முப்பத்தைந்து குழந்தைகளுக்கு அளித்த பயிற்சியின் அனுபவப் பகிர்வாக வசீலி சுகம்லீன்ஸ்கி ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூல் 1980இல் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் மறுவரைவாக தமிழில் தற்போது ‘கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி’ வெளிவந்துள்ளது. தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தாய்மொழிப் பயிற்சியின் அவசியமும் இந்நூலில் உணர்த்தப்பட்டுள்ளது. இயற்கை வளங்களின் மீது சிறுவர் களுக்கு உள்ள அலட்சிய உணர்வைப் போக்கி, எதிர்கால சமூகத்தை மேம்படுத்துவதில் அவர்களுக்கு உள்ள பங்கை அறியச் செய்வதையும் நூல் சிறப்பாகச் செய்துள்ளது. அன்றாட வாழ்வில் நாம் நுகரும் அத்தியாவசியப் பொருட்கள், அதன் உற்பத்தி - பரவலாக்கம், அவற்றின் அவசியம் முதலியனவற்றை அறிந்துகொள்ளும் பயிற்சியையும் இப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் போக்கில் நூல் அமைகிறது. வாழ்க்கையின் பல பரிமாணங்களைப் பதினோரு வயதிற்குள் அறியவைத்தல் என்ற நோக்கத் தினை செயல்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகள் அடங்கியதாகக் கற்க கற்பிக்க மகிழ்ச்சிதரும் பள்ளி எழுதப்பட்டுள்ளது.

குழந்தைகளின் கற்றலை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்த மாதிரிகள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பாக ‘எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்’ நூல் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் ஒவ்வொரு நிகழ்வினையும் எந்தெந்தக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர், அதன் வெளிப்பாடு, அவற்றைத் தனக்கான ஒன்றாக மாற்றிக்கொள்வதில் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள், அதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த பார்வைப் பதிவாக ‘எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்’ வெளிவந்துள்ளது.

தோல்வியுற்ற மாணவர்களின் குரலாக தமிழில் வெளிப்பட்டுள்ள ‘எங்கள ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?’ ஒரு முக்கியமான நூல். Letter to a teacher என்ற ஆங்கில நூலின் அறிமுகமான இந்நூல் எட்டு மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தின் சாரம். இனப்பிரிவினையை நடைமுறைப்படுத்துவ தற்குக் கையாளப்படும் கருவியாகவும், அறிவுசார் தேடுதல்களை ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் அறியச் செய்வதில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிப்பதாகவும் உள்ள பள்ளிக் கல்விமுறை யின் முரண்பாடுகள் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

நம்மைச் சுற்றிய உலகில் இயற்கை - அதனோடு இணக்கமான உறவுடைய மக்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களுள் பழங்குடிகள், விவசாயிகள், குயவர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், நாவிதர்கள் முதலானவர்களின் மீது நன்மதிப்பை மாணவர் சமுதாயத்திடம் உருவாக்கும் நோக்கத் துடன் ‘பானை செய்வோம் பயிர் செய்வோம்’ எழுதப்பட்டுள்ளது. சமூக உருவாக்கத்திலும் இயக்கத்திலும் இவர்களின் உற்பத்திக்கும் பங்களிப்பிற்கும் உள்ள இணக்கமான உறவு குழந்தைகளுக்கான நடையிலேயே விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அதற்கு துர்காபாய்வ்யாம் ஓவியங்கள் நன்கு துணைபுரிந்துள்ளன.

ச.தமிழ்ச்செல்வனின் ‘இருளும் ஒளியும்’ நூலில் தனது அறிவொளி இயக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அறிவொளிக் கல்வியையும் ஒரு பார்வை யில் குழந்தைக் கல்வியாகவே பார்க்கவேண்டியுள்ள அவசியத்தின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்கச் செயல்பாடுகளுக்குச் சிலநேரங்களில் துணையாகவும் பல நேரங்களில் தடையாகவும் இருந்த அரசு இயந்திரம், அலுவலர்கள் பற்றியும் பகிர்ந்துகொள் வதோடு அறிவொளி காலத்தில் தான் சந்தித்த முகங்களைப் பற்றி உருக்கமாகக் கூறுகிறார். அரசு இயந்திரத்தையே முழுக்க முழுக்க நம்பிச் செயல்படும் இயக்கங்கள் ஒரு நாளில் காணாமல் போகிற நிகழ்வு நாம் அறிந்த ஒன்றுதான் என்றாலும், அந்தப் பாதையில் அறிவொளி இயக்கத்தை விட்டுவிடாமலிருக்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் செய்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கது.

Pin It