அப்படியா? எங்கே? எப்போது மாநாடு? யார் தலைவர்? என்னைப் போடலாமே! நான் சுத்த சூனாமானா ஆச்சே! அய்யாவை வேணுமானாலும் கேட்டுப் பாருங்களேன்! நான் குடும்பத்தோடு சு.ம. ஆச்சே! நான் ஆதி சு.ம. ஆச்சே! என்னைப் போட்டாலென்ன? எனக்குத் தலைகூட நரைக்க ஆரம்பிச்சுட்டுதே! நான் சு.ம. கொள்கைக்காக எத்தனையோ புஸ்தகம் எழுதியிருக்கிறேனே! என்னை ஏன் போடக்கூடாது? நான் சு.ம. கொள்கைக்காக உடல், ஆவி இரண்டையும் தியாகஞ் செய்வதென்று ஒன்றாகக் கூடையில் போட்டு பரணில் வைத்திருக்கிறேனே! பொருளைக்கூட பத்து மடங்காகப் பெருக்கி யிருக்கிறேனே, கேட்கிறபோது தியாகஞ் செய்வதற்காக! என்னைத் தலைவராகப் போட்டாலென்ன? நான் எத்தனையோ கட்சிகளுக்குக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாலும் சு.ம. கொள்கையில் ஒரு ஊசி மிளகாய் அவ்வளவாவது குறைந்திருப்பேனா? எனக்கு ஏன் தலைமைப் பதவி கொடுக்கக் கூடாது?-

kuthoosi gurusamyஇவ்வாறு பல பேர் பலவாறாகக் கேட்பார்கள். நான் தலைவர் பதவியை யாருக்கும் கொடுப்பதாக (அது என் சட்டைப் பைக்குள் இருப்பதாகக் கருதிக் கொள்ளுங்கள்) இஷ்டமில்லை.

அன்புமிக்க தோழர், அருந்தவப் புதல்வர், அனந்த சயனம் அய்யங்காருக்குத்தான் சு.ம. மாநாட்டுத் தலைமைப் பதவியைக் கொடுக்கப் போகிறேன்!

“அடடா பார்ப்பனருக்கா? அதுவும் அய்யங்கார் பட்டம் வைத்திருப்பவருக்கா? இதென்ன விபரீதம்?” என்று சிலர் ஆத்திரப்படலாம். ஆத்திரப்பட்டுப் பயனில்லை. முடிவு செய்து விட்டேன். எந்த இயக்கத்திலும் புது ரெக்ரூட்டுகளுக்குத்தான் மதிப்பு அதிகம். (டாக்டர் சுப்பராயனை மனதில் வைத்துக் கொண்டு எழுதுகிறேன் என்று நினைப்பவர்கள் தங்கள் நினப்பை ‘வாபஸ்’ வாங்கிக் கொள்ள வேண்டும்.)

டொமினியன் பார்லிமெண்டில் அனந்தசயனம் அய்யங்கார் பேசியிருப்பதைப் படித்தீர்களா? இதோ:

மதத்தைத் தவிர்த்து வேறு அய்க்கிய சக்தி ஒன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும். மனிதாபிமானமே நமது மதம். சேவையே நமது பிரார்த்தனையாக இருக்க வேண்டும். அதற்கு முதல் படியாக மதச்சார்பற்ற அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும்” (“தினசரி” 5-4-48 பக்கம் 3)

வாசகர்களே! இப்போது என்ன சொல்கிறீர்கள்? இதையே நீங்களும் நானும் 20 வருஷமாகச் சொல்லித்தானே வருகிறோம்? நாஸ்திகன் என்ற பட்டத்தைத் தவிர நமக்கு வேறு ஏதாவது (ஏராளமான கல்லடிகள், வசைகள் கிடைத்ததை மறுக்கவில்லை; வாங்கியதை இல்லையென்று சொல்லலாமா?) கிடைத்ததா?

ஆரியர் ஒருவர் இப்படிச் சொல்லுவது உண்மையாயிருக்குமா? என்று சிலர் சந்தேகப்படலாம். டில்லியிலிருந்து சென்னைக்கு வரும்போது பகவத் கீதை பிரசங்கத்திற்குத் தலைமை வகிக்கச் சொன்னால் இவர் மறுத்து விடுவாரா, என்று சிலர் கேட்கலாம்.

அந்த மாதிரி முரட்டுத் தனமாகக் கேட்கக்கூடாது. அது வேறு; இது வேறு! பேசுகிறபடி யெல்லாம் நடப்பது என்றால், அப்புறம் நடத்தை என்பதற்கு மதிப்பே இல்லாமற் போய் விடுமே! அழகாகப் பேச வேண்டியது; அருமையாக எழுத வேண்டியது! இந்த இரண்டையும் பார்த்து மற்றவர் ஒழுங்காக நடக்க வேண்டுமே தவிர, பேசியவரும் எழுதியவருமே நடப்பதென்றால் முடியுமா? கம்பங் கூத்தாடிதான் மேலே நின்று கரணம் போட வேண்டும், கீழே உள்ளவன் தம்பட்டம் மட்டும்தான் அடிப்பான். காசு மட்டுந்தான் வாங்குவான்!

“மதத்தைத் தவிர்த்து வேறு ஒன்றைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றாரே அனந்தசயனம் அய்யங்கார்! அது ஈரோட்டு வாசனை! மவுண்ட்ரோடு கூவத்தின் ‘எசென்ஸ்’ கொஞ்சம் தருகிறேன், (கையினால் தொட்டல்ல, குத்தூசி நுனியால்!) முகர்ந்து பாருங்கள்:

  1. ‘கதோப நிஷத்பாஷ்யா’ என்பது பற்றி ஜகதீச சாஸ்திரியார் பேச்சு.
  2. “காமதகனம்” -(ஸ்காந்தம்) என்பது பற்றி இராமகிருஷ்ண சாஸ்திரிகள் பேச்சு.
  3. “பிர்ம்ம வித்யா” என்பத பற்றி துரைசாமி சாஸ்திரி பேச்சு.
  4. “பாகவதம்” பற்றி ஸ்ரீரங்கம் சடகோபாசாரியார் பேச்சு.
  5. “உபநிஷத் பாஷ்யம்” என்பது பற்றி வரகூர் கல்யாணராம சாஸ்திரி பேச்சு.
  6. “சீதா கல்யாணம்” என்பது பற்றி டி. ரெங்கசாமி அய்யங்கார் பேச்சு.
  7. “ருக்மணி கல்யாணம்” என்பது பற்றி வித்வான் ரங்கசாமி அய்யங்கார் பேச்சு.
  8. “திருவாய் மொழி” பற்றி சீனிவாச ராகவாச்சாரியார் பேச்சு.
  9. “ராமாயணம் - விபீஷண சரணாகதி” என்பது பற்றி பின்னையூர் நாராயண சாஸ்திரிகள் பேச்சு.
  10. “விஷ்ணு சஹஸ்ரநாமம்” என்பது பற்றி தேத்தியூர் சுப்பிரமண்ய சாஸ்திரி பேச்சு.
  11. “சிவபுராணம்” என்பது பற்றி சோம தேவ சர்மா பேச்சு.
  12. “ஸ்ரீராம பட்டாபிஷேகம்” என்பது பற்றி அனந்த பத்மநாப சர்மா (பிரதம நீதிபதி பி. வி. ராஜ மன்னார் முன்னிலையில்)

5-4-48 “ஹிந்து” பத்திரிகையில் 10-ம் பக்கத்தில் (உள்ளூர் வெளியீடு) 4வது பத்தியில் மொத்தம் 17 நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. இவைகளில் 12 மேலே கூறியவை!

அனந்த சயனத்தின் இனம் கூவம் சேற்றைக் கிண்டிக் கொண்டிருக்கிறது! அவர் டில்லியில் பிரமாதமாக அளக்கிறார்!

“சு.ம. தலைவரே!” வருக! வருக! மவுண்ட் ரோடு வருக! சென்னையைச் சுற்றுக! மதச் சேற்றில் நெளியும் ஸ்ரீலஸ்ரீ - புழுக்களை நோக்குக! என்று அழைக்கின்றேன், அனந்தசயனத்தாரை.

- குத்தூசி குருசாமி (05-04-1948)

நன்றி: வாலாசா வல்லவன்