அமீரின் பருத்தி வீரன், பாலாஜி சக்திவேலின் காதல், வசந்தபாலனின் அங்காடித் தெரு மற்றும் சேரனின் பாரதி கண்ணம்மா ஆகிய படங்களைப்பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. இப்படங்களை ஏன் ஆய்வு செய்ய வேண்டும்? என்பதை பின்பு பார்க்கலாம். அதற்குமுன் ஒரு வசதிக்காக, இப்படங்களின் கதை சுருக்கங்கள் கீழே தரப்படுகின்றன: 

காதல்

      தாழ்த்தப்பட்ட சாதி பையனுக்கும், உயர் சாதிப் பெண்ணுக்கும் ஏற்படும் இளம் பருவத்துக் காதல் பற்றிய கதை. ஊரைவிட்டு ஓடிப்போகும் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். வாழ்க்கையை ஓட்ட பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். பெண்ணின் சித்தப்பா அவர்களை ஏமாற்றி ஊருக்கே கூட்டி வந்துவிடுகிறார். அவன் கட்டிய தாலியை அறுத்தெறிகின்றனர் உயர் சாதியினர். அவன் பைத்தியமாகி அலைகின்றான். வேறொரு, சுய சாதிக்கார ஆணுக்கு வாழ்க்கைப்பட்ட நாயகி, கணவனுடன் அவனைக் கண்டு கதறியழ, அவள் கணவன் அவனை எடுத்து வளர்க்கின்றார்.

 பருத்தி வீரன்

     ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகமாக வாழும் ஒரு தென் தமிழக கிராமத்தினை கதை களமாகக் கொண்டது. உயர் சாதி ஆணுக்கும், தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைதான் கதையின் நாயகன். கிராமத்து சண்டியரான அவனுக்கும், உயர்சாதி உறவுப் பெண்ணுக்கும் உள்ள காதலை, மிக யதார்த்தமாய் சித்தரிக்கும் படம். இங்கு காதலர்களுக்கு எதிரியாக இருப்பது சாதியாகும். 

அங்காடித் தெரு

 இதுவும் ஒரு காதல் கதைதான். ஆனால் அதற்கான களம், தமிழ் சினிமாவுக்கு புதிது. காதலர்களுக்கான எதிரி, மற்றைய தமிழ் படங்களை போலல்லாமல், வறுமையும், காதலர்கள் பணிபுரியும் ஒரு பெரிய நிறுவனமான துணிக்கடையுமாகும். வசந்த பாலனின் மூன்றாவது படமான, இப்படம், அவரை ஒரு முக்கியமான திரை இயக்குனராக அங்கீகரிக்க உதவுகிறது. சிறப்பாக அமைக்கப்பட்ட திரைக்கதையினூடே, நிறுவனம் (முதலாளித்துவம்) எவ்வாறு தொழிலாளர்களை சுரண்டுகிறது என்பதை பட்டவர்த்தனமாக சித்தரிக்கிறது இப்படம். தொழிலாளர்களின் அவல நிலை, வறுமையின் காரணமாக அவர்கள் சகித்துக் கொள்ள வேண்டிய கொடுமைகள், அவமானங்கள், மனதை பிழியவைக்கின்றன. 

பாரதி கண்ணம்மா

     காலத்தால் சற்று முந்தியது என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான காதல் கதையைச் சொன்ன தமிழ் படம்தான். இங்கு உயர் சாதி பெண்ணுக்கும், அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்ட சாதி பையனுக்கும் உள்ள காதல் மிக அழகாக சொல்லப்படுகிறது. சாதி வெறி கொண்ட அவளின் தந்தைக்கு பயந்து, தற்கொலை செய்து கொள்கிறாள் நாயகி.. தனது காதலை, சாதிக்கு பயந்து வெளிப் படுத்தாமல் இருக்கும் நாயகன், அவளது சிதையில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறான். 

மேற்குறிப்பிட்ட படங்களின் மைய இழை காதல்; இவற்றின் இயக்குனர்கள் தமிழின் முக்கிய இயக்குனர்களாக அறியப்படுபவர்கள். இப்படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகும். மேலும், அனைத்து தரப்பினராலும் பரவலாக வரவேற்பு பெற்ற படங்களாகும். இப்படங்களின் கதை மாந்தர்கள் தென் மாவட்ட மக்கள். அனைத்துப் படங்களிலும் சாதி நேரடியாகவும், மறைமுகமாகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படங்களில் சாதி எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது? சாதீயத்திற்கு ஆதரவாகவா? இல்லை எதிராகவா? இயக்குனரின் சாதி குறித்த பார்வை அவரது படத்தில் எவ்வாறு பதிவாகியுள்ளது? இவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

காதல்

      காலங்காலமாக தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. உயர் சாதியினரின் தயவில்தான் இவர்கள் வாழ வேண்டும். அவர்களது உரிமை, ஆசாபாசங்கள், காதல் எல்லாமே உயர் சாதியினர்தான் நிர்ணயிக்க வேண்டும் என்பது மேட்டிமை மனப்பாங்கு. ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினன், ஒரு உயர் சாதியினனால் அழிக்கப்பட முடியும் அல்லது வாழவைக்கப்பட முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாய் இப்படத்தைக் கூறலாம். இது காலங்காலமாக உயர் சாதியினரால் நம்பப்படும் ஒரு கருத்து. மிகவும் சிறந்த திரைக்கதையுடன் வெளிவந்த இப்படம், பல விஷயங்களில் தமிழ்ப் படங்களுக்கு ஒரு முன்னோடியாகும். ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதைக் காரணமாக காட்டி இயக்குனர் பல விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.     

நடைமுறையில் இவ்வகை காதல்களுக்கு ஏற்படும் கதி வேறாயிருக்கிறது. காதலன் கொல்லப்படுவான் அல்லது இருவரும் கொல்லப்படுவார்கள். காதலி ஏமாற்றிவிட்டு செல்வாள். அதனால் காதலன் தற்கொலை செய்வான் அல்லது காலமெல்லாம் நடைபிணமாக வாழ்வான். காதலன் குடும்பமே தீக்கிரையாக்கப்படும் அல்லது ஊரைவிட்டுத் துரத்தப்படும். சில சமயங்களில் அந்த சாதி குடியிருப்பே சிதைத்து நொறுக்கப்படும். இவைகள் சர்வ சாதரணமாக தென் மாவட்டங்களில் நடந்தேறும் விஷயங்களாகும். யதார்த்தம் இவ்வாறிருக்க, அவனை (தாழ்த்தப்பட்ட சாதி பையனை) ஆதரித்து வளர்ப்பது போல் காண்பிப்பது, ஒரு திரைப்பட பாணியிலான (cinematic) தீர்வாகும். மேலும், மேட்டிமை மனப்பாங்குமாகும்.     

காதலன் பாத்திரம் படம் முழுதும் ஒரு உள்ளடங்கிய (submissive) மன நிலையிலேயே இருப்பதாக சித்தரிக்கப்படிருக்கும். அவன் படம் முழுதும் பயந்தவாறே, “என்னை கைவிட்டுவிட மாட்டியே”, என கேட்டபடியே இருப்பான். (தமிழ் திரைப்பட கதாநாயகன் பொதுவாக வீரம் செறிந்தவனாக இருப்பான். வசனங்களை பொழிவான். நகைச்சுவை மிகுந்தவனாக இருப்பான். ஆனால் இவனோ முற்றிலும் வேறுப்பட்ட பயந்தாங்கொள்ளி). காதலிக்கும் பையன்கள், அவர்களின் காதலிகள் முன்பு மிகுந்த தைரியம் உள்ளவர்களாய் இருப்பதுதான் யதார்த்தம். ஆனால், இப்படத்தின் காதலன் மிகவும் தைரியம் குறைந்தவனாக சித்தரிக்கப்பட்டுள்ளான். காதலர்களிடையே காணகிடைக்கும் போலியான வீர வசனங்கள்கூட இக்காதலனுக்குக் கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதி பையனுக்கு வீரம் இருக்காது என்பதுதான் இதன் உட்கருத்து. இது போன்று உயர்சாதிக்கு ஆதரவான நுண்ணிழை படம் முழுதும் பின்னப்பட்டிருக்கிறது.

படம் முழுதும் உயர் சாதியினருக்கு ஆதரவாக ஒரு நுண்ணிழை பின்னப்பட்டிருப்பது, படத்தின் உச்சக் காட்சியில் (climax) உறுதி பெறும். காதல்தான் உலகை ஜெயிக்கும் என சர்ரியலிஸ்டுகள் கூறுவதாக படித்திருக்கிறேன். ஆனால் இங்கு காதலர்களால் சாதியைக்கூட ஜெயிக்க முடியாது என்பதுதான் உண்மையாகும்.

உடல் ரீதியாக எந்தவித பாதிப்பின்றி, அவள் திருப்பி அனுப்பப்படுவதாக காட்சியமைப்புகள் உள்ளன. இது, தாழ்த்தப்பட்ட சாதியின் ஆண், உயர் சாதி பெண்ணுடன் உடல் ரீதியாக உறவு வைத்துக் கொள்வது பற்றிய இயக்குனரின் பார்வையை நமக்கு உணர்த்துகிறது. அவளின் கற்பு, ஒரு உயர்சாதி ஆணுக்காக பாதுகாக்கப்படுகிறது. 

பருத்தி வீரன்

     ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகமாக வாழும் ஒரு தென் தமிழக கிராமத்தினை கதை களமாகக் கொண்டது. உயர் சாதி ஆணுக்கும், தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைதான் கதையின் நாயகன். கிராமத்து சண்டியரான அவனுக்கும், உயர்சாதி உறவுப் பெண்ணுக்கும் உள்ள காதலை, மிக யதார்த்தமாய் சித்தரிக்கும் படம். இங்கு காதலர்களுக்கு எதிரியாக இருப்பது சாதியாகும். கிராமத்தில் சண்டியர்த்தனம் செய்து கொண்டு, தான் தோன்றித்தனமாக அலையும் நாயகனை, நாயகி தீவிரமாக காதலித்து, பின் அவனையும் காதலிக்க வைக்கின்றாள். 

சாதி வெறி பிடித்த நாயகியின் அப்பா, காதலை தீவிரமாக எதிர்க்கின்றார். அவர்கள் ஊரைவிட்டு ஒடிப்போகும் போது, ஒரு மண்டபத்தில் அவளை விட்டுவிட்டு, தன் குடும்பத்தினரை காப்பாற்ற செல்லும் போது, அவனின் பழைய லாரி டிரைவர் நண்பர்கள், அந்த இடத்தில், அவனுடன் பலமுறை விபச்சாரிகளை அனுபவித்தவர்கள், தவறுதலாக நாயகியை அவன்தான் விட்டுச் சென்றான் என எண்ணி, அவளை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். திரும்பி வந்த நாயகனிடம், நீ செய்த பாவத்தையெல்லாம் என் மீது இறக்கி வைத்திவிட்டனர் எனக் கூறி உயிர்விடுகிறாள். ஊராரை, அவள் கற்புள்ளவள் என நம்பவைக்க, உயிரற்ற உடலை பல முறை வெட்டிக் கொல்வதாக நடிக்கிறான் நாயகன். அப்படி ஆக்ரோஷமாக வெட்டும்போதும், அவள் ஒரு சிறு முனகலுமின்றி இறக்கின்றாள். அதை அவளின் அப்பாவும், ஊராரும் அவன் தான் கொலைகாரன் என நம்பி, அவனை கொல்கின்றனர். பொய்யாய், அவள் கற்புள்ளவள் என நம்பவைக்க இப்படி ஒரு தவறான காட்சியமைப்பு. 

நாயகனின் தாய், பன்றி மேய்க்கும் தாழ்த்தப்பட்ட சாதி பெண். அவளின் தாய் கதாபாத்திரம் சாராயம் காய்ச்சி விற்பவளாக, ஏறக்குறைய வழக்கமான தமிழ் சினிமா ரவுடி போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவள் போட்டிக்கு சாரயம் விற்பவனை கொலை செய்வதாக காட்டப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை மிக கேவலமாக சித்தரிக்கும் பாணியில்தான் இப்படமும் உள்ளது. மேலும், அரவாணிகளை இழிவுபடுத்தும் வகையில் சில காட்சிகள் உள்ளன. இவைகளை யதார்த்தம் எனக் கூறி தப்பித்துக் கொள்ள இயலாது. அப்படியெனில், படத்தின் இறுதிக் காட்சியும், முடிவும் யாதர்த்தமானதா எனில், இல்லை எனக் கூறலாம். அது சினிமாத்தனமானது; அதிலும், இயக்குனரின் கோணத்தில்தான் முடிவு அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில் யதார்த்தம் என்ற ஒன்று, ஒரு கலைப் படைப்பில் சாத்தியமா? சாத்தியமில்லை என்பதுதான் கட்டுரையாளரின் நிலைப்பாடு. இது குறித்த விவாதம், கட்டுரையின் மையக் கருத்துக்கு விலகியதாகையால், அதை விட்டுவிடுவோம். 

உயர் சாதி ஆணுக்கும், தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணுக்கும் பிறந்த குழந்தையான கதையின் நாயகன், மிக மோசமான குணங்களைக் கொண்டவனாக இருப்பதற்கு, அவனது இழிப்பிறப்பே காரணம் என படத்தில் ஒரு கதாபாத்திரம் (நாயகியின் அப்பா) குறிப்பிடுகிறது. அதுவே இயக்குனரின் எண்ணமாக இருக்குமோ, என நினைக்கும் அளவுக்கு, கதாநாயகன் பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

 என்னதான் இயல்பான காதல் கதை எனக் கொண்டாலும், அதில் உயர் சாதிக்கு ஆதரவான ஒரு மனநிலையே செயல்பட்டுள்ளது. படம் முழுதும் உயர்சாதியை உயர்த்திப்பிடிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. சாதி தவறினால் இழி நிலைதான் என்பதுதான் படம் சொல்லும் மறைமுக மையக் கருத்து. இயக்குனரே ஒரு பேட்டியில் கூறியதுபோல், இது மற்றொரு பாரதிராஜா படம்தான். 

அங்காடித் தெரு

சிறப்பாக அமைக்கப்பட்ட திரைக்கதையினூடே, நிறுவனம் (முதலாளித்துவம்) எவ்வாறு தொழிலாளர்களை சுரண்டுகிறது என்பதை பட்டவர்த்தனமாக சித்தரிக்கிறது இப்படம். முற்போக்கு முகவரியுடன் வந்திருக்கும் எவ்வளவு தூரம் முற்போக்கானது என்பதை காண்போம். 

இதன் இயக்குனரின் முந்தைய படமான “வெயிலில்” கதாநாயகனின் தந்தையை அறிமுகப்படுத்தும்போது, சாதிப்பெயரை வெளிப்டையாகவே குறிப்பிட்டு, பெருமையாக அறிமுகப்படுத்தப்படுவார். அது, சாதியின் மீதான சாய்வு இயக்குனருக்குள்ளது என்பதை தெளிவுபடுத்தும் காட்சி. அப்படத்தின் வில்லன் அண்ணாச்சி எனக் குறிப்பிடப்படுவார். அவர் (வில்லன்) சார்ந்த சாதியப்பற்றி வெளிப்டையாக படம் எதுவும் கூறாது, எனினும் பார்வையாளர்களால் புரிந்து கொள்ள இயலும். 

அங்காடித் தெருவில் காட்டப்படும் நிறுவனம், ஒரு பெரிய துணிக்கடை. அது தமிழகத்தில் புகழ் பெற்ற ஒரு கடையைத்தான் குறிப்பால் உணர்த்துகிறது. இதில் காதலர்களுக்கான எதிரி, மற்றைய தமிழ் படங்களை போலல்லாமல், வறுமையும், முதலாளித்துவமும் ஆகும். முதலாளித்துவத்தின் கையாளாக இருப்பது, அண்ணாச்சி என அழைக்கப்படும் கண்காணிப்பாளராகும். அவர், கருங்காலி என, அனைத்து தொழிலாளர்களாலும், பட்டப் பெயரால் அழைக்கப்படுகிறார். இக்கதாபாத்திர சித்தரிப்பு மூலம், மறைமுகமாக ஒரு சாதிக்கு எதிரான ஒரு நிலையை இப்படம் எடுத்துள்ளது, என எண்ணத் தோன்றுகிறது. அவர் (வில்லன்) சார்ந்த சாதியைப்பற்றி வெளிப்டையாக படம் எதுவும் கூறாது, எனினும் பார்வையாளர்களால் புரிந்து கொள்ள இயலும். 

முதலாளித்துவத்தின் கொடுமைகளை உணர்த்த, மறைமுகமாக ஒரு சாதியை பயன்படுத்தியிருப்பது, எவ்வளவு தூரம் முற்போக்கானது எனத் தெரியவில்லை. இயக்குனர் சாதியை தாண்டி சிந்திக்கவில்லை, என்பதை தெளிவாக, அவரது இரு படங்களும் உணர்த்துகின்றன. 

பாரதி கண்ணம்மா

     இங்கு உயர் சாதி பெண்ணுக்கும், அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்ட சாதி பையனுக்கும் உள்ள காதல் மிக அழகாக சொல்லப்படுகிறது. சாதி வெறி கொண்ட அவளின் தந்தைக்கு பயந்து, அவரிடம் சொல்லாமல் படம் முழுதும் மறைத்து விடுகிறாள். ஆனாலும், அவள் காதலிக்காமலில்லை. தனது காதல் நிராகரிக்கப்படும், மேலும் காதலன் கொல்லப்படுவான் மற்றும் அவனது குடுப்பத்தினர், சாதியினர் அனைவரும் துன்புறுத்தப்படுவர், மேலும் ஊரைவிட்டு துரத்தப்படுவர், என்பதை நன்கு அறிந்தும், அவள், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த, வீட்டு வேலைக்காரனை காதலிக்கின்றாள். தான் செய்வதை நன்கு அறிந்துள்ளாள். அவள் நம்புவதெல்லாம், காதலையும், காதலனையுமே. தனது காதலை, சாதிக்கு பயந்து வெளிப்படுத்தாமல் இருக்கும் நாயகன், அவளை காதலை மறக்கும்படி அறிவுறுத்துகிறான். அவளோ காதலை கைவிடுவாதாயில்லை. 

நாயகி, தெளிவான சிந்தனையுடன் உள்ளாள்; அது காதலிப்பது; அதனால் இறப்பதற்கும் தயாராக உள்ளாள். உண்மையில் அவளது காதல் ஒரு போராட்டமேயாகும். சற்று ஆழமாக நோக்கினால், அது சாதிக்கு எதிரான ஒரு போராட்டமேயாகும். அப்போராட்டத்தில் அவள் வெற்றியடைகிறாள்; காதலும் வெற்றியடைகிறது. 

இவளுக்கும், காதல் பட நாயகிக்கும் உள்ள வேறுபாடு இதுதான். இவள் சாதியை எதிர்த்து போராடுகிறாள். அவள் (காதல்) சாதியைப்பற்றி அறியாதவள்; வெறும் காதல் உணர்வு பீடிக்கப்பட்டவள். மிகவும் இளம் பருவத்தினள்; பக்குவமற்றவள். பருத்திவீரன் நாயகி காதலால் கண்கள் மறைக்கப்பட்டவள். அவள் காதலனின் கெட்ட குணங்களைப்பற்றிக்கூட கவலைப்படாதவள். அவளுக்கு காதல்தான் எல்லாமுமே. அங்காடித்தெரு நாயகிக்கோ இது போன்ற பிரச்சினைகள் ஏதுமில்லை. அவள் கிராமத்தைச் சார்ந்தவள். அவ்வளவே. நகரத்தைச் சார்ந்த பெண்கள் குறித்த ஒரு அசிங்கமான சித்தரிப்பைப் பற்றி, காலச்சுவடு இதழில் வந்த, இப்பட விமரிசனத்தில், குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, பாரதி கண்ணம்மா நாயகி உயர்ந்து நிற்கிறாள். அவள் காதலிக்கிறாள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த பையனை தெரிந்தே காதலிக்கிறாள். சாதிக்குப் பயந்து, காதலை எக்கணத்திலும் காட்டிக் கொடுப்பவள் இல்லை. காதலை இறந்தும் கைபிடிப்பவள். அவள் மவுனமாக, சாதி வெறி பிடித்த, தனது தந்தைக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்துகிறாள். இறுதியில் வெற்றியடையவும் செய்கிறாள். 

இயக்குனர் சேரனின் முதல் படம் இது. அவர் பக்கம், பக்கமாக வசனம் பேசி, அவளது தந்தையை மனம் மாற்றியிருக்கலாம் (விக்கிரமனின், விஜய் நடித்த புகழ் பெற்ற “பூவே உனக்காக” என்ற படத்தில் இப்படிதான் தீவிர மதப் பற்றாளர்களை மாற்றுவதாக காட்டப்பட்டுள்ளது). ரஜினி படங்களைப் போல ஒரு பெரிய சண்டைக் காட்சியில், கதாநாயகனை வெற்றி பெறச் செய்து, காதலர்களை சேர்த்து வைத்திருக்கலாம். விஜயகாந்த் படங்களில் வருவது போன்ற காதல் பாதுகாவலர் ஒருவரையும் பயன்படுத்தியிருக்கலாம். இப்படி, எந்தவித திரைப்பட பாணியிலான முடிவையும் எடுக்காமல், இயக்குனர் மிக இயல்பான ஒரு முடிவை எடுத்துள்ளார். தென் மாவட்டங்களில், இப்படிப்பட்ட காதலுக்கு, இது ஒரு சாத்தியமான முடிவுதான். மேலும், தென் மாவட்டங்களில் சாதி விட்டு சாதி காதலிப்பவர்கள் அனுபவிக்கும் பயம், பதட்டம் மிக இயல்பாக படத்தில் பதிவாகி உள்ளது. நாயகியின் தந்தை, காதலர்களின் இறப்பிற்குப் பிறகு தனது சாதீய உணர்வை கைவிடுவதாக காட்டப்பட்டுள்ளது திரைப்பட பாணியிலானது (cinematic) எனக் கூற இடமுள்ளது. 

இப்படத்தின் நாயகனின் பாத்திரமும் மிக இயல்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது, உள்ளுர (உயர்சாதிப் பெண்மீது) காதல் வயப்பட்டவன், முன்னுள்ள சாத்தியங்களில் ஒன்றைத்தான் இயக்குனர் இப்படத்தில் பதிவு செய்துள்ளார். இன்னொரு சாத்தியம் வெளிப்படையாக போராடுவது. அதை இன்னொரு தாழ்த்தப்பட்ட வாலிபன் பாத்திரத்தின் மூலம் இயக்குனர் நிறைவேற்றுகிறார். காதல் பட நாயகன் பாத்திரமும் மிக இயல்பான படைப்புதான். அவனிடம் ஒரு சிறு எதிர்ப்பு கூட இல்லை. போர்க்குணம் சிறிதும் அற்றவனாக சித்தரிக்கப்பட்டுள்ளான். அது அவனை இறுதியில் ஒரு மன நோயாளியாக்குகிறது. பருத்திவீரன் நாயகன் ஒரு இயல்பு மீறிய படைப்பு. மேலும், இயக்குனரின் பார்வை திணிக்கப்பட்ட படைப்பு அது. அங்காடி தெரு நாயகன் காதல் வயப்பட்ட ஒரு பையன் அவ்வளவே. 

தமிழகத்தில் பொதுவாக மதக் கலவரங்கள் இல்லையெனினும், சாதி கலவரங்களுக்கு குறைவில்லை. தமிழர்கள் தங்களை சாதி ரீதியாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் இது அதிகம். தென் மாவட்டங்களில் சாதி ஒவ்வொரு புள்ளியிலும் வெளிப்படையாக செயல்படுவதை அறியமுடியும். அவர்களின் அன்றாட வாழ்வில் சாதி ஒரு மிக முக்கிய அங்கமாகும். இதில் ஒடுங்கும் சாதியும், ஒடுக்கும் சாதியும் அடங்கும். தென் மாவட்டங்களை களமாகக் கொண்டு படம் எடுக்கும் எவரும், சாதியை தவிர்ப்பது என்பது கடினம். இது அனைத்து தமிழக மாவட்டங்களுக்கும் ஒரளவு பொருந்தும். கமலஹாசனின் விருமாண்டி போன்ற படங்கள் தென் மாவட்டங்களில் மிக வெற்றிகரமாக ஓடியது. காரணம் யாவரும் அறிந்ததே, “சாதி”. ஆகவேதான், நமது இயக்குனர்களும் ஒரு குறிப்பிட்ட சாதியை நேரடியாகவோ, மறைமுகவாகவோ ஆதரித்து படம் எடுக்கிறார்கள். மேலும், ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அங்கீகாரமும், ஆதரவும் கூட காரணமாகலாம். 

எப்படியிருப்பினும் நாம் சாதியை மீறி படமெடுக்க பல வெளிப்புற தடைகள் உள்ளன. நம் இயக்குனர்களுக்கு அகத் தடைகளும் இல்லாமலில்லை. இவைகள் களையப்படும்வரை, நம் திரைப்படங்களில் சாதி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிக்கப்பட்டு வருவதை தவிர்க்க இயலாது. 

கட்டுரையாளர் ஆய்வு நோக்கில்தான் இப்படங்களை அணுகியுள்ளார். அவர் எந்த சாதிக்கும் ஆதரவாளரும் இல்லை, எதிர்ப்பாளரும் இல்லை. வாசகர்கள் ஆய்வு நோக்கில் மட்டுமே இக்கட்டுரையை அணுகும்படி கட்டுரையாளர் வேண்டுகிறார்.

- ம.ஜோசப் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It