periyar 314ராயல் கமீஷனைப் பற்றி ஜஸ்டிஸ் கக்ஷியார்கள் ஒருவித அபிப்பிராயமும் இதுசமயம் தெரிவிக்கக்கூடாது என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். பார்ப்பன அரசியல் தந்திரத்தை நாம் பின்பற்றுவதும் அவர்களது இயக்கங்களை நாம் பின்பற்றுவதும் பார்ப்பனரல்லாத சமூகத்தின் தற்கொலையேயாகும்.

நம் நாட்டில் பார்ப்பனர்கள் சம்மந்தப்பட்ட அரசியல் இயக்கங்கள் என்பது எதுவும் கொஞ்சமும் நாணயமுடையதல்ல. அக்கூட்டத்திற்கே இவ்விஷயங்களில் மானம், வெட்கம், நாணயம் முதலியவைகள் கடுகளவும் கிடையாது என்றே சொல்லுவோம். ஏனெனில் இன்று பஹிஷ்காரம் என்பார்கள் நாளை ஏற்றுக் கொள்ளுவது என்பார்கள். இன்று ஒத்துழையாமை என்பார்கள் நாளை ஒத்துழைப்பு என்பார்கள். இன்று முட்டுக்கட்டை என்பார்கள் நாளை சன்னைக் கட்டைப் போட்டு நடத்திக் கொடுப்பது என்பார்கள், இன்று நம்பிக்கை இல்லை என்பார்கள். நாளை சம்மந்தம் செய்து கொள்ளுவது என்பார்கள். இன்று காங்கிரஸ் கட்டளை என்பார்கள் நாளை காற்றில் பறக்க விடுவார்கள். இன்று வைவார்கள். நாளைக்கு பல்லைக் காட்டுவார்கள். இவ்வளவும் தங்கள் சுயநலத்திற்காகவே செய்வார்கள். எனவே, இம்மாதிரி கூட்டத்தில் சேர்ந்தால்தான் வாழ முடியும் என்கின்ற பார்ப்பனரல்லாதார் யாராவது இருப்பாரானால் அவர்களின் நிலை பெரும்பாலும் இதை விட்டால் நாளைக்கு ஜீவனத்திற்கு மார்க்கமில்லை என்கின்றவர்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை மாத்திரம் ஒரு நிபந்தனையின் மேல் பார்ப்பனர்களிடம் செல்ல அனுமதிக்கின்றோம்.

அதாவது பார்ப்பனர்களைப் போல் எந்த சமயத்திலும் தனது சமூகத்தை காட்டிக் கொடுத்து வாழாமல் பார்ப்பனர்களைப் பற்றி கவிபாடிக் கொண்டோ பார்ப்பனரல்லாதார் சிலரை மாத்திரம் வைதுகொண்டோ வயிறு வளர்ப்பதில் நமக்கு ஆnக்ஷபணை இல்லை. தவிர, இதுசமயம் பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு பெரிய ஆபத்து இருக்கின்றதை முன்னமேயே தெரிவித்திருக்கின்றோம். அதாவது, பெசண்ட் அம்மையின் புதிய உபத்திரவம் என்னவெனில், நம் நாட்டு பார்ப்பனர்கள் இப்போது தங்களுக்குள்ள சகல நாடிகளும் விழுந்து விட்டப்பிறகு, அம்மையை பற்றி இருக்கின்றார்கள். இனி அது ஒரு ஆட்டம் ஆடித்தான் தன் நிலைக்கு வந்து சேரும். யாரும் அதில் ஏமாந்துபோய் விழுந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

கோயமுத்தூர் தீர்மானத்தால் ஏற்பட்ட ஆபத்திலிருந்தே இன்னமும் சரியானபடி நாம் மீளவில்லை. இதே சமயத்தில் மற்றொரு ஏமாற்றம் என்னும் பெசண்ட் அம்மை ஆபத்திலும் யாருடைய சூழ்ச்சியின் பலனாகவாவது மாட்டிக் கொள்வோமானால் பிறகு சுலபத்தில் நமக்கு விடுதலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டமாகிவிடும். இது சமயம் நமக்கு யாருடைய தயவும் வேண்டியதில்லை. நம்முடைய சுயமரியாதை இன்னது என்பது நமக்கு ஞாபகத்திற்கு வந்தால் அதுவே போதுமானதாகும். “நாட்டிற்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமக்கும் தொழில் போகாது” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் இந்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்கள் பெரும்பான்மையும், தோட்டி நிலையிலேயே இருக்கின்றார்கள். அத்தோட்டி நிலைமாற ஏதாவது மார்க்கமுண்டானால் மாத்திரம், எந்தத் துரையையும் எந்தக் கமீஷனையும் வரவேற்கவும் செய்யலாம், பஹிஷ்கரிக்கவும் செய்யலாம். அதில்லாத பக்ஷம் நாமாக தனித்து நின்று ஒரு கை பார்த்து, நமது நிலையை மற்றவர்களுக்குச் சமமாக உயர்த்திக் கொள்ள வேண்டிவரும். ஆதலால் அவசரப்பட்டுக் கொண்டு இப்போது எவ்வித அபிப்பிராயத்தையும் தெரிவித்து விடக்கூடாது என்பதுடன் எந்த அரசியல் கட்சியிலும் சேரக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.11.1927)