நானே சொல்லி விடுகிறேன். என் சொந்தச் சரக்கல்ல. எந்த ஊரிலிருந்த நம் மீது அபாண்டமான புகார் பெட்டிஷன்கள் புறப்படுகின்றனவோ, அதே ஊரில் வெளியாகியிருக்கும் துண்டு விளம்பரத்தை அப்படியே தருகிறேன்:-

ஸ்ரீசந்த்ர மௌளீச்வராய நம: வேததர்ம சாஸ்த்ர பரிபாலன ஸபை, (சுநபன.)

கும்பகோணம்.

உபநயனம்

உத்தராயணம் பிறந்து விட்டது. மரக மாதம் முதல் ஐந்து மாதங்கள் வஸந்த மாதங்கள். உபநயனம் ஆகாத குழந்தைகளுக்கு எல்லாம் உபநயனம் செய்து விடுங்கள். ஒவ்வொரு ஊரிலும் நாலு பேர் ஆஸ்திகர்கள் சேர்ந்து அவ்வூரில் ஏழு வயதுக்கு மேற்பட்டவர்கள் உபநயனம் ஆகாமல் இன்னும் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கு எடுக்க வேண்டும். கணக்கு எடுத்து அவர்கள் எல்லோருக்கும் இந்த வருஷத்தில் பாக்கி இல்லாமல் உபநயனம் ஆகும்படி செய்து விட வேண்டும். அதற்கு என்ன என்ன வழியோ அவைகளை ஆங்காங்கு அந்தந்த ஆஸ்திகர்களோடு ஆலோசித்து எப்படியாவது கார்யத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அடுத்த வருஷம் ஏழு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகன் உபநயனம் ஆகாமல் இருக்கக் கூடாது. ஹ்ருதயத்தில் காமம் பிரவேசிப்பதற்கு முன்னாலேயே காயத்ரி தேவி பிரவேசித்தால் தான் அந்த சரீரத்தில் ப்ரும்ம தேஜஸ் விளங்கும். ப்ரும்மதேஜஸ் இருந்தால்தான் உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் உண்மையான உபகாரம் செய்ய முடியும்

 ஆகையால் அடுத்த வருஷத்தில் ஏழு வயதுக்கு மேற்பட்ட எந்தப் பையனும் உபநயனம் ஆகாமல் இராமல் இவ்வருஷமே ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வது முதற் கடமை ஆகும்.

ஓம் தத்ஸத்.

இப்படிக்கு,

வேத தர்ம சாஸ்த்ர பரிபாலன சபையோர்.

லு-

-இதனால் சகலமான பேர்களுக்கும் நான் அறிவித்துக் கொள்வது யாது என்று கேட்பீர்களேயானால்,

“ஹ்ருதயத்தில் காமம் பிரவேசிப்பதற்கு முன்னாலேயே காயத்ரி தேவி பிரவேசித்தால் தான் அந்தச் சரீரத்தில் பிர்ம்ம தேஜஸ் விளங்கும்,”

என்று பூதேவர்களின் தலைநகரமாகிய கும்பகோணத்தின் கண்ணே எழுந்தருளியிருக்கும் பூசுரர் சபையோர் அறிவித்துவிட்டபடியால்,-

பன்றி, கழுதை, குதிரை, நாய், பூனை, பெருச்சாளி, ஆடு, மாடு, குரங்கு, தேவாங்கு- முதலிய எந்த ஜீவனாயிருந்தாலும் சரி, ஹ்ருதயத்தில் காமம் பிரவேசிப்பதற்கு முந்தி காயத்ரியை நுழைத்துக் கொண்டு, அதாவது பூணூலை அணிந்து கொண்டு, பிர்ம்மதேஜஸ் பெற்று விளங்குவோமாக! ஓம்! தத் ஸத்!

இந்த அறிக்கையில் பிராமணக் குழந்தைகள் தான் உபநயனம் செய்து கொள்ள வேண்டும் என்று குறிக்கப் படவில்லையாகையால் காமம் பிரவேசிக்கக் கூடிய இதர ஜீவராசிகளில் சிலவற்றையும் மேலே சேர்த்திருக்கிறேன்.

பிராமணர்களைப் பார்த்து குறுக்கு நூல் போடும் “இமிடேஷன்கள்” கோபித்துக் கொள்ளக்கூடாது!

முக்கியமாக பிராமணப் பெண்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது.

“ஹ்ருதயத்தில் காமம் பிரவேசிப்பதற்கு முந்தி” எங்களுக்குப் பூணூல் போடுவதில்லையே! அப்படியானால் எங்களுக்கு மட்டும் பிராமண தேஜஸ் கிடையாது? எங்களை இவ்வள கேவலமாகக் கருதியிருக்கும் பிராமணர்களை இனிமேல் நாங்கள் திருமணம் செய்து கொள்ளவே மாட்டோம். எங்களைப் போல் பூணூலே போடாமல், “பிர்ம்ம தேஜஸ்” இல்லாமல் இருக்கிறவர்களைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். திருமணம் செய்து கொண்டவர்கள் கூட எங்களுக்கும் பூணூல் போடாவிட்டால் விவாக ரத்து செய்துவிடப் போகிறோம்.” என்று பிராமணப் பெண்கள் கிளர்ச்சி செய்யக் கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்!

நான் என்ன செய்யட்டும், பிராமண சகோதரிகளே! உங்கள் ஆண்கள் நம்மையெல்லாம் எந்த மாதிரிக் கேவலமாய் நடத்துகிறார்கள்? நீங்களே பாருங்கள்! இந்தச் சர்க்கார்தான் அவர்களைக் கண்டால் நடுங்குகிறார்களென்றால், நீங்களாவது அவர்களுக்குப் புத்தி சொல்லக் கூடாதா? உலக மக்களில் ஒன்றே கால் பேர் பூணூலை மாட்டிக் கொண்டு இப்படி ஏன் கலாட்டா செய்ய வேண்டும்? இரகசியமாக உங்களுக்கு ஒரு யோசனை!

“டேய், விச்சு! எனக்கு மட்டும் பூணூல் இல்லாதபோது னோக்கு மட்டும் என்னடா, பூணூல்? என்னைவிட ஒசத்தி ஜாதியோ? ‘பிர்ம்ம தேஜஸ்’ ரொம்ப சொட்றதடா! பிர்ம்ம ஹத்தி!” என்று சொல்லி, நீங்கள் உங்கள் பையன் பூணூலை அறுத்துப் போட்டு விடுங்கள்! ஆத்துக்காரர் மூச்சுப் பேச்சு விடமாட்டார்! அக்கவுண்டண்ட் ஜெனரலா யிருந்தாலும் அம்மாமிக்கு அடங்கியவர்தானே?

- குத்தூசி குருசாமி (26-08-1949)

நன்றி: வாலாசா வல்லவன்