துக்ளக் என்றொரு வார ஏடு. அதில் இப்படி ஒரு கேள்வி - பதில்.

கேள்வி : இந்தியாவில் வேறு எந்த மொழிக்கு, இதுபோன்ற ஆடம்பர மாநாடு நடந்தது என்று கூறமுடியுமா?

பதில் : கூறமுடியாது. அப்படி நடக்காததால்தான் அந்தந்த மொழிகளெல்லாம் அழிந்து போய்விட்டன. தமிழைத் தவிர மற்ற மொழிகள் எல்லாம் இப்படி அழிந்து விட்டதால், மற்ற மொழி மக்கள் “பே...பே....ப...பா...” என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்.

அடடா! என்ன மேதாவித்தனம் ராமசாமி சோவிற்கு !

சமஸ்கிருதம் செம்மொழி என்று கூத்தடித்தும், இன்று அந்தமொழி சோவின் பாஷையில் “பே... பே...ப...பா” என்றுதானே சொல்லவேண்டும் ! தன் முதுகைச் சொறிந்து கொள்ளாமல் அடுத்தவன் முதுகைச் சொறிந்து கொண்டிருக்கும் இந்த மகாமேதாவி தமிழில் பேசுவார், தமிழில் எழுதுவார், தமிழில் பத்திரிகை நடத்துவார் ஆனால் தமிழை நஞ்சாக உமிழ்வார். பிறகு, எப்படித் தமிழுக்குச் சிறப்பு சேர்க்கும் செம்மொழி மாநாட்டை ஏற்பார் அவர்? - எல்லாம் பிறவிப் பயன்.

துர்வாசருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் இந்த மகாமேதாவி ‘செம்மொழி மாநாட்டுக்கு ஏன் விடுமுறை?’ என்ற தலைப்பில் இப்படி எழுதுகிறார். “தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக் கூட லாயக்காக மாட்டோம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் விழுந்து விழுந்து படிக்கிறார்கள் என்கிறார் ராமசாமிச் சோ !

அப்படியானால் தமிழ் படித்த உ.வே.சாமிநாத ஐயர், பரிமாற்கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரி, மு. இராகவ அய்யங்கார், ரா. இராகவ அய்யங்கார் இவர்கள் எல்லோரும் சட்டி சுரண்டுகிற வேலைக்குக் கூட லாயக்கில்லை என்கிறாரா சோ? அல்லது ஒருவேளை இந்த தமிழாய்ந்த ஐயர்வாள்கள் சமஸ்கிருதத்தை ஆராயவில்லை என்று மறைமுகமாக இப்படி ‘சட்டி சுரண்டிகள்’ என்று சாடுகிறாரோ என்னவோ ! அவருக்கே அது வெளிச்சம்.

- மாதியக் கவிராயர்

Pin It