Periyar 264மலாயா நாட்டுக்கு “சென்ற வருஷம்” டிசம்பர் µ 15 ² கப்பலேறி, “இவ்வருஷம்” ஜனவரி மாதம் 16 தேதி இந்திய நாடு சுகமே வந்து சேர்ந்தோம். இந்த சுற்றுப் பிரயாணத்தில் மலாய் நாட்டில் நடந்த விஷயங்கள் ஒருவாறு சென்ற வாரப் பத்திரிகையிலும், இவ்வாரப் பத்திரிகையிலும் பிரசுரித்திருக் கும் மலாய் நிரூபரின் சுற்றுப் பிரயாண நிரூபத்தில் காணலாம்.

மலாய் பிரயாணத்தைப் பற்றி நாம் சிறிதும் நினைத்திருக்காத நிலையில் திரு. சாமி அற்புதாநந்தா அவர்களால் எழுதப்பட்ட ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில் மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கக் கொள்கை உணர்ச்சி விசேஷமாய் பரவி வருகின்றதெனினும், சில விஷமக்காரர்கள் சுயநலத்தின் காரணமாய் இந்து மதத்தின் பேரால் தொல்லை விளைவிக் கின்றார்கள் எனவும், சுயமரியாதைக்காரர்களுக்கு, “இந்துக்களைப் புதைக்கும் சுடுகாட்டில் கூட இடம் கொடுக்கக் கூடாது” என்று இந்து மத சங்கத்தில் தீர்மானங்கள் கொண்டு வந்ததாகவும், சுயமரியாதைக் கல்யாணங்களை சர்க்கார் ஒப்புக் கொள்ளக்கூடாது என்று விஷமம் செய்கின்றார்கள் எனவும், ஒரு முறை வந்து போனால் மிக்க அனுகூலமாயிருக்குமென்றும் பொருள்பட எழுதியிருந்தார்.

இதைப் பார்த்ததும் அது சமயம் போய்த்தான் பார்க்கலாமா என்பதாக ஒரு எண்ணம் தோன்றியதால் இது சமயம் சிறிது வேலை இருக்கின்ற தென்றும் ஒன்று இரண்டு மாதம் பொருத்து வர முயற்சிப்பதாகவும் ஆனால் அங்குள்ள முன்னேற்றம் பத்திராதிபரையும் திரு. காளியப்பனையும் கலந்து அவர்களைக் கொண்டு எழுதும்படியும் பதில் எழுதினோம்.

இப்படியிருக்க ஒரு மாதம் கழித்து திடீரென்று 15 நாள் சாவகாசத்தில் புறப்படும்படி நிகழ்ச்சிக் குறிப்புடன் ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்திற்கு, “வர முடியாது” என்று எழுதியதுடன் அந்நிகழ்ச்சிக் குறிப்புகள் மற்ற பத்திரிகைகளுக்கும் அனுப்பப் பட்டதாய் தெரிந்ததால் அதை பிரசுரிக்க வேண்டாம் என்று தகவலும் அனுப்பிவிட்டோம். தவிர திருவாளர்கள் சாரங்கபாணி, காளியப்பன் இவர்கள் கடிதமும் இதை அனுசரித்து புறப்படும்படியாகவே கிடைத்தது.

எல்லாவற்றிற்குமாக ஒரு நீண்ட தந்தி ஒன்றை சென்னையில் இருந்து “குடி அரசு” ஆபீசு ஈரோட்டிற்கு மாற்றப்படவேண்டி இருப்பதற்காகவும், நாகர்கோவில் மகாநாட்டுக்காகவும், பார்ப்பனரல்லாதாருக்குள்ளாகவே கட்சிப் பிளவு தகராருகள் இருப்பதாலும் இது சமயம் கண்டிப்பாய் வருவதற்கு சௌகரியமில்லை என்பதாக தந்தி கொடுத்தோம்.

இதற்கு பதிலாக, “6000 டாலர்கள் (பதினாயிரம் ரூபாய்கள்) செலவழித்துச் செய்த மகாநாட்டு ஏற்பாடுகளும் வரவேற்பு ஏற்பாடுகளும் வீணாய் விடும், வராவிட்டால் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவர்களுடைய நிலைமை நெருக்கடியாகி விடும்” என்று திருவாளர்கள் சாரங்கபாணியும், காளியப்பனும் தந்தி அடித்தார்கள். அதைப் பார்த்த இவ்விடத்திய நமது நண்பர்கள் கண்டிப்பாய் போக வேண்டும் என்றும் இவ்விடத்திய காரியங்களை எல்லாம் தாங்கள் சரியாய்ப் பார்த்துக் கொள்ளுவதாகவும் சொன்னதோடு கைவல்லிய சாமி யாரும் கண்டிப்பாய் போக வேண்டுமென்று சொன்னார்கள்.

இவைகளை அனுசரித்துப் போவதாக தீர்மானித்து, ஒரு தந்தியை சிங்கப்பூருக்கு திரு சாரங்கபாணிக்கு கொடுத்துவிட்டோம். அதற்குப் பதிலாக திரு. சாரங்கபாணி அவர்களால் நமது வருகைக்கு அவ்விடம் இந்து சபையார் பெரிய எதிர்ப்பு செய்கிறார்கள் என்றும் அதனால் அவ்விடத்திய சர்க்கார் நம்மை கப்பல் விட்டு இறங்க அனுமதிக்க மாட்டார்கள் போல் இருக்கின்றதென்றும் இறங்க விட்டாலும் பேச விடமாட்டார்கள் என்றும், தகுந்த ஏற்பாட்டுடன் கண்டிப் பாய் வரவேண்டுமென்றும் தந்தி கொடுத்திருந்தார். இது டிசம்பர் மாதம் 9 தேதி கிடைத்தது.

அதைப் பார்த்த பிறகு கப்பல் ஏறும் நாள் மிக சமீபத்தில் இருந்ததால் அதாவது 11 தேதியாயிருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் “மகா நாடு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. கப்பல் ஏற வேண்டாம்; கடிதம் பார்” என்பதாக மகாநாட்டு வரவேற்புத் தலைவரான திரு. அய்யாரு அவர்கள் பேரால் பினாங்கிலிருந்து ஒரு தந்தி கிடைத்தது. இதைப் பார்த்ததும் கஷ்டம் ஒழிந்தது என்று மெத்த சந்தோஷமாக இருந்தோம்.

ஆனால் இங்குள்ள நண்பர்களும் நமது தமையனாரும் இந்த தந்தி பொய்யாயிருக்குமென்றும்; மறுபடியும் தந்தி கொடுத்து கேட்க வேண்டும் என்றும் சொன்னதால் மறுபடியும், “இப்படி ஒரு தந்தி கிடைத்தது; அது உண்மையா” என்று கேட்டோம். அதற்கு பதில் “பினாங்கு தந்தி பொய், கண்டிப்பாய் புறப்படு, பயணத்தை உறுதிப்படுத்து” என்று பதில் 11-ந் தேதி கிடைத்தது.

இதை பார்த்தபிறகு மறுபடியும் கவலை ஏற்பட்டது. ஏனெனில் அவ்விடத்திய சர்க்கார் நம்மை கப்பலைவிட்டு இறக்காமல் பாரிஸ்டர் திரு மணிலால் அவர்களை செய்தது போல் செய்து விட்டால், நாம் என்ன செய்வது என்கின்ற கவலை தவிர வேறில்லை. இதன் பேரில் சென்னை அரசாங்க பிரதம அதிகாரிகளை கேட்கச் செய்ததில் அவர்கள் மலாய் அரசாங்கத்தில் தாங்கள் பிரவேசிக்க முடியாது என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்களாம்.

பிறகு எப்படியானாலும் சரி இவ் வியக்கம் காரணமாக வந்ததை அனுபவிப்போம் என்றே புறப்பட்டோம். நாள் சுருக்கமாயிருந்ததால் 11 தேதி சென்னையில் கப்பலேர முடியாமல் 13 ந் தேதியே நாகைக்கு புறப்பட்டு அங்கிருந்து 15 ² கப்பலேறி விட்டோம். கப்பலில் கம்பி இல்லாத தந்தி மூலமாய் பல வரவேற்பு தந்திகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் சற்று கவலையுடனேயேதான் கப்பல் பிரயாணம் செய்தோம். நாங்கள் பினாங்கு துறைமுகத்திற்கு 4 மைல் தூரத்தில் கப்பல் நின்று இருக்கும் போதே ஒரு வெள்ளைக்கார சாதாரண அதிகாரியும் மற்றொரு ராணுவ உடை தரித்த வெள்ளைக்கார அதிகாரியும் சில போலீசு காரரும் நம்மிடம் வருவதைப் பார்த்ததும் சரி, “நமக்கு தடைவுத்திரவு வந்து விட்டது” என்று முடிவு செய்து கொண்டு மனதில் நம்மை அறியாமல் ஏற்பட்ட ஒரு விதத் திகிலுடன் முகத்தை மாத்திரம் சிரிப்பாகக் காட்டிக் கொண்டு நின்றோம்.

அவர்கள் இருவர்களும் கிட்ட வந்ததும் சலாம் செய்து, ஒருவர் அசிஸ்டெண்ட் கண்ட்ரோலர் என்றும் மற்றவர் சார்ஜண்ட் என்றும் தாங்களே அறிமுகம் செய்து கொண்டார்கள். பிறகு பேச ஆரம்பித்ததும் என்னிடம் பேச வேண்டியவைகளை திரு. ராமநாதன் அவர்களிடம் சொல்லும்படி சொன்னோம். பிறகு அவர் பேசும் போதே ஒரு வித தைரியம் வந்தது. அதற்குள் பினாங்கிலிருந்து சில சங்கத்து நண்பர்கள் வந்து ஒரு கடிதம் கொடுத்தார்கள்.

அதில் இதைப் பற்றிய காரியம் ஒன்றுமில்லாமல் நிகழ்ச்சிக் குறிப்பு இருந்ததால் அந்தக் கவலை நீங்கிவிட்டது. இதற்குள் மற்றொரு படகில் சாமி அற்புதானந்தா, சுப்பிரமணியம் முதலியவர்களும் மற்றும் சில இந்து, மகமதிய கனவான்களும் வருவதைப் பார்த்தோம். இறங்க விட மாட்டார்களோ என்று நினைத்த எண்ணம் போய் இவ்வளவு ஆடம்பரம் வேண்டாம் என்று சொல்ல வேண்டிய நிலைமை வந்து விட்டது.

பினாங்கில் இறங்கியவுடன் பலவிதமான விஷயங்கள் காதுக்கு வந்தன. அவற்றுள் ஒன்று நம்மை கத்தியால் குத்துவதற்கு ஒரு நபருக்கு 500 வெள்ளி பேசி ஏற்பாடு செய்திருப்பதாகவும், நாம் போகுமிடங்களிலெல்லாம் கலகம் செய்வதற்கும் துண்டு பிரசுரங்கள் போட்டு வழங்கி வருவதற்கும் 500 வெள்ளி பேசி பலரை நியமித்திருப்பதாகவும், மற்றும் கிருஸ்துவுக்கு விரோதமாய் பேசினதாகவும், சொன்னதாகவும், மகமது நபிக்கு விரோதமாய் பேசினதாகவும், இந்து மதத்தை ஒழித்து இந்துக்களை மகமதிய மதத்தில் சேர்ப்பிக்க மகமதியரிடம் பணம் வாங்கிக் கொண்டு மலாய் நாட்டுக்கு வருவதாகவும், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விரோதமாய் ஒத்துழையாமை பிரசாரம் செய்ய வருவதாகவும், போல்ஷிவிசம் பிரசாரம் செய்ய வருவதாகவும் இன்னும் பலவிதமாக துண்டுபிரசுரங்கள் மூலமாகவும் பத்திரிகை மூலமாகவும் பிரசாரம் செய்திருந்த விஷயம் நேரில் பார்த்தோம்.

தவிரவும் அவ்விடத்திய ஒரு ஆங்கில தினசரிப் பத்திரிகை, அரசாங்கத்திற்கும் சட்டசபை அங்கத்தினர்களுக்கும் நாம் பெரிய கலகக்காரரென்றும் நம்மை மலாய் நாட்டில் விட்டால் ஜனசமூகத் தின் சாந்த குணம் கெட்டு சர்க்காருக்கு தொல்லையேற்படுமென்றும் எச்சரிக்கை செய்வதாக ஒருவாரம் தவறாமல் தலையங்கமும் உப தலையங்கமும் எழுதி வந்தது.

இது நிற்க “தமிழ் நேசன்” பத்திரிகைக்காரரான ஒரு அய்யங் கார் ஊர் ஊராகச் சுற்றி பிரசாரம் செய்ததுடன் தனது பத்திரிகையில், கடவுளுக்கும் மதத்துக்கும் ஆபத்து என்று தினப்படி எழுதிக் கொண்டே வந்தது. தவிர இவ்வளவும் போதாமல் திரு வரதராஜுலு நாயுடுவின் பேப்பரும் மருந்தும் விற்கும் ஆள்களும் கூலிகளும் விஷமப் பிரசாரம், அதாவது தோட்ட கூலிகளை கிளப்பி விட்டு தோட்டக்காரருக்கு தொல்லை விளைவிப்பான். இவன் “காந்தி மனிதன்” என்றும் சொல்லிவந்தார்களாம் மற்றும் ஒரு விசேஷம் அதாவது இந்து மகாசபைத் தலைவர், அவ்வூர் போலீஸ் கமிஷனரிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்துப் பேசுகையில், இந்தியாவிலிருந்து வரும் ஈ.வெ. ராமசாமி என்பவர் எங்கள் கடவுளான இராமரை விவசாரத்தில் பிறந்தவன் என்று சொல்லுகின்றார்.

ஆதலால் அவரை இங்கே வரவிடக் கூடாது என்றாராம். அதற்கு அந்த போலீஷ் கமிஷனர், “அதற்கு நாம் என்ன செய்யலாம் எங்கள் வெள்ளைக் காரர்களில் சிலபேர் ஏசுகிருஸ்துவையும் இப்படித்தான் அதாவது அவர் தாயார் விவாகமாவதற்கு முன் அவரைப் பெற்றதால் விவசாரத்தில் தான் பிறந்து இருக்க வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். கேட்டால் சைன்சுபடிக்கு ஒரு ஆள் கூடாமல் எப்படி பிள்ளை பிறக்கும் என்கின்றார்கள்.

ஆகவே மத விஷயங்களில் இப்படிப்பட்ட அபிப்பிராயங்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே இருந்து வருகின்றது. அதற்காக யாரையும் தூக்கில் போட முடியாது” என்றும் சொன்னாராம். இப்படியாகப் பல விதத்திலும் எதிர்ப் பிரசாரங்கள் செய்தார்கள் என்பது மாத்திரம் நமது காதுக்கு எட்டியதே தவிர காரியத்தில் பலன் ஒன்றும் காண முடியவே இல்லை.

“தமிழ் நேசன்” பத்திராதிபர் “ஒரு அய்யங்கார்” சர்க்காரார் நம்மை மலாய் நாட்டில் இறங்கக் கூடாதென்று உத்திரவு போட்டு விட்டதாகக் கட்டுக்கதை கட்டி விட்டதால் அதை நம்பி அனேகம் பேர் கப்பலிலிருந்து நாம் இறங்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டு இறங்கினால் குத்தி விடுவதாயும் கலகம் செய்வதாயும் பேசி விட்டார்கள். நாம் பினாங்கில் இறங்கியதும் அங்கு துறைமுகத்தில் ஜனங்கள் நடந்து கொண்டதை பார்த்த பிறகுதான் யாரும் எவ்வித எதிர்ப் பிரசாரமும் செய்யாமல் இருந்து விட்டார்கள்.

நிற்க, எதிர்ப் பிரசாரம் செய்வதற்கு ஏற்பட்ட காரணங்கள் என்ன என்று பார்த்ததில், பினாங்கில் இந்து மகாசபை என்று ஒரு சபை இருப்பதாகவும், அதை சர்க்கார் இந்துக்களுடைய பிரதிநிதி சபை என்று ஏற்றுக் கொண்டிருப் பதாகவும் அச்சபைப் பிரமுகர்களுக்கு அங்குள்ள இந்துக்களால் சில மரியாதைகளும் வரும்படிகளும் இருப்பதாகவும், நமது இயக்கத்தால் அவற்றிற்கு மரியாதை குறைந்து வரும்படி குறைவதாகவும், அதனால் நமது இயக்கத்திற்கு விரோதமாய் வேலை செய்ய வேண்டி வந்ததாகவும் தெரிய வந்தது.

ஆனால் அந்த “இந்து மகாசபை”யில் இந்துக்கள் என்பவர்களிலேயே பல வகுப்பாரை அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளுவதில்லை, என்கின்ற நிபந்தனை உண்டு. அதாவது ஆதி திராவிடர்கள், மருத்துவர்கள் முதலியவர்களை மாத்திரமல்லாமல் சமீப காலம் வரை நாடார்களையும் சேர்க்க மறுத்து வந்தார்களாம்.

முதல் முதலில் நாடார்களைச் சேர்க்கும் போதும் அதிகமான பணம் கொடுத்ததால் தான் சேர்த்தார்களாம். இந்த யோக்கியதையுள்ள இந்து மகாசபை கெட்டுப் போகுமென்று சிலர் சத்தம் போட்டதால்தான் அதை யாரும் அந்நாட்டில் மதிக்கவில்லை. தவிர “தமிழ் நேசன்” அய்யங்கார் நாம் போகும் ஒவ்வொரு ஊருக்கும் முதல் நாள் போய் வரவேற்புக்கு எவ்வளவோ இடையூறு செய்து கொண்டு போனதாக அனேகமாய் ஒவ்வொரு ஊர்களிலும் பிரஸ்தாபம் வந்து கொண்டே இருந்தது.

இது தவிர மலாய் நாட்டில் உள்ள சங்கங்களில் எதில் எதில் பார்ப்பனர்கள் அங்கத்தினர்களாக இருந்தார்களோ அதிலெல்லாம் வரவேற்புக்கும் பத்திரத்திற்கும் கூடியவரை எதிர்ப்புகள் செய்து பலமான தோல்விகள் அடைந்ததுடன் இரண்டொரு சங்கத்தில் இது விஷயமாய் செய்த விஷமத் திற்கு பார்ப்பனர்களிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கியிருந்ததை எங்களுக்குக் காட்டினார்கள்.

இப்படிப்பட்ட நிலைமையில் நமது மலாய் நாட்டுச் சுற்றுப் பிரயாணம் நாம் எதிர்பார்த்ததற்கு மேலான அளவு வெற்றிகரமாகவே முடிந்தது. மகமதிய கனவான்களும் கிருஸ்தவ கனவான் களும் அவர்களில் ஐரோப்பியர்களும் மற்றும் இந்து கனவான்களும் இந்த சுற்றுப் பிரயாணத்தில் சிறிதும் வித்தியாசம் பாராட்டாமல் எல்லோரும் கலந்து கொண்டதும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் போல் தலைமை வகித்து உபசாரங்கள் செய்ததும் நடவடிக்கைகளைப் பார்த்தால் நன்றாய்த் தெரியவரும்.

திருவாளர்கள் சுவாமி அற்புதானந்தா, கே. சுப்பிரமணியம், காளியப்பன், அய்யாரு, சாரங்கபாணி, ஒ. ராமசாமி நாடார், கோவிந்தசாமி, தாமோதிரம், பழனியப்ப செட்டியார், ஜனாப்புகள் முகம்மது ராவுத்தர், சீனி ராவுத்தர், முகம்மது யூசுப் முதலிய கனவான்கள் சிங்கப்பூரிலும் பினாங்கிலும் செய்த ஏற்பாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த இரண்டு ஊர்களில் மாத்திரம் 7500 ரூபாய்க்கு மேலாகவே செலவு செய்து இருக்கின்றார்கள்.

எவ்வளவு சொல்லியும் அவர்கள் சிறிதும் லட்சியம் செய்யாமல் எதிர்ப் பிரசாரக்காரர்களுக்கு புத்தி கற்பிக்க வேண்டுமென்கின்ற காரணத்தைச் சொல்லிக்கொண்டே வீண் செலவு செய்தார்கள். எனவே நமது மலாய் நாட்டு சுற்றுப்பிரயாணம் வெற்றிகரமாக முடிந்தது என்பது வாசகர்களுக்கு மகிழ்ச்சி யுடன் தெரிவிப்பதுடன் மலாய் நாட்டிலுள்ள இந்திய சகோதரர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியறி தலை செலுத்துகின்றோம். இந்திய கூலிகள் விஷயமாகவும் இந்திய பிரதிநிதித் துவ விஷயமாகவும் பின்னால் எழுதுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 09.02.1930)