mgr periyarஈரோடு அர்பன் பாங்கி டைரக்டர்கள் (நிர்வாகஸ்தர்கள்) தேர்தல் இம் மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. அதில் இப் பாங்கி ஏற்பட்டு இதுவரை இல்லாத அளவு ஊக்கமும் பரபரப்பும் காணப்பட்டது.

கடைசியாக 9 பார்ப்பனரல்லாதாரும் 2 பார்ப்பனரும் தெரிந்தெடுக் கப்பட்டார்கள். பார்ப்பனக் கோட்டையாயும் அவர்களது உண்மை சிஷ்யர்களுக்குத் தவிர மற்றவர்களுக்கு மழைக்குக்கூடத் தங்குவதற்கு இடமில்லா திருந்த இந்த அர்பன்பாங்கி பார்ப்பனரல்லாதார் இரண்டொருவரின் தியாகத்தின் காரணமாய் அவர்கள் வெளிப்படையாய் “கெட்டபேர்” வாங்கத் துணிந்ததின் காரணமாய் 9 பார்ப்பனரும் இரண்டு பார்ப்பனரல்லா தவருமாய் இருந்த ஸ்தாபனம் நாளாவட்டத்தில் சுயமரியாதை உணர்ச்சி யேற்பட்டு இப்போது 11-பேர்களில் 9-பேர் பார்ப்பனரல்லாதார் டைரக்டர்களாய் வர முடிந்தது. இதுவும் சரியான தேர்தல் என்று நம்மால் சொல்லிவிட முடியாது.

தீண்டாதார் வகுப்புக்கு ஒரு டைரக்டரும் பெண்கள் வகுப்புக்கு குறைந்தபக்ஷம் ஒரு டைரக்டரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அது உண்மையான பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியென்றே சொல்லலாம். அன்றியும் இப்போது தெரிந்தெடுக்கப்பட்ட 11 பேர்களிலும் வக்கீல்களும் பாங்கர் களுமே 100க்கு 90-வீதம் டைரக்டர்களாகி இருக்கின்றார்களே ஒழிய யாருடைய உபயோகத்திற்கு, யாருடைய நன்மைக்கு என்று அர்பன் பாங்கிகள் ஏற்பட்டனவோ அந்தக் கூட்டத்தாரின் பிரதிநிதிகளை பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேடிப்பிடிக்க வேண்டியதாய் இருக்கின்றது. ஆதலால் அடுத்த தேர்தல்களில் இம்மாதிரியாக அதாவது பார்ப்பனர்கள் கையில் இருந்து பறிக்கப்பட்ட ஸ்தாபனம் மற்றொரு வழியில் அவர்களைவிட மோசமானவர்களான லேவாதேவிக்காரர்கள் கைக்கும், முதலாளிகள் கைக்கும் போகாமல் தொழிலாளர்கள் கைக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் கைக்கும் போகும்படியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே விரும்பு கின்றோம்.

தகுதியானவர்கள் கிடைப்பதில்லை என்கின்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு உலகம் உள்ள நாள் அளவும் ஏமாற்றுவது என்பது பார்ப்பன சூக்ஷிகள் எல்லாவற்றையும்விட மோசமான சூக்ஷியேயாகும்.

அன்றியும் பாங்கி நிர்வாக செல்வாக்கை மற்ற சுயநல சம்பந்த காரியங்களுக்கு உபயோகித்துக் கொள்ளும் உத்தேசமுள்ளவர்களுக்கு இதில் இடம் இருக்க நேர்ந்தால் அதுவும் ஒரு மோசமான காரியமாகும்.

ஆதலால் அடுத்த வருஷ தேர்தல்களில் ஓட்டர்கள் இன்னமும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். நிற்க தெரிந்தெடுக்கப்பட்ட டைரக்டர்களில் சிலர் தங்களுக்குத் தலைவர் ஸ்தானம் கிடைக்காது என்கின்ற காரணத்தால் தங்களுக்கு (அடங்கிய) மற்ற டைரக்டர்களையும் தேர்தலுக்கு போகவிடாமல் செய்யவும் கோரமே இல்லாமல் செய்யவும் முயற்சித்ததாகவும் தெரியவருகின்றது. இது அவ்வளவு மேன்மையான காரியமென்றோ, புத்திசாலித்தனமான காரியமென்றோ சொல்லிவிட முடியாது.

டைரக்டர்களில் யாருக்காவது, சொந்த விரோதம் இருந்தால் அப்படிப்பட்டவர் பாங்கியின் நன்மையைக் கோரி ராஜியாகப் பார்க்க வேண்டும். முடியாவிட்டால் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அல்லது தன்னாலான நன்மையைச் செய்ய சௌகரியமுள்ளபோது செய்து விட்டு சும்மா இருக்க வேண்டும். அப்படிக்கு இல்லாமல் தலைவராக வரக்கூடிய அளவு மெஜாரிட்டி பலம் இருக்கின்றவருக்குக் காரியத்தை நிர்வகிக்கச் சக்தியில்லை என்பதாக ஒரு சமயம் யாருக்காவது தோன்றினால் அப்படிப்பட்டவர் மெஜாரிட்டியாரையும் தன்னைப் போலவே மதித்து தனது அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாதவரை தன்னால் கூடிய உதவி செய்து நிர்வாகம் திறமையாய் நடைபெற உதவி செய்ய முன் வரவேண்டும்.

இவைகள் ஒன்றுக்கும் கட்டுப்படாமல் தனக்குக் கிடைக்கத்தக்க நிலைமை இல்லை என்று காணப்படாததாலேயே மெஜாரிட்டி அபிப்பிராயத்திற்கும், பாங்கியின் நன்மைக்கும் எதிரியாயிருந்து நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்குக் கட்சி சேர்ப்பதும், “ஒரு கை பார்க்கின்றோம்” என்பதும் பொது நலத்திற்கு விரோதம் என்பதோடு யோக்கியப் பொறுப்புக்கும் விரோதமான காரியமாகும் என்பது நமது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

அன்றியும் இந்த முட்டுக்கட்டையின் கெடுதியை அறியவும் மற்றும் பாங்கியின் நல்ல நிர்வாகத்திற்கு எதிரியாய் இருந்தவர்கள் யார் என்பதைத் தெரியவும் முடியாதபடி அவ்வளவு அறிவற்றவர்கள் என்று ஓட்டர்களை இந்த முட்டுக்கட்டைக்காரர்கள் நினைத்து விடுவார்களேயானால், அடுத்த தேர்தலில் அதன் பயனை அறியும்படி ஓட்டர்கள் செய்து விடக்கூடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். தவிர தொட்டதற்கெல்லாம் நிர்வாகத் திறமையைப் பற்றிப் பேசுவது 100க்கு 99 விஷயங்களில் மதிப்பற்றதாகவும், சுயநலங் காரணமான வார்த்தை என்பதாகவும் வரவரப் பொது ஜனங்களால் கருதப்பட்டு விட்டது.

இனி அதைப் பற்றிப் பேசுவது பேசுபவர்களுக்குத்தான் பகுத்தறிவில்லையென்று சொல்லப்படுமே தவிர மற்றபடி அது ஒப்புக்கொள்ளக் கூடிய காரியமாகாது என்றும் சொல்லுவோம். ஏனெனில் நிர்வாகத் திறமைக்கு அளவு எடுக்கும் கருவி எது என்ற பிரச்சினைக்கு மறுமொழி சொல்லுவது இம்மாதிரி ஆசாமிகளுக்குக் கஷ்டமான காரியமா யிருப்பதால்தான். மற்றபடி யாருடைய நாணையத்திலாவது ஒழுக்கத்திலாவது குற்றம் சொல்லக் கூடுமானால் அதை யாரும் கவனிக்க வேண்டிய தேயாகும்.

இப்பொழுது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் பிரசிடெண்ட், வைஸ் பிரசிடெண்ட் என்பவர்கள் நடவடிக்கையைப் பற்றிச் சொல்லப்பட்ட குற்றமெல்லாம் “இருவரும் விருதுநகர் சுயமரியாதை மகாநாட்டுக்குப் போய் விட்டு வந்தவர்கள்” என்றும், “பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி யுள்ளவர்கள்” என்றும் சொல்லப்படுவதை தவிர வேறொரு குற்றமும் இரகசியமாகவோ, வெளிப்படையாகவோ சொல்லப்படவே இல்லை.

(மேலும் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இதே பாங்கியில் சில காலம் டைரெக்டராகவும் பல தடவை முனிசிபல் கவுன்சிலராகவும் மகாஜன ஹைஸ்கூல் காரியதரிசியாகவும் மற்றும் லிமிடெட் பாங்கி வைஸ் பிரசிடெண்டாகவும் சொந்தத்திலேயே ஒரு பாங்கராகவும் இருந்து வருவதுடன் ஈரோடு பஞ்சாயத்துக் கோர்ட்டு பிரசிடெண்டாகவும் இருந்தவர்.) முன்னிருந்த பிரசிடெண்டுக்கும், வைஸ்பிரசிடெண்டுக்கும் இருக்கும் பெருமையெல்லாம் அவர்கள் பார்ப்பனர்கள் என்றும், ஒருவர் வருணாச்சிரம தர்ம சபைத் தலைவர் என்றும் மற்றவர் பார்ப்பன தர்மகர்த்தர் என்றும் சொல்லப்படுவதைத் தவிர மற்றபடி அவர்களைவிட இவர்களுக்கு வேறு விஷேசம் ஒன்றும் சொல்லப்படவேயில்லை. இந்தக் காரணங்கள் தேர்தல்களுக்கு யோக்கியதாபக்ஷங்களாகக் கவனிக்கப்படுமானால் அவரவர்கள் தங்களாலான வரையில் பார்க்க வேண்டியது நியாயமேயாகும். ஏனெனில் எப்போதாவது இந்தக் கலகம் முடிந்து தானாக வேண்டும். அதை வீணாக நாள் கடத்துவதில் பயனில்லை.

ஆகவே இதைத் தவிர அந்த பாங்கியின் நன்மையை உத்தேசித்தோ அல்லது அந்த கௌரதையை அடைய எல்லாருக்கும் உரிமை உண்டென்பதை உத்தேசித்தோ கவனிக்கப்படுமானால் யாரும் நிர்வாகத்துடன் ஒத்துழையாமை செய்யாமல் அதற்கு முட்டுக்கட்டை போடாமல் அனுகூலமாயிருக்க வேண்டியது நியாயமாகும். பார்ப்பனரல்லாதார் வருகின்ற காலங்களில் எல்லாம் “தகுதி போராது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலத்திற்கு இனி யோக்கியதை இருக்காது என்றும் கக்ஷி கட்டுவதால் இருவருக்கும் நஷ்டமே தவிர ஒருவர் மாத்திரம் நஷ்டமடைந்து மற்றவர்கள் நஷ்டமில்லாமல் இருந்து விடலாம் என்றும் கருதுவது ஏமாற்றமாய் முடியு மென்றும் வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 30.08.1931)