periyar 355தான் மலேயா நாட்டிற்கு வந்து ஒரு வாரமே ஆகின்றபடியாலும் இரண்டு மூன்று ஊர்களே பார்த்திருக்கின்றபடியாலும் அதற்குள் மலேயா நாட்டைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாதென்றும், மதுவிலக்கைப் பற்றியும் இம்மகாநாட்டைப் பற்றியும் பேசுவதாகவும் சொல்லி மதுவிலக்கு என்பது இன்றைய நிலையில் இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சுலபத்தில் விலக்கு செய்யக் கூடியதல்லவென்றும், இவர்களிடம் கடவுள் மூலமாகவும் மதக்கொள்கை மூலமாகவும் மதுப் புகுந்திருக்கின்றதென்றும் அவ்விரண்டு அபிப்பிராயமும் தளர்த்தப் பட்டாலல்லாமல் பொதுவாக பூரண மது விலக்கு முடியாதென்றும் சிறப்பாக நூற்றுக்குத் தொண்ணூறு மக்களாகிய பாமர மக்களுக்குள் சிறிதுகூட முடியாதென்றும் இந்துக்களுடைய கடவுள்களில் பாமர மக்கள் கடவுள்களாகிய முருகன் காட்டேரி கருப்பன் வீரன் முனியாண்டி காளி பராசக்தி முதலாகிய கடவுள்களும் மற்றும் பல பார்ப்பன கடவுள்களும் யாகம் சாந்தி முதலிய வைதீகச் சடங்குகளுக்கு வழிபடும் இந்துக்களில் மதுவை கட்டாய வஸ்துவாக கொண்டிருக்கின்றது என்றும் அனேகம்பேருக்கு மதுபானம் மதசம்பிரதாயத்திலும் மரியாதை சம்பிரதாயத்திலும் கட்டாய வஸ்துவாக கருதப்பட்டு வருகின்றது என்றும் அதனாலேயே தான் மதுவிலக்குக்குமிதக்குடி (டெம்பரன்ஸ்) என்றும் பேர் ஏற்பட்டதென்றும் இதில் நம்பிக்கை உள்ள சமூகத்திற்கு மதுவிலக்கு என்பது சுலபசாத்தியமல்ல என்பதே தமது அபிப்பிராயமென்றும் மலாய் நாட்டில் உள்ள தோட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு கள்ளுக்கடையும் கள்ளுள் வைத்து நைவேத்தியம் செய்ய ஒவ்வொரு சாமி கோவிலும் இந்து மக்கள் சம்மதத்தின் பேரிலேயே கட்டப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டதாகவும் அக்கோவில்களையெல்லாம் இடித்து அச்சாமிகளையெல்லாம் ஒழித்தாலொழிய மதுவிலக்கைப் பற்றி பேசுவது யோக்கியமாகாதென்றும் இப்படியே அனேகமான ஒழுக்கமற்ற காரியங்கள் மதத்தின் பேராலும் சாமியின் பேராலும் மக்களுள் புகுத்தப்பட்டிருக்கிறதென்றும் அதனாலேயே தான் நமது ஒழுக்கமும் முன்னேற்றமும் தடைப்பட்டு வருகின்ற தென்றும் ஆதலால் அதை ஒழிக்க வேண்டுமென்றால் முதலில் அதற்கு அஸ்திவாரத்தைக்கண்டுபிடித்து அது ஏதுவானாலும் அதை இடித்தெறிய தயாராக வேண்டுமென்றும் சொல்லி மகாநாடு விஷயத்தில் எதோ தனது அனுபோகத்தை தெரிவிப்பதாகச் சொல்லி பேசியதாவது:-

சகோதரர்களே!

இன்று இங்கு நடந்த மகாநாட்டு நடவடிக்கையைப் பார்த்தேன். இது எங்கள் நாட்டில் காங்கிரசின் ஆரம்ப கால நடவடிக்கைகளை ஒத்திருக் கின்றது. அதாவது இந்தியப் பொது மக்களுடையவும் பாமர மக்களுடையவும் நன்மைக்காகவென்றுதான் ஆதியில் காங்கிரசு ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் இதை ஆரம்பித்தவர்களில் அரசாங்க உத்தியோகத்தை நம்பி ஆங்கிலம் படித்து விட்டு உத்தியோகத்திற்கும் தங்கள் சொந்த வயிற்றுப் பிழைப்புக்கும் வகை எதிர்பார்த்த மக்களே முதன்மையாயிருந்தார்கள். அம்மகாநாடுகளில் தங்கள் உத்தியோகத்திற்கேற்ற பல தீர்மானங்கள் செய்து விட்டு பாமர மக்களை ஏமாற்ற ரோட்டுகள் போட வேண்டும், வரி குறைக்க வேண்டும், காடு திருத்த வேண்டும் என்பது போன்ற சில காகிதத் தீர்மானத்தையும் செய்வார்கள்.

காரியத்தில் சீர்திருத்தம் என்னும் பேரால் கொழுத்தச் சம்பள முள்ள சில உத்தியோகங்களை அந்த படித்தக் கூட்டத்தினர் அனுபவிக்கவும், அதற்காக வரிகள் உயர்த்தவும் நேர்ந்ததைத் தவிர அதற்குத் தகுந்தபடி வரிகளும் உத்தியோகங்களும் அரசாங்க அதிகாரங்களும் மற்றும் தொல்லை களும் பெருகினதை தவிரவும், வேறு யாதொரு பலனும் ஏற்படவில்லை, சம்பளமும் உத்தியோகமும் பெருகினதின் காரணமாய் கட்சிகளும் உட்பிரிவுகளும் ஏற்பட வேண்டியதாய் விட்டது.

ஏனென்றால் ஸ்தாபனங்களில் முக்கிய ஸ்தர்களாயிருக்கின்றவர்கள் அதனால் ஏற்படும் உத்தியோகங்கள் எல்லாம் தாங்களே சுயமாக அனுபவிக்க ஆசைப்படுவதாலும் மற்றவர்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்ற சூழ்ச்சி செய்வதாலும் மற்றவர்கள் பிரிந்து போய் வேறு ஸ்தாபனங்கள் ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் தலைவர் களாவதும் பிறகு அது போலவே அதிலிருந்து பலர் பிரிந்து போவதும், சாத்தியப்படாதவர்கள் சாதி மத வகுப்புகளின் பேரால் ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு பாத்தியம் கேட்பதுமாகிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

எங்கள் நாட்டில் உள்ள இவ்வளவு அரசியல், மத இயல், ஜாதி வகுப்பு இயல், சமூக இயல் ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டதான கட்சிகளும் ஸ்தாபனங்களும் காங்கிரசு ஏற்பட்டதினாலும் அதிலுள்ளவர்களின் சுயநல சூட்சியாலும் அவர்களைப் பின்பற்றியும் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.

ஆகையால் இந்த மகாநாடு எங்கள் நாட்டு காங்கிரசை பின்பற்றாமல் அரசாங்கத்தாரை உத்தியோகமும் பதவியும் கேட்காமல் நாட்டின் நலனுக்கும் பொது மக்களின் நலனுக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களை கட்டாயப் படுத்தும்படியான மாதிரியில் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு மார்க்கம் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு அறிவையும் சுயமரியாதையையும் உண்டாக்குவதே தவிர உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டுமென்பதல்ல என்பதே எனதபிப்பிராயம்.

இந்தியர்களென்பவர்களாகிய நாம் ஒரு மதம், ஒரு ஜாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை. முதலாவது லட்சியத்தை ஒன்றுபடுத்திக் கொண்டாலொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது.

ஆதலால் நீங்கள் அதாவது எங்கள் காங்கிரசைப் பின்பற்றி எங்கு இந்த நாட்டையும் இந்தியாவைப் போல பாழாக்கி ஏழைகளை வதைத்து, இனி இங்கிருக்கும் ஏழைகளுக்கும் தொல்லை விளைவித்து அவர்கள் இங்கிருந்து இனி வேறு வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவீர்களோ என்று பயப்படுகிறேன் (மேடையில் இருந்த சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ‘சபாஷ், சபாஷ்’, ‘உண்மை, உண்மை’ என்று கைதட்டி ஆரவா ரம் செய்தார்கள். ஆனரபிள் வீராசாமி அவர்கள் திரு. ராமசாமியாரின் கையைப் பிடித்து தாங்கள் பயப்பட வேண்டியதில்லை என்று உறுதி கூறுகின்றோம் என்பதாகச் சொன்னார்).


குறிப்பு : 26.12.1929 இல் சிங்கப்பூர் டவுன்ஹாலில் நடைபெற்ற மலேசியன் இந்தியன் அசோசியேசன் மாநாட்டில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 02.02.1930