“அரியக்குடி ராமானுஜ அய்யங்காரை விட சித்தூர் சுப்பிரமணியத்தின் குரல் என் காதுக்கு இனிக்கிறது; அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் அறிவைவிட எதிராஜ் அறிவு மேலானதாக எனக்குப் படுகிறது; சத்யமூர்த்தி அய்யர் பேச்சைவிட சர். ஏ. இராமசாமி பேச்சை சிறந்ததாகக் கருதுகிறேன். இதற்குக் காரணம், என்னை அறியாமலே எனக்குள் எழும்பும் இன உணர்ச்சிதான். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா?” என்று ஆசைமிக்க என் தோழர் ஒருவர் அடிக்கடி பொதுமேடைகளில் கூறுவார். இந்த மாதிரி உதாரணத்தின்மேல் உதாரணமாக, அழகான தமிழ் நடையில் அடுக்கிக் கொண்டே போகும்போது, என் பக்கத்தில் நிற்கும் பிராமணத் தோழரின் முகம் சுட்ட மாம்பழம் போலச் சுருங்குவதைப் பார்த்திருக்கிறேன். என் உடல் சிலிர்ப்பையும் அநுபவித்திருக்கிறேன்.

kuthoosi gurusamy 300“இது என்ன ஸார், பச்சையான பிராமணத் துவேஷம்!” என்று என்னைக் கேட்டவர்களுக் கெல்லாம் “துவேஷம் அல்ல ஸார்; திராவிட இன உணர்ச்சி ஸார்!” என்று பதிலளித்திருக்கிறேன்.

அதே பதிலை இன்று நானே, என் சார்பிலேயே, எனக்காகவே, கூற வேண்டி வந்துவிட்டதே! இதுதான் ஆச்சரியம்! கேளுங்கள், நடந்ததை.

ஒரு பிராமண பத்திரிகாசிரியர் எனக்கு ரொம்ப வேண்டியவர். நல்ல மனுஷர் கூட! 12 வருஷங்களாக நாங்கள் நண்பர்கள்.

இருவரும் நேற்று கடற்கரைக்குப் போனோம். அங்கே மணலில் சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டிற்குப் புறப்பட்டோம். பிரசிடென்சி கல்லூரியை அணுகியதும் அங்கே புதிதாக நாட்டியிருக்கும் “தமிழ்த் தாத்தா” உ. வே. சாமிநாதய்யர் சிலை எங்கள் கண்களில் பட்டது.

“தமிழ்த் தாத்தா சிலையைப் பார்த்தீர்களா? என்ன அருமையான வேலைப்பாடு! சிலை மட்டுமா? அவருக்குக் கோயில் கூடக் கட்டலாம், தமிழர்கள், அவரில்லாவிட்டால் தமிழ் ஏது?” என்றார், என் நண்பர்.

“அதிலென்ன தடை? சங்க நூல்கள் என்றாலே சாமிநாதய்யர் ஞாபகந் தான் வரும். அவர் செய்த தமிழ்த் தொண்டு பாராட்டக் கூடியதுதான்,” என்றேன், பந்ததிக்காக.

“என்ன அவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறீர்கள்! எவ்வளவு மகத்தான சேவை, போங்கள்! இந்த ஒரு சிலைதானா? தமிழ் நாட்டில் நகரந்தோறும் சிலை இருக்கவேண்டாமா?” என்றார் தமிழ் உணர்ச்சி பொங்கும் பத்திரிகாசிரியத் தோழர்.

இதற்குமேல் என்னால் பொறுக்க முடியவில்லை. வேறு யாரேனும் இப்படிக் கூறியிருந்தால் ‘வெடுக்’கென்று பதில் சொல்லியிருப்பேன். பிராமணனாயிருந்தும் தோழமைப் பாசம் என் நாவுக்கு 144 போட்டு விட்டது.

“அது சரிதான்! ஆனால்-”, என்று இழுத்தேன்.

“என்ன இழுக்கிறீர்களே! இதில் கூடவா அபிப்பிராய பேதம்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ஆமாம்! இதில் கூடத்தான். என்ன செய்வது? எவ்வளவுதான் அடக்கிப் பார்த்தாலும் உண்மை பீறிட்டுக் கொண்டுதானே வருகிறது? கேளுங்களய்யா - சாமிதய்யரின் குருவான வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கம்பரைவிடப் பல மடங்கு அதிகமான பாடல்களைப் பாடியவர். சுமார் ஒரு லட்சம் பாடல்கள் இருக்கும் என்று கூடச் சொல்கிறார்கள். அத்தனையும் சுவை பொருந்திய பாடல்களாம். ஆனால் அவருக்குப் பாடமோ சிலையோ இல்லை, தமிழ் நாட்டில்.

அடுத்தபடி மறைமலையடிகள். தமிழ் சமஸ்கிருதம், இங்கிலீஷ் மூன்றிலும் நல்ல தேர்ச்சி, ஆராய்ச்சி உடையவர். பல பெரும் புலவர்களுக்கு ஆசிரியர். சுயமாகச் சிந்தனை செய்து பல முதல்தரமான தமிழ் நூல்களை எழுதியவர். அதுவும் மணிப் பிரவாள தமிழ்க் கொலை நடையிலல்ல. தூய தனித் தமிழ் நடையில். தமிழரின் தனிச் செல்வம். ஆனால், அவர் படமும் இல்லை; சிலையுமில்லை.

இன்னும் சொல்கிறேன், கா. சுப்பிரமணிய பிள்ளை வறுமையை மணந்து தமிழுக்காகவே வாழ்ந்து உயிர் நீத்தவர். தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நிபுணர். பேரறிஞர். தமிழை விலைபேசி ஒரு லட்சம், 2 லட்சம் சம்பாதித்தவரல்ல. டாக்டர் ஜான்சனைப் போல, தம் அறிவுப் பொக்கிஷத்தை 50 ரூபாய்க்கும், 75 ரூபாய்க்கும், மூட்டைப் பூச்சி வியாபாரிகளிடம் விற்றவர். கிழிந்த வேட்டியோடு இறுதிவரையில் தமிழ்ச் சேவை செய்தவர். ஆனால் அவருக்குப் படம் உண்டா? சிலை உண்டா?

இன்னும் கேளுங்கள். கா. நமசிவாய முதலியார். நீங்களும் நானும் இன்னும் பல லட்சம் பேர்களும், ஆரம்ப வகுப்பு முதல், பி. ஏ. வரையில் தமிழ்ப் பாட புத்தகங்களைப் படிப்பதற்கு முதற் காரணமாயிருந்தவர். இதோ, இந்தக் கல்லூரியிலேயே பல ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். உரை நடை என்பதையே பள்ளிகளுக்குள் முதன் முதல் புகுத்தியவர். நல்ல அறிவாளி, கொடை வள்ளல். வறுமையைக் காணவும் சகிக்காத உள்ளம் படைத்தவர். அவருக்கு ஒரு சிலை உண்டா?

கோபிக்காதீர்கள்! இன்னொரு பெயரும் ஞாபகத்துக்கு வருகிறது. திரு. வி. க. ஆமாம்! தமிழ்த் தென்றல், திரு. வி. க. வைத்தான் சொல்கிறேன். திருவள்ளுவரைப் போன்ற ஒரு தனி நடை! இதற்கு முன்பு இருந்ததில்லை; இனியும் இருக்க முடியாது. அரசியல் துறைக்குள் முதன் முதல் நல்ல தமிழைப் புகுத்தியவர். தன்னலமற்ற தியாகி. பரந்த படிப்பு, உயர்ந்த ஒழுக்கம். தலைசிறந்த நற்குணம், அமைதியும் அன்புமே உரு. ஆனால் அவருக்கு ஒரு படம் உண்டா? சிலை உண்டா?

இன்னுங்கேளுங்கள். திருச்சியில் வசித்த நா. மு. வேங்கடசாமி நாட்டார். அவர் என்ன, சாமான்ய......"

“போதுமய்யா! போதும்! இப்படியே எத்தனை மணி நேரம் பேசுவதாக எண்ணமோ? நீங்கள் என்னதான் படித்தாலும், பழகினாலும் ஜாதிக் துவேஷம் என்ற சின்னப் புத்தி மட்டும் போவதில்லையே! ஏன்?” என்று கேட்டார் சிறிது கோபமாக.

“சின்னப் புத்தியா? ஆமாம்! எல்லாம் தங்கள் கூட்டத்தைப் பார்த்துத் தொரிந்து கொண்டதுதான். அதற்கு முன்பு நானும் பெரிய புத்தியுடன்தான் இருந்தேன். ஒருக்கால் எனக்குப் ‘பெரிய நிலை’ ஏதாவது திடீரென்று வந்தால் எனக்கும் ‘பெரிய புத்தி’ வந்தாலும் வரலாம்; அந்தப் பெரிய நிலையும் எனக்கு வேண்டாம்; பெரிய புத்தியும் வேண்டாம். சின்னஞ்சிறு உளியைக் கொண்டுதானே பெரிய பெரிய தலைகளை உடைக்கிறார்கள்? நானும் ஒரு சிற்றுளியாகவே இருந்து தொண்டு செய்துவிட்டுத் தொலைகிறேனே! இதில் யாருக்கு என்ன நஷ்டம்?” என்று கேட்டேன்.

என் நண்பர் அலட்சியமாகப் பார்த்து, ஏளனமாகச் சிரித்தார்.

அவரைக் குற்றஞ் சொல்வானேன்? நம்மவர்களிலேயே பலர் அவரைப் போலத்தானே பேசுகிறார்கள்? அவர் பூணூல் போட்டவர்; நம்மவர் அது இல்லாதவர்கள். அவ்வளவுதானே வித்தியாசம்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்