தொண்ணூறுகளில் எனக்கு அவர் அறிமுகமானார். ஐம்பதுக்கும் அவருக்குமிடையில் ஓரிரு நாட்காட்டிகளே அநேகமாக மிச்சமிருந்திருக்க வேண்டும். "இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்" விலைவாசி உயர்வைக் கண்டித்து அறைகூவியிருந்த "சிறை நிர‌ப்பும்" போராட்டத்தில்தான் அவரை முதன் முதலாய் சந்திக்கிறேன். சிறை செல்லும் தோழர்களை வாழ்த்திப்பேசி வழியனுப்பி வைக்க இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட இன்றைய செயற்குழுவின் உறுப்பினரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அன்றைய செயலாள‌ருமான தோழர்.ஜெயசீலன் அழைத்திருந்தார்.

வாழ்த்தி முடித்ததும் முரட்டுக் கரமொன்று என் கரம் பற்றிக் குலுக்கியது. கைகளை உதற வேண்டும் போலிருந்தது. அவ்வளவு வலி. நமது பலவீனத்தை நாமே அம்பலப்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையோடும் ஒரு புன்னகையோடும் அவரை நிமிர்ந்து பார்க்கிறேன். வேட்டி, சட்டை, முண்டாசு எல்லாமே அழுக்கு. கனத்து சிரித்தும் அதைவிட அதிகமாய் குரலெடுத்தும் பேசுகிறார்.

"மாரியம்மன் ஸ்கூல்லயா வேல பாக்குற? ரொம்ப புடிச்சிருக்கு ஜெயில்ல இருந்து வந்ததும் உன்ன வந்து பாக்குறேன், வாத்தியாரே"

"அழுக்குக் கம்பீரம்" அல்லது "கம்பீரமான அழுக்கு" இரண்டில் எது சரி என்று தெரியாது. ஆனால் எது சரியோ அது அவரிடம் இருந்தது.

இளைஞர்கள் ஒருவர் பின் ஒருவராய் ஒரு ஒழுங்கான வரிசையில் சென்று தங்களது ரேகை, பெயர், மற்றும் முகவரிகளை காவலரிடம் பதிந்து கொண்டிருந்தார்கள். இவரும் வரிசையில் போகிறார். நான், ஜெயசீலன், இறந்துபோன பால்ராஜ், அந்த நாட்களில் "தோழர்" என்பதுதான் இவரது பெயர் என்று சமயபுரம் சுற்றுப்பகுதி மக்களால் அறியப்பட்டிருந்த தோழர்.கருப்பையா எல்லோரும் வட்டம் கட்டி பேசிக் கொண்டிருந்தோம்.

திடீரென வெடித்த பெருஞ்சத்தத்தைக் கேட்டு அந்தத் திசை நோக்கி திரும்பினோம். அவர்தான் பெருங்குரலெடுத்து காவலரோடு விவாதித்துக் கொண்டிருந்தார்.

"இது வாலிபர் சங்க போராட்டங்கறாங்க. இதுல நீ ஏன்யா? போயா" என்று காவலர் விரட்ட

"நான் கைதாகக் கூடாதுங்கறதுக்கு நீ என்னய்யா அன்னாவி. நீ பேசாம ஓம் வேல என்னவோ அதோட நில்லு"

"இல்ல இது சின்னப் பசங்களோட சிறை நிறப்பும் போராட்டம். இதுல நீ ஏன்யா?". காவலரும் விடாமல் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.

அதற்கு கொஞ்சமும் அசராமல் அவர் சொன்ன பதில்தான் என்னைக் கவ்வி இழுத்துப் போய் அவரிடத்தில் தள்ளியது.

"சின்னப் பசங்க நடத்தற போராட்டந்தான். நான் என்ன கெழவங்க நடத்தற போராட்டம்னா சொன்னேன். அவங்க கொடுத்த நோட்டீஸ்லயும் அடிச்சு ஒட்டுன போஸ்டர்லயும் 'எங்கள் போராட்டத்தில் நியாயம் காண்கிற உணர்வுள்ள பொது மக்களே ஆதரவு தாரீர்' போட்டுருக்காங்க பாரு." தனது பாக்கெட்டிலிருந்து ஒரு துண்டு பிரசுரத்தை எடுத்து நீட்டுகிறார்.

"இது எதுக்குய்யா இப்ப எனக்கு?" காவலரின் சுருதி கொஞ்சம் குறைகிறது.

"ம்ம், அடங்கு. அந்தப் பசங்க நடத்துற போராட்டம் நியாயம்னு படுது, உணர்வுள்ள ஒரு பொது ஜனமா ஆதரவு தாரேன். இந்த நோட்டீஸ படிச்சுப் பாரு. உனக்கும் நியாயம்னுதான் படும். உணர்வு இருந்துச்சுன்னா உடுப்ப கழட்டிப் போட்டுட்டு இப்படி வந்து வரிசைல நில்லு"

எங்க விட்டா தன்னையும் உள்ள கூட்டிட்டு போய் விடுவாரோ என்ற பயம் கவ்வியிருக்க வேண்டும். "மோசமான பொம்பள. எப்ப வெளிய விடுமோ தெரியல. வயசான காலத்துல எதுக்கு கஷ்டம்னு சொன்னேன். எனக்கென்ன? ." என்றவர் "சரி, சரி பேர சொல்லு" என்றார்.

"தமிழிந்தியன்"

"அவர் பேரே தமிழிந்தியன்தானா, ஜெயா? "

"ஆமாம் தோழர். "

"அப்பா அம்மா வச்ச பேரா? இல்ல புனை பேரா?"

"ரெண்டும் இல்ல. இது இவர் தனக்கு தானே வைத்துக் கொண்ட பெயர்."

நான்காம் வகுப்பைத் தாண்டாத ஒரு கூலித் தொழிலாளி தமது பெற்றோர் வைத்த பெயர் பிடிக்காமல் தனக்குத் தானே பெயர் வைத்துக் கொள்வதும் அதுவும் இப்படி ஒரு பெயரை தெரிவு செய்ததும் ஆர்வத்தை கொந்தளிக்கச் செய்தது. சினிமாவில், தொலைக் காட்சியில், பண்பலைகளில் "சும்மா அதிருதில்ல" என்று ஓராயிரம் முறை கேட்டும் இப்போது கொஞ்சமும் அதிராத அறுபது கிலோ உடம்பும் அன்றைக்கு சத்தியமாய் நிறையவே அதிர்ந்தது.

எனக்கு அவரையும் அவருக்கு என்னையும் நிறையப் பிடித்துப் போனது.

சிறையிலிருந்து வந்தது முதல் எங்களது நட்பு விரிந்தது. நிறையப் பேசினோம் என்று சொல்ல முடியாது. வழக்கமாக நிறைய பேசும் நான் நிறைய கேட்டேன். பேசினார், பேசினார், பேசிக் கொண்டே இருந்தார். சலிக்கவே சலிக்காது. உலக வரலாறு அவருக்கு அத்துப் படியாய் இருந்ததும் அவரது பூகோள‌ அறிவும் என்னை இன்றுவரை வியக்க வைப்பவை.

"ஜெர்மென்ல எல்லாத் துறைக்கும் மத்திய அமைச்சர் உண்டு எட்வின். ஆனா கல்விக்கு மட்டும் மத்தியில் அமைச்சர் இல்லை. அவனுக்குத் தெரியும் கல்வி பிராந்தியங்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கணும் என்பது. இங்கதான் எல்லாம் தலைகீழா இருக்கே. எப்படி வாத்தியாரே கல்வி விளங்கும்?"

இதை அவர் சொல்லிக் கேட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. சில மாதங்களுக்கு முன்னால் ஜெர்மென் சென்று திரும்பிய ஒரு உயர் அதிகாரி மிகுந்த வியப்போடு இதே செய்தியை பகிர்ந்து கொண்ட போது அவர்மேல் இருந்த ஆச்சர்யம் கூடியது.

நான்காம் வகுப்பே தாண்டாத ஒரு மனிதனுக்கு எப்படி இது சாத்தியம்?.

அவர் ஒரு முறை சொன்னார். "மாடு மேய்க்கிறவந்தான் நான். ஆனா மாடு மேய்க்கிறபோதும் வாசிக்கிறேன். நூலகம் போகிறேன். அது தாண்டி கட்சியின் (மார்க்சிஸ்ட்) அரசியல் வகுப்புகளில் நிறைய பாடம் எடுத்துக்கிட்டேன். ஆனா படிக்க வேண்டிய வாத்தியாருங்க அவ்வளவா படிக்க மாடேங்குறீங்களேப்பா"

ஆசிரியர் அறையில் அமர்ந்து கொண்டு இதை அவர் பேசியபோது நண்பர்கள் கொஞ்சம் நெளிந்தார்கள்.

சாலையில் அவர் தானே பேசிக் கொண்டு நடப்பதாக சொன்னார்கள். ஏன் சிலர் பச்சையாக அவருக்கு மறை கழன்று விட்டதாகவும் சொன்னார்கள். நான் அது பற்றியெல்லாம் கவனம் செலுத்தவே இல்லை.

அவர் தினமும் பள்ளிக்கு வருவார், பேசுவார், துரை கடையில் ஒரு தேனீர், ஒரு ரூபாய்க்கு மூக்குப் பொடி அவ்வளவுதான் போய்விடுவார். சமயங்களில் " வாத்தியாரே, ஒரு ரெண்டு ரூபா கொடு எனக் கேட்பார். எப்போதேனும் புத்தகம் வாங்க காசு கேட்பார்.

அன்றைக்கும் வந்தார். "வா வா டீ சாப்பிடலாம்" அவர் காட்டிய அவசரம் புதிது. தேனீர்க் கடைக்குப் போனோம். அஞ்சு ரூபாய்க்கு இல்ல இல்ல பத்து ரூபாய்க்கு பொடி கட்டு என்றார். சிரித்துக் கொண்டே "என்ன தோழா, கடை வைக்கப் போறீங்களா?" என்றேன். பதிலுக்கு புன்னகைத்து விட்டு போய்விட்டார்.

கொஞ்ச நேரத்தில் சமயபுரமே கலேபரப்பட்டது.

அன்று ஒரு கொலையை செய்துவிட்டு நேரே வந்திருக்கிறார். என்னைப் பார்த்து விட்டு நேரே காவல் நிலையம் போய் சரண்டர் ஆகியிருக்கிறார்.

நடந்தது இதுதான். வெட்டிக் கட்டிய விறகை விற்பனைக்காக சுமந்து வந்திருக்கிறார். பாலக்கட்டையில் மப்பில் அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவன் "உடையாரே" என இவரை அழைத்திருக்கிறான். நம்மாளுக்கு "ஜாதி" சுத்தமாய் பிடிக்காது. அதுவும் ஜாதியால் தான் அடையாளப்படுத்தப்பட்டல் கோவம் வரும். இது அந்த இளைஞன் உட்பட அனைவருக்கும் தெரியும்.

"டேய் இது நல்லா இல்ல. "மசுரான்"னு வேணாலும் கூப்பிடு. ஜாதிய வச்சு கூப்பிடாத. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்"

போதையில் இருந்த அவனும் விடாது " நான் அப்படித்தான் சொல்லுவேன். என்ன செய்வியோ செய்" என்று சீண்டியிருக்கிறான்.

விறகுக் கட்டில் அரிவாள்.

விளைவு அவன் கல்லறியிலும் இவர் சிறையிலும்.

அவரைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவரைச் சீண்டிய இளைஞனா? இல்லை இதற்குப் போய் கொலை செய்த தமிழிந்தியனா? யாரை குற்றப் படுத்துவது?

கொப்பளிக்கும் வாலிபத்தோடு இருந்த வீரியம் மிக்க இளைஞனை வேலை தராமல் பாலத்தில் உட்காரவைத்த அரசாங்கங்களின் மீதே என் சுட்டு விரல் பாய்கிறது.

-இரா.எட்வின் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It