periyar 250இந்த வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் கூடுமிடங்களிலெல்லாம் தகராறு இல்லாமல் நடைபெறுவதாகக் காணவில்லை. வேதாரண்ய மகாநாட்டுத் தலைவர் தேர்தல் சூழ்ச்சிகள் தமிழ்நாடு பத்திரிகையில் இருந்து தெரிந்திருக்கலாம்.

சென்னை காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சென்னை மவுண்ட்ரோட் மகாஜன சபை மண்டபத்தில் திரு. சீனிவாசய்யங்கார் காலிகளைக் கொண்டு போய் வைத்துக் கொண்டு கூட்டங் கூட்டியிருப்பதாய்த் தெரிகின்றது. அப்படி இருந்தும் அய்யங்காருக்கு விரோதமான கூட்டமே மெஜாரிட்டியாக வந்து கூடிவிட்டார்கள்.

திரு.சத்தியமூர்த்தி அக்கிராசனம் வகித்து, நமக்கு வேண்டியவர்கள் போக, மற்றவர்கள் ஓட்டுச் செய்யாமலிருக்கும் படியாக தந்திரமாய் இத்தனையாந் தேதிக்குமேல் அங்கத்தினரானவர்கள் தவிர மற்றவர்கள் ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று ரூலிங் கொடுத்து விட்டாராம். அதன் பேரில் திரு.சத்தியமூர்த்தி, திரு. கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவரை ஏவிவிட்டுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை கன்னா பின்னா என்று வையச் சொன்னாராம்.

கூட்டம் தைரியமாய் எதற்கும் தயாராயிருந்து எதிர்க்கவே திரு.அய்யங்காரும் அவரது தாசர்களும், கூலிகளும் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம். பிறகு மற்றவர்கள் இருந்து தேர்தலை நடத்தி இருக்கின்றார்கள். வழக்கம்போல் அய்யங்கார் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாக சபையார் என்கின்ற முறையில் அத்தேர்தலை செல்லுபடி அற்றது என்று சொல்லப் போகின்றார்கள் என்பது உறுதி. எனவே காங்கிரஸ் என்பது திரு. சீனிவாசய்யங்காருக்கும் அவர்களின் தாசர்களுக்கும் கூலிகளுக்கும் மாத்திரம்தான் சொந்தமேயன்றி மற்றபடி பொது ஜனங்களுக்கு அதில் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்பதற்கு இனியும் என்ன சாட்சி வேண்டும்.

(குடி அரசு - கட்டுரை - 21.07.1929)