"பூம்! பூம்! பூம்!!! புண்ணாக்கு வேணுமா? பருத்திக் கொட்டை வேணுமா? என்ன வேணும் சொல்லடா! எஜமான் குடுப்பாரு! பூம்! பூம்!! பூம்!!!" என்று காதைத் துளைக்கும் ஓசையுடன் வந்தான் பெருமாள் மாட்டுகாரன். நான் காலை நியூஸ் பேப்பரை வைத்துக் கொண்டு ‘ஐரோப்பாவில் ரஷ்யர் ஆதிக்கம்" என்ற தலையங்கத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.

மறுபடியும் பூம்! பூம்!! என்று ஓசையிட்டான். புண்ணாக்கு வேணுமா என்றான். வேண்டாம் என்று தலையை ஆட்டிற்று மாடு. பருத்திக்கொட்டை வேணுமா, என்றான். வேண்டாம் என்றே தலையை ஆட்டிற்று.

kuthoosi gurusamyஏனப்பா இரண்டும் வேண்டாம் என்கிறது, என்று கேட்டேன்.

அந்த இரண்டும் கிடைக்கவே கிடைக்காது என்று அதற்குத் தெரியும். இரண்டையும் பார்த்து 7, 8 வருஷமாச்சுதுங்க; மறந்துகூடப் போயிருக்குமுங்க, என்றான்.

பின்னே என்ன தான் தின்கிறது? வைக்கோலாவது போடுகிறாயா, அதுவுமில்லையா?" என்று கேட்டேன்.

"கொஞ்சங் கொஞ்சம் போடறது தானுங்க; அதுகூட சேமியா விலை விக்கிதுங்களே! எப்படிங்க கட்டும்? பரவாயில்லிங்க; இது மெட்றாசுலே இருந்து பழகிடுச்சுங்க. கடுதாசியே திங்கிமுங்க!" என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே என் கை தவறி விழுந்த ஒத்தைஷ ‘ஷீட்’ நியூஸ் பேப்பரைத் தின்று கொண்டிருந்தது!

சரிதான்! காலத்துக்குத் தகுந்தபடி அதுவும் தீனியை மாற்றிக் கொள்கிறது போலிருக்கு. நாமே களி மண்ணையும் கல்லையும், (ரேஷன் அரிசி என்ற பெயரும் உண்டு!) தின்று நன்றாகப் பழகியிருக்கும்போது, மாடு கடுதாசி தின்னாலென்ன என்று நினைத்துக் கொண்டேன்.

பெருமாள் மாட்டுக்காரன் வழக்கம்போல், வீடு வேணுமா? நகை வேணுமா? என்றெல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டேயிருந்தான். எதுவும் வேண்டாமென்றே தலையை ஆட்டிக் கொண்டிருந்தது. கடைசியாக, "எஜமான் கட்டிக்கிற துணி வேணுமா" என்று கேட்டான். அதுவும் வேண்டாம் என்று தலையை ஆட்டிற்று.

இதென்ன, வழக்கத்திற்கு விரோதமாய் இருக்கிறதே! துணி கூட வேண்டாமாமே! இது ஒருக்கால் முற்றுந் துறந்த முனிவர் மாடு போலிருக்கு, என்று நினைத்துக் கொண்டேன். துணி ரேஷன் இருந்த காலத்தில் பழக்கியிருக்கிறான் போலிருக்கு என்று சந்தேகித்தேன்.

"என்னப்பா, இது? துணி கூட வேண்டாமாமே இதுக்கு? வேறு என்ன தான் வேணுமாம்?" என்று கேட்டேன்.

"இதோ பாருங்க எஜமான்! நல்ல புத்திசாலிங்க, இவன்! ....... டேய்! சொல்லுடா, சொல்லு! மனங் கூசாமே சொல்லு! மகராஜர் எஜமான் வாங்கித் தருவாரு! மந்திரி வேலை வேணுமா? பூம்! பூம்!! பூம்!!! என்று அடித்தானே ஒரு அடி!

என்ன ஆச்சாரியம்! வேணும் என்று வெகு ஜோராகத் தலையை ஆட்டிற்று! விழுந்து விழுந்து (மாட்டின் மேலே அல்ல!) சிரித்தேன்! பெருமாள் மாட்டுக்காரர்கள் தம் கைக்கயிற்றை ஆட்டித் தான் மாட்டின் தலையை ஆட்டுமாறு செய்வது வழக்கம். இவன் கயிற்றையே கையில் பிடிக்காமல் இவ்வளவு அருமையாகக் கற்றுக் கொடுத்திருக்கிறானே, என்று ஆச்சரியப்பட்டேன்.

"ஏனப்பா! இந்த மாட்டை ஒருவேளை யாராவது மந்திரியார் வீட்டிலிருந்து வாங்கினாயோ?" என்றேன்.

"இல்லிங்க" என்றான்.

"மாஜி மந்திரியார் வீடுகூட இல்லையா?" என்று கேட்டேன்.

‘இல்லை’ யென்று கூறினான்.

வேடிக்கையான ஆசாமி, என்று சொல்லிக் கொண்டே நாலணாவைக் கொடுத்து (அந்த மாதச் சம்பளத்தில் கடைசி மிச்சமான தொகை) போகச் சொன்னேன். பெரிய தியாகம் என்று நினைக்க வேண்டாம்! மறுநாள் எனக்கு சம்பள நாள் என்ற தைரியந்தான்!

இதிலிருந்து பெருமாள் மாட்டுக்குக் கூட மந்திரி வேலை என்றால் பரமானந்தம் என்று நினைத்து விடாதீர்கள்! அவ்வளவு நன்றாகப் பழக்கி வைத்திருக்கிறான்! அவ்வளவுதான்.

ஓமந்தூரார் மந்திரி சபையைக் கவிழ்ப்பதற்கு செய்யப்பட்ட சதி வேலைகளெல்லாம் விதவையின் கர்ப்பம் போல அதிவிரைவாக கரைந்து வருகின்றனவாம்!

இந்த ஆண்டு முடிவுக்குள்ளேயே புதிய தேர்தல் வந்து விடுமாகையால் அதற்குள்ளாக எந்தப் புது நடிகர்களும் தேவையில்லை யென்று முடிவு செய்து விட்டார்களாம்! இந்தச் செய்தி கேட்ட 40-50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மயக்கமே வந்து விட்டதாகக் கூடப் பேசிக் கொள்கிறார்கள்.

நான் முன் மந்திரி; நீ இன்ன மந்திரி; அவர் அந்த மந்திரி, என்றெல்லாம் கனவும் கண்டு உதட்டைச் சப்பிக் கொண்டிருந்த சிலரின் நா வறண்டு போய்விட்டதாம் (சூடபெப்பர்மெண்ட்டை சிபார்சு செய்கிறேன்.)

அப்பாடி! என்ன கலாட்டா! எவ்வளவு சூழ்ச்சி! எல்லாம் ஒழிஞ்சுது ஒவ்வொருத்தரும் (பெருமாள் மாடு உள்பட) அடுத்த மந்திரிசபைக்குள் நுழைந்து விடலாம் என்று தானே நினைத்திருந்தார்கள்?

மந்திரி வேலை மட்டுமா? கவர்னர் வேலைகூட எவ்வளவு தாராளமாய் அடிபட்டது தெரியுமா? காமராஜர் கவர்னரா? ஆச்சாரியார் கவர்னரா? பிரகாசம் கவர்னரா? இன்னொருத்தர் கவர்னரா? இப்படியெல்லாம் பேச்சு!

யாரும் கவர்னரில்லை. சர் ஆர்ச்பால்ட் நையி அவர்களேதான் கவர்னர்! "வெள்ளையரை வெளியேற்ற வேண்டாமா? என்று கேட்காதீர்கள். என்னைக் கேட்டால் அவரை ஒரு பிராமணராகவே ஏற்றுக் கொள்ளலாம். (அது பற்றிய விபரத்துக்கு சங்கராச்சாரியாருக்கு எழுதுக) அவர் குங்குமம் வைத்துக் கொள்கிறார்! கோயிலுக்குப் போகிறார்! நல்ல மனுஷர்கூட! நையீ சாஸ்திரிகளே! நமஸ்தே!" என்று சொல்லிப் பாருங்கள். நகைப்பார்! அடுத்த தேர்தல் வரையில் இதே மந்திரி சபைதான்! இதே கவர்னர்தான்! இது டில்லிச் செய்தியுமல்ல; பெருமாள் மாடு சொன்னதுமல்ல என் யூகந்தான்.

இதில் இன்னொரு விஷயம்! அடுத்த தேர்தலில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ‘வோட்’ உண்டாமே! அப்படியானால், எந்தக் கட்சியில் தானாகட்டும், எத்தனை பிராமணர்கள் சட்டசபைக்குள் வர முடியும்? யாராவது சொல்ல முடியுமா?

ஆபீஸ் கம்பாசிட்டர் சொல்கிறார், 0 பிராமணர்தான் வரமுடியும், என்று. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இரகசியமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வருஷம் பார்க்கலாம்.

(குறிப்பு: குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார் அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலசா வல்லவன்