மதத்தின் பெயரால் “கடவுள் வழிபாடு” என்று கருதப்படும் அக்கிரமச் செயல்கள் பலவற்றுள் ‘யாகம்’ செய்வதும் ஒன்று. இது ஒரு கொடிய பாதகச் செயலாகும். ஏனெனில், யாகத்தில் பிராணிகளை இம்சிக்கின்றார்கள். இது பார்ப்பனர்களால் கடவுள் வழிபாடாக நடந்து வருகிறது. அஸ்வமேதம், அஜமேதம், கோமேதம் முதலான யாகங்களில் ஒன்றும் அறியாத அபல பிராணிகளான, குதிரை, ஆடு, மாடு முதலான ஜீவன்களைக் கொலை செய்கின்றார்கள். உலகில் கொலை செய்வதைவிட கடின கர்மம் வேறு ஒன்றுமில்லை யென்பது மகான்களின் அபிப்பிராயம்.

periyar with cadres 480பூர்வத்தில் மனிதனையும் பலியிடும் வழக்கம் இருந்ததாக சரித்திரங்கள் மூலம் அறிகின்றோம். ஆரியர்கள் நம் நாட்டிற்கு வருவதற்கு முன் நம் தேசம் அறிவிலும் ஒழுக்கத்திலும் சமத்வ சகோதரத் தன்மையிலும் ஜீவகாருண்யத்திலும் சிறந்து விளங்கியிருந்த தென்பதை தொல்காப்பியம் முதலான பழம் தமிழ் நூல்களால் அறியக்கூடும். ஆரியர்களின் வருகைக்கு பின்னர் அவர்களின் பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் புகுந்து விட்டதால் கடவுளின் பெயரால் பலியிடும் வழக்கத்தை நம்மவர்களும் பழகி விட்டார்கள். இதை சில கோவில்களில் நிகழும் கொலைகளால் நிச்சயிக்கலாம்.

கடவுளின் பெயரால் நாதனில்லாத அபல பிராணிகளை யாகத்தில் பலியிடுவதின் கருத்து என்ன? என்பது தெரியவில்லை. கடவுளின் கருணைக்கு பாத்திரமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இக்காரியங்கள் செய்யப்படுகின்றன. பிராணிகளெல்லாம் அவருடைய சந்ததிகளாயிருக்கின்றன எனச் சொல்பவர்களே அவருடைய சந்ததிகளையறுத்து அவருக்கே நிவேதனமாகச் செய்வதென்றால் அது அவருக்கு சம்மதமாயிருக்க முடியுமா?

விசேஷ புத்தியில்லாத புலி, கரடி முதலான துஷ்ட ஜந்துக்களும் தங்கள் குட்டிகளை அறுக்கவோ, அறுத்துக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளவோ செய்வதில்லை. பகுத்தறிவில்லாத இத்தகைய துஷ்ட ஜந்துக்களை விட ஞானமில்லாதவனும் துச்சமான மாம்சத்தில் பிரியமுள்ளவனும், புலியைவிட பெரிய புலியாயிருப்பவனும் தானோ ஹிந்துக்களின் தெய்வம்? கடவுளுக்கு ஏதாவது காய்ச்சல் பிடித்து தேகம் மெலிந்து விட்டதா? அல்லது அவர் ஆடு, கோழி முதலான பிராணிகளை திருடித் தின்னும் குள்ள நரியின் கூட்டத்தில் சேர்ந்தவரா? எந்த காரணத்தைக் கொண்டு பிராணிகளை இம்சித்து கடவுளுக்காக மாம்சத்தை வைத்து ஆராதிக்கிறார்களோ? அறியோம்.

யாகம் செய்வது கடவுளுக்கல்லவென்றும் தேவர்களுக்காக செய்கிறார்களென்றும் சிலர் கூறுகின்றார்கள். தேவர்கள் அமிர்தத்தை அருந்தி ஜரைநரைகளை நீக்கினவர்களென்று புராணங்களில் காணப்படுகின்றன. ஆகையால் அமிர்தத்தை உண்டவர்கள் அசங்கியமான மாம்சத்தை உண்ண மாட்டார்கள். மேலும் மாம்ச உணவு இராக்ஷசர்களுக்கு ஏற்பட்டதென்றும் அதை தேவர்கள் உண்ண மாட்டார்களென்றும் சொல்லப்படுகிறது. ஓர் வேளை, பூதேவர் (பிராமணர்)களுக்கு சாப்பிட வேண்டி ஏற்பட்டால் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக அவர்கள் கடவுள் பெயரையும் மதத்தின் பெயரையும் சொல்லிக் கொண்டு இவ்வித தந்திரங்களை செய்கின்றார்கள் என்று தான் நிச்சயிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு பிரமாணங்களும் உண்டு அதாவது,

சு. “த்விஜைர் போகரதைர் வேதே, தர்சிதம் ஹிம்சனம் பசோஜி ஹ்வாஸ் வாதபரை, காமா, அஹிம்சைவ பரம்மத” என்று தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதன் கருத்து :- “விஷயங்களில் ஆசையுள்ளவர்களும் நாக்கின் ருசியை மட்டும் கருதுவோருமாகிய சில பிராமணர்கள் யாகத்தில் பசு ஹிம்சை செய்யவேண்டுமென்று வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். அஹிம்சையை விட உத்தம தர்மம் வேறு ஒன்றுமில்லை” என்பதாம்.

இந்த சுலோகத்தின் கருத்தை பார்க்கும் பொழுது, வேதத்தில் பார்ப்பனர்கள் அநேகம் தகாத செய்கைகளை தங்கள் சுயநலத்தைக் கருதி எழுதி வைத்திருக்கின்றார்கள் என்பது புலனாகும்.

அநேக வருடக்கணக்காக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவதில் யாகம் செய்வதும் ஒரு தந்திரச் செய்கையாகும். மற்ற செய்கைகளால் அதிக பணம் கிடைக்காது. யாகம் செய்வதால் அதிக பணம் கிடைக்கின்றது. யாகம் செய்ய வேண்டுமென்றால் ரூபாய் 5000, 10000 ஏன்? இவ்வுலகம் முழுவதையும் தானம் வாங்கவும் உரிமையுண்டு. என்னே ஏமாற்றம்!

மதத்திற்கும் கடவுளுக்கும் அவமானத்தை உண்டு பண்ணும் இத்தகைய கொடுமையான செய்கைகளை வேதம் வேதமென்று எழுதி வைத்து ஜனங்களின் தனத்தை கொள்ளையடிப்பதுமன்றி அறிவையும் கெடுத்து மூட நம்பிக்கைக்குள் மூழ்கியிருக்கும்படி செய்துள்ளார்களே! அநியாயம்! அநியாயம்! யாகத்தில் செய்யும் ஜீவ இம்சயையை ஒழிப்பதற்காக விஷ்ணு பகவான் புத்தாவதாரமாக வந்திருக்கிறார் என்று இந்துக்களால் ஒத்துக் கொள்ளப்பட்ட பகவான் புத்தர் இதற்காக எவ்வளவோ பாடு பட்டார். “அஹிம்சா பரமோ தர்ம” என்ற சிறந்த உபதேசத்தை உபதேசித்தார். என்ன பயன் ஏற்பட்டது. மகாத்மாவும் ஞானியும் தயாளுவுமான புத்தரின் மதத்தை நாட்டிலிருந்து முடுக்கி விட்டவர்களல்லவா நம் ஆசாமிகள். என்னே! ஹிந்து மதத்தின் பெருமை.

உபநிஷத்துகளில் உள்ள சாரங்களையெல்லாம் திரட்டியிருப்பதும் ஹிந்துக்களால் மேலான சாஸ்திரமென்று கொண்டாடப்படுவதுமான பகவத் கீதையிலும் யாகம் முதலான ஆபாச கர்மங்கள் வற்புறுத்தப்பட்டிருக்கின்றன. கீதையை ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்திருக்கிறார். அதில் “இஷ்டான் போகான், ஹிதோதேவான் தாஸ்யந்தே யக்ஞ வித” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது யாகம் செய்வோர்களுக்கு தேவர்கள் இஷ்டபோகங்களை கொடுக்கின்றார்கள் (தருவார்கள்) என்பதாம். இதை கிருஷ்ணன் சொன்னாரோ அல்லது மற்று யாராவது சொல்லியருப்பார்களோ என்பதை இங்கு ஆராய சந்தர்பம் இல்லை. ஆனால் தத்துவமென்ன? என்பதை மட்டும் ஆராய்ந்து கொள்வது அவசியம்.

யாகம் செய்வதால் தேவர்கள் ப்ரத்யக்ஷமாய் இஷ்டபோகங்களை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை கிருஷ்ணனுக்கு இருந்தால் யாகத்தை செய்து தேவர்களை வசப்படுத்தி, அர்ச்சுனனுக்கு ராஜ்யாதிபத்தியத்தையும் இஷ்டபோகங்களையும் வாங்கிக் கொடுத்திருக்கலாமல்லவா? அர்ச்சுனன் யுத்தம் செய்ய இஷ்டமில்லாதவனாகி காண்டீபத்தை போட்டு விட்டு தேரில் உட்கார்ந்தான் என்று சொல்லப்படுகிறது, யுத்தம் செய்வதற்கிஷ்டமில்லாத அர்ச்சுனனை பலாத்காரமாக, பயங்கரமான யுத்தத்தில் இறங்கும்படியாக கிருஷ்ணன் ஏன் வற்புறுத்த வேண்டும்? அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் மைத்துனராகவும் குருவாகவும் இருக்கிறார். யுத்தத்தில் வெற்றி, தோல்வி இன்னார்களுக்கென்று ஆரம்பத்தில் தெரிந்து கொள்ளவும் முடியாது. ஓர் வேளை அர்ச்சுனன் இறந்துபோக நேரிட்டால் கிருஷ்ணன் தன் சகோதரியாகிய சுபத்திரையின் வைதவ்ய துக்கத்தை பார்த்துக்கொண்டு துக்கிக்கவும் நேரிடுமல்லவா? இவ்வித அபாயங்கள் ஒன்றுமில்லாத யாகத்தை செய்து காரியத்தை சாதித்துகொள்ள ஏன் கிருஷ்ணன் முயலவில்லை.

தேவர்களுக்கு தலைவனான தேவேந்திரன் அர்ச்சுனனுடைய பிதாவாயுமிருக்கிறார். இதனால் மற்றுள்ளவர்களுக்கு தேவர்கள் பிரத்யட்சமாவதைவிட சீக்கிரத்தில் அர்ச்சுனனுக்கு வசப்பட்டு விடுவார்கள். இவ்வளவு சுலபமான காரியங்களெல்லாமிருக்க அவ்வண்ணம் செய்யாமல் யுத்தத்தை செய் என்று சொல்லி எண்ணிறந்த ஜனங்களை கொல்லச் செய்து ராஜ்யத்தை கைவசப்படுத்தி யிருக்கிறார். இதனால் கிருஷ்னனுக்கு யாகத்தில் நம்பிக்கை இல்லை என்று ஏற்பட்டது. இதை கிருஷ்ணன் பாகவதத்தில் யுத்தவருக்கு உபதேசிக்கிறார். அதாவது :- சு. “தேமேமதமவிஞ்ஞாய பரோக்ஷம் விஷயாத்மக வ்ருதா பசூன் விஹிம் சந்தி, ஹிம்சந்தே ப்ரேத்தைஸ்துதே”.

கருத்து:- “ என்னுடைய உண்மையான தர்மத்தை அறியாமல் விஷயங்களில் ஆஸக்தியுள்ளவர்கள் வீணாக யாகத்தில் பசுக்களை கொல்கின்றார்கள். பின்னால் பசுக்கள் இவர்களையும் கொல்லுவார்கள்.” என்பதாம்.

இதனால் கிருஷ்ணனுக்கு யாகத்தில் நம்பிக்கையில்லையென்றும் அது பெரிய பாதகமான செயலென்றுதான் கருதுவதாகவும் ஏற்பட்டது. ஆகவே கீதையிலும் சுயநலப் பூனைகள் சுயநலமான பல வாக்கியங்களை நுழைத்திருக்கின்றார்கள் என்பது வெட்டவெளிச்சமாயிற்று.

முற்காலத்தில் ராவணன் தன்னுடைய சிரசுகளை அறுத்து யாகத்தில் ஹோமித்து விட்டதனால் கடவுள் பிரத்யட்சமாகி வேண்டிய வரங்களை அளித்தார் என்று புராணங்களில் காண்கிறோம். யாகம் செய்வோர் அவ்வண்ணம் தங்கள் சிரசுகளை வெட்டி கடவுளுக்கு அர்ப்பணம் செய்தால் சீக்கிரத்தில் கடவுள் கருணை கிடைக்குமல்லவா? அங்ஙணம் செய்யாமல் ஒன்றுமறியா பிராணிகளை கடவுளின் பெயரால் ஏன் கொலை புரிகின்றார்கள்? இதுதான் சனாதன தர்மமா?

கடவுளுக்கும் மகான்களுக்கும் மதத்திற்கும் திருப்திகரமாயில்லாத இத்தகைய பாவச்செயல்களை இக்காலத்திலும் செய்து வருகிறார்கள். என்ன அநீதி! இதனால் கடவுளின் கருணையை தேடுவோர் குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வதை ஒத்திருக்கும் இதையும், இதைப் போன்ற ஆபாச கிரியைகளையும் தான் “குடி அரசு” வேண்டாமென்று சொல்வது. மதம் போச்சு என்று சொல்ல வேண்டாம். மதத்தினிடம் பற்றுள்ளவர்கள் இத்தகைய ஆபாச கொள்கைகளைக் கண்டித்து ஜனங்களின் சுயமரியாதையை காப்பாற்ற நல்வழியில் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு சாத்தியமில்லை என்று கருதுவோர், இத்தகைய ஆபாசங்களுக்கு ஆதரவளிக்காமல் இருக்க வேண்டும். அதுவும் முடியாதென்றால் மக்களின் முன்னேற்றத்தைக் கருதி உழைப்பவர்களை எதிர்க்காமலாவது இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

(குடி அரசு - கட்டுரை - 22.04.1928)