periyar and annaதென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லவும், அதை நிவர்த்திக்கத் தாங்கள் கொண்டுள்ள முறைகளுக்கு ஆதரவு தேடவும், ஊர் ஊராய் பிரசாரம் செய்து வருகின்ற விஷயம் யாவரும் அறிந்ததே. இம்முயற்சிக்கு ஆங்காங்குள்ள பொது மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம்.

தாடியில் நெருப்பு பற்றி எரிகின்றபோது ஒருவன் அதில் சுருட்டைப் பற்ற வைக்க கொஞ்சம் நெருப்புக் கேட்டதுபோல், நாட்டின் ஜீவனாடியாகிய தொழிலாள மக்கள் இம்மாதிரி வேதனைப்பட்டு அலையும்போது சைமன் கமிஷன் பிரசாரமும் பர்டோலி சத்தியாக்கிரகத்திற்குப் பணம் தண்டலும் வெகு மும்முரமாய் நடந்து வருவதிலிருந்து நாட்டின் ஏழை மக்களிடத்தில் ‘தேசீய’ இயக்கங்களுக்கோ, ‘தேசீய தலைவர்கள்’ என்போர்களுக்கோ எவ்வளவு கவலை இருக்கின்றது என்பதும், அவைகளால் நாட்டிற்கு எவ்வளவு பலன் ஏற்படும் என்பதும் தானாகவே விளங்குகின்றது. இனியாவது பொது மக்கள் இம்மாதிரி போலியும் அவசியமில்லாததுமான காரியங்களில் போலித் தலைவர்களை நம்பி மோசம் போகாமல் முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்த வேண்டுமாய் வேண்டுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.07.1928)