தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் மாயவரத்தில் கூடி பிரமாதமான காரியத்தைச் சாதித்து விட்டதாகத் தங்களையே புகழ்ந்து கொண்டு, அடிதடியுடன் கலைந்து ஆளுக்கொரு மூலையாய் ஓடி ஒளிந்து விட்டு, சென்னைக்கு வந்து “கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்று வீரம் பேசுகின்றார்கள்.

anna periyar and karunanidhiமாயவரம் பெரிதும் பார்ப்பன அக்கிராரமாய் இருந்தாலும் அங்கு சில காலமாகவே தேசீய புரட்டுக்கு இடம் இல்லாமலே இருந்ததுடன் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் தமிழ் நாட்டில் முன்னணியில் இருந்தது.

குருகுல வேஷத்தின் போதுகூட ஸ்ரீ வரதராஜுலுவைப் பார்ப்பனர்கள் துன்புறுத்த கட்டுப்பாடாய் ஏற்பாடு செய்து கொண்டு கூட்டத்தில் வந்து விளக்கு முதலியவைகளைக்கூட உடைத்து மீட்டிங்கு நடக்காமல் தொந்தரவு செய்த காலத்திலும், இதே மாயவரம் தேச பக்தர்களால் தான் தடுக்கப்பட்டு ஸ்ரீநாயுடு காப்பாற்றப்பட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்பேர்ப்பட்ட இடத்தில் “தீட்டின மரத்தில் பதம் பார்ப்பது” என்கின்ற பழமொழிபோல் ஸ்ரீவரதராஜுலு நாயுடு எல்லாரிடத்திலும் நடந்து கொள்ளும் மாதிரியாகவே மாயவரம் தொண்டர்களிடத்திலும் நடந்து கொண்டது அதிசயமல்ல. அதைப் பற்றி நமக்கு அதிக கவலை இல்லை. மாயவரம் தொண்டர்கள் யோக்கியர் அல்லாதவர்களை யோக்கியர் என்று நம்பிய குற்றத்தினால் அடைந்த பலன்களுக்கு நாம் என்ன சமாதானம் சொல்லக்கூடும்.

ஸ்ரீவரதராஜுலுவை பார்ப்பனரல்லாதார் கோஷ்டியில் சேர்த்துக் கொண்டு அவரைப் பார்க்க அங்கு தனியாய் சென்றதின் பலனாகவே திரு. சுப்பிரமணியம் அடிபட நேர்ந்தது. இதைப் பற்றி ஸ்ரீவரதராஜுலு ஒண்டியாய் வந்தவர் அடிபட நேர்ந்ததைப் பற்றி மாத்திரம் ஜம்பம் பேசிக் கொள்ளலாம். ஆனாலும் திரு. சுப்பிரமணிய பிள்ளையைப் பொருத்தவரையில் ஸ்ரீநாயுடுவின் நன்றி கெட்ட தன்மையை தமிழ் மக்கள் பெரிதும் அறிய இது ஒரு சம்பவமாகும்.

நிற்க, ஸ்ரீவரதராஜுலு சுயமரியாதைப் பிரசாரத்தை அடக்கவும் மாயவரத்தில் ரத்தம் சிந்தியதைப் போல் தமிழ்நாடு எங்கும் இரத்தம் சிந்தச் செய்யவும், 20 ஆயிரம் ரூபாய் சென்னை காங்கிரசில் மீந்த பணத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதாகவும், அதை செலவிட்டு அடக்கிவிடப் போவதாகவும் பந்தயம் கூறி நம்மை பயமுறுத்துகிறார். ஸ்ரீவரதராஜுலுவின் வீரத்திற்கும் அவரது பந்தயத்திற்கும் எவ்வளவு தூரம் மதிப்பு உண்டென்பது தமிழ் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். வெறுங் குடத்தை தட்டினால் அதிகமாகத்தான் சத்தம் கேழ்க்கும், உள்ளே சாமான் இருந்தால் சத்தமாகாது என்பது போல் ஸ்ரீவரதராஜுலுவின் வாழ்வின் அஸ்திவாரமே இந்த வாயளப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது அவருடன் பழகாத எதிரிக்குங்கூட தெரிந்த விஷயம்.

தான் அடங்கிக் கிடக்க நேரும்போது, “கிடந்து போகட்டும் என்று அலட்சியமாய் இருந்து வந்தோம்” என்பதும், வெளியில் வர கொஞ்சம் இடம் கிடைத்ததும் “இனிமேல் பார் நம்ம சங்கதி” என்பதுமான வீரமும் அவர் கூடவே பிறந்த குணங்களாகும். இம்மாதிரி இதற்குமுன் எத்தனை தடவை பேசியிருக்கிறார். இதுவரை ஏதாவது ஒரு செல்லாக்காசு பெறுமான காரியமாவது செய்தாரா? அல்லது அதனால் ஏற்பட்டதா? என்கின்ற விஷயங்களை கவனித்தால் உண்மை வெளியாகாமல் போகாது. தவிர ஸ்ரீவரதராஜுலுவின் எதிர் பிரசாரத்தின் யோக்கியதை அறியாதவர்கள் இந்த மாகாணத்தில் யாரும் இல்லையாதலால் அதைப் பற்றி எழுத வேண்டிய அவசியமும் இல்லை என்றே இத்துடன் விட்டு விடுகின்றோம்.

மற்றபடி எந்த பார்ப்பனர்களாவது இவரை நம்பி பக்கத்தில் சேர்த்துக் கொள்வார்கள் என்கின்ற சந்தேகமும் நமக்கு கிடையாது. ஆதலால் இவராகப் போய் பார்ப்பனர்களுடன் உறைய வேண்டியது தானேயல்லாமல் இவரைக் கொண்டு அவர்களுக்கு யாதொரு காரியமும் ஆகிவிடப் போவதுமில்லை. ஆதிதிராவிடர்களின் இயக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் விரோதமாய் சிலருக்கு கூலி கொடுத்து திராவிடர் சபை என்பதாக ஒரு போலி சபையை உண்டாக்கி இருப்பது போல ஸ்ரீ வரதராஜுலுவைப் பிடித்து பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு விரோதமாக ‘தேசீயப் பார்ப்பனரல்லாதார் சபை’ என்பதாக ஒன்றை ஏற்படுத்தி நமக்கு விரோதமான காரியங்களைச் செய்ய தூண்டலாம். ஆனால் இனி அவைகள் நடப்பதென்பது முடியாத காரியம் என்றே சொல்லுவோம். ஏனெனில் ஸ்ரீவரதராஜுலுவும் இந்த மூன்று நான்கு வருடங்களாக தேசீய சபை என்றும், தேசீய பார்ப்பனரல்லாதார் சபை என்றும் ஒவ்வொரு தடவையும் தன் கை காசு 100, 200 செலவு செய்து கூட்டம் கூட்டியும் கட்சி சேர்த்தும் பார்த்து விட்டார். அக்கூட்டங்களுக்கெல்லாம் இதுவரை போனவர்கள் எத்தனை பேர் என்பதும் அவர்கள் யார் யார் என்பதும் அதில் பெரும்பாலோர் மற்றவர்கள் யார் கூப்பிட்டாலும் போகாதவர்கள் என்பதும் கவனித்தவர்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது.

மாயவரத்தில் திரு. சுப்பிரமணிய பிள்ளையை அடித்து விட்டு வந்த ஜோரில் 19-தேதி சென்னையில் கூட்டப் போவதாக பறை அடித்த தொண்டர் கூட்டம் தேதி போடாமல் ஒத்தி வைக்க நேர்ந்தது 27-தேதி ‘தமிழ்நாடு’ பத்திரிகையை பார்த்தால் தெரியும்.

இந்த நிலையில் தகப்பன் வீட்டுப் பெருமையை அண்ணனிடம் சொல்ல வந்த பயித்தியக்காரி போல் ஸ்ரீவரதராஜுலுவின் தேசீய பெருமையை தமிழ் மக்களிடம் சொல்ல வருவது வேடிக்கையாயிருக்கின்றது.

தவிர, ஒரு காலத்தில் ஸ்ரீநாயுடு போன்ற மற்றொரு பார்ப்பனரல்லாத தேசீயவாதியை ‘ஏனையா ஜஸ்டிஸ் கட்சியை வைகின்றீர்’ என்று ஒருவர் கேட்டதற்கு அவர் “திரு. ராமசாமி நாயக்கர் என்னை வைகின்றார் ஆதலால் அவர் ஆதரிக்கும் ஜஸ்டிஸ் கட்சியை நான் வைய நேரிடுகின்றது” என்று சொன்னார். இப்போது ஸ்ரீவரதராஜுலுவையும் ஒருவர் கண்டு “ஏன் ஜஸ்டிஸ் கட்சியுடன் போய் முட்டிக் கொள்கின்றீர்” என்று கேட்டால், இவரும் அதே மாதிரி “திரு. நாயக்கர் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கின்றார். திரு. நாயக்கரை ஜஸ்டிஸ் கட்சி பின்பற்றுகின்றது. அதனால் தான் அதை ஒழிக்க வேண்டி யிருக்கின்றது” என்று சொல்கின்றாராம். எனவே இவ்விரண்டு தேசீய பிராமணரல்லாதார்களால் ஜஸ்டிஸ் கட்சி அழிந்துவிடக் கூடுமாயிருந்தால் அது இன்றைக்கே அழித்து விடுவதுமேல் என்றே ஆசைப்படுகின்றோம். அந்த மிரட்டுதலுக்கும் இங்கு யாரும் பயப்படுகின்றவர்களும் இல்லை என்பதை தைரியமாய்ச் சொல்லுவோம்.

நிற்க ஸ்ரீ வரதராஜுலு கடைசியாக திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்களை தஞ்சமடைந்திருப்பதாக தெரிய வருகின்றது.

நம்மை முன்னிட்டாவது அவர்கள் இருவரும் மறுபடியும் ஒற்றுமைப்பட நேர்ந்தது பற்றியும் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுத்துக் கொள்ள நேர்ந்ததைப் பற்றியும் நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைவதுடன் அவர்களது ஒற்றுமையின் பலனையும் கவனித்து வருவோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.04.1928)