ஒரு அற்பப் பூச்சியைக் கூடக் கொல்லத் துணியாத ஜைன மார்வாடிகள் ஏழைகளின் இரத்தத்தை மட்டும் (தோலையும் எலும்பையும் பாதிக்காதபடி) உறிஞ்சிக் குடிப்பார்கள்! இது ஒரு வகையான ஜீவகாருண்யம்!

kuthoosi gurusamyஇதற்கிணையான அறிவு மதமே இல்லையென்பார்கள், சில வைதீக முஸ்லிம்கள். ஆனால் பஞ்சாவும், சந்தனக் கூண்டும், மாரடியும், நாகூர் மொட்டையும், முகமூடியும் இருக்கலாமா என்றால் கொஞ்சங் கொஞ்சமாகத்தானே இவைகளைச் சரி பண்ண முடியும் என்பார்கள்!

வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தைக் காட்டு என்று ஏசுநாதர் கூறுகிறாரே! நீங்கள்தானே முதன் முதல் ரிவால்வாரும், அணுக்குண்டும், விஷப் புகையும் கண்டு பிடித்தீர்கள்? இந்த விஷயம் ஏசுநாதருக்குத் தெரியுமா என்று கேட்டால், அவர் சொல்லுகிறபடி யெல்லாம் நடக்க முடியுமா? பைபிள் ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டுந் தானே! என்பார்கள்!

பிரம்மத்தை உணர்ந்து மும்மலத்தை நீக்கியவர்தானே பிராமணன்? வெங்காய சாம்பாரும், பாதிவேக்காடு முட்டையும் தின்றுகொண்டு, நீச பாஷையால் வயிறு வளர்ப்பவன் கூடவா பிராமணன் என்று கேட்டால், ‘நீங்கள் முட்டாள்தனமாக எங்களைப் பிராமணன் என்று ஏன் சொல்கிறீர்கள்’ என்று தங்கள் ‘கிராப்’ தலையை ஆட்டிக் கொண்டே கேட்கிறார்கள்!

லட்சக்கணக்கான இத்தாலிய நாணயங்களைக் கையாண்டுவிட்டு, ஆள் மாறாட்டம் செய்து தப்பியோட முயற்சித்ததாக மார்ச் 9-ந் தேதியன்று சிப்பிகோ என்ற இத்தாலிப் பாதிரியாரையும், பயூலியோ கைடெட்டி என்ற பாதிரியாரையும் ரோம் போலீசார் கைது செய்திருக்கிறார்களாம்!

பாதிரியார் என்றால் நம் ஊர் புரோகிதர் போன்றவர்கள்! மோக்ஷ உலகத்திற்குக் குறுக்கு வழி காட்டுபவர்கள். கடவுளுக்கு மெய்காப்பாளர்கள்! இவர்கள் பணத்தைக் கையாண்டு விட்டார்கள் என்றால் சொந்த உபயோகத்துக்காக இருக்கவே இருக்காது! ஏதாவது ஈஸ்வர கைங்கர்யத்துக்காகத்தான் இருக்கும்! மாணிக்கவாசகரைப் போல! ராமதாஸரைப்போல! பாதிரிகளைப் போலீசார் கைது செய்தல் அடுக்காது! போகட்டும், நாஸ்திகர்கள்! நம் ஊர் போலீசாராய் இருந்தால் ஒரு பிராமணனோ, சந்நியாசியோ என்ன செய்தாலும், போகட்டும் பாவம்! அவர்களைத் தொடக்கூடாது! என்று சும்மா இருந்துவிடுவார்கள்! அத்தனை பக்தி!

சைவர்கள் என்று (சைபர்கள் அல்ல) ஒரு திருக்கூட்டத்தார் இருக்கிறார்கள். இவர்கள் விபூதிப் பூச்சையும், உருத்திராக்க அலங்காரத்தையும் பார்த்தால் சாக்ஷhத் சிவபெருமானைப் போலவே (சினிமாவில் பார்க்கிறோமே, அவரைத்தான் சொல்கிறேன்) இருக்கும்! ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நடத்தையோ! அடாடா, வெளியே சொல்வானேன்?

சைவர்களுக்குத் தலைவர்தான் மடாதிபதி, இந்த அவதார மூர்த்திகளின் சைவத் தொண்டு இருக்கிறதே, கிருஷ்ண லீலைகளைக் கூட மிஞ்சியது! ‘எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும், முத்தர் மனமிருக்கும் மோனத்தே,’ என்பது ஒன்றே அவர்கள் நடத்தைக்கு உள்ள சுமை தாங்கி.

15-2-48 இல் ஒரு நிகழ்ச்சி. ஒரு ஆதினத்தில் குத்தகை ஏலம் நடைபெற்றதாம். பிறகு நடுப் பகல் உணவு; ஒரே வகை உணவுதான்; ஆனால் இரண்டு தனிப் பந்திகள். முதலில் 100 பேர் (தம்பிரான் உட்பட) சாப்பிட்டு முடிந்தபின் அடுத்த பந்தி நடந்ததாம். அதில் மேளம் வாசிப்போர் போன்ற தொழிலாளர்கள் மட்டுமாம்.

இவர்களும் சேர்ந்து உட்கார்ந்திருந்தால் என்ன என்று கேட்கலாம் புலியும் ஆடும் எப்படிச் சேர்ந்து நிற்க முடியும்? தம்பிரான், புலி; தொழிலாளர் ஆடு!, ஆனாலும் தம்பிரான்கள் உபதேசிப்பதோ, (அப்படி யொன்றிருக்குமேயானால்) ‘அன்பே சிவம்’, என்பது. இது பழைய சைவமாயிருக்கலாம்!

இன்றைய சைவம் என்ன தெரியுமா? வில்லே சைவம்! அதிலிருந்து வீசும் அம்பே சிவம்! ஆகையால்தான் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த அம்பிலிருந்து தப்பியோடி விட்டனர்.

சுவாமிகள்! சௌக்கியந்தானே! சைவம் உள்ள வரையில் தங்கள் பாடு யோகந்தான்! நித்திய போகந்தான்! ஆனாலும் ஓய்வு நேரத்தில் யோகாப்பியாசம் இல்லாத வேளையில் கோடரி, மண் வெட்டி போன்றவைகளைக் கையாண்டு பழகிக் கொள்ளுங்கள். வருங்காலத்தில் இவைகள்தான் உங்கள் திருமேனியின் பெரும் பகுதியாகிய திருவயிற்றுக்குச் சோறு போடும்! தாங்கள் இன்று அணிந்துள்ள வேஷங்களை நம்பி யிருக்காதீர்கள்! அவைகள் ஆபத்தான நேரத்தில் மோசம் பண்ணி விடும்! சிநேகித முறையில் சொல்கிறேன்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்