பகுத்தறிவாளர் கழக மாநாடு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை விளக்கிச் சிறிது கூறுகின்றேன். நடைபாதைக் கோயில்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று; அரசாங்கம் தீவிரமாக முயற்சி எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அடுத்து வடநாட்டில் ‘ராமநவமி' அன்று ‘ராமலீலா' என்ற பெயரில் தமிழ் மக்கள் - திராவிடர்களின் மனதைப் புண்படுத்தும்படி ராவணன், கும்பகர்ணன் முதலானோர் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், ஜனாதிபதி போன்றவர்கள் கலந்து கொள்கின்றார்கள். நாம் பல தடவை கண்டித்தாகி விட்டது. இனி, நாமும் பதில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

சூத்திரனான சம்புகன் தவம் பண்ணினான்; கடவுளைக் காண முயன்றான். இதன் காரணமாக வர்ணாசிரம தருமம் கெட்டு விட்டது என்றும், இதனால் ஒரு பார்ப்பனப் பையன் இறந்து விட்டான் என்றும் கூறி, ராமன் சம்புகனை வெட்டினான். துண்டு துண்டாக வெட்டிக் கொன்றான். எனவே, இப்படிப்பட்ட ராமனை நாமும் ராமநவமி தினத்தில் எரித்து, வடவருக்கு உணர்த்துவது பற்றி யோசிக்க வேண்டும். அடுத்து, இந்து மதத்தில் இருந்து விலக வேண்டும் என்பது. இந்து மதம் என்ற பெயரில் ஏராளமானவர்கள் உள்ளோம். அத்தனை பேரும் விலக ஒப்புக் கொள்வார்களா என்பது வேறு.

இன்றைக்கு நாம் சூத்திரர்கள் என்பதும், இழி ஜாதி என்பதும் சட்டப்படி, சாஸ்திரப்படி இருக்கின்றது. இன்றைக்குப் பார்ப்பான் யாரும் நம்மை சூத்திரர் என்று சொல்ல அஞ்சி, அடங்கி விட்டான். இன்றைக்கு ஜாதி இழிவை யாரும் பகிரங்கமாகக் கூறவும் முன்வரவில்லை. இப்படி இருந்தும் நமது சூத்திரப் பட்டமும், ஜாதி இழிவும் நீங்கவில்லையே! காரணம் என்ன? பார்ப்பானே அடங்கி விட்டான்; ஜாதி இழிவு பற்றி எவரும் கூறவும் முன்வரவில்லை என்று சொன்னேன். இந்த நிலையில் நம்மிடம் உள்ள இழிதன்மைக்கும், சூத்திரப் பட்டத்திற்கும் யார் மீது குற்றம் கூறுவது? நம்மை நாமேதான் தாழ்த்திக் கொண்டு இழிதன்மையில் உள்ளோம்.

தோழர்களே! இன்றைக்கு கடவுள் இருப்பது இடைவிடாத பிரச்சாரம் காரணமாக உலகில் இருக்கின்றதே ஒழிய, உண்மையில் எவரிடமும் கடவுள் நம்பிக்கை இல்லை. எனவே, நம்முடைய இழிவுக்கு இன்று கடவுள் நம்பிக்கை காரணமாகவும் இல்லை. இன்று நமக்கு உள்ள இழிவு நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டதுதான் என்று மீண்டும் கூறுகின்றேன். இனி மதத்தையோ, கடவுளையோ, பார்ப்பான்களையோ திட்டுவது மூலம் ஒன்றும் பிரயோசனம் இல்லை. உங்கள் இழிவு நீக்கத்திற்கு இனி அது பயன்படாது. நாம் மனிதனாகணும். நாம் ஈன ஜாதியாகாமல் இருக்க வேண்டும். சூத்திரன் அல்லாதவனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆகும்.

நமது இழிவும், சூத்திரப் பட்டமும் இன்று சட்டத்தில் இருக்கின்றதே! இப்படிச் சட்டத்தில் இருக்கும்போது கடவுளையும், பார்ப்பானையும் திட்டி என்ன பிரயோசனம்? அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இனி நாம் சும்மா இருந்தால் பிரயோசனம் இல்லை. நாம் இன்று இந்து மதத்தின் பட்டியலில் உள்ளோம். நாம் இந்த இந்து மதப்படிதான் சூத்திரன். இது மாற வேண்டுமே! இது கடினமான பிரச்சினை. இதற்குப் பரிகாரம் தேடியாக வேண்டும். சட்டப்படி நீங்கள் சூத்திரன்கள். இந்தச் சட்டம் இந்தியா பூராவுக்கும் உள்ளது. இதனை மாற்றுவது எளிதல்ல. ஒருகால் தமிழகம் தனியாகப் பிரிந்தால் நாம் மாற்றலாம். இதற்குப் பிரிவினை பிரசாரம் செய்ய வேண்டும்.

உடனடியாக நமது ஜாதி இழிவு மாற, நாம் இந்து மதத்தில் இருந்து விலகிவிட வேண்டும். அதற்காக நாம் இந்துவல்ல என்று ஒவ்வொருவரும் விளம்பரப்படுத்திவிட வேண்டும். இந்து அல்ல என்று கூறி விட்டால் - இஸ்லாமாகவோ, கிறித்துவனாகவோ மாறினால், அப்போதும் மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு விடுவோம். எனவே, அவைகளும் பயன்படாது. எனவே, அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இது, இன்றைக்குப் பெரிய சிக்கல். மக்கள் சிந்திக்க வேண்டும். மதம் விலகத் துணிய வேண்டும். இதற்கு என்றே ஒரு மாநாடு போட்டு, மதம் விலக ஏற்பாடு செய்ய உத்தேசித்து உள்ளேன். அதற்கு என்று பாரம் அச்சடித்து, அதனைப் பூர்த்தி செய்து, கையொப்பம் வாங்கி, கெசட்டில் போடவும் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தாலும் வரும்.

எனவே, நமது இழி நிலை மாற, நாம் இந்து மதத்தில் இருந்து நீங்கிக் கொள்ள வேண்டும். அடுத்து நம் மக்களுக்கு இன்று இருந்து வரும் தீண்டாமை இழிவு, நாம் கோயிலுக்குப் போவது மூலம்தான் உள்ளது. குளித்து மூழ்கி கோயிலுக்குப் போனாலும் கர்ப்பக் கிரகத்துக்கு வெளியேயே நீங்கள் நிற்கின்றீர்கள். ஏன் இப்படி நிற்கின்றீர்கள்? நீங்கள் தாழ்ந்தவர்கள், தீண்டப்படாதவர்கள்; அதற்கு மேல் போனால் கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விடும் என்பதை ஒத்துக் கொண்டே நிற்கின்றீர்கள். எனவே, நம் மக்களின் இழிவும், தீண்டாமையும் நீங்கவும் மக்கள் கோயிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

(22.7.73 அன்று பெரம்பலூர் வட்ட பகுத்தறிவாளர் கழக 2ஆம் ஆண்டு மாநாட்டில் ஆற்றிய உரை)