செல்வம் கடவுளால் உண்டாக்கப்பட்டதானால், ஏழையும் பணக்காரனும் கடவுளால்தான் உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப்படி ஒரு கடவுள் மூன்றையும் படைத்து – ஏழைக்கும், பணக்காரனுக்கும் வாங்கும் – கொடுக்கும் உத்தியோகம் கொடுத்து, இதற்குக் கணக்கு எழுதி வைத்து, அவனவனுக்குத் தகுந்த மோட்ச நரகத்துக்கு அனுப்பும் வேலையில் கடவுள் ஈடுபட்டிருக்கிறார் என்றால், கடவுள் பக்தர்கள் கடவுளைப் பரம முட்டாளாகவும் பரிசுத்த மடையனாகவும் சிருஷ்டிக்கிறார்களா? அல்லது கடவுளைப் பரம கருணாநிதியாகவும், பாரபட்சமற்ற தந்தையாகவும் சிருஷ்டிக்கிறார்களா? என்று கேட்கிறேன்.Periyar

ஏழையை சிருஷ்டிப்பானேன்? பணக்காரனை சிருஷ்டிப்பானேன்? ஏழையைப் பணக்காரனிடம் போய் கெஞ்சும்படி செய்வானேன்? பணக்காரன் தனக்கு இஷ்டமிருந்தால் கொடுப்பதும், இஷ்டமில்லாவிட்டால் கொடுக்காமல் ஆளைவிட்டுக் கழுத்தைப் பிடித்துத் தள்ளச் சொல்வதும் ஏன்? என்பவைகளை யோசித்துப் பார்த்தால், முதலில் இந்தத் தத்துவம் உண்மையாய் இருக்குமா என்பதே பெரிய சந்தேகமாய் இருப்பதோடு, பரிசுத்த ஆஸ்திகத் தன்மையுடன் கடவுளை சிருஷ்டித்துப் பிரச்சாரம் செய்கின்ற மக்கள் – எவ்வளவு முட்டாள்களாய் இருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடை மலையாகும்.

கடவுள் பார்த்து ஓர் உத்தரவில் அல்லது ஒரு சங்கற்பத்தில், ‘எல்லாப் பொருளும் எல்லா மக்களுக்கும் பொதுவாய் இருக்கத்தக்கது' என்று செய்துவிட முடியாதா என்று கேட்பதோடு, எல்லா ஜீவன்களையும் தானே சிருஷ்டித்து, தானே நடத்துகின்றவனாய் இருக்கிறபடியால் – ஒன்றை ஒன்று துன்புறுத்தவோ, ஒன்றை ஒன்று கொன்று தின்னவோ கூடாது என்று நிர்ணயித்துவிட முடியாதா என்று கேட்கின்றேன். உண்மையாகவே ஒரு யோக்கியமான கடவுள் இருந்தால், இதைச் செய்திருக்க மாட்டாரா என்றும் கேட்கின்றேன். இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்தரவுப் போட்டு – பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்து விட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன்.

ஆதலால் தர்மம் – பிறத்தியானுக்குப் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் – பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர, பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானவையல்ல. ஏனெனில், பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தாம், இல்லாத ஏழை மக்களை – தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும், பணக்கார மக்கள் மீது ஏழை மக்களுக்குக் குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும் ‘ஜக்காத்' என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ – அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.

இந்தக் கருத்தை வைத்தே திருவள்ளுவரும் ‘பிச்சை எடுத்து வாழ வேண்டிய மனிதனைக் கடவுள் சிருஷ்டித்திருப்பானேயானால், அக்கடவுள் இல்லை என்றுதான் அர்த்தம். அவன் இருந்தாலும் ஒழிய வேண்டியதே அவசியம்' என்று சொல்லி இருக்கிறார். திருவள்ளுவர் நூலில் முன்னுக்குப் பின் முரண்கள் பல இருந்தாலும், அவர் ஒரு தனியுடைமைக்காரரேயானாலும் இந்த ஒரு விஷயத்தில் தைரியமாய்ச் சொல்லி இருக்கிறார்.

ஆனாலும், இதற்கு முரணாக மற்றொரு இடத்திலும் சொல்லியிருக்கிறார். அதாவது, ‘தர்மம் செய்தவனையும் பாவியையும் பார்க்க வேண்டுமானால் – பல்லக்கில் போகிறவனையும், பல்லக்கு சுமப்பவனையும் பார்' என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்து தர்மம் செய்ததினாலேயே பல்லக்கில் போகும்படியான செல்வவானாகப் பிறந்தான் என்றும், தர்மம் செய்யாததனாலேயே பல்லக்குத் தூக்கும் தரித்திரனாகப் பிறந்தான் என்றும் சொல்லுகிறார்.

அப்படியானால் ஏழை – பணக்காரத் தன்மையை திருவள்ளுவர் ஆதரிக்கிறார் என்பதாக ஒரு புறத்தில் விளங்குகிறது. இந்த முரணும் மயக்கமும் ஏற்பட்டதற்குக் காரணம், இவருக்குக் கடவுள் தன்மையில், ஆத்மார்த்தத்தில் இருக்கும் நம்பிக்கையேயாகும். கடவுள் தன்மை அதாவது, மனிதத் தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது – அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு என்று எவன் கருதினான் ஆனாலும் அப்படிப்பட்டவன் – முன்னுக்குப் பின் முரணாகவும், தனி உடைமைக்காரனாகவும், உயர்வு தாழ்வுகளை ஆதரிக்கிறவனாகவும் இருந்துதான் தீருவான்.

எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால் – பிச்சை கொடுப்பதும், பிச்சை எடுப்பதும் சட்டவிரோதமான காரியங்களாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான், மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும், ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.

(குடி அரசு கட்டுரை - 21.4.1945)
Pin It