மனித உரிமை மீறல் என்றவுடன், எல்லோர் மனதிலும் நிழலாடுவது காவல் துறைதான். சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல் துறையினர், அதை மிதிப்பதில் முதலிடத்தில் உள்ளனர்.அண்மைக்காலமாக, மனித உரிமை செயல்பாட்டாளர்கள்தான் காவல் துறையின் ஒரே இலக்காக மாறியுள்ளனர். இதனையொட்டி காவல் துறையின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு, "மனித உரிமை' என்ற சொல்லைப் பதிவு பெறாமல் பயன்படுத்துவதைத் தடைவிதித்து ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் காவல் துறை தனக்கு எதிராக செயல்படுகின்ற மனித உரிமை ஆர்வலர்களை மிரட்டுகிறது.

luci_300கடந்த மாதம் மதுரையில் நடைபெற்ற தலித் மனித உரிமைக் கண்காணிப்பு தொடர்பான பயிற்சியில் பங்கேற்ற 5 பேர், கள ஆய்விற்காக திருநெல்வேலி காவல் நிலையம் சென்றபோது, போலிசார் அவர்களை கைது செய்து, “மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி திபேன் தூண்டுதலின் பேரில் இவர்கள் 5 பேரும், தங்களை அரசு ஊழியர்கள் எனக் கூறிக் கொண்டு, எங்களை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்தனர்'' என போலிசாரே புகார் எழுதிக் கொண்டு, வழக்கும் பதிவு செய்து, 5 பேரையும் சிறையில் அடைத்து, தங் கள் ஆவேசத்தைத் தணித்துக் கொண்டனர்.

வழக்குரைஞர் லூசி – விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுகின்ற மனித உரிமை ஆர்வலர்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர். சமூக அவலங்களுக்கு ஆளாகி, ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருபவர். ரீட்டாமேரி என்கிற பெண் செஞ்சி சிறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் சிறைக்காவலர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதில் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்று பாதிக்கப்பட்ட பல்வேறு பெண்களையும் பாதுகாத்து, உதவி வருகிறார்.

அண்மையில் லூசியை எதிர்த்து, “வளத்தி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை தரக்குறைவாகப் பேசியும், பணி செய்ய விடாமல் தடுத்தும் – காவல் நிலைய அதிகாரிகளையும், காவலர்களையும் மிரட்டும் பிளாக்மெயில் பேர்வழி பெண் தாதா லூசியை கைது செய்! இவண் : தமிழ் நாடு ஓய்வுபெற்ற காவலர்கள் நலச்சங்கம், விழுப்புரம் மாவட்டம்'' என்றொரு சுவரொட்டி – விழுப்புரம் மற்றும் செஞ்சி நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

23.7.10 அன்று 14 வயதான அருண் என்கிற இருளர் சிறுவனை, சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்ற வளத்தி காவல் நிலைய போலிசார், திருட்டு வழக்கு ஒன்றை ஒத்துக் கொள்ளச் சொல்லி மிரட்டியுள்ளார். தான் திருடுகின்ற பையன் இல்லையென மறுத்த சிறுவன் அருணை அடித்து, துன்புறுத்தியுள்ள னர். இதைத் தடுத்த அருணின் தந்தையை யும் தாக்கியுள்ளனர் போலிசார். கணவனும், மகனும் படும் கொடுமையைக் கண்டு செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளார் செல்வி.

அப்போது வேறொரு வழக்கிற்காக வளத்தி காவல் நிலையம் சென்ற வழக்குரைஞர் லூசியிடம் செல்வி உதவும்படி கேட்டுள்ளார். லூசியும் போலிசாரிடம், “விசாரிச்சி, சம்பவத்துல தொடர்பிருந்தா வழக்கு போடுங்க. அதவிட்டுட்டு ஒரு சின்ன பையன எதுக்கு சார் இப்படி அடிச்சிருக்கிங்க'' என்று கேட்டுள்ளார். அப்போது காவல் நிலைய எழுத்தர் ராதாகிருஷ்ணன், இதை வீடியோ எடுத்துள்ளார். இதைக் கண்ட லூசி இதையும் பதிவு செய்யுங்கள் என சிறுவன் அருண் காயம்பட்டிருந்த கைகளை தூக்கிப் பிடித்து காட்டியுள்ளார். அப்போது மிகுந்த கோபத்துடன் அங்குவந்த ஆய்வாளர் அப்பாசாமி, லூசியை இழுத்துத் தள்ளி, “இவ மீதும் கேஸ் போடுங்கப்பா, பொம்பள போலிசை கூப்பிட்டு, பிராத்தல் கேசா போடுங்க'' என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய லூசி, அருணின் தந்தை குப்புசாமியை செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு, மாவட்ட காவல் உயரதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டு, வளத்தி போலிசாரின் அத்துமீறல் குறித்து புகார் அளித்துள்ளார். அடுத்த நாள் சிறுவன் அருணை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, போலிசார் துன்புறுத்தல் குறித்து உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார். சிக்கலுக்குள் மாட்டுவதை உணர்ந்த ஆய்வாளர் அப்பாசாமி, அருண் மீது திருட்டு புகார் கொடுத்த காசியம்மாளை அழைத்து, “புகார் கொடுக்கக் கூடாது என பேசி வக்கீல் லூசி மிரட்டினார்'' என புகார் எழுதி வாங்கி, 25.7.10 அன்று லூசி மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் செஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்துதான் மேற்கண்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை போலிசார் ஒட்டியுள்ளனர். பொய்வழக்குப் போடுவதுடன், காவலர் நலச்சங்கம் என்கிற போலியான அமைப்பின் மூலம் பொய்ப்பிரச்சாரம் செய்து, மனித உரிமையாளர்களை மிரட்டும் திருட்டுவேலைகளை செய்கின்றனர்.

ஹென்றி திபேன் ஆகட்டும், லூசியாகட்டும் மனித உரிமையாளர்கள் மீது போடுகின்ற அனைத்து வழக்குகளுமே “பணி செய்யவிடாமல் தடுத்தார்கள்'' என்பதுதான். வழக்கு பதியவும், பதியாமலிருக்கவும், பொய் வழக்கு போடவும், போடாமலிருக்கவும், கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராய ஏலம் என எல்லாவற்றிலும் போலிசார் லஞ்சம் வாங்குகின்ற பணியினைச் செய்யவிடாமல் தடுப்பதைத்தான், “பணி செய்யவிடாமல் தடுத்தார்கள்'' என வழக்குப் போடுகின்றார்களே என்னவோ?

Pin It