பார்ப்பனர்கள் உத்தியோகத்திலும் சட்டசபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும், பெரிய ஜமீன்களிலும், குடித்தனங்களிலும், இந்திய அரசாங்கங்களிலும் போய் அமர்ந்து கொண்டு இருப்பதின் முக்கிய நோக்கங்கள் இன்னவை என்பது நமது மக்களுக்கு சரிவர விளங்குவதேயில்லை. ஏதோ அவர்கள் படித்தார்கள். அதனால் உத்தியோகம் பார்க்கிறார்கள், யார் உத்தியோகம் பார்த்தால் தான் என்ன, யார் சட்டசபைக்கு போனால் தான் என்ன, யார் கவுன்சிலர் ஆனால் தான் என்ன என்பதாக தர்ம நியாயம் பேசி விட்டு பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்து விடுகிறார்கள். இந்த ஏமாளித்தனத்தைப் பார்த்தே பார்ப்பனர்களும் நம்மவர்களை சுலபமாய் ஏமாற்றி பதவி பெற்று நம்மையே அழிக்கப் பாடுபடுகின்றார்கள். எந்தப் பதவியில் பார்ப்பனர் இருந்தாலும், அதன் மூலம் நமது கழுத்தை அறுக்க அதை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதை நமது ஜனங்கள் உணர்வதே இல்லை. அல்லாமலும் நம்மில் அநேகர் கொஞ்சமாவது சகோதர அபிமானமின்றி மானம் வெட்கம் எல்லாவற்றையும் துறந்து பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகி பார்ப்பனர்கள் நமக்குச் செய்யும் கொடுமைக்கும் கையாயுதமாக இருந்து நமக்கு கெடுதி செய்தும் வாழ்கிறார்கள்.

periyar 350நமது நிலை, நமது நாட்டு பார்ப்பனரல்லாத மக்கள் நிலை மிகு மிகு இழிவான தன்மையில் இருக்கிறதற்கு இதுவே போதுமான உதாரணமாகும். நிற்க, சென்னை கார்ப்பரேஷனில் சில காலமாக பார்ப்பனரல்லாதார் கவுன்சிலராகவும் அக்கிராசனராகவும் கமீஷனராகவும் இருந்து பார்ப்பனரல்லாத மக்களுக்கு நன்மை புரிந்து வருவதைக் கண்ட பார்ப்பனர்கள் இவற்றை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் தேசத்தின் பேரால் காங்கிரசின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால் ஆள்களிலும் சில அயோக்கியர்களையும் பைத்தியக்காரர்களையும் சேர்த்துக் கொண்டு, நமது மக்களுக்கும் நமது இயக்கத்துக்கும் விரோதமாக பிரசாரங்கள் செய்து மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்று கார்ப்பரேஷனுக்கு வந்து அவர்கள் செய்த அக்கிரமங்களும் அயோக்கியத்தனங்களும் கொஞ்சமல்லவென்பது கவனித்து வந்தவர்களுக்கு விளங்காமல் போகாது.

ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியார் தலைவராயிருந்தபோது அவர் ஒரு பார்ப்பனரல்லாதாராகவும், பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் கவலை செலுத்துபவராகவும் இருந்ததற்காக அவருக்கு பார்ப்பனர்கள் எவ்வளவு கொடுமைகள் செய்தார்கள் என்பதும், அதற்கடுத்தாற்போல் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் பார்ப்பன சிஷ்யராகவும் பார்ப்பனர்கள் “போடு கரணம்” என்றால் “இதோ போடுகிறேன் எண்ணிக் கொள்” என்று எவ்வளவோ பொய்யும் புரட்டும் பேசி வந்தும் கொஞ்சமும் சுயமரியாதை இல்லாமல் நடந்து வந்ததால் அவரை ஆதரித்ததும், அதற்கு பிறகு ஸ்ரீமான் ஜி. நாராயணசாமி செட்டியார் பிரசிடெண்டாய் வந்தவுடன் அவர் பார்ப்பனர்கள் சொற்படி கேள்க்காததால் அவர் மீது பலரை ஏவிவிட்டு கார்ப்பரேஷன் யோக்கியதையையே கெடுத்து கள்ளுக்கடை, சாராயக் கடை கள் போல் சதா சர்வ கால கூச்சலும் குழப்பமுமாகவே இருக்கும்படி நடந்து வந்ததும் யாவருக்கும் தெரிந்ததுதான். தவிர சென்னை கார்ப்பரேஷனில் கமிஷனராயிருக்கும் ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா அவர்கள் பார்ப்பனரல்லாதாராய் இருக்கிறார் என்கிற காரணத்திற்காக அவரை இந்த பார்ப்பனர்கள் எவ்வளவு கொடுமை செய்கிறார்கள் என்பது கவனித்து வருபவர்களுக்கு விளங்கியிருக்கும்.

ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா அவர்கள் ஒரு ஜில்லா கலக்டர் உத்தியோகஸ்தர், அவர் இன்ஸ்பெக்டர் ஆப் ரிஜிஸ்டரார் என்கிற பத்திரப் பதிவு இலாக்காவுக்கு இந்த மாகாணத்திற்கே தலைவராக இருந்தவர். அவருடைய யோக்கியப் பொறுப்பைப் பற்றியாவது நாணய குறைவைப் பற்றியாவது இதுவரை அவருடைய பார்ப்பன எதிரிகள் ஒரு வார்த்தையாவது சொன்னது கிடையாது. அவர் கார்ப்பரேஷனுக்கு கமீஷனரானபிறகு வருஷத்தில் லக்ஷக்கணக்கான ரூபாய் சென்னை முனிசிபாலிட்டிக்கு லாபம் வருகிறது. ஆபீஸ் சிப்பந்திகளின் அக்கிரமங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு யோக்கியமாய் நடைபெற்று வருகிறது. லஞ்சம் வாங்கின உத்தியோகஸ்தர்களை மிக தயவாகவும் நிதானமாகவுமே தண்டித்து வருவார். அப்படியிருந்தும் ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா மிகவும் கடுமையாய் தண்டிக்கிறார் என்றும் பார்ப்பனரைக் கொடுமைப்படுத்துகிறார் என்றும் அவர் பேரில் பார்ப்பனர்கள் குற்றம் சுமத்தினதின் பேரில் சில குற்றங்களை கோர்ட்டுக்கு இழுத்துவிட்டதில் மேஜிஸ்ரேட் கோர்ட்டில் மாதக்கணக்காய் கடுங்காவல் தண்டனை தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். இவ்வளவு கிரமமாய் வேலை பார்த்து வருபவரை அவமானப்படுத்துவதும் அற்பத்தனமாய் பேசுவதும் வேண்டுமென்றே குறைவுபடுத்துவதுமாய் குறும்பு செய்து வருகிறார்கள். இந்த விஷயம் வரவர முத்திப் போய்விட்டதால் பார்ப்பனர்களின் வால் பிடித்து திரிந்து கொண்டிருந்த சில பார்ப்பனரல்லாதார்களுக்கும் கூட இந்த கொடுமை சகிக்காமல் இப்போது புத்தி வந்து அவர்களே ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா அவர்கள் விஷயத்தில் தாராளமாய் தங்களது அபிப்பிராயங்களை வெளியிட்டு விட்டார்கள். சுத்தமான பார்ப்பனரல்லாத ரத்தம் கடுகளவு எந்த பார்ப்பனரல்லாதார் சரீரத்தில் ஓடுவதாயிருந்தாலும் அவர்களுக்கு எப்போ தாவது பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி வந்தே தீரும் என்பதற்கு இது ஒரு பெரிய உதாரணம் ஆகும்.

பார்ப்பனர்களின் கக்ஷியைச் சேர்ந்த ஸ்ரீமான்கள் சிங்காரவேலு செட்டியாரும் கெததே ரங்கய்ய நாயுடுவும் ஜி.வெங்கிட்ட நாராயண விஷயமாய் பார்ப்பனர்களின் கூற்றைப்பற்றி பேசியிருக்கும் விஷயமாவது நான் காங்கிரஸ் கக்ஷியைச் சேர்ந்தவன் ஆனபோதும் என் கடிதங்களுக்கு கமிஷனர் ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா அவர்கள் 6 மணி நேரத்திற்குள்ளாகவே பதில் எழுதிவிட்டு அப்போதைக்கப்போது நான் எழுதும் குறைகளையும் நிவர்த்தி செய்து எனது வேண்டுகோளை நிறை வேற்றியிருக்கிறார். அவர் யாரிடத்திலும் பக்ஷபாதமாக நடந்தது கிடையாது.

ஸ்ரீமான் கெத்தா ரங்கயநாயுடு பேசியதாவது “நான் இச்சபைக்கு மெம்பராக வந்ததிலிருந்து எவ்விஷயத்தை குறித்தறிவித்தாலும் கமிஷனர் உடனே அதைக் கவனித்து நிறைவேற்றி வருகிறார். அவ்வாறிருக்க அவர் பக்ஷபாதமாக நடந்து வருவதாய்ச் சொல்வது முற்றும் தவறு” என்பதாக பேசியிருக்கிறார்கள்.

மற்ற ஸ்தல ஸ்தாபனங்களிலுள்ள நிர்வாகத் தலைவர்கள் இந்த இரட்டை ஆக்ஷியில் அதிலும் தற்கால சுப்பராய மந்திரி ஆக்ஷியில் நடக்கும் அக்கிரமங்களுக்கு கணக்கு வழக்கு இல்லை. அவைகளைப் பற்றி ஒரு பார்ப்பனராவது கவனிப்பது இல்லை. பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து விட்டால் அந்த நிர்வாகஸ்தர் என்ன அக்கிரமம் செய்தாலும் கேள்வி கிடையாது. பார்ப்பனருக்கு அடிமையாகாவிட்டால் அவர் எப்படிப்பட்டவராயிருந்தாலும் அவர்களை ஒழிக்க எவ்வித இழிதொழிலையும் செய்கிறார்கள் என்பதற்கு இதை ஒரு உதாரணமாகவே எழுதினோம்.

(குடி அரசு - கட்டுரை - 21.08.1927)