சென்னை மாகாணத்தில் சிறப்பாய் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் பார்ப்பனீய ஆதிக்கத்தின் பலனாய் கட்டுக் குலைந்து, தாழ்த்தப்பட்டு சுயமரியாதையை இழந்து, நாட்டின் நலத்தை மறந்து ‘மூலபலச் சண்டை’ என்பது போல் தம்மில் ஒருவர் மேல் ஒருவர் பகைமை கொண்டு அரசியலிலும் சமூக இயலிலும் மீளா அடிமையாகி உழல்வதைக் கண்ட பெரியார்களான ஸ்ரீமான்கள் டாக்டர் நாயர், தியாகராயர், மகாத்மா காந்தி ஆகியோர் முறையே பார்ப்பனரல்லாதார் இயக்கமென்றும், ஒத்துழையாமை இயக்கமென்றும் பல இயக்கங்களைத் தோற்றுவித்தனர். இவற்றை அறிந்த நமது பார்ப்பனர்கள் தங்களது கட்டுப்பாட்டாலும், செல்வத்தாலும், சூழ்ச்சியாலும், அதிகார வசதியாலும் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கொல்லவும், மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை ஒழிக்கவும் முயற்சி செய்து வெற்றிக்குறியைக் கண்டு விட்டார்கள் என்றே சொல்லலாம்.

periyar and rajajiபார்ப்பனரின் இவ்வெற்றிக் குறிக்கு தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார், திரு.வி.கலியாணசுந்தர முதலியார் போன்றோர்களும் இந்தியா தேசத்தைப் பொறுத்தவரை தேசபந்து தாசரும் பார்ப்பன மாய்கையில் பட நேர்ந்ததே மூல காரணம் என்று சொல்வது எவ்வகையிலும் மிகையாகாது. ஏனெனில் 1917 ´ வாக்கில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அடிப்படையாய்க் கொண்டு ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரால் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கென ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தை ஒழிப்பதற்கென்றே பார்ப்பனரால் பார்ப்பனர் பண உதவியில் அதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையே அடிப்படையாக வைத்து, “சென்னை மாகாணச் சங்கம்” என்கிற போலிப் பார்ப்பனரல்லாதார் கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஸ்ரீமான்கள் டாக்டர் நாயுடு, முதலியார் போன்றார்கள் ஆதரவாயில்லாதிருந்தால், ஜஸ்டிஸ் கட்சி இதுவரை அது ஏற்றுக்கொண்ட வேலையின் பலனை நமக்களிக்காமல் இருந்திருக்க நியாயமே இல்லை. இக் கனவான்கள் இப்போதைய ஜஸ்டிஸ் கட்சியை குறை சொல்லக் காரணம் கண்டுபிடிப்பதாயிருந்தாலும் டாக்டர் நாயர், சர். செட்டியார் ஆகிய கனவான்களையும் அவர்கள் ஆரம்பித்த அடிப்படையான நோக்கங்களையும் பல தடவைகளில் ஒப்புக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அக்கட்சியில் தங்களுக்கு குற்றமாய்த் தோன்றும் பாகங்களைத் திருத்த கொஞ்சமும் முயலாமல் அதன் எதிரிகளுக்கு அனுகூலமாயிருக்கும்படி மேலும் மேலும் அக்கட்சியைக் குற்றம் சொல்லிக்கொண்டும் பாமர ஜனங்களுக்கு அதனிடை வெறுப்பும் அதன் எதிரிகளிடை அன்பும் உண்டாகும்படி செய்துவருவது நாட்டினுடையவும், தமிழ் மக்களினுடையவும் நல்ல காலமின்மையையே காட்டுகிறது. இவ் விஷயம் சென்றவாரம் ‘தமிழ்நாடு’ ஆபீசில் கூடிய ‘தேசிய மகாநாடு’ என்னும் கூட்டத்தின் நடவடிக்கைகளைக் கவனித்தவர்களுக்கு விபரம் நன்றாய் விளங்கும். அதன் அறிக்கையின் சுருக்கமாவது:-

சுயநலம் கருதும் தனி நபர்களும், கட்சியாளரும் தங்களுக்குச் சாதகமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஒரு கட்சி சமூக சுதந்திரத்தையும் மற்றொரு கட்சி அரசியல் சுதந்திரத்தையும் மறுத்து வருகின்றன.

ஒத்துழையா இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் தேசீய வேலை திட்டத்தில் சமூக வேலையை சுயராஜ்யக் கட்சியினர் கைவிட்டு விட்டனர்.

சுயராஜ்யக் கட்சி பிராமண வகுப்பிற்கு அதிக சலுகை காட்ட ஆரம்பித்து விட்டது.

ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனரல்லாதார் முன்னேற்ற உத்தேசத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அத்திட்டத்தை நிறைவேற்ற அது ஒன்றும் செய்ய வில்லை.

பிராமணர்களுக்குப் பதிலாகப் படித்த பிராமணரல்லாதாருக்கு வேலை செய்து கொடுக்கவே இவர்கள் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள்.

இந்த முயற்சியில் வகுப்பு உரிமையை உத்தேசித்து அரசியல் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்து விட்டது.

என்ற குறிப்புகளுடன்; “இரு கக்ஷிகளையும் பொதுஜனங்கள் ஆதரிக்கக் கூடாது என்றும் தனிப்பட்ட மனிதர்களின் யோக்கியதையைப் பொறுத்து ஓட்டுச் செய்ய வேண்டு” மென்ற கருத்து அடங்கிய ஒரு தீர்மானமும் செய்ததோடு ஏறக்குறைய அவ்விரு கட்சிகளின் வேலைத் திட்டங்களையே தங்களது நோக்கமாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. காங்கிரசினால் ஒப்புக் கொள்ளப்பட்ட கட்சியாகிய சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்லுவதற்கும் அதற்கு விரோதமாக வேலை செய்வதற்கும் தேசீயக் கட்சி என்பது தீர்மானம் செய்திருக்கிறதைப் பார்க்கிறபோது சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் தேசீய சபை அல்லவென்பதையும், அக்காங்கிரசை தேசீயக் கட்சி ஒப்புக் கொள்ளவில்லை என்பதையும், தைரியமாக வெளியிலெடுத்துக் காட்டிவிட்டதைப் பொறுத்த வரையில் நாம் அதைப் பாராட்டாமலிருக்க முடியவில்லை. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியை எந்த ஆதாரத்தைக் கொண்டு தேசீயக் கட்சி என்பது குற்றம் சொல்லுகிறது? என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.

தேசீயக் கட்சிக்கு தனிப்பட்ட மனிதர்கள் நடவடிக்கை பிடிக்கவில்லையா? அல்லது கட்சிகள் கொள்கைகள் பிடிக்கவில்லையா? என்பதே நமக்கு விளங்கவில்லை. தனிப்பட்ட மனிதர்கள் நடவடிக்கைகள் பிடிக்கவில்லையானால் கட்சிகளைக் கைப்பற்றி அம்மனிதர்கள் தங்கள் நடவடிக்கைகளுக்கு கட்சிகளை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் செய்ய வேண்டும். அல்லது மனிதர்கள் பிடித்து கட்சிகள் பிடிக்கவில்லையானால் அம் மனிதர்களை சுவாதீனப் படுத்திக்கொண்டு கட்சிகளை ஒழிக்க வேண்டும். இரண்டுமில்லாமல் இன்ன கட்சியின் இன்ன கொள்கை தப்பு என்று அறிவிக்காமலும், இன்ன கட்சியைச் சேர்ந்த இன்னாரின் நடவடிக்கை தப்பு என்று அறிவிக்காமலும் கண்களை மூடிக்கொண்டு அந்த கொள்கைகளையும் அந்த மனிதர்களையுமே குற்றம் சொல்லிக்கொண்டு வேறு கட்சி என்று ஒன்றை ஆரம்பிப்பதில் நாட்டுக்கோ அல்லது குறிப்பிட்ட சமூகத்திற்கோ என்ன லாபம் என்பது விளங்கவில்லை.

ஜஸ்டிஸ் கட்சியினர் அரசியல் விஷயத்தில் இந்த தேசீயக் கட்சியார் என்போர் கோருகிற சுயராஜ்யத்தைத்தான் அதிவிரைவில் அடைய வேண்டும் என்ற கொள்கையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள். சமூக விஷயத்திலும் இந்த தேசீயக் கட்சியார் நோக்கத்தை விட ஒருபடி அதிகமாகவே தங்களது கொள்கையாகவும் வைத்துக் கொண்டிருப்பதோடு பார்ப்பன ஆதிக்கத்திற்கு அநுகூலமாக பார்ப்பனர் கைப்பற்றி இருக்கும் உத்தியோகங்களையும் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு அநுகூலமாக கிடைக்கும்படி செய்திருக்கிறார்கள். இப்படி இருக்க எந்த வகையில் ஜஸ்டிஸ் கட்சி பிற்போக்கானது என்பதையும், எந்த விதத்திலும் அது ராஜீய சுதந்திரத்தை மறுக்கிறது என்பதையும், தேசீயக் கட்சி என்பது பொது மக்களுக்கு விளங்க வைக்கவில்லை. அன்றியும் சமூக முன்னேற்றத்துடன் ஆரம்பிக்கப் பட்ட ஜஸ்டிஸ் கட்சி அத்திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று தேசீய அறிக்கை சொல்லுகிறது. எவ்வகையில் அது நிறைவேற்றி வைக்கவில்லை என்று சொல்ல முடியுமா? சமூக முன்னேற்றத்திற்காக முதலாவதாய் வகுப்பு வாரித் திட்டத்தை வலியுறுத்துகிறது. தனது சமூகத்தாருக்குப் பார்ப்பனர்கள் போலவே அரசியலில் உத்தியோகம் கிடைக்கப் போராடி வருகிறது. சில துறைகளில் செய்துமிருப்பதாய் தேசீய அறிக்கையே ஒப்புக் கொள்ளுகிறது. சமத்துவத்திற்கும் மதவித்தியாசமின்மைக்குமாக மலையாளக் குடிவார மசோதா, தேவஸ்தான மசோதா முதலியன கொண்டு வந்து நிறைவேற்றியுமிருக்கிறது. மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு முதலியவற்றிற்கும் இப்போதைய நிலைமையில் தன்னால் கூடுமானதைச் செய்துமிருக்கிறது.

நிற்க, வகுப்புரிமையை உத்தேசித்து அரசியல் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்ததாய் தேசீய அறிக்கை சொல்லுகிறது. எந்த விதமான சுதந்திரத்தை ஜஸ்டிஸ் கட்சி விட்டுக் கொடுத்தது? அதுவுமல்லாமலும் தற்கால அரசியல் நிர்வாகத்தில் வேறு எந்தக் கட்சியாவது ‘சுதந்திரத்தை’ விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று சொல்லி நிறுத்திக் கொள்ளத்தக்க சுதந்திரமுள்ள அரசியல் கட்சி ஏதாவது இருக்கிறதா என்று தேசீய அறிக்கை சொல்ல முடியுமா? ஆகையால், தேசீய அறிக்கை என்னும் பேரால் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி குற்றம் சொல்லியிருக்கும் விஷயங்கள் அவ்வளவும் அர்த்தமற்றதும் பொருத்தமற்றதுமென்றேதான் சொல்ல வேண்டியிருக்கிறதே அல்லாமல் அதில் ஒரு சிறிதும் உண்மையும் நியாயமும் இல்லை என்றே சொல்லுவோம். இம்மாதிரி ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அர்த்தமற்ற தேசீயத்தின் பெயரையும் பொறுப்புள்ள சமூகத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் புறப்பட்டு, அதற்கு தேசீயக் கட்சி என்றும் பெயர் வைத்துக்கொண்டு தங்கள் மனம் போனபடி காரியங்களை நடத்துவதென்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் சோதனை காலம் என்றே சொல்ல வேண்டும்.

நமது நாட்டின் பொல்லாத வேளையின் பலனாக ஓட்டுரிமை இன்னது என்பதையே நமது பாமர மக்களான 100-க்கு 90 பேர் இன்னமும் அறிந்து கொள்ள முடியாமலே செய்து வந்திருக்கிறோம். ஓட்டுரிமை அறிவிக்காமலே போலி அரசியலின் பேரால் பாமர மக்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்ததானது இப்போது நமது நாடும் நமது சமூகமும் அடிமைப்படவும், சுயமரியாதை இழக்கவுமேதான் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது. எப்படியெனில் நமது நாட்டில் பார்ப்பனர்களுக்கும் ஓட்டு இருக்கிறது. பார்ப்பனரல்லாதாருக்கும் ஓட்டு இருக்கிறது. பார்ப்பன ஓட்டுகள் கண்டிப்பாய் பார்ப்பனர்களுக்கே போகிறது. அதுபோல் பார்ப்பனரல்லாதார் ஓட்டுகள் பார்ப்பனரல்லாதாருக்குப் போவதில்லை. பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டு பார்ப்பனருக்கே போகக்கூடிய நிலையிலேயே இருக்கிறது. உதாரணமாக, திருச்சி ஜில்லா போர்டு பிரசிடெண்ட்டு தேர்தலில் 100 - க்கு80 பேருக்கு மேல் பார்ப்பனரல்லாத மெம்பர்களாக இருந்தும் ஒரு பார்ப்பனர்தான் வெற்றி பெற்றார். சென்ற சட்டசபைத் தேர்தல்களிலும் கோயமுத்தூர், தஞ்சை, தென்ஆற்காடு, திருச்சி, சென்னை முதலிய ஜில்லாக்களில் 100க்கு 90 பேருக்கு மேலாக பார்ப்பனரல்லாத ஓட்டர்களே இருந்தும் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எந்த வழியில் தோல்வியுற்ற பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்களை விட வெற்றிபெற்ற பார்ப்பன அபேக்ஷகர்கள் சிறந்தவர்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

சென்ற தேர்தலில் கோயமுத்தூர் ஜில்லாவில் ஸ்ரீமான்கள் சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியார் தோல்வியுற்றார்; ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்கார் வெற்றி பெற்றார். இதில் ஸ்ரீமான் முதலியாரை விட ஸ்ரீமான் அய்யங்கார் எந்த விதத்திலாவது உயரிய கொள்கையையோ நோக்கமோ உடையவர் என்று யாராவது சொல்ல முடியுமா? சென்ற தேர்தலில் இந்த ஸ்தானத்திற்கும் ஸ்ரீமான் முதலியாரைத் தெரிந்தெடுத்திருந்தால் தேவஸ்தான சட்டத்தை எதிர்க்க பார்ப்பனர் கட்சிக்கு ஒரு நபர் அதிகமாக இருக்குமா அல்லது ஸ்ரீமான் அய்யங்காரைத் தெரிந்தெடுத்த ஓட்டர்கள் அய்யங்காரை தேவஸ்தான சட்டத்தை எதிர்க்கச் சொன்னார்களா? எதிர்க்க ஆசை கொண்டவர்களா? மறுபடியும்தான் ஸ்ரீமான் அய்யங்கார் நிற்கிறார். இம்மாதிரியே தென்ஆற்காடு ஜில்லா ஓட்டர்களும் அந்த ஜில்லா பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு அய்யங்காரை தேவஸ்தான சட்டத்தை எதிர்க்கச் சொன்னார்களா? அந்த ஜில்லாவின் சார்பாய் இவ்வருஷமும் அதே அய்யங்கார் நிற்கிறார். மற்றும் சில ஜில்லாக்களிலும் தேவஸ்தான சட்டத்தை எதிர்த்த அய்யர், அய்யங்கார்கள் போட்டி யன்னியில் கூட தெரிந்தெடுத்ததாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் எதைக் காட்டுகிறது. நமது ஓட்டர்களை நாம் சரியானபடி அவர்கள் ஓட்டுரிமையை அறியும்படி செய்யவில்லை என்பதைக் காட்டுகிறதா இல்லையா? இம்மாதிரி பாமர ஜனங்களிடத்தில் மறுபடியும் குழப்பமான தேசீய அறிக்கைகளும், தேசீயக் கட்சிகளும் புறப்பட்டால் “கீழே விழுந்த குழந்தைக்கு அரிவாமணை உதவியது” போல் பார்ப்பனரல்லாத பாமர ஓட்டர்களை அவர்களுக்குச் சமத்துவமும் சுயமரியாதையும் கொடுக்க இஷ்டமில்லாத அவர்களது எதிரிகள் ஏமாற்ற அனுகூலமாயிருக்குமென்பதில் சந்தேகமென்ன?

அல்லாமலும் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் காங்கிரஸ் விளம்பரசபை என்னும் பெயராலும், எ.ரங்கசாமி அய்யங்கார் காங்கிரஸ் காரியதரிசி என்னும் பெயராலும், எஸ்.சீனிவாசய்யங்கார் காங்கிரஸ் தலைவர், சுயராஜ்யக் கட்சியின் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தென்னாட்டுத் தியாகமூர்த்தி என்னும் பெயராலும், சி.ராஜகோபாலாச்சாரியார் தென்னாட்டு காந்தி என்னும் பெயராலும், சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்கார் பருத்திச்செடி அய்யர்; தர்மப்பிரபு என்னும் பெயராலும், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஜமீன்தார் என்னும் பெயராலும், எம்.கே. ஆச்சாரியார் காந்தி சிஷ்யர் என்னும் பெயராலும், சி.பி.ராமசாமி அய்யர் சட்ட மெம்பர் என்னும்பெயராலும், டி. ஆர். வெங்கிட்டராம சாஸ்திரிகள் அட்வெகேட் ஜனரல் என்னும் பெயராலும், மகா மகாகனம் சீனிவாச சாஸ்திரிகள் கோகலேவுக்குப்பின் வந்தவர் என்னும் பெயராலும் மற்றும் எத்தனையோ பார்ப்பன கனவான்கள் ஐகோர்ட்டு ஜட்ஜி முதல் அட்டெண்டர் என்னும் பதவிகள் பெயராலும், சென்னையில் சில காலிகள் காங்கிரஸ் தொண்டர் என்னும் பெயராலும், சில தொழிலாளர்கள் சுயராஜ்யம் என்னும் பெயராலும், சில போலீசு அதிகாரிகள் சமாதானம் ஒழுங்கு என்னும் பெயராலும், சில பார்ப்பனரல்லாத தலைவர்கள் வாயை மூடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டும், சிலர் காங்கிரஸ் கட்டளையின் பெயராலும், சிலர் தேசம், அரசியல், உரிமை, சுயராஜ்யம், சுதந்திரம், சர்க்காரை எதிர்த்தல், அதிகார வர்க்கத்துடன் போர்புரிதல் என்னும் வார்த்தைகள் பேராலும் செய்துவரும் திருவிளையாடல்கள் போதாதென்று தேசீயக் கக்ஷி என்று ஒன்று புறப்பட்டிருப்பது தமிழ் நாட்டினினுடையவும் தமிழ் மக்களுடையவும் நெருக்கடியான சோதனை காலம் என்றே சொல்லுவோம். இந்த சோதனை காலத்தில் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் இயற்கை தேவி தான் காப்பாற்ற வேண்டும்.

(குடி அரசு - தலையங்கம் - 17.10.1926)

***

‘குடி அரசு’ வாசகர்களுக்கு  ஓர் உண்மையான முன்னறிவிப்பு

அன்புள்ள வாசகர்களே!

இதுசமயம் நமது ‘குடி அரசு’ வாரா வாரம் 4000 பிரதிகள் வரை போய்க் கொண்டிருந்தாலும், சட்டசபைத் தேர்தல் தீர்ந்த அடுத்த வாரம் முதல் கொண்டே சுமார் 1000 அல்லது 1500 பிரதிகள் திடீரென்று குறைந்து சுமார் 2500 பிரதிகள் போலத்தான் போக நேரிடும். ஏனெனில், சட்டசபைத் தேர்தலின் பொருட்டு நமது பார்ப்பனர் செய்துவரும் பொய்ப் பிரசாரத்தை வெளிப்படுத்த வேண்டி ‘குடி அரசு’க்கு முன்பணமாக சந்தா வந்தாலும் வராவிட்டாலும் இதுவரை அனுப்பிக் கொண்டே வந்தோம். இதனால் பெருத்த நஷ்டமும் நேரிட்டிருக்கு மென்று சொல்லத் தேவையில்லை. ஆதலால் சில பாக்கிதாரருக்கு மாத்திரம் வி.பி.பி. மூலம் அனுப்பிப் பார்க்க விருக்கிறோம். தேர்தல் முடிந்த உடன் வி.பி.திருப்பியவர்களுக்கும் சந்தா பாக்கிதாரர்களுக்கும், முன் பணமனுப்பாதவர்களுக்கும் பத்திரிகைகள் அனுப்பப்படமாட்டா.

நிற்க, தேர்தல் முடிந்த பின்னர் நமது ‘குடி அரசு’ அரசியலையே முக்கியமாய்க் கருதாமல் மக்களின் சுயமரியாதையைக் கெடுக்கும் பார்ப்பனீயத்திற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, இதிகாசம், புராணம் என்று சொல்லப்பட்ட ஆரிய சம்மந்தமான நூல்களிலும், செயல்களிலுமுள்ள தந்திரங்களையும், புரட்டுகளையும், பக்ஷபாதங்களையும், வஞ்சனைகளையும் தெள்ளத்தெளிய விளக்குவதோடு அந்நூல்களிலுள்ள விஷயங்களை நமது பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி மறைத்தும், திருத்தியும், தப்பு வியாக்யானப்படுத்திக் கூறியும், நம்மை ஏமாற்றி வருகிறார்கள் என்பதையும் முறையே வெளியிடுதலையே பிரதானமாய்க் கருதி தக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆதலால் சந்தா பாக்கியுள்ளவர்கள் சந்தாத் தொகையை அனுப்பியும் மற்றவர்கள் புது சந்தாதாரர்களாகச் சேர்ந்தும் ‘குடி அரசை’ ஆதரித்து அடுத்த மாத ஆரம்பத்திலிருந்தே வாசித்து வர வேண்டுமென நாம் மனப்பூர்வ விநயமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

- ஈ.வெ.இராமசாமி

(குடி அரசு - அறிவிப்பு - 17.10.1926)